கடிதங்கள்

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

தேதி ஜனவரி 5, 2003புத்தாண்டு வாழ்த்து அனுப்பிய படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் மற்றவர்களுக்கும் திண்ணைக்குழுவின் மனமார்ந்த நன்றிகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது திண்ணைக்குழு

நன்றி


சி.மோகனின் பட்ட்டியல் பற்றிய ராஜாராமின் குறிப்பு கண்டேன். பட்டியல்கள் பற்றிய வழக்கமான வருத்தம்.ஆனால் சி மோகனின் பட்டியல் ஒரு மதிப்பீட்டை முன்வைக்கிறது.அதன் மீது விவாதத்தை உருவாக்வும் செய்கிறது.கோ ராஜாராம் அதற்கு பதிலாக முன்வைப்பதும் ஒரு பட்டியலேயாகும். அதே தீராநதி இதழில் சுந்தர ராமசாமி ஒரு பட்டியலை அளிகிறார். இது புதுவருடம் . இம்மாதம் எப்படியும் இருபது பட்டியல்களாவது தமிழில் வெளிவரும் .அவ்வாறே உலகம் முழுக்க இலக்கியம் பற்றிய தரப்பட்டியல்கள் வெளிவரும்.அதை இலக்கிய விமரிசனத்தின் ஒரு வழிமுறை என்றே கொள்ளவேண்டும்.

நான் போடும் பட்டியல்களில் ஒரு முக்கிய அம்சம் உண்டு. வெறும் பட்டியல்கள் அல்ல அவை . மிக விரிவான ஆய்வுமுறை விமரிசனங்களை அவற்றுடன் இணைத்து எழுதுகிறேன். என் தரப்பை அவற்றில் விளக்கவும் செய்கிறேன். உதாரணமாக சி மோகன் நகுலனையும் கோ ராஜாராம் ஆ மாதவனையும் முக்கியப்படுத்துகிறார்கள். ஆனால் வெறுமே பெயர் சொல்வதுடன் சரி.நான் அதேபோல ப.சிங்காரத்தை முன்வைத்தபோது அச்சில் அறுபதுபக்க கட்டுரை எழுதிவிட்டு முன்வைத்தேன் . விமரிசனக் கூட்டம் ஏற்பாடு செய்து என் தரப்புக்கு எதிரான இலக்கியவாதிகளை பேசவிட்டு பதிவுசெய்து விவாதித்து என் தரப்பை பலவகைகளிலும் செம்மைப்படுத்திக் கொண்டேன். மு தளையசிங்கத்தையும் இவ்வண்ணமே அணுகினேன். இந்த வேறுபாடு இங்கு உள்ளது

சி மோகன் குழம்புகிறார் என்பது உண்மையே. அவரது பிரச்சினைகள் இரண்டு. ஒன்று , ஒரு புதிய உத்தி,அல்லது மொழிநடையை அறிமுகம் செய்வதுதான் இலக்கிய படைப்பின் முக்கிய பணி என எண்ணுகிறார் . சம்பத் ,நகுலன் போன்றவர்கள் செய்தது அதுவே.ஆனால் உலகின் மாபெரும் படைப்பாளிகள் உத்தி சோதனையே செய்தது இல்லை , பழைய ,நிரூபிக்கப்பட்ட வடிவங்களிலேயே எழுதினார்கள் என அவர் உணரவில்லை .உத்தி சோதனை செய்யும் படைப்பாளிகள் பலசமயம் உச்சங்களை தொடமுடிவதில்லை. இரண்டு ; சி மோகனின் பார்வையில் நீங்கள் குறிப்பிட்டதுபோலவே அந்ந்தரங்கத்தன்மை மிக்க எழுத்தே உயர்வானது என்ற எண்ணம் இருக்கிறது. அந்தரங்கத்தன்மை எழுத்தின் முக்கிய வலிமையே.ஆனால் மேலான நூலுக்கு ஒரு சமூக வாசிப்புத்தளமும் கண்டிப்பாக இருக்கும். மேல்தள எளிமை பெரும்பாலான நல படைப்பாளிகளிடம் உள்ளது . அவரது ஆயுதங்களின்படி சி மோகன் டால்ஸ்தாயையே நிராகரிக்கவேண்டியிருக்கும்.

ஜெயமோகன்

jeyamohanb@rediffmail.com


ஆசிரியருக்கு,

நேரடியாக விவாதக்களத்தில் எழுதும் வசதி மிக நல்ல முறையில் செயல்பட்டு வந்தது. அதை மூடியது சரியாகப் படவில்லை. மீண்டும் விவாதக்களத்தை திறக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளின் பிரசினை பற்றிய கட்டுரை பலரைச் சென்றடைய வேண்டும். பாவண்ணனின் கட்டுரையும், பாரி பக்கமும் நன்றாய் இருந்தன. விஜயராகவன் கட்டுரைகளையும், ஜெயபாரதன் கட்டுரையையும் நான் தொடர்ந்து படிக்கிறேன். திண்ணையின் சிறப்பெள அம்சங்கள் இவை. திண்ணைக்கும் இந்த இருவருக்கும் பாராட்டுகள். அரவிந்தன் கட்டுரை கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறது. காப்ராவை நான் படித்ததில்லை. . ஆனால் கிருஸ்தவம், மார்க்சியம் இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவதும் எனக்கு விளங்கவில்லை. மார்க்சியம் தான் டார்வினியத்தை ஏற்றுக் கொள்கிறதே. சொல்லப் போனால் மார்க்சியத்தின் வலுவான ஆதரவு டார்வினியத்திற்த்கு இருந்ததால் தான் விஞ்ஞானப் பார்வைகள் பல துறைகளில் வளரத் துணை புரிந்தது என்று படித்திருக்கிறேன். மார்க்சியத்தை மதமாய்ப் பார்த்து அதைத் திட்டும் போக்கு, நிச்சயம் விஞ்ஞான ரீதியானதல்ல.

கவிதைகளில் வசீகர் நாகராஜன் கவிதை நன்றாய் இருந்தது. ராம கியின் கவிதை பழைய பாணியில் இருந்தாலும் , ரசிக்கத் தக்கதாய் இருந்தது. நீண்ட கவிதையை மீண்டும் படிக்க வேண்டும்- ஒட்டு மொத்தமாய்.

ஆர் ரஃபீக்

rafeeq@optonline.net


மஞ்சுளா நவ நீதன்களிடம் தலித்கள் எதிர்பார்ப்பது மனமாற்றமே! அறிவுரையல்ல!

ஏகலைவன்

பெயர் மாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருஞ்சித்திரனார் அல்ல. அவர் உயிருடன் இல்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவரது துணைவி தாமரை பெருஞ்சித்திரனார். மஞ்சுளா நவ நீதன், தலித்களின் கோயில்களுக்கு சென்று வழிபடும் சங்கராச்சாரியார், தலித்களுடன் மலம் அள்ளப் போகும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். மஞ்சுளா நவ நீதனுக்கு தாமரை பெருஞ்சித்திரனாரும், இறைக்குருவனாரும், அருளியும் தாழ்த்தப் பட்டவர்கள் என்பது தெரியாதோ ?

பெயர் மாற்ற நிகழ்ச்சியும், மத மாற்ற நிகழ்ச்சியும் சரியான யுக்திகள் தான். தலித்களை ஆட்சியாளர்கள் திரும்பிப் பார்க்கச் செய்வதற்கு இதை விட சரியான வழி இல்லை. அம்பேத்கர் கையாண்ட வழி இது. மஞ்சுளா நவ நீதன்களிடமும், தலித்கள் அல்லாதவர்களிடமும் தலித்கள் எதிர்பார்ப்பது அவர்களது மனமாற்றத்தையும், அன்பையும், ஆதரவையும் தான். அவர்களது அறிவுரையை அல்ல. அது தேவையும் இல்லை.

தலித்கள் தாங்கள் செய்யும் பாரம்பரியத் தொழில்களை விரும்பிச் செய்யவில்லை. காஞ்சி மடத்தில் அவர்களில் ஒருவருக்கு தலைமைப் பொறுப்பை கொடுத்தால் மறுக்கவா போகிறார் ? தலித்கள் முன்னேற்றம் அடையும் போது அவர்கள் மற்றவர்களுக்கு இதைவிட அழகான, பண்பட்ட முறையில் அறிவுரை சொல்வார்கள்.

ஏகலைவன்

egalaivan@langoo.com


Dear Editor,

I am not able to view the messages in any of the forums inspite of downloading all the fonts. I have also a login acct for the forum with the login id rcpriya. Can you please explain what else needs to be done to rectify this ?

Thanks,

Priya R.C.

rcpriya@yahoo.com


திண்ணை குறிப்பு: திண்ணை விவாதக்களத்தை மேற்பார்வை பார்ப்பது கடினமாக இருப்பதால் மூடப்பட்டுவிட்டது. பழைய விவாதக்கள கருத்துக்களை எப்போதும் பார்க்கலாம். http://www.thinnai.com/vivadh என்ற முகவரியில் இருக்கிறது.


மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு,

திண்ணை தன் ‘விவாதத் தளத்தினை ‘ மூடியது துரதிருஷ்ட்டமானது. வருத்தத்தினையளிப்பது. இணையத்தில் என்னைப் போன்றவர்களை விவாதத்தில் நாட்டம் கொள்ள வைத்தவை திண்ணை விவாதங்களே. பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பலர் கூடிக் களிக்க வசதியினைத் தந்தது திண்ணை அரட்டையே. இதற்காக எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு சிலரின் துஷ்பிரயோகங்கள் இருந்த போதிலும் பொதுவில் திண்ணை விவாதங்கள் ஆக்கபூர்வமானவையாகவே இருந்து வந்துள்ளன. இணையத்தில் தீவிரமானதொரு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் திண்ணையின் விவாதக் களமும், சஞ்சிகையும் முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன. ஆற்றி வருகின்றன. மீண்டும் திண்ணையில் சூடான அரட்டையினைக் கேட்கும் காலம் விரைவில் வருமென எதிர்பார்க்கின்றோம்.

– வ.ந.கிரிதரன் –

ngiri2704@rogers.com


சென்ற வாரக்கட்டுரைகளில் ஜெயமோகன் எழுதிய ஹெப்சிபா ஜேசுதாசன் விருது விழா சிறப்பாக இருந்தது. அதற்கு ஆதாரமாக இருந்த விளக்கு இலக்கிய அமைப்பும், வெளி ரங்கராஜனும் பாராட்டுக்குறியவர்கள். திறம்பட தொகுத்து வழங்கிய ஜெயமோகனும் பாராட்டுக்குறியவர்.

திண்ணை விவாதக்களத்தை மூடிவிட்டது புரிந்து கொள்ளக்கூடியது என்றாலும் வருத்தத்துக்குரியது. தங்களது திட்டுக்களை சொல்வதற்கு மட்டுமே கருத்துச் சுதந்திரம் என்பதும், மற்றவர்களது கருத்துக்கள் வெறுப்புப்பேச்சு என தடைசெய்யப்படவேண்டும் என்பதும் பலரது அடிப்படையாக இருக்கும் இக்காலத்தில் ஒரு விவாதக்களம் ஆரம்பித்து இது போன்ற விவாதக்களங்களுக்கு முன்னோடியாக திண்ணை இருந்திருக்கிறது.

சூரஜ் பான் தாஹியாவின் விவசாயம் பற்றிய கட்டுரையும், சின்னக்கருப்பனின் விவசாய வருமான வரிவிலக்கு பற்றிய கருத்துக்களும், விவசாயப் பிரச்னைகளை உதாசீனம் செய்து வரும் இன்றைய பத்திரிக்கை உலகில் முக்கியமானவை ஆகின்றன. இதற்குக் காரணம், பத்திரிக்கை நடத்துபவர்கள் விவசாயம் குடும்பங்களிலிருந்து வராமல் நகரவாசிகளாக இருப்பதா என்று ஆராயத்தகுந்தது.

கவிதைகளில் இராம.கி எழுதிய கவிதையும், வசிகர் நாகராஜன் எழுதிய வேர்மனதும் நினைவில் நிற்பவையாக எனக்கு இருந்தன. வழக்கம்போல பாவண்ணனின் கதைசொல்லும் கட்டுரை பல ஞாபகங்களை கிளறிவிட்டது.

பாரியின் குழந்தை புத்திசாலி.

நரேஷ்

naresh3021@yahoo.com


Dear Editor,

Can you please clarify the following ?

Do you have any ranking while publishing poems in your poem section ? I mean the order of

publishing the poems. Or you just publish them in a random order ?

Thanks,

Priya R.C.

rcpriya@yahoo.com


It is random order.. – Thinnai


Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts