இந்த வாரம் இப்படி – சூன் 23 2002 (கண்டதேவி, காவிரி, அலெக்ஸ் பெரி)

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

மஞ்சுளா நவநீதன்


கண்டதேவியில் காணவில்லை – மனித நாகரிகம்

தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட வேண்டுமென்று தீர்ப்புச் சொன்ன பிறகும் அவர்களை மேல்சாதிக்காரர்கள் தேர் இழுக்கச் சேர்த்துக் கொள்ளத் தயாரில்லை. பிராமணியம், அநீதி என்று பேசியவாய்கள் எல்லாம் மூடிக் கிடக்கின்றன. தலித்-பிற்படுத்தப்பட்டோர் – பிராமணரல்லாதார் ஒற்றுமை என்றெல்லாம் பேசி வருபவர்களுக்கு இது ஒரு பொருட்டாய்த் தோன்றவில்லை. நீதிமன்றம் தீர்ப்புத் தந்தும் தலித்களைச் சேர்த்துக்கொண்டு தேரோட்டம் நடைபெற வேண்டும் என்றால், தேரோட்டமே தேவையில்லை என்று நான்கு வருடங்களாய்ப் பிரசினை அங்கேயே நின்றிருக்கிறது.

ஒரு தலித் பெயரைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சூட்டப் போய், கலவரங்கள் நடந்தது நம் நினைவில் இன்னமு இருக்கிறது. மிக வலிமை வாய்ந்த சாதியத்தை எதிர்க்க முடியாமல், எல்லா போக்குவரத்துக் கழகத்திற்கும் எந்தத் தலைவரின் பெயரையும் இடக் கூடாது என்று கொள்கை அறிவிப்புக்கு வழி வகுத்த கொள்கை வீரர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் கண்டதேவிப் பிரசினைக்குத் தீர்வாக இனி தமிழ் நாட்டில் எந்தத் தேரோட்டமும் கிடையாது என்று சட்டம் போட்டாலும் போடக்கூடும். யார் கண்டது ?

கிருஷ்ணசாமி தலித்களின் உண்மையான எதிரிகள் யார் என்று அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு. வெற்றி பெறட்டும் அவர் போராட்டம். நடைபெறட்டும் தேரோட்டம்.

*****

காவிரி ஆணையம் : ஜெயலலிதா இல்லை

காவிரி ஆணையம் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருக்கிறது. பங்கு பெற்றிருந்தாலும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. பங்கு பெற்று வெறும் கையுடன் திரும்பினால் எதிர்க்கட்சிகள் தாக்குதலுக்கு ஆளாக வேண்டும் என்ற அச்சத்தினால், முதலிலேயே ஜெயலலிதா கழற்றிக் கொண்டுவிட்டார்.

காவிரிப் பிரசினை தீராத ஒன்று. துரதிர்ஷ்ட வசமாக கர்னாடகம்-தமிழ் நாடு பிரசினை என்று இது காணப் படுகிறது. காவிரி நதிநீர் பாயும் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் உட்கார்ந்து விவாதிக்க வழி பிறந்தால் , பிரசினை தீர வழி இருக்கிறது.

********

டைம் பத்திரிகை நிருபரும் இந்திய அரசாங்கமும்

மேல் நாட்டுப் பத்திரிகைகளில் பரபரப்பிற்காக கண்டமேனிக்கு எழுதுவது வழக்கம் தான். இம்முறை வாஜ்பாய்க்கு உடல் நலக் குறைவு, மிகத் தளர்ந்து போயுள்ளார், அவரால் தினசரி அலுவல்களைக் கூடச் சரிவர செய்ய இயலவில்லை, என்றெல்லாம் டைம் பத்திரிகை நிருபர் அலெக்ஸ் பெரி எழுதியுள்ளார். இவர் புது தில்லியில் இருப்பவர். உடனே அரசு யந்திரம் அலெக்ஸ் பெரி மீது பாய்ந்திருக்கிறது.

வாஜ்பாய் பற்றி நமது நிருபர்கள் பலரும் கூட இப்படி அபிப்பிராயங்கள் தெரிவித்திருக்கிறார்கள். உண்மையை ஒப்புக் கொள்வது தான் நேர்மையே தவிர , உண்மையைச் சுட்டிக் காட்டுபவர்களை தண்டிப்பது அழகல்ல.

வாஜ்பாய் இடத்தில் இப்போதைக்கு பா ஜ க யாரையும் உட்கார வைக்காது. வாஜ்பாய் என்ற மென்மையானவரின் பிம்பம் இப்போது பா ஜ கவிற்குத் தேவை. மற்ற எவரையும் கூட்டணிக் கட்சிகள் நம்புமா என்பதும் சந்தேகமே. இந்த நிலையில் உதவிப் பிரதமர் என்ற முறையில் அத்வானி அல்லது ஜஸ்வந்த் சிங் அல்லது ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை நியமிக்கலாம்.

**********

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts