மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

ஜெயமோகன்


மதிய உணவுக்கு முன்பு அரங்கில் பங்குபெற்றவர்களில் நடக்கும் ஆரோக்கிய நிலையில் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அருகே இருந்த ஃபெர்ன் ஹில் குன்றுக்கு நடந்து சென்றோம். வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன் , அபிலாஷ் ஆகியோ வரவில்லை . ஃபெர்ன் ஹில் வனத்துறையால் சீர்திருத்தப்பட்ட காடு . அங்கு ஒரு பார்வைக் கோபுரம் உண்டு. அதில் ஏறிப்பார்த்தால் ஊட்டியின் முழுத்தோற்றத்தையும் பார்க்க முடியும். காடு வழியாக நடந்தபடி இலக்கியம் பேசுவதென்பது ஊட்டி கூட்டங்களின் சிறப்பம்சமாக எப்போதுமே இருந்து வந்துள்ளது . மாலைதான் திரும்பி வந்தோம். ஏழு மணிக்கு அடுத்த அமர்வு .குளிர் நன்றாக ஏறிவிட்டிருந்தது .

நான்காம் அமர்வில் ஜெயமோகன் கட்டுரையை சுருக்கமாக முன்வைத்தார் . நீளமான கட்டுரை ஏற்கனவே பிரதி செய்யப்பட்டு அனைவருக்கும் அனுப்பப்பட்டிருந்தது . ஜெயமோகன் தன் கட்டுரைமீதான விவாதத்துக்கு உதவியாக மு தளைய சிங்கத்தின் சில மேற்கோள்களையும் தொகுத்து வாசித்தார்.அவற்றின் பிரதிகளும் வினியோகிக்கப்பட்டன. ஜெயமோகன் கட்டுரை மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது . முதற்பகுதி மு தளையசிங்கத்தை வாசிப்பதில் உள்ள வாசகத்தடைகள் , மு தளையசிங்க த்தின் சொந்தத் தடைகள் மற்றும் அவர் அணுகுமுறையின் அடிப்படைப்பிரச்சினைகள் ஆகியவை குறித்து பேசியது . இரண்டாம் பகுதி அவர் என்ன சொல்கிறார் என்பதை தொகுத்துச் சொன்னது . மூன்றாம் பகுதி அவரது இன்றைய முக்கியத்துவம் என்ன என்பது பற்றி விவாதித்தது .

ஜெயமோகன் கட்டுரையில் முதல்பகுதியில் அ] மு .தளையசிங்கம் தெளிவாக சிந்திக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டு முக்கியமான முதல் நிலை சிந்தனையாளர்கள் படைப்பிலக்கிய ஆக்கத்துக்கு சமான மான மனநிலையில் படிமங்கள் மூலம் சிந்திக்கிறார்கள் , ஆகவே அவர்களில் பெரும்பாலோரிடம் தருக்க ரீதியான தெளிவை எதிர்பார்க்க முடியாது என்றார் ஆ] மு தளையசிங்கம் தன் ஆய்வு உபகரணமாக இந்திய சிந்தனைமரபின் கருதுகோள்கள் சிலவற்றை பயன்படுத்தியது ஆழமான சிக்கல்களை உருவாக்கியது , இந்திய சிந்தனை மரபின் உபகரணங்கள் எவ்வாறு நவீன சிந்தனைத்தளத்தில் பயன்படுத்த முடியாதவையாக பின்தங்கியுள்ளன என விளக்கினார் .இ ] மு தளையசிங்கத்தின் கற்பனைகள் உட்டோப்பியக் கற்பனைகள் அல்ல. உட்டோப்பிய கற்பனை என்பது லெளகீகமான தருக்க அடிப்படையும் உள்ளது என்றும் மு தளையசிங்க முன்வைப்பது ஒரு மெய்யியல் கற்பனையே என்றும் விளக்கினார். மெய்யியல் ஊகங்களுக்குயுள்ள முக்கியத்துவம் நமது அடிப்படைக் கருத்துக்களை அவற்றின் தளத்துக்கு கொண்டு சென்று அவற்றின் உண்மையான மதிப்பென்ன என்று காணலாம் என்பதே என்றார் . உ] மு தளையசிங்க ஒரு தரிசனிகர் என்று வகுத்த ஜெயமோகன் தரிசனிகரில் எப்போதுமே ஒரு வகையான பிளவுண்ட தன்மை உள்ளது ,இது மனப்பிளவுக்கு அருகே இருப்பது , முக்கியமான தரிசன நூல்கள் பல மனப்பிளவு ஆக்கங்களும் கூட என்றார் . மெய்யுள் அப்படிப்பட்ட மனப்பிளவு ஆக்கமே என்றார் .

இரண்டாம் பகுதியில் ஜெயமோகன் மு தளையசிங்க என்ன சொல்கிறார் என கூறுகையில் அ] மு தளையசிங்கம் ஒரு முற்போக்காளராக இருந்து அடுத்த கட்டத்தை நோக்கிநகர்ந்தவர் .இதற்குக் காரணம் அவரது மெய்யியல் தேடலே என்றார் . மற்ற மார்க்ஸியர் விலகி நவீனத்துவம் நோகி சென்றபோது மு தளையசிங்க நவீனத்துவத்தையும் தாண்டி வெளியே சென்றதற்கு காரணம் அவரது ஆன்மீகமே என்றார் ஆ] மு தளையசிங்கம் தன் காலகட்டத்தில் மற்ற சிந்தனையாளர்களை பாதித்த பரிணாம சித்தாந்தம் மற்றும் மனமுழுமை குறித்த சிந்தனைகளின் அடிப்படையில் மானுட குலத்தின் அடுத்த கட்டத்தைப்பற்றிய ஊகங்களை உருவாக்கினார் . அதன் விளைவே பேர்மனம் என்ற அவரது ஊகம். அம்மனம் உருவாகும் சமூக அமைப்புக்கு அவர் பூரண அத்வைதநிலை என பெயரிட்டார். இ] மு தளையசிங்கத்தின் பார்வையில் இலக்கியம் இன்று மேல்மட்ட வாழ்க்கையை சித்தரித்து அதன் உச்ச நிலையில் ஆழத்தை குறிப்புணர்த்துவதாகவே உள்ளது . அனைவரும் ஆழமான மனவெளிப்பாட்டை அடையும் காலகட்டத்தில் இவ்விலக்கியங்கள் மதிப்பிழந்துபோய்விடும் .அன்று ஆழமே சகஜ நிலையாக உள்ள இலக்கியம் உருவாகும் அதை அவர் பூரண இலக்கியம் என்கிறார் .

மு தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன என ஜெயமோகன் கூறும்போது நான்கு விஷயங்களை சுட்டிக்காட்டினார் அ] மேலான சிந்தனையாளர்களில் அவர்கள் முக்கியப்படுத்தும் விஷயத்தை தவிர்த்து சிறு சிறு வரிகள் கூட ஆழமான சிந்தனைக்கு நம்மை இட்டு செல்லும். அம்மாதிரி வரிகளை மு தளையசிங்க த்தின் கட்டுரைகளில் காணலாம் என்றார் .உதார்ணமாக இலக்கியம் அசல் பரவசத்தை உருவாக்குவதில்லை , பிறஅனுபவங்கள் மூலம் பெற்ற பரவசத்தை ஞாபகப்படுத்தவே செய்கிறது என அவர் சொன்னதை சுட்டிக்காட்டுகிறார் . ஆ] மு தளையசிங்கம் தன் சிந்தனைகளில் தன் காலகட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் கண்டார் . அவை ஒன்று , எதிர்முனைகள் மூலம் இயங்கும் தத்துவத்தரப்புகள் சமரசம் மூலம் அசைவற்று போய் ஒரு உறைவு நிலை உருவாகும் என்பது .இரண்டு , மெய்யியலையும் அறிவியலையும் இணைக்கவேண்டிய அவசியத்தை , முழுமையான சிந்தனை தேவை என்பதை வலியுறுத்தினார் என்பது .இ] மு தளையசிங்கம் தன் சிந்தனைகள் மூலம் மார்க்ஸிய மெய்யியலின் போதாமையை உணர்ந்து அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதைப்பற்றி யோசித்தார். தனிமனித விடுமையையும் உள்ளிட்ட ஒரு மார்க்ஸியத்தை அவர் உருவகித்தார் எனலாம் . ஈ] மு தளையசிங்கம் ஒரு விளிம்புநிலை சிந்தனையாளர் .அவர் சிந்தனைகளின் கடைசி சாத்தியத்தின் விளிம்பில் நகர்பவர்.ஆகவே நாம் பேசும் ஒவ்வொன்று ம் அதன் எல்லையில் எவ்வாறாக அர்த்தப்படுகின்றன என்று பார்க்க வரால் முடிந்தது .அவரது முக்கியத்துவம் இதுவே என்றார் ஜெயமோகன்

****

எம் யுவன் – இங்கு ஜெயமோகன் முன்வைத்த கட்டுரையில் பொதுவாக இருந்த நோக்கு இது என்று எனக்கு தோன்றியது , ஜெயமோகன் மு தளைய சிங்கத்தின் சிந்தனை முடிவுகளை அனைத்தையும் ஏறத்தாழ நிராகரிக்கிறார் .அவரது ஆய்வு உபகரணங்களை முழுக்க ஐயப்படுகிறார். அவரை முன்னால் சென்றவர் ,ஆனால் வழிதவறியவர் என்று ஜெயமோகன் மதிப்பிடுகிறாரோ என்று படூகிறது . ஆக அவர் ஏற்பது தளையசிங்கம் தன் காலகட்டத்து அடிப்படைப்பிரச்சினைகளை அடையாளம் கண்டார் , அவற்றை தன்னுடைய சொந்த சிந்தனைகளை அடிப்படையாக வைத்து ஆராய முயன்றார் என்பதை மட்டுமே . அதாவது அவரது ஈடுபாட்டை , தீவிரத்தை மட்டுமே ஏற்கிறார் என்று படுகிறது .

ஜெயமோகன்- நான் மு தளையசிங்கத்தை ஏற்பது அவரது அசல்தன்மைக்காக .இது சாதாரணமான விஷயமல்ல. என் கட்டுரையிலேயே இதை சொல்லியிருக்கிறேன் .சிந்தனையாளர்களில் அசல் சிந்தனையாளர்கள் மிக மிக குறைவு . சிந்தனையில் முடிவுகள் தீர்வுகள் எல்லாம் பெரிய அளவில் முக்கியமானவையல்ல. அவை எப்படியானாலும் ஒரு கால கட்டத்துக்கு பிறகு காலவதியாகும் . மு தளையசிங்கம் ஒரு வகையில் இருத்தலிய சிந்தனையாளர்களின் சமகாலத்தவர் .அவர்களில் எத்தனைபேரின் சிந்தனை முடிவுகள் இன்று மீதமுள்ளன ? நான் கல்லூரியிலே படிக்கும் நாட்களில் சிந்தனையாளர் என்றால் அது சார்த்ர் தான். இன்று நமக்கே பல கட்டுரைகளை படிக்கும்போது சாதாரணமாக இருக்கிறது .ஆக சிந்தனையாளன் உருவாக்குவது ஒரு கோணத்தை மட்டுமே . அதை மு தளையசிங்கத்தின் எழுத்துக்களில் காணலாம். இன்று நாம் அசலாக சிந்திக்க ஆரம்பித்தால் என்ன பிரச்சினை வரும் என்பதை அவரது தோல்விகள் உணர்த்துகின்றன.அவ்வகையில் அவரது அத்தனை முயற்சிகளும் முக்கியமானவையே .

எம் யுவன் – இந்திய சிந்தனைமரபின் உருவகங்களை ஒரு படிமமாக ஏன் பயன்படுத்தக்கூடாது ?எத்தனையோ பழங்குடிப் படிமங்களை நாம் இப்போது பயன்படுத்துகிறோமல்லவா ?

ஜெயமோகன்- அது சாத்தியம்தான். ஆனால் இந்தியசிந்தனைமரபின் படிமங்கள் மிகவும் பயன்படுத்தப்பட்டவை. அவற்றின் அர்த்தங்கள் எல்லாமே அச்சொற்களின் பின்னணியில் நின்றுகொண்டிருக்கின்றன. அவற்றை புதிதாக பயன்படுத்த முடியாது . அந்தபிரச்சினைதான் மோகனரங்கனால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டது .

எம் யுவன்- ஆனால் ஒன்று உண்டு ஜெயமோகன் , சிந்தனைகள் அப்படி அந்தரத்திலே உருவாகிவிடாது .எந்த புதிய சிந்தனையும் அதன் ஆழத்தில் புராதனமான ஒரு சிந்தனையில் வேரைக் கொண்டிருக்கும் .அவை படிமங்களாக மாறி நமக்கு கிடைக்கலாம்.அச்சிந்தனைகளை வேரிலிருந்துஅறுத்துக் கொள்வது சாத்தியமல்ல.அதுமட்டுமல்ல அப்படி செய்யும்ப்போது சிந்தனைகள் மற்றவ்ர்களுக்கு சென்று சேர்வதும் தடைபட்டே போகும் .மு தளையசிங்கம் அ ப்படி செய்திரூக வேண்டுமென நாம் எப்படி சொல்ல முடியும் ?

ஜெயமோகன் -அது உண்மைதான்.இன்மை என்பது பொருள் போலவே ஒரு வகை இருப்புதான் என்ற புராதன தரிசனம்[நியாயம் ] எப்படி தனக்கு தூண்டுதலாக ஆனது என்று சந்திரசேகர் ஒரு இடத்தில் சொல்லியிருந்தார் . சிந்தனையில் அம்மாதிரி மரபார்ந்த உருவகங்களை நாம் பயன்படுத்துவதை நம்மால் தடுக்க முடியாது .ஆனால் விவாதங்களில் அவற்றுக்கு இன்று புறவய மதிப்பு குறைவு என்பதே என் தரப்பு .

எம் யுவன்- எந்த புறவய மதிப்பும் விவாதத்தில் விரிவாக பயன்படுத்துவதன் மூலமே உருவாகிவரமுடியும்.

க.மோகனரங்கன்- இங்கே ஜெயமோகன் பேசும் போது எல்லா அறிவியக்கங்களுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பு அல்லது ஒத்திசைவு தேவை என்பதை சொன்னார் . மு தளையசிங்க த்தின் சிந்தனைகளில் அத்தகைய ஒருங்கிணைவுக்கான ஒரு தேடல் இருப்பதாக . என்ன பிரச்சினை என்றால் இம்மாதிரி ஒருங்கிணைப்புக்காக பேசுபவர்கள் எல்லாருமே தங்கள் துறையை அந்த ஒருங்கிணைவுக்கான அடிப்படைத்தளமாக கருதுவார்கள் என்பதே . அதன் விளைவாக மேலும் ஒரு கொள்கை தான் உருவாகும். உண்மையான ஒருங்கிணைவை எந்த தளாத்தில் நடத்துவது என்பதுதான் பிரச்சினை .அதற்கு தளைய சிங்கம் என்ன சொல்கிறார் என்பதுதான் கேள்வி.

ஜெயமோகன்- அதை நான் முழுமையாக ஏற்கிறேன். கடந்த காலத்தில் அப்படி பேசியவர்களில் மொழியியலாளர்கள் முக்கியமானவர்கள்.எல்லா சிந்தனைகளையும் மொழியியலின் அடிப்படையில் விளக்க முயன்றார்கள் .அறிவியல் சூத்திரத்தையும் , வரலாற்றுக் கொள்கையையும் ,நாவலையும் எல்லாமே உரைத்தல் [narration] என்ற பொது அடிப்படையில் விளக்கி விடமுடியும் என்றார்கள்.விளைவாக narratology என்ற புதுதுறை பிறந்ததே மிச்சம்.இப்போது நரம்பியலாளர் மானுட அறிதல்களை எல்லாம் விளக்கிவிடக்கூடிய ஒரு பொது சித்தாந்தத்துக்காக உழைப்பதாக கேள்விப்படுகிறேன் .

நாஞ்சில்நாடன் – மு தளையசிங்கம் எல்லாவற்றையும் ஆன்மீகத்தில் கொண்டுவந்து முடிப்பதாக அல்லவா படுகிறது ?

ஜெயமோகன்-ஆன்மீகம் என்ற வார்த்தையைவிட மெய்யியல் என்ற வார்த்தை மிக பொருத்தமானது. அறிகிறோம் என்றால் ஏன் எதன் பொருட்டு என்பது மிக முக்கியமானதாக ஆகிறது. அந்த நோக்கமே அவ்வறிதலின் பெரும்பாலான அடிப்படைகளை தீர்மானிக்கிறது . அந்நோக்கத்தை அறிந்துகொள்ள , மதிப்பிட மெய்யியலே முக்கியமானது .

க.மோகனரங்கன்-இங்கே சொல்லப்பட்ட மு தளையசிங்கத்தின் மேற்கோள்களில் ‘ ‘இவ்வுலகத்தை மறுத்து மறுவுலத்தையும் முத்தியையும் அழுத்திய பழைய முறை சமயப் போக்கில் விஞ்ஞானம் எப்படி அதிருப்திப்பட்டதோ அவ்வாறே இன்றைய சமய ஞானமும் மனிதனின் அக ஆழத்தையும் அதன் பிரபஞ்ச விரிவுகளையும் மறுக்கும் விஞ்ஞானத்தில் அதிருப்திப்படுகிறது ‘ என்று வருகிறது .

ஜெயமோகன்- நான் மு தளையசிங்கத்தை நியாயப்படுத்த அல்லது விளக்க முயலவில்லை . அவரை நீங்களே வாசித்து மதிப்பிடுவதே முறை . ஆனால் மு தளையசிங்க அறிவியல் இனிமேலும் புறவயத்தருக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்க முடியாது என்று சொல்கிறார் என்று படுகிறது . அறிவியலின் அடிப்படைகளை தீர்மானிக்கும் அற அம்சங்கள் குறித்தும் ,தத்துவ அடிப்படைகளை குறித்தும் பேசவேண்டியிருக்கிறது . கார்ல் பாப்பரின் The logic of scientific discoveries என்ற பிரபலமான நூலில் Philosophism in Science என்பது குறித்து நிறைய பேசப்படுகிறது .ஒட்டுமொத்தமாக அதை புரிந்துகொள்ளலாமேயொழிய அதை துல்லியமாக நம்மைப்போன்ற எளிய வாசகர்களால் புரிந்துகொள்ள முடியாது . ஆனால் இந்த வினா இப்போது முக்கியமானதாக உள்ளது என்றுதான் படுகிறது .

க.மோகனரங்கன் -சி பி ஸ்நோ போன்றவர்கள் அறிவியல்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து பேசினார்கள் .இந்த இதழ் சொல் புதிதில் கூட நீலகண்டன் அரவிந்தன் அதைப்பற்றி எழுதியிருக்கிறார் . [அறிவியலின் மெய்யியல் அடிப்படைகள் ]

ஜெயமோகன்- அதே இதழில் வேறு கோணத்தில் சிந்திப்பவரான வரலாற்றாசிரியர் குமரிமைந்தன் வரலாற்றாய்விலும் மெய்யிலலே முதன்மையானது என்கிறார் .

எம் யுவன்- ஆனால் சி பி ஸ்னோ அடிப்படையில் ஓர் அறிவியல்புனைகதையாளர்தானே ?

ஜெயமோகன் – இந்த இடத்தில் நான் முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டும். நவீன அறிவியல் பெருமளவுக்கு உயர் தொழில் நுட்பம் சார்ந்ததாக ஆகிவிட்டதனால் தத்துவார்த்தமாக அறிவியலைப்பற்றி சிந்திக்கும் சந்தர்ப்பம் பெரும்பாலான அறிவியலாளர்களுக்கு இல்லாமலாகி விட்டது என்று படுகிறது .இந்த இடத்தில் அறிவியல் புனைகதையாளர்கள் பெரும்பணி ஆற்றுகிறார்கள் . அவர்கள் தங்கள் கற்பனையை விருப்பப்படி நீட்ட முடிகிறது.அறிவியலின் விளிம்பு நிலைகளில் அவர்கள் சாதாரணமாக சஞ்சரிக்கிறார்கள் . தமிழ் இலக்கியவாதிகள் பொதுவாக அறிவியல் கதைகளை பொழுதுபோக்குக் கதைகள் என்றே எண்ணி வருகிறார்கள் . அவை காலம் , வெளி போன்றவற்றை புரட்டிப்போட்டு மானுட வாழ்க்கையின் சாராம்சங்களைப்பற்றிய பல புதிய கேள்விகளை உருவாக்கியுள்ளன என்பதை நாம் காணலாம்.

எம் யுவன் – அறிவியல் புனைவுகள் என்னை அதிகம் கவர்ந்தது இல்லை . அறிவியல் நூல்கள் சாதாரண மொழியில் எழுதப்பட்டால் அவையே எனக்கு மேலும் ஆர்வமூட்டுகின்றன. உதாரணமா ரோஜர் பென் ரோஸின் நூல்கள் …

சுவாமி வினய சைதன்யா – இங்கே அறிவியல் மெய்யியல் ஆகியவற்றிற்கு இடையேயான இணவு குறித்து பேசப்பட்டது . மு தளையசிங்கம் மு தளைய சிங்கம்960 களில் நடராஜ குரு இவ்விஷயம் குறித்து அதிகமாக பேசியுள்ளார் .அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு wisdom -The absolute is adorabe என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது .

ஜெயமோகன் – ஆமாம் .இந்த விவாதத்தில் நடராஜ குருவின் கருத்துக்களையும் கணக்கில் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன் . ஒரு கட்டுரை ‘ ‘ அறிவியலை பாட முடியுமா ? ‘ ‘ சொல் புதிதில் ஏற்கனவே மொழிபெயர்க்கபட்டிருந்தது . குரு தன் நூலில் இவ்வாறு சொல்கிறார் .

‘ ‘மெய்ஞானமே இறுதியான உண்மையாக இருக்க முடியும்.மனம் உரிய முறையில் குவிக்கப்பட்டு செலுத்தப்பட்டால் மட்டுமே அது நிகழ முடியும். இவ்வாறு குவித்து திருப்புதலுக்கு முறைமையியல் [methodology]அறிவியங்கியல்[epistemology ] விழுமியவியல் [axiology]ஆகியவை அதில் முறைப்படி அமைந்திருக்கவேண்டும். பிரபஞ்சவியல் இயற்பியல் மீமெய்யியல் ஒழுக்கவியல் அழகியல் அனைத்துமே அதன் எல்லைக்குள் வருபவையே.அதை நடைமுறைப்படுத்திப்பார்க்கும்போது உயர்மட்ட ஆய்வுகளான சமூகவியல் பொருளியல் , அரசியல் போன்ற பல துறைகளும் அதன் எல்லைக்குள் வரமுடியும். அகவயப் பார்வையின் தேடல்விளக்கை தவிர்த்தாலுகூட தொலைநோக்கியின் மூலமோ நுண்நோக்கியின் மூலமோ வெளிப்படும் உலகங்கள் கூட அதன் எல்லைகளை அல்லது சாத்தியங்களை வெளிப்படுத்தலாம். ஞானம் என்பது நம்பிக்கைநோக்கு அவநம்பிக்கை நோக்கு சுதந்திரவாதம் பழைமைவ ‘தம் சம்பிரதாயப்போக்கு புதுமைவிருப்பம் தியான நோக்கு செயலூக்க நோக்கு மேற்கத்திய அணுகுமுறை கீழைஅணுகுமுறை போன்ற தனிநபர் சார்ந்த அணூகுமுறைகளால் பிரிக்கப்படக்கூடியதாக இருக்காது .ஞானத்தேடலுடைவனை பொறுத்தவரை பின்னோக்கியபார்வை ,எதிர்காலக்கனவு ,ஆய்வு நோக்கு, அல்லது அகவயமான முழுமைநோக்கு போன்றவைய்ல்லாமே ஒருமையத்தில் ஒன்றாகின்றன. ஞானம் முழுமையடையும்போது இலக்கும் வழிமுறைகளும் இயல்பாகவே சமநிலையை அடைகின்றன. சுயதிருப்தியும் மகிழ்ச்சியும்பொதுநல நோக்கும் ஒரே சமயம் கைகூடுகின்றன.. ‘ [நடராஜ குரு -wisdom ]

வினய சைதன்யா – ஒரு வகையில் நடராஜ குருவின் ஆசிரியர் ஹென்றி பெக்ஸனின் தத்துவ ஆய்வின் மையமும் இதுதான் . ஞானம் அறிவு என்ற இரண்டுக்கும் இடையேயான உறவென்ன என்ற கேள்வி .பயன்படாத ஒன்று அறிவாக இருக்க முடியும். நம்மை மேம்படுத்தாத ஒன்று அறிவாக இருக்கமுடியும். அது ஒருபோதும் ஞானமாக இருக்கமுடியாது . அறிவு பிளவுபட்டதாக , முரண்பாடுகள் கொண்டதாக இருக்கமுடியும் .அறிவுக்கு கால இட எல்லைகள் உண்டு. அறிவு எல்லைக்குட்பட்டது .எல்லைக்குட்பட்ட எதுவுமே அவ்வெல்லைக்கும் அப்பால் பொய்தான் .எப்போதுமே எல்லைகளுக்கு அப்பால்தான் இடம் அதிகம் .எல்லையை மீறித்தான் எதிர்காலமே வளரமுடியும். துரதிர்ஷ்டவசமாக பெர்க்ஸனுக்கு பிறகு மேற்கத்திய சிந்தனையில் இந்த தேடல் குறைந்து விட்டது . அறிவியல் போக்குகளுக்கு தருக்க அடிப்படைகளை உருவாக்கித்தருபவர்களாக இன்றைய தத்துவவாதிகள் மாறிவருகின்றார்கள்

ஜெயமோகன் – நடராஜ குரு இப்படி சொல்கிறார் . ‘ ‘அறிவியல் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் ஞானம் இப்போது அதீதமான துறைப் பாகுபாடுகளுக்கு உள்ளாகியுளது .குறிப்பாக மேற்கில். ஆகவே விஞ்ஞானங்களை ஒருங்கிணைக்கவும் தொகுத்துக் கொள்ளவும் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது . ஆனால் இம்மாதிரி ஒரு தரப்பை முன்வைக்கும் ரஸ்ஸலை போன்றவர்கள்கூட ‘நிரூபண தர்க்க ‘ முறையின் எல்லையைத்தாண்ட முடியவில்லை. நீல்ஸ்போர் ஷ்ரோடிஞ்சர் போன்றவர்கள் ஒருங்கிணைந்த அறிவியலில் அனைத்தையும் தொகுக்க முயல்கின்றார்கள் .. ‘ [நடராஜ குரு -wisdom ]

எம் யுவன்- இந்தக் கோணத்தில் பார்த்தால் மேதைகளான அறிவியலாளர்களிடம் கூட இருக்கும் குறுகலான பார்வை வியப்பை தருகிறது.அவர்களுக்கு தங்கள் தரப்பை அனைத்துக்கும் மையம் என்று பார்க்கும் பலவீனத்திலிருந்து தப்பவே முடியவில்லை .

ஜெயமோகன்-இதை ஒட்டி நீல்ஸ்போரின் ஒரு மேற்கோளையும் எடுத்தேன். ‘அறிவியல் என்பது மானுடப்புரிதலை விரிவுபடுத்துவதற்கானதன் யத்தனத்தை வைத்துப் பார்க்கும்ப்போது அடிப்படையில் ஓர் ஒருமை [unity ‘ ஆகும் . …அனைத்துக்கும் மேலாக அது பகுப்பாய்வு[analysis] தொகுப்பாய்வு [synthesis ] ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்குகிறது . ‘ ‘

மோகனரங்கன்- இலக்கியத்தை இதில் தளையசிங்கம் எப்படி பார்க்கிறார் என்பதுதான் முக்கியமானது .அவரைப்பொறுத்தவரை இலக்கியம் முக்கியமற்ற ஒரு துறை மட்டுமே. அவர் உண்மை என்பதற்கே முக்கியத்துவம் அளிக்கிறார். உண்மையானது சமயத்தாலும் தத்துவத்தாலும் அறிவியலாலுமே முக்கியமாக அறியப்படக் கூடியது என்று அவர் கருதுகிறார் .அவ்வுண்மைகளை பேசக்கூடிய தகுதிகளையும் கருவிகளையும் இலக்கியம் அடைய வேண்டும் என்று அவர் கருதுகிறார் .மெய்யுள் கூட அதற்கான முயற்சிதான் என்றுதான் எனக்கு எண்ணம் ஏற்படுகிறது .

வேதசகாய குமார் – எனது மனப்பதிவும் அதுதான்.இன்னும் சொல்லப்போனால் தத்துவத்தையும் அறிவியலையும் விவாதிக்கக்கூடிய ஒரு மொழிவடிவத்தைத்தான் அவர் உத்தேசித்தார் என்று பட்டது …

ஜெயமோகன் – உண்மை என்பதை அழுத்தம் தந்து பேசமுற்படும்போது அவர் குரலில் இலக்கியத்திற்கான இடம் குறைந்துவிடுகிறது என்பது உண்மைதான் . ஆனால் அவரது பார்வையில் இலக்கியம் ஒரு முக்கியமான மெய்யறிமுறையாக இருந்துகொண்டே இருந்தது என்பதுதான் உண்மை. திரும்பத்திரும்ப அவர் இலக்கியம் பற்றித்தானே பேசுகிறார் ? முற்றாக தத்துவம் பக்கம் அவர் நகர்ந்ததேயில்€லையே ? அவர் மற்ற அனைத்தைப்பற்றியும் பேசும்போதுகூட அவற்றை இலக்கிய நோக்கில்தான் சொல்கிறார் என்றுதான் நான் சொல்வேன் .

அருண்மொழி நங்கை- நான் கவனித்தபோது தளைய சிங்கம் அவரது ஆரம்பகால படைப்புகளில் இலக்கியத்தின் உத்தி வடிவம் மொழி போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேசியிருப்பதாக பட்டது .அந்நிலையில் அவருக்கு இலக்கிய ஆக்கத்தின் பின்னால் உள்ள மனநிலைகள் ,சமூக பின்னணி , தனிப்பட்ட ஆளுமைப்ப்பிரச்சினைகள் எல்லாமே முக்கியமாக பட்டிருக்கின்றன . பிற்பாடு இலக்கியத்தின் ஆதாரமாக உள்ள மெய்யியல் பிரச்சினைகளை மட்டும் கவனம் செலுத்துகிறார் . அவரது பார்வையில் இலக்கிய பரவச விடுதலையை தருவதாக ஆகிவிடுகிறது .பரவசம் மட்டுமல்ல விடுதலை என்று அவர் சொல்வதை நான் முக்கியமானதாக கருதுகிறேன் . தளையசிங்கம் தன் படைப்புகளில் ஒருபோதும் கலை அளிக்கும் விடுதலை போலியானது மனமயக்கமானது என்று சொல்லவில்லை அல்லவா ? அவர் உள்ளுணர்வையே முக்கியமானதக கருதுகிறார் .

அபிலாஷ் – இலக்கியப்படைப்பின் ஆக்கத்தில் உள்ளுணர்வு என்று கூறப்படுவனவற்றுக்கு உள்ள இடம் எது ? எலாருமே உள்ளுணர்வத்தான் இலக்கிய ஆக்கத்துக்கு அடிப்படையாக கொள்கிறர்களா ?

எம் யுவன் -எல்லா ஆக்கங்கள்க்கும் அடிப்படை உள்ளுணர்வுதான். எதையுமே யோசித்து திட்டமிட்டு செய்துவிடமுடியாது .அறிவியல் கண்டுபிடிப்புகள் பொறியியல் வடிவங்கள் எல்லாமே ஆழ்மனத்தின் வெளிப்பாடுகள் தான்.நாம் செய்யக்கூடுவதெல்லாமே நமது கருவிகளை தயாராக வைத்த்ருபதுமட்டும்தான்.

ஜெயமோகன்- எனது கணிசமான கதைகளை நான் கனவில் இருந்து எடுத்திருக்கிறேன். கனவு எங்கிருந்து வருகிறது அங்கிருந்தே படைப்பும் வருகிறது ….

அபிலாஷ்- தூண்டுதல் எங்கிருந்தும் வரலாம் .ஆனால் படைப்பில் திட்டமிடலும் செலாக்கமும்தான் முதல்டம் வகிக்கின்ற என்று எனக்கு படுகிறது…

எம் யுவன் – என கவிதை ஒன்றை நான் வரி வரியாக கனவில் கண்டேன்.பழைய மீட்சி இதழ் ஒன்றின் அட்டையில் அச்சாகியிருந்தது . ஹிடாச்சி என்று பெயரில். அது நான் அலுவலகம் போகும் வழியில் உள்ள ஒரு விளம்பர போர்டில் இருப்பது . அக்கவிதையை அப்படியே நான் எழுதி பிரசுரிதேன்.

மோகனரங்கன் – தளையசிங்கம் கட்டுரையில் தரிசனமனநிலை பிளவுண்ட ஆளுமையையும் மனப்பிளவு பிரதிகளையும் உருவாக்குகிறது என்று சொல்லியிருந்தார் . ஆனால் பெரும் தரிசனப்படைப்புகளில் ஒரு ஒருமை கைகூடியிருப்பதாக படுகிறதே…

ஜெயமோகன் – அதை ஒரு நிபந்தனையாக ஆக்கமுடியாது என்றுதான் சொன்னேன். பெரும் தரிசனிகர் மனநோயின் விளிம்பில் நிற்கிறார்கள் . ராமகிருஷ்ண பரம ஹம்சரை அமெரிக்க அழைத்துசென்றால் மனசிகிழ்ச்சைக்கு அனுப்பிவிடுவார்கள்…

தேவதேவன் – அதை மனநோய் என்று சொல்லிவிட முடியாது . சாதாரணமனநிலையில் சாதாரண காரியங்களையே சொல்ல முடியும். மனப்பிளவு ஏற்படுகிறதென்றால் அதற்குக் காரணம் சொல்லப்படும் விஷயம் அடிப்படையில் பிளவுண்டிருப்பதுதான் . சொல்லப்படும் விஷயத்திலிருந்து சொல்பவனை விலக்க முடியாது.இரண்டும் ஒன்றுதான்.

ஜெயமோகன்-இங்கு விவாதத்துக்காக ஏ என் வைட்ஹெட்டின் ஒரு மேற்கோளை கொண்டுவந்தேன். ‘ ‘ மானுட அனுபவங்களை நாம் சில முக்கிய தலைப்புகளின் கீழ் தொகுத்து வைத்திருக்கிறோம். இவற்றை அறிவதற்கு நாம் இவை சார்ந்த ஆதாரங்களாஇ அனுபவத்தின் எல்லா தருணங்களுக்கும் விரித்துபார்க்கவேண்டும். எதுவுமே விடப்படக்கூடாது .குடித்திருக்கும்போது ,நிதானத்தில் இருக்கும்போது,தூங்கும்போது,விழித்திருக்கும்போது, சடைவாக இருக்கும்போது, உற்சகமாக

இரு க்கும்போது ,சுயநினைவுடன் இருக்கும்போது சுயமிழந்த மயக்க நிலையில் அறிவார்ந்த நிலையில் திடமான பெளதிக அடிப்படையில் மதநம்பிக்கையில் அவநம்பிக்கையில் பதற்றநிலையில் அலட்சிய நிலையில் எதிர்பார்ப்புநிலையில் மகிழ்ச்சியில் துக்கத்தில் மனைருளில் சகஜநிலையில் ,மனப்பிறழ்வுநிலையில்…… ‘ ‘

எம் யுவன் -ஆம் மனப்பிறழ்வு நிலையில் ஒவ்வொன்றும் எவ்வாறாக இருக்கின்றன என்பது முக்கியமானதுதான். இந்த அம்சத்தை நரம்பியல் தவிர வெறு எந்த அறிவுத்துறாஇயுமே கணக்கில் கொண்டதில்லை . இலக்கியம் அதை கணக்கில் கொள்கிறது .மேலான படைப்புகள் எல்லாமே ஒரு கண்ணை அங்கேயும் வைத்துத்தான் பேசுகின்றன.

ஜெயமோகன்- ஆபிரகாம் மாஸ்லோவின் ஒரு மேற்கோளையும் எடுத்து வந்தேன். ‘ ‘ படைப்பூக்கம் கொண்ட நபர் தன் இறந்தகாலத்தின் அடிமையாக இருப்பதில்லை. தன் நிகழ்கால சூழலுக்கு கட்டுப்பட்டவராக தன் பேசுதளத்தில் இயங்க விதிக்கப்பட்டவராகவும் இல்லை.தன் நரம்பு இயக்கங்களுக்கு தன் மொழிக்கும்கூட கட்டுப்பட்டவரல்ல …

உயர்மட்ட படைப்பூக்கம் கொண்டவர்கள் புரிநிதுகொள்ள முடியாதபடி தனிமையானவர்கள் . ஆகவே அவர்களைமனநிலைபிசகுள்ளவர்கள் என்று புரிந்துகொள்வது அபத்தமானது. ‘ ‘ அந்தோனி ஸ்டொர் எழுதிய Solitude என்ற நூலில் இருந்து எடுத்த மேற்கோள் இது .இந்தநூலே படைப்புமனநிலையின் அசாதாரண தளங்களைப்பற்றிய முக்கியமான ஆய்வுதான்.

வெங்கட் சாமிநாதன் – ஜெயமோகன் இக்கட்டுரையில் விளிம்புநிலையைப்பற்றி ஏராளமாக சொல்கிறார் .அது எனக்கு அர்த்தமாகவில்லை .எந்தவகையான கனவையும் அப்படிசொல்லி இப்போதுநாம் நியாயப்படுத்திவிடமுடியுமா என்ன ?

ஜெயமோகன்- அப்படியல்ல , முக்கியமானவிஷயம் தளையசிங்கம் இக்காலகட்டத்தின் அடிப்படைப்பிரச்சினைகளை அடையாளம்கண்டார் என்பதே .அதை விரிவாகவே பேசியிருக்கிறோம். உதாரணமாக ‘ பொருள்முதல்வாதம் மூன்றுதளங்களில் அதன் எல்லையை உணர்கிறது. ஜடம் – உயிர் உறவில் , உடல் -மனம் உறவில்,தீர்மானவாதம் – தெரிவு உறவில் [Determinism – choice ] வில் டுரண்ட் [தத்துவத்தின் கதை] . தளையசிங்கத்தின் சிந்தனைகள் இம்மூன்று புள்ளிகளில் சென்று மோதுவதை தொடர்ந்து காணலாம் .அதன்பிறகே அவரது ஊகங்கள் உருவாகின்றன.அவற்றின் திசை எதுவாக இருந்தாலும் இலக்கு இப்புள்ளிகளே என்பதை காணலாம். பெரும் சிந்தனையாளர்களில் கூட மிக விசித்திரமான மனத்தாவல்களை காணமுடிகிறது .உதாரணமாக பெர்க்சனின் இந்த மேற்கோள் தளையசிங்கத்துக்கு மிக பக்கத்தில் வருகிறது . -மன்னிக்கவும் இதை என்னால் சரியாக மொழிபெயற்க முடியவில்லை .

The animal takes its stand on the plant , man bestrides animality and the whole of humanity in space and time is one immense army galloping beside and before and behind each of us in an overwhelming charge able to beat down every resistance and clear the most formidable obstacles perhaps even death [ Henri Bergson Creative evolution]

எம் யுவன் – விளிம்புநிலை என்பது இதுவரை என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டிருகின்றனவோ அதற்கு அப்பால் சென்று புதிய கேள்விகளை கேட்பதில்தான் உள்ளதே ஒழிய பதில்களில் அல்ல. அறிவியல் ஆய்வின் அடிப்படைகளை உருவாக்கும் ஊகங்களின் இடத்தில் தான் அவற்றுக்கு முக்கியத்துவம் .

வெங்கட் சாமிநாதன் – தளையசிங்கம் சொல்லும் பூரணமனநிலை என்பதற்கு என்ன அறிவியல் முக்கியத்துவம் இருக்கமுடியும் ?

ஜெயமோகன்- இப்போது உளவியல் என்ன சொல்கிறது ? தேவை மற்றும் சமூகத்தின் அழுத்தம் காரணமாக மனத்தின் பெரும்பகுதி அடக்கப்பட்டு ஆழ்மனமாக ஆகிறது . தளையசிங்கம் சொல்லும் பூரண சமூகத்தில் மனம் முற்றாக அடக்கப்படவே இல்லையென்றால் ஆழ்மனம் அல்லது நனவிலி என்பதற்கு என் ன அர்த்தம் ? இந்தக் கோணம்தான் அச்சிந்தனையை புதிய எல்லைகளுக்கு கொண்டுசெல்கிறது …

வினயசைதன்யா- தளையசிங்கத்தில் நீட்சேயின் சிந்தனைகள் அதிகம் தெரிகின்றன .எல்லா தரிசனிகர்களிலும் அவர்களைப்பற்றிய ஒரு மிகையான தொனி காணப்படுகிறது .இவரிலும் உள்ளது

ஜெயமோகன்- நான் இதை சுட்டவே நீட்சேயின் சில மேற்கோளை எடுத்துவந்தேன் . ‘இவ்வாறு பேசினார் ஜரதுஷ்ட்ரா ‘ வில் இப்படி எழுதுகிறார்]

‘ ‘

எல்லா கடவுள்களும் இறந்துவிட்டனர் .இனி நாமே வாழும் அதிமானுடர்களாவோம்

*

மாமனிதர்களாவது எப்படி என நான்கற்றுத்தருகிறேன். மனிதநிலை என்பது தாண்டிசெல்லவேண்டிய ஒன்று. அப்படி தாண்டிச்செல்ல நீ என்ன செய்தாய் ?

*

மனிதன் தன் இலக்கை தீர்மானிக்கவெண்டிய நேரம் வந்துவிட்டது. தன் விந்துவை உச்ச கட்ட நம்பிக்கையில் அவன் விதைத்துவிடவேண்டியுள்ளது

*

சொல்லுங்கள் சகோதரரே இலக்கை இழந்த மானுடம் மானுடத்தையே இழந்துவிட்ட ஒன்றல்லவா ?

*

இன்றைய தனியர்களே , இன்று விலகி நிற்பவர்களே ஒரு நாள் நீங்களும் மக்கள் திரளாக ஆவீர்கள். உங்களிலிருந்து உங்களை தேர்வு செய்வீர்கள்.தேர்வுசெய்யப்பட்ட மக்கள் எழுவார்கள், அவர்களிலிருந்து அதிமானுடர்கள்

[ நீட்சே ‘இவ்வாறு பேசினார் ஜரதுஷ்ட்ரர் ‘தமிழினி வெளியீடாக வெளிவரவிருக்கும் செந்தூரம் ஜெகதீஷின் மொழிபெயர்ப்பில் இருந்து ]

எம் யுவன் – இத்தகைய கனவுகளுக்கு இலக்கியமுக்கியத்துவம் உள்ள அளவுக்கு தத்துவ முக்கியத்துவம் உண்டா என எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது .

ஜெயமோகன் -அந்த வேறுபாட்டை அப்படி துல்லியமாக வகுத்துவிட முடியாது .

வினயசைதன்யா- இந்தக்கனவு அடிப்படையில் மேற்கத்திய தன்மை உடையது . the man என்ற கருத்து முதலில் அங்கு முளைத்தது .அதன் இன்றியமையாத தொடர்ச்சி தான் super man அல்லது அதிமனிதன் . இக்கருத்தை எப்படி அரவிந்தர் ஏற்றுக் கொண்டார் என்பது வியப்புக்கு உரியதுதான் .

ஜெயமோகன் – அதை அவர் பெர்க்சனில் இருந்து பெற்றிருக்கவேண்டும்

வினயசைதன்யா- பெர்க்சனின் மாணவராக இருந்தாலும் நடராஜ குரு அச்சிந்தனையை எற்கவில்லை

அருண்மொழிநங்கை – நான் அதைப்பற்றி சொல்ல விரும்பினேன்.தளைய சிங்கத்தின் பார்வை பெண்களை பொறுத்தவரை கீழைநாட்டு பார்வை அல்ல .அவரது கதைகளை வைத்து இதை சொல்கிறேன். கீழை மரபில் ஆண் பெண் என்பது சிவ சக்தி என்று சமமான வலிமைகளாக உருவகிக்கப்படுகிறது . அவர்கள் இணைவு லீலை என்று விளையாட்டாக உருவகிக்கப்படுகிறது . ஆனால் மேலைமரபில் பெண் செயலற்ற சக்தி அதாவது Inertia .ஆண்தான் தூண்டும் சக்தி அல்லது படைப்பு சக்தி . தளையசிங்கம் கதைகளில் எல்லாமே பெண்கள் செயல்ற்ற சக்திகளாகவே வருகின்றனர். அவரது பார்வை மேற்கத்திய் ஆண்மைய அணுகுமுறைதான் .

ஜெயமோகன் – தளையசிங்கம் தன் நோக்கில் ஒரு அழுத்தமான பிராந்தியத்தை உருவாக்கிக்காட்டுகிறார் . அது தீவிரமான கேள்விகளும் அரைகுறையான பதில்களும் பலவிதமானதடுமாற்றங்களும் கொண்டது .ஆனால் அக்கேள்விகள் நமக்கு மிக முக்கியமானவை . மேலும் மேலும் அவற்றின் தீவிரம் ஏறியபடியே வருகிறது .

மேலும் சற்றுநேரம் வேடிக்கையாக பேசி சிரித்து பின்பு கூட்டத்தை நிறைவு செய்தோம்

மறுநாள் காலையில் வெளியே இறுதி அரங்கு . பொதுவாக கூட்டம் குறித்த மனப்பதிவுகளை குறிப்பிடுவதாகவே இருந்தது .தேவகாந்தன் இக்கூட்டம் தனக்கு மிக்க மனமகிழ்ச்சியை அளிப்பதாக சொன்னார் . ஈழ இலக்கியத்திலும் புலம்பெயர்ந்த இலக்கியத்திலும் ஆழமான ஒரு வித கைடைவெளி இருப்பதாக சொன்னார் . முற்போக்கு தத்துவம் தன் வரலாற்றுக் கடமையை செய்துவிட்டு பின்னகர்ந்துவிட்டது . அமைப்பியல் போன்ற கருத்துக்கள் வேரோடவும் இல்லை . ஆக இப்போது ஒரு தத்துவமின்மை அங்குள்ளது .அந்த இடைவெளியை தளையசிங்கம் குறித்த விவாதங்கள் நிரப்பக்க்கூடும் . இரண்டாவதாக ஈழ தேசிய இலக்கியம் என்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு குழப்பம் இன்று உள்ளது . சர்வதேச இலக்கியம் தமிழக இலக்கியம் ஆகியவற்றில் இருந்து வேறாக அது கொள்ள வேண்டிய தனியடையாளம் என்ன என்ற தேடல் உருவாக வேண்டும். தேசிய இலக்கியம் என்ற குரலை எழுப்பிய முன்னோடிகளில் ஒருவரான மு தளையசிங்கம் குறித்த விவாதம் அந்த தேடலுக்கு ஊக்கம் கூட்டக்கூடும் என்றார் தேவகாந்தன்

தேவதேவன் இலக்கியத்தின் ஆழமான இடம் அதன் மெய்யியலிலேயே உள்ளது என்று மு தளையசிங்கம் உணர்த்துகிறார் , ஆனால் அப்பயணத்தின் அபாயங்களுக்கும் அவரே உதாரணம்.அவரைப்பற்றிய விவாதம் அதிகம் பேசப்படாத இவ்விஷயத்தை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள உதவக்கூடியதாகும் என்றார் .

மதியத்துடன் அரங்குகளை முடித்துக் கொண்டோம் . பிரியும்போது ஏற்படும் வழக்கமான சோர்வும் நிறைவுணர்வும் ஒரே சமயம் வந்து அழுத்தின.

====

Series Navigation

author

ஜெயமோகன்

ஜெயமோகன்

Similar Posts