அ மார்க்சின் இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 8

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

மஞ்சுளா நவநீதன்


(இந்தத் தொடர் விமர்சனம் மூன்று மாத இடைவெளிக்குப் பின்பு இப்போது மீண்டும் வெளிவருகிறது. என் சோம்பேறித்தனம் தான் காரணம்.)

அத்தியாயம் 8 – ஏழு கடல் கடந்து வேர் நீட்டும் இந்துத்துவா

இந்த அத்தியாயத்தில் பா ஜ க/ ஆர் எஸ் எஸ் எப்படி வெளிநாடுகளில் பரவியுள்ள இந்தியர்கள் ஆதரவு தருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இது போன்று வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் ஆதரவு , எல்லாக்கட்சிகளுக்கும் கிடைக்கக் கூடிய ஒன்று தான். ஆட்சியில் இருக்கும் போது, காங்கிரஸ் இது போன்று ஒரு அமைப்பை ஆங்காங்கே தொடங்கி நடத்தி வந்தது. இப்போதும் கூட தி மு க , அதிமுக உட்பட எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஆங்காங்கே ஆதரவாளர்கள் உண்டு. இது பா ஜ க வின் தனிப்பட்ட ஒரு தன்மை எனக் கூற முடியாது. இன்றும் கூட தமிழ் மக்களிடையே , பா ஜ கவிற்கல்ல, திராவிட இயக்கங்களுக்கே வெளி நாடுகளில் ஆதரவு மிகுதி. வட இந்தியர்களிடையே இன்னமும் பா ஜ கவிற்கு ஆதரவு மிகுதியும் உண்டு தான். ஆனால் அதன் பின்னணியில் , நாட்டுப் பிரிவினையுடன் இணைந்த வன்முறை இருக்கிறது என்பதை நாம் மறக்கலாகாது.

ஒட்டுமொத்தமாய் வெளிநாடு வாழ் இந்தியர்களை பா ஜ க ஆதரவாளர்களாய்ச் சித்தரிப்பதோடு மட்டும் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. ஈழத் தமிழர்களையும் இந்தத் தாக்குதலுக்கு ஆளாக்குகிறார்.

‘ வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழர்களிடையேயும் பாரதீய ஜனதா பற்றி லேசான மாயை ஒன்று உள்ளது. குறிப்பாக ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் பாதுகாப்பு அமைச்சரானதை அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். ‘

இந்த நம்பிக்கைக்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா, இந்திய நோக்கில் ஈழப் பிரசினை எப்படி உருமாற்றம் கொண்டுள்ளது என்பதையும், இன்றைய நிலையில், ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாய் இருக்குமா , அல்லது பா ஜ க ஆதரவாய் இருக்குமா என்பதையும் வாசகர்களே தீர்மானிக்கட்டும்.

அதாவது ஈழத் தமிழர்களின் நன்மையை ஈழத் தமிழர்களைக் காட்டிலும் தானே உணர்ந்தவர் என்ற சிந்தனை மார்க்ஸின் இந்த வாதத்தில் வெளிப்படுகிறது.

‘வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் என்றால், பெரும்பாலும் உயர்வருணத்தவர் தான். அவர்களிடையே உள்ள இந்த ‘இந்துத்துவ உணர்வு ‘ வியப்புக்குரிய ஒன்றல்ல. ‘ என்பது மார்க்ஸின் கூற்று. உயர்வருணத்தவர் என்ற வார்த்தைப் பிரயோகம் கவனிக்கத் தக்க ஒன்று. உயர் சாதி கூட இல்லை. உயர் வருணம் தான் மார்க்ஸின் சிந்தனையில் . வருணாசிரம தர்மம் என்று எவருமே இன்று பேசுவதில்லை. ஆனால் மார்க்ஸ் போன்றவர்கள் தான் இன்னமும் இதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

‘சுற்றிலும் இசுலாமிய நாடுகளால் சூழப் பட்டுள்ள இந்தியா , ஒரு வலுவான இசுலாமிய எதிர்ப்பு நாடாக மாறுவது உங்களுக்கு நல்லது என்கிற செய்தியை அவர்கள் திரும்பத் திரும்ப அமெரிக்க அரசுக்குச் சொல்லுகின்றார்கள். ‘ இது மார்க்ஸின் கற்பனையில் உதித்த ஒரு வக்கிரம். ஏனென்றால், அமெரிக்காவிலும் சரி , ஐரோப்பாவிலும் சரி இந்துக்கள் தான் விசித்திரர்களாய் கடந்த நூற்றாண்டில் பார்க்கப் பட்டு வந்திருக்கின்றனர், இன்றும் பார்க்கப்பட்டு வருகிறார்கள். முஸ்லீம் நாடுகளுடன் அன்றும் சரி இன்றும் சரி அமெரிக்காவும் ஐரோப்பாவும் மிக நட்புப் பூண்டு இருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் குடியேற்றத்திலும் கூட இந்துக்களைக் காட்டிலும் முஸ்லீம்கள் தான் முன்னுரிமை அளிக்கப் பட்டு வந்தனர். வங்க தேசப் போரின் போது இந்துக்கள் வங்க தேசத்தில் கொன்று குவிக்கப் பட்டபோதும், நிக்ஸனும், கிசிங்கரும் யாஹியா கானுக்குத் தான் ஆதரவாய் இருந்தனர். இப்பொழுதும் பாகிஸ்தானுடன் தான் அமெரிக்கா நட்புப் பூண்டு செயல்படுகிறது. வணிக நலனுக்காக இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்தாலும், அரசியல் நிலைபாட்டில் முழுக்க முழுக்க பாகிஸ்தானுடன் தான் அமெரிக்க நிற்கிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் தூண்டும் பயங்கரவாதம் பற்றி மூச்சுக் கூட விடத் தயாரில்லை.

இந்தியாவிற்கு ஆதரவாய் வெளிநாட்டு இந்தியர்கள் lobbying பற்றி மிக விமர்சனத்துடன் மார்க்ஸ் எழுதுகிறார். ஆனால் இன்னமும் இந்தியாவின் ஆதரவு சக்திகள் , பாகிஸ்தானின் ஆதரவு சக்திகள் போன்றோ, சீனாவின் ஆதரவு சக்திகள் போன்றோ ஒருமித்த குரலில் பேசுவதில்லை என்பது தான் உண்மை. Lobbying என்று சொல்லப்படும், தன்னிலை விளக்கிப் பரப்பி, வெளிநாட்டு அதிகார வர்க்கத்தினரிடையே தம்முடைய நாட்டின் நலனுக்கு உகந்த செயல்பாடுகளுக்கு ஆதரவு தேடும் செயல் இந்தியர்களிடையே குறைவாய்த் தான் இருக்கிறது.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts