ஆ. மணவழகன்
நானும் என் நண்பர்கள் சிலரும் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்குச்சமீபத்தில் சென்று வந்தோம். நாங்கள் சென்றது மண்டபத்தைச் சுற்றிப் பார்கவோ, அங்குள்ள வரலாற்று உண்மைகளைஅறியதற்கோ அல்லை என்றாலும், அங்கு நடந்த சில சம்பவங்கள் என்னைச் சிந்திக்கச் செய்வனவாய் அமைந்து விட்டன.
நாங்கள் அங்கு சென்றதன் பின்னணி என்னவென்றால், எங்கள் அலுவலகத்தில் ‘ அலுவலக நாள் ‘ என்று ஒன்றை நாங்களே ஏற்பத்திக்கொண்டு( விடுதி மாணவர்கள் Room day யும், பயணியர் Bus day யும் கொண்டாடுவார்களே அதைப்போல) வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அதைக் கொண்டாடி வருகிறோம். இதை ஒரு சிறந்த பழக்கமாகவே நான் கருதுகிறேன். இதைக் கொண்டாடத்தான் நாங்கள் காந்தி மண்டபம் சென்றோம்.
காந்தி மண்டபத்தின் அருகில் உள்ள ‘மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தின் ‘ உள்ளே நண்பர்கள் நுழைந்தனர். சிலர் மொழிப்போர் தியாகம் என்றால் என்ன ? என்று கேட்டது என்னுள் ஏதோ செய்தது. எல்லோரும், பெரிய படிப்பு என்று இன்று நாம் நினைக்கிறோமே அதைப் படித்தவர்கள். படித்திருந்தால் இதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன! ஆதலால், அதை விட்டு விடுவோம்.
அடுத்து சிலர் செய்த செயல்கள் தான் இன்னும் என்னை வேதனையடையச் செய்தது. அந்த மண்டபத்தில் மாவட்ட வாரியாக மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்கள் வைக்கப் பட்டுள்ளன. அதையெல்லாம் பார்த்த நண்பர்கள், யாரடா இவர்கள்… என்று சொல்லி ஒவ்வொரு புகைப்படத்தையும் கிண்டல் செய்தது கேட்கவே காது கூசுவதாய் இருந்தது. நெஞ்சு பொறுக்குதில்லையே.. என்ற பாரதியின் பாடல்தான் நினைவிற்கு வந்தது. இருந்தும் என்ன, அவர்களிடம் சண்டைபோட ஏனோ எனக்கு மனது இல்லை (நாங்கள் வந்தது மகிழ்சியாக இருக்க என்பதால்)
இதே கிண்டலும், கேலியும் அடுத்துள்ள ‘தியாகிகள் மணிமண்டபத்தினைக் ‘ காணச்சென்ற பொழுதும் தொடர்ந்தது. ஆனால், என் சிந்தனையோ, எங்கள் மாவட்டத்தில் இருந்து எத்தனை தியாகிகளின் புகைப்படம் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று தேடுவதிலேயும், எங்கள் ஊரில் இருந்து எவரின் புகைப்படமாவது வைக்கப்பட்டுள்ளதா ? என்றும் பார்பதிலேயே இருந்தது. இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. என்னுடைய தாத்தாவும் ஒரு தியாகிதான். சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர். திருமணம் ஆன மறுநாளே ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செய்தியினைச் சிறு வயதிலிருந்தேக் கேட்டுக் கேட்டு எனக்குள் தியாகிகள் மீது ஒரு பற்று ஏற்பட்டிருக்கலாம்.
என் தாத்தாவைப் போல் ஒவ்வொரு தியாக செம்மல்களின் பின்னாலும் ஒரு தியாக வரலாறு இருக்குமே! அது என்னவாக இருக்கும் என்று தேட தானே நம் மனம் ஆசை பட்டிருக்க வேண்டும். அந்த தியாக தீபங்களின் முகங்களைப் பார்த்து கிண்டல் செய்ய எப்படித் தோன்றும். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் யார் ? எதற்காக வெளிளையனை எதிர்த்துப் போராட வேண்டும் ? வல்லரசோடு இன்று நாம்போட்டி போடுகிறோமே யாரால் ? அனுகுண்டை வெடிக்கச்செய்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தோமே யாரார் ? ராமேஸ்வரம் தீவில் பிறந்த ஒருவர் இன்று இந்தியாவின் முதல் குடிமகனாக ஆக்கியிருகிறோமே எப்படி ?
வெளிளையனை எதிர்த்துப் போராடி, நம் முன்னோர்கள் சிந்திய குருதி விதையில் இருந்து முளைத்த விருச்சத்தின் பலனல்லவா இவைகளெல்லாம். அடிமை இந்தியாவில் இவைகள் சாத்தியா ? சிந்தித்தோமா ஒரு நொடி ?
இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு தேசிய உணர்வு அதிகம் உள்ளது என்று சமீபத்தில் ஏதோ ஒரு நாளிதழ் புள்ளிவிவரத்தினை வெளுயிட்டிருந்தது. படித்து மகிழ்தேன். அது சரியான புள்ளிவிவரமா என்று இப்போது எனக்குள் ஒரு சந்தேகம் எழுகிறது. நம் இளைஞர்களிடம் சாதி வெறி, மத வெறி, இருக்கும் அளவிற்கு சமுதாய வெறி இல்லையே ஏன் ? இன ஒற்றுமை இல்லையே ஏன் ? இளைஞர்களிடம் தேசிய உணர்வு குறைந்து போவதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. சரியான வழிகாட்டிகள் இல்லை என்று நாம் தப்பித்துக்கொள்ள முடியுமா ?
வழிகாட்டுதல்கள் என்பது இப்போதைய நிலையில் என்ன ? புத்தகங்களும், ஆசிரியர்களும் தானே. புத்தகங்களும் தான் என்று நாம் ஒப்புக்கொண்டால் நம் நாட்டின் பாடதிட்டம் சரியாக இருக்க வேண்டாமா ? வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் மட்டுமே நம் நாட்டின் வரலாற்றையும், பழமையையுயும், பெருமையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நிலையும். தமிழை பாடமாக எடுத்துப் படித்தால் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தெரிந்து கொண்டால் போதும் என்ற நிலையும், இது போலவே என்ன விருப்பப்பாடம் எடுத்து படிக்கின்றனரோ அதைப்பற்றி மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்ற நிலையும் இருக்கும் பொழுது நாம் யாரைக குற்றம் சொல்வது.
இதற்கு ஒரே தீர்வு நம் நாட்டின் பாடதிட்டங்களை மாற்றி அமைக்கவேண்டும். நம் இளைஞர்களுக்கு, இளம் வயதில் இருந்தே நம் நாட்டின் வரலாறு, பண்பாடு, பழக்க வழங்கள், சுதந்திர வரலாறு, தியாகிகளின் வரலாறு போன்றவற்றை மனதில் பதியச் செய்யவேண்டும். என்ன விருப்பப்பாடம் எடுத்துப் படித்தாலும் அதோடு கூட சமுதாயக்கல்வியையும் கற்பிக்கப்படவேண்டும். இதை யார் முன்மொழிவது ? யார் வழிமொழிவது ?
இன்டர் நெட்டால் இமயத்தைத் தொட்டோம்!
குளோனிங்கால் கோபுரத்தை அடைந்தோம்!
அனுகுண்டால் அகிலத்தை அடக்கினோம்!
கட்சி விட்டு கட்சி மாறினோம்!
கண்டம் விட்டு கண்டம் தாவினோம்!
மதம் விட்டு மதம் மாறினோம்!
மனிதனாக மாற மட்டும் ஏன் மறுக்கிறோம்!!! ?
****
a_manavazhahan@hotmail.com
- நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று)
- உலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)
- வெற்றிட பயணம்
- அரசியல்வாதி ஆவி
- எல்லாவற்றுக்குமாய்…
- பெண்தெய்வம்
- அறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)
- அவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்
- திலீப் குமாருக்கு விருது
- புதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )
- திண்ணை என்ன சொல்கிறது ?
- நிழல் பூசிய முகங்கள்
- அச்சம்
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
- போதி நிலா
- வீசும் வரை……
- நெஞ்சு பொறுக்குதில்லையே..
- இதயத்தின் எளிமை (Simplicity of the heart)
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)
- சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம்
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002
- மாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்
- திண்ணை அட்டவணை