உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2

author
0 minutes, 9 seconds Read
This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

ஒரு மெளன யுத்தம் – கடன்கள் ஏழைகளை எப்படிப் பாதிக்கிறது


— ‘கடன் தொல்லையால் பள்ளிகள். ஆஸ்பத்திரிகள் மூடப்படுகின்றன. போரைவிட மோசமாய் உயிரழிவு நிகழ்கிறது. ‘ என்கிறார் டாக்டர் அதாபயோ அடெட்ஜி . இவர் வளர்ச்சி உத்திகளின் ஆப்பிரிக்க மையத்தைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளராய் இருந்தவர்.

இங்கிலாந்து நாட்டில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி 200 மில்லியன் டாலர் திரட்டி 1997-ல் ஆப்பிரிக்காவிற்கு அளித்தார்கள். ஆனால் ஒரே வாரத்தில் கடன் வட்டிக்கு இது போய்விட்டது.

— மிக மோசமான கடன் தொல்லையால் அவதிபடும் 32 நாடுகளில் 25 சஹாராவிற்குக் கீழ் உள்ள ஆப்பிரிக்க நாடுகள்.

— ஆப்பிரிக்கா உடல்நலத்திற்குச் செலவிடும் தொகையைப் போல நான்கு மடங்கு கடன் வட்டிக்குப் போய் விடுகிறது.

— 1960-ல் உலகின் பணக்கார நாடுகளின் 20 சதவீத நாடுகளின் வருமானம், மிக அடிமட்டத்தில் உள்ள 20 சதவீத ஏழை நாடுகளைப் போல 30 மடங்காய் இருந்தது. இப்போது இது 60 மடங்காகி விட்டது.

— ஆஃப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் நோயை எதிர்த்துப் போராட ஏழரை பில்லியன் டாலர்களிலிருந்து 15 பில்லியன் வரை தேவைப்படும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால் கடன் வட்டிக்காக மட்டும் ஆப்பிரிக்க நாடுகள் வருடந்தோறும் 13 பில்லியன் டாலர்கள் செலவு செய்கின்றன.

— கடன் அடிமைத் தனம் என்பது வெளிநாட்டு உதவியைத் தலைகீழ் ஆக்கினதாகும். அதாவது ஏழை நாடுகளுக்கு ஒரு டாலர் உதவி கிடைத்தால் 1.30 டாலர் கடன் வட்டிக்குச் செலவாகிவிடுகிறது.

மூன்றாவது உலகின் கடன் தொல்லையால் தான் கோடிக்கணக்கான மக்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள்.

உடல் நலம்

உடல் நலத்திற்குச் செலவிடுவது 1980-லிருந்து மூன்றாவது உலக நாடுகளில் குறைந்து வருகிறது. இதனால் செலவிடமுடியாதவர்கள் மருந்து ஏதும் வாங்க வசதியில்லாமல் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார்கள். ஜிம்பாவேயில் 1990-ல் ஐ எம் எஃப் திட்டம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து மக்கள் உடல் நலனுக்கான செலவு மூன்றில் ஒரு பகுதியாய்க் குறைந்துவிட்டது.

1960-களிலும், 70-களிலும் கொஞ்சநஞ்சம் உடல்நலத்திற்காகச் செலவு செய்திருந்த நிலை மாறி இப்போது கடன் தொல்லையால் குறைந்து வருகிறது. ஐந்து வயதிற்குள் இறந்து போகும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. ஜிம்பாவே, ஜாம்பியா, நிகாரகுவா, சிலி, ஜமைக்கா போன்ற நாடுகளில் இது அப்பட்டமாய்த் தெரிகிறது. அழிக்கப்பட்ட நோய்கள் பட்டியலில் இருந்த டி பி, மஞ்சள் சுரம் போன்ற நோய்கள் மீண்டும் உலா வர ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு பரிகாரமோ, தடுப்பூசியோ கிடைப்பது அரிதாகி இருக்கிறது.

கல்வி

கல்விக்கு பண வசூல் நடப்பதால், குழந்தைகளை மக்கள் பள்ளிக்கு அனுப்பமுடிவதில்லை. ஏழைகளுக்குக் கல்வி மறுக்கப் படுகிறது.

சஹாராவிற்குக் கீழ் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இது தெரியவருகிறது. 6-11 வயதான குழந்தைகள் பள்ளியில் சேர்வது 1980-ல் 60 சதவீதம் . 1990-ல் ஐம்பதுக்கும் கீழே வந்துவிட்டது. தான்ஸானியாவில் ஐ எம் எஃ திட்டத்தால் பள்ளிக்கு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டவுடன் ஆரம்பப் பள்ளிகளிலும், நடுத்தரப் பள்ளிகளிலும் குழந்தைகள் சேர்வது குறைந்துவிட்டது.

Employment

வேலை வாய்ப்பு

அரசாங்க வேலைவாய்ப்புகளைக் குறைக்கச் சொல்லி ஐ எம் எஃப் வலியுறுத்துகிறது. இதனால் வேலையிழப்பும், சம்பளக் குறைப்பும் நிகழ்கிரது.

1980-களிலிருந்து உண்மையான சம்பள வருமானம் 50-60 சதவீதமாய்க் குறைந்துவிட்டது.மெக்சிகோ, கோஸ்டா ரிகா, பொலிவியா போன்ற நாடுகளில் சராசரி வருமானம் மூன்றில் ஒரு பகுதியாய்க் குறைந்து விட்டது. 1980-லிருந்து வேலையில்லாத் திநாட்டம் வெகுவாக அதிகரித்துவிட்டது. – ஜாம்பியா, தான்சானியா, கானா போன்ற நாடுகளில் 20 சதவீத மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதனால் அரசாங்க வரிவசூலும் பாதிக்கப் படுகிறது.

வர்த்தகம்

SAP திட்டத்தின் கீழ் நாடுகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவல்ல பயிர்களை உற்பத்தி செய்தால் தான் டாலரில் சம்பாதித்து கடனை அடைக்க முடியும். எல்லா ஏழை நாடுகளும் ஒரே மாதிரி பயிரிடுவதால், உலகச் சந்தையில் இவற்றின் விலை குறைகிறது. இதனால் ஏழை நாடுகளில் உள்ள பண்ணை விவசாயத் தொழிலாளர்களின் சம்பளம் குறைகிறது. கூலி வீழ்ச்சியடைகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்கள் மெக்ஸிகோ மக்காச் சோளத்தை விளைவித்து வந்திருக்கிறது. ஆனால் ஐ எம் எஃப் திட்டத்தால் இப்போது தன் தேவையில் 20 சதவீதம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

ஐ எம் எஃப் மெக்சிகோ மீது அழுத்தம் தந்து, உணவுப்பயிர்களுக்குப் பதில் ஸ்ட்ராபெரி, பழவகைகள் போன்ற பணப்பயிர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. விவசாயப் பயிருக்கு வர்த்தகக் கட்டுப்பாட்டையும் நீக்க வேண்டும் என்று ஐ எம் எஃப் வலியுறுத்தியது. இதனால் அமெரிக்கா உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பண்டங்களுடன் மெக்சிகோ போட்டி போட வேண்டியதாய் உள்ளது. ஆனால் அமெரிக்காவோ பெரும் மான்யங்கள் அளித்து தன் உற்பத்தியை நிலைப் படுத்திக் கொள்கிறது. உற்பத்தியைப் பெருக்குகிறது.

இதனால் மெக்சிகோவிற்குத் தான் தோல்வி. ஏழைகள் துயருறுகிறார்கள். மெக்சிகோவின் மக்களில் 20 சதவீதம் பேருக்கு பணமாய்ச் சம்பளம் கிடைப்பதில்லை. 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மூன்று டாலர்களில் தான் உயிர் வாழவேண்டும்.

தாமதமான, நிறைவு தராத தீர்வுகள்

கடன் பிரசினைக்கு அரசியல் தீர்வுகள்

1970-களின் பிற்பகுதியிலிருந்து மூன்றாவது உலக நாடுகள் கடன்களைத் திருப்பித் தரமுடியாத நிலை ஏற்படலாம் என்று உணர்வு ஏற்படத் தொடங்கியது. இதை எப்படி வசூல் செய்வது என்று பல நாடுகளும் பலவாறாய்த் திட்டம் தீட்டத் தொடங்கின.

கடன் பிரசினையை முழுமையாய் இந்தத் திட்டங்கள் எதிர்கொள்ளவில்லை.தென் அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் சீரடையத் தொடங்கியுள்ளது என்றாலும், பிரசினை மற்ற நாடுகள் எதிலும் தீரவில்லை.

ப்ராடி திட்டம்

1989 வாக்கில் வணிக வங்கிகள் பெருமளவு திரும்பிவராக்கடனை நட்டக் கணக்கில் காட்டிவிட்டன. ப்ராடி சொன்னது என்னவென்றால், இந்தக்கடன்களை மொத்தமாக வங்கிகள் நட்டக் கணக்கில் எழுதிவிட வேண்டும். பெருமளவு கடன் வாங்கியுள்ள தேசங்களுக்கு திருப்பித் தரவேண்டிய தொகைஅயைக் கணிசமாய்க் குறைக்க வேண்டும்.

வங்கிகள் இதை இரு விதமாய்ச் செய்யும்

— சில கடன்களை ஐ எம் எஃப் நிதி கொண்டு அடைத்துவிடவேண்டும்.

–சில கடன்களை நீண்டகாலக் கடன்களாய் மாற்ற வேண்டும். இது கடன் பத்திரங்களாய் மாற்றப்பட்டு சந்தையில் விற்கப் படலாம்.

ஆனால் கடன் பட்ட நாடுகளுக்கு, மொத்தக் கடனைக் குறைப்பதற்கு, இந்தத்திட்டம் உதவவில்லை. வர்த்தகக் கடன்கள் அடைபட்ட போதே வேறு கடன்கள் பெருகலாயின. ப்ராடி கடன் பத்திரங்கள் மீது வட்டி செலுத்த வேண்டி மீண்டும் ஏழை நாடுகளின் செல்வம் வெளியே செல்ல ஆரம்பித்தது. ஏற்கனவே கடன் வட்டி எந்த அளவு செலுத்தி வந்தார்களோ அதே நிலையில் அவர்கள் கடன் செலுத்த நேர்ந்ததால் ஏதும் பயன் அவர்களுக்குக் கிட்டவில்லை.

ட்ரினிடாட்/ நேபிள்ஸ் ஷரத்துகள்

ஜான் மேஜர் கடன்களில் பாதிக் கடனை நீக்கிவிட்டு மீதிக் கடனை வேறு தவணை முறையை நிர்ணயிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் சமர்ப்பித்தார். 18 பில்லியன் டாலர் அளவு இந்தத் திட்டம் கடன் நாடுகளின் கடனை இது குறைத்திருக்கும்.

மேலே சென்று மூன்றில் இரண்டு பகுதிக் கடன்களை நீக்கிவிடலாம் என்று அவர் சொன்னார். 1994-ல் G-7 வளர்ந்த ஏழு நாடுகளின் உச்சகட்டக் கூட்டத்தில் இந்தத் திட்டம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால் நடைமுறையில் இந்தக் குறைப்பு மிகச் சொற்பமான கடனுக்குத் தான் கிட்டியுள்ளது.கடன் கொடுத்தவர்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த தயக்கம் காட்டியிருக்கிறார்கள். ஐ எம் எஃப் கடன்களுக்கும், உலக வங்கிக் கடன்களுக்கும் இந்தத் திட்டம் இல்லை என்பது ஒன்று. SAP-யின் கீழ் உள்ள கண்டிப்பான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தாக வேண்டிய நெருக்கடி இன்னொரு புறம்.

(தொடரும்…)

Series Navigation

Similar Posts