இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

சின்னக்கருப்பன்


எய்ட்ஸ் தினம்

இந்தவாரத்து ஞாயிற்றுக்கிழமை எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டு உலகளாவிய முறையில் அதனை பிரபலப்படுத்தி, எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டில் எய்ட்ஸ் சமூகசேவையாளர்களை போலீஸார் அவமானப்படுத்துவது நிற்பதில்லை. இலவச நிரோத் வினியோகம் செய்யமுனைந்தவர்கள் போலீஸாரால் அடிக்கப்பட்டிருக்கிறார்கள். கேவலமாக நடத்தப்படுவது வழக்கமான விஷயமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த மட்டில், எய்ட்ஸ் தினம் ஒரு கேட்ஸ் தினமாகி விட்டது. கேட்ஸ் 100 மில்லியன் டாலரை கொடுத்தது பற்றி ஒரு மத்திய அமைச்சர் கோபித்துக்கொண்டார். எய்ட்ஸ் ஒரு பணக்கார நோயாக மாற்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வந்திருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் என்றால், அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் என்று பொருள். மருத்துவ நிறுவனங்கள் நாங்கள் ஏராளமான பொருள் செலவு செய்து இந்த நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கிறோம், அதனை மூன்றாம் உலக நாடுகள் அபகரித்து குறைந்த விலையில் உற்பத்தி செய்து எங்கள் லாபத்தில் அடிக்கின்றன என்று காட் வரை சென்று முறையிட்டார்கள். ஏராளமான பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர், இந்தியா இன்னும் அது போல உற்பத்தி செய்ய கால அவகாசத்தை நீட்டியிருக்கிறது. ஆனால், அந்த கால அவகாசம் முடியும் வரைக்கும் நோய்க்கான மருந்துகளை வெளியிடப்போவதில்லை என்பது போல லேசுபாசாகப் பேச்சு கிளம்பியிருக்கிறது. இதற்கு வழி, இந்தியாவின் மருத்துவ நிறுவனங்கள் தானாக முன்வந்து மருத்துவ ஆராய்ச்சிக்கு செலவு செய்து திறமையான இந்திய மருத்துவ நிபுணர்களை இந்தியாவிலேயே உபயோகப்படுத்தி அதே வேலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தண்ணி காட்டுவதுதான். ஆனால், இந்தியாவில் உற்பத்தியாகும் தொழில்நுட்ப நிபுணர்களும், மருத்துவ கோல்ட் மெடல்களும் அண்ணாசாலையில் வரிசையில் நிற்பதைப் பார்க்கும் போது, அதற்கு இன்னும் வெகுகாலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது.

***

ஈராக் விவகாரம்

ஈராக் விவகாரம் ஒரே ஒரு விஷயத்தை நிரூபித்திருக்கிறது. அது உலகம் ஒரு யூனிபோலார் அமைப்பாக உருவாகி வந்துகொண்டிருக்கிறது என்பது. ஆனால், இந்த விஷயம் பற்றி புடின் கூட கவலைப்படவில்லை என்னும்போது இந்தியா கவலைப்பட்டு ஒன்றும் நடக்கப்போவதில்லை. அது மட்டுமல்ல, இந்தியா ஈராக்குடனான தன்னுடைய ஸ்டாரஜிக் பார்ட்னர்ஷிப்பையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை. இன்றைய ஈராக் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வியாபார ஒப்பந்தங்கள், ஈராக் ஆட்சி மாற்றியவுடனும் தொடரும் என்று உத்திரவாதம் ஃப்ரான்ஸ், சீனா, ரஷ்யா நாடுகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காரணம் என்ன ? அவர்கள் ஐ.நாவின் பாதுகாப்பு அமைப்பில் அங்கத்தினர்கள். அவர்கள் வேடோ போட்டால், தீர்மானம் காலி. ஐ.நா அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் அமெரிக்கா போய் ஈராக்கை அடிக்கும் என்று அமெரிக்க தலைவர்கள் பேசியது, அப்படி ஒரு உத்திரவாதம் கொடுக்காமலேயே அமெரிக்காவுக்குச் சாதகமாக ஈராக் போருக்குப் பின்னர் விஷயங்களை வளைத்துக்கொள்ள முடியுமா என்ற முயற்சிதான்.

இந்தியாவுக்கு அப்படிப்பட்ட ஒரு உத்திரவாதம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் ? இந்தியா பாதுகாப்பு அமைப்பில் இல்லை. இந்தியா இன்றைய ஈராக் அரசாங்கத்துடன் போட்ட அத்தனை ஒப்பந்தங்களும் காலி என்றுதான் பொருள். அதனால்தான், இன்றைய இந்திய அரசாங்கம், ஈராக் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை ஈராக்கிய மக்களுக்குத்தான், அவர்களுக்கான தலைமையை மற்றவர்கள் (அதாவது, அமெரிக்கா) தீர்மானிக்க முடியாது என்று சொல்கிறது. இது வேறு ஒன்றும் இல்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன் விஷயம்தான். ஆனால், நாம் ஓரத்தில் நின்று புலம்புவதால் ஒரு பைசா பிரயோசனம் கிடையாது. இவ்வாறு அமெரிக்கா பண்ணும் அடாவடித்தனமும், அடாவடியாக குறைந்த விலையில் பெட்ரோலை அபகரிப்பதும் நாம் புலம்புவதாலும், அமைதி நாடு என்று பேசிக்கொண்டிருப்பதாலும் மாறவே மாறாது.

என்பிலதனை வெயில் காயும்.

***

கார்ட்டூனிஸ்ட் அபு அப்ரஹாம் மறைவு

ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், பதில் கார்டூனிஸ்ட் என்பதாகத்தான் இருக்கும்.

நம் நாட்டில் கார்டூனிஸ்டுகளுக்குப் பஞ்சமே இல்லை. அதிலும் சிறந்த கார்டூனிஸ்டுகள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, நட்பு ரீதியில் பெருந்தலைவர்களோடும் உறவு கொண்டிருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் சங்கர் வழி வந்த பல கார்டூனிஸ்டுகளில் முக்கியமானவரான அபு அப்ரஹாம் தன் 78 வயதில் மறைந்திருப்பதைப் படிக்கும் போது, ஒரு நிறை வாழ்வு வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையைப் படிப்பது போன்ற உணர்வு வருகிறது.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

author

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

Similar Posts