மஞ்சுளா நவநீதன்
(இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு : அ மார்க்ஸ் வெளியீடு : அடையாளம், எச் 15/193, 2-வது தளம் , கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310)
இரண்டாவது அத்தியாயம் : இந்துத்துவம் ஒரு கோட்பாட்டுப் புரிதல்
இந்தத் தொகுப்பிலேயே மிக முக்கியமான கட்டுரை இது. அடையாளங்கள் எபப்டிக் கட்டுவிக்கப் படுகின்றன என்பதையும், யார் நலனுக்காகக் கட்டப்படுகின்றன என்பதையும் பற்றி மிகத் தீவிரமான சொல்லாடலை நிகழ்த்தியுள்ளார் மார்க்ஸ். யார் தமிழன் , யார் இந்து என்பது பற்றிய அடையாளங்கள் எப்படி காலத்துக்குக் காலம், அப்போதைய அரசியல் நிலவரங்களுடன் இயைந்து உருவாக்கப் படுகிறது என்பதையும் குறிக்கிறார்.
இந்து என்ற உணர்வு மிகச் சமீபத்தில் அரசியல் ரீதியாய்க் கட்டமைக்கப் பட்ட ஒன்று என்றால் அதன் காரணங்கள் என்ன ? இந்துக்களும் , முஸ்லீம்களும் தனித்தனி தேசங்கள் என்று குரல் எப்படி ஏன் எழுந்தது ? பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று ஒரு புறம் சொன்னாலும், வங்கப் பிரிவினையின் போது, முஸ்லீம் மேல் வர்க்கத்தினர் முழுக்க பிரிவினைக்கு ஆதரவாக நின்றது ஏன் ? இந்துக்கள் என்ற அடையாளம் கட்டுவிக்க இஸ்லாமிய அரசியலின் தனித்துவப் போக்கு எப்படி மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மிகச் சாமர்த்தியமாய் மறைத்து விடுகிறார் மார்க்ஸ்.
‘ஏதேனும் ஒரு நம்பிக்கை அல்லது அடையாளத்தினடியாக தங்களை இனம் கண்டுகொள்ளும் ஒரு சமூகப் பிரிவைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் சமூக/ பொருளாதார/ அரசியல் நலன்களும் ஒரே மாதிரியானவை என்கிற அடிப்படையில் அரசியல் இயக்கம் பெறும் நடவடிக்கையை வகுப்பு வாதம் எனலாம். இந்தியத் துணைக் கண்டத்தில் மதம் என்பது வகுப்பு வாதத்தின் அடையாளமாகப் பயன் படுத்தப் படுகிறது ‘ என்று மார்க்ஸ் முதலிலேயே சொல்லி விடுகிறார். இதிலேயே சிக்கல் தொடங்கி விடுகிறது. இந்த வரையறையை மேற்கொண்டு பார்த்தால் தொழிற்சங்கங்களும், வணிகர் சங்கங்களும், பா ம க , புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு , பத்திரிகையாளர் சங்கம் எல்லாமே இந்த வரையறைக்குள் அடங்கும் இல்லையா ? முஸ்லீம் லீக், பிராமணர்கள் சங்கம், நாயுடு மகாஜனச் சங்கம் எல்லாமே வகுப்புவாத அமைப்புகளா ? இருக்கலாம், அப்படி இருப்பது தவறு என்றும் சொல்ல முடியாது. அவரவர் அடையாளத்தை அவரவர் சுதந்திரத் தேர்வின் வயப்பட்டுக் கட்டுவிக்கிற உரிமை ஜனநாயக நாட்டில் எல்லாக் குடிமக்களுக்கும் உண்டு. அவரவர் அடையாளங்களைக் கட்டுவிக்கும் போது, எதிரி என்று ஒருகுழுவை அல்லது கருத்தியலைக் கட்டி எழுப்பும் போது தான் சிக்கல் ஆரம்பாமாகிறது இதைச் சரியாகவே சொல்கிறார் மார்க்ஸ்.
வகுப்புவாதம் – Communalism என்பது பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்த வார்த்தை. Community என்பதை மதம், சாதி , பிரிவு இவற்றை எல்லாவற்றையும் குறிக்கிற வார்த்தையாய்ப் பயன்படுத்துகிறார்கள். மதக் கலவரம், சாதிக்கலவரம் என்பவை தான் இந்தியாவில் பெரும்பான்மையும். இவற்றை மதக் கலவரம், சாதிக் கலவரம் என்று குறிப்பிட்டால், மீண்டும் இப்படிப் பட்ட கலவரங்கள் மேலும் பரவ வழி வகுக்கும் என்ற நல்லெண்ணத்தில் ‘ஒரு குறிப்பிட்ட வகுப்பார், இன்னொரு குறிப்பிட்ட வகுப்பாரைத் தாக்கினர் ‘ என்பதாய்ச் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது செய்தி என்ற அளவில் சரியில்லை என்றாலும், சமூகத்தில் சமநிலை விளங்கவும், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்கவும் பயன் படுகிறது என்ற அளவில் சரியான செயல் தான். ஆனால் இந்த வார்த்தையை மார்க்ஸினது போன்ற ஆய்வுப் புத்தகங்களில் பயன் படுத்தும்போது சிக்கல் எழுகிறது.
அடையாளங்கள் இயற்கையானவை அல்ல . அவை செயற்கையானவை என்பது உண்மைதான். இந்து அடையாளம் கடந்த இரு நூற்றாண்டுகளில் அமைக்கப் பட்ட ஒன்று தான் எனவும், யாரை இந்து என்று அடையாளப் படுத்துவது என்பதில் குழப்பம் இருந்து வருகிறது என்று பல ஆதாரங்களைக் காட்டி நிறுவுகிறார். ஆதாரங்கள் உண்மையானவை. ஆனால் இதன் மூலம் அவர் என்ன நிறுவ விரும்புகிறார், அவர் சொல்லும் செய்தி என்ன என்பது சரியாய் விளங்கவில்லை. கடந்த இரண்டு -மூன்று நூற்றாண்டுகளில் தான் இந்து என்ற அடையாளம் கட்டப் பட்டது என்பதால், ஈராயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கிறுஸ்தவ மதத்தைக் காட்டிலும் பதினான்கு நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட இஸ்லாமிய அடையாளத்தைக் காட்டிலும் இந்து என்ற அடையாளம் பழமை கொண்டதல்ல என்பதல்ல என்பதால் இந்து என்ற மதம் இல்லை என்று சொல்கிறாரா ? இந்து மத அடையாளம் இதனாலேயே இழிவானது என்று சொல்கிறாரா ? இந்து மதத்தின் மீது மிகத் தீவிரமான விமர்சனங்களை வைத்த அம்பேத்கர் கூடத் தம் இறுதிக் காலத்தில் தான் புத்த மதம் நோக்கித் திரும்பினார். அவருக்கு செமிட்டிக் மதங்களின் மீது ஈர்ப்பு இருந்ததில்லை என்ற விஷயத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டும். இந்து சமூகம் மட்டுமல்ல, இஸ்லாம் கிறுஸ்தவ சமூகங்கள் கூடக் கற்பிதம் செய்யப் பட்ட சமூகம் தான் என்று மார்க்ஸ் சொல்கிறார். எனில் இந்து மத அடையாளம் கட்டப்படுவதைப் பற்றி மட்டும் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் ? ‘இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தாழ்த்தப் பட்டோரை யாரும் இந்து என ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் ‘ என்று ஓமெயிலி என்ற ஒருவரை இவர் மேற்கோள் காட்டுகிறார். தாழ்த்தப் பட்டோர் இந்துக்கள் அல்ல என்றால் அவர்கள் யார் ? உண்மையில் இந்தக் குழப்பம் பஞ்சமர்கள் என்று அழைக்கப் பட்ட நால் வருணத்திற்கும் வெளியே இருந்தவர்கள் பற்றித் தான் இருந்தது. இவர்கள் சமூகத்திற்கு அன்னியராய்க் காணப்பட்டார்கள். சமூகத்திற்கு அன்னியர் என்பது , கிராம சமுதாயத்திற்கு அன்னியர் என்பது தான். நம்பிக்கைக் கூட்டுக் கருத்துருவத்திற்கு வெளியே என்று இதன் பொருள் அல்ல. வேறு வேறு சாதியினரின் வழிபாட்டு முறைகள் வேறுபட்டனவே தவிர, முரண்பட்டவை அல்லை. அவற்றிற்கு அவற்றிற்கு உரிய இடம் இருந்து வந்தது. சாதீயத்தின் மிகக் கொடூரமான செயல்பாடுகள் இருந்து வந்த அதே நேரத்தில், வழிபாட்டு முறைகள் வேறு வேறு விதமாய் பின்பற்றவும் செய்தனர்.
மக்களை ஓர் அடையாளத்தின் கீழ் திரட்டுகிற ஓர் இயக்கம் எல்லா மதங்களுக்குள்ளும் நடந்து வந்திருக்கிறது. இது இந்துத்துவ சக்திகளின் பிரத்தியேகமான செயல்பாடு அல்ல. இஸ்லாம் மதத்திற்குள்ளும் சூனி பிரிவினர் , ஷியா பிரிவினர் இருவரும் உண்மையான இஸ்லாமியர்கள் தாமே என்று உரிமை கொண்டாடி ஒருவரை ஒருவர் தாக்கியும் கலவரங்கள் புரிந்தும் வந்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினருக்கும் கூட பொதுச் சடங்குகள் உண்டு ஆனாலும் தனியாகத்தான் செய்கிறார்கள். அவர்கள் கல்லறைகள் கூட தனித்தனி தான். அதனால் மார்க்ஸ் அவர்களின் ஒரு பிரிவினருடன் உடன்பட்டு மற்ற பிரிவினர் முஸ்லீம்கள் இல்லை என்று சொல்வாரா ? பாகிஸ்தானில் உள்ள அகமதியா பிரிவினர் தம்மை முஸ்லீம்கள் என்றூ அழைத்துக் கொள்வது தெய்வ நிந்தனைக் குற்றத்திற்கு சமம் , தண்டனைக்குரிய குற்றம் என்று ஜியா உல் ஹக் காலத்தில் இஸ்லாமியச் சட்டங்களின் கீழ் வரையறை செய்யப்பட்டது. ஆனால் இந்துத்துவ சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்கள் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைக்கும் செயல் ஏன் கண்டனத்திற்கு உள்ளாக வேண்டும் ? இந்தச் செயல்பாட்டில் அரசியல் நோக்கம் இருக்கலாம். இருந்தால் என்ன ?
அம்பேத்கரை மேற்கோள் காட்டுகிறார் மார்க்ஸ். ‘சாதீய அமைப்பு என்பது பொதுச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைக்கப் பட்ட வாழ்வையும் தடுத்துவிடுகிறது. இந்து மதச்சடங்குகளில் பொதுப் பங்கேற்பு கூடாது… எனவே சடங்குகள் ஒரே மாதிரியாக இருந்த போதிலும் அவர்கள் தனித்தனியானவர்களே ‘ என்று வலியுறுத்தும் அம்பேத்கர் கருத்தைத் தொடர்ந்து சிந்தித்தால், இந்து மதம் ஒரு பொதுமைத் தன்மையைக் கட்டினால் ஒழிய இந்து மத உணர்வு பொய் என்பதாகத் தான். அப்படிப்பட்ட ஒருமை உணர்வைக் கட்டியெழுப்ப முயற்சிகள் நடந்தால், சாதி ஒழிப்பும் அதன் மையத்தில் என்றால் அதில் தவறென்ன இருக்க முடியும் ? ‘கடந்த ஒரு நூற்றாண்டு காலத் திட்டமிட்ட அரசியற்செயல்பாடுகளின் விளைவாக இந்துமத உணர்வு என்பது இயற்கையானது தான் என்கிற புனைவு ஓர்ளவு மக்களின் பொதுப் புத்தியில் பதிய வைக்கப் பட்டுவிட்டது. ஆனாலும் இந்து என்கிற உணர்வு இந்துப் படிநிலை அமைப்பில் மேலிருந்து கீழாக இறங்கிவர வர இந்து என்கிற உணர்வு தாழ்த்தப் பட்டவர்கள் மத்தியில் மிக மிகக் குறைவாக உள்ளதும் கவனிக்கத் தக்கது. ‘ என்பது மார்க்ஸின் கூற்று. இது பற்றி என்ன ஆய்வு இவர் மேற்கொண்டார் ? எத்தனை தாழ்த்தப் பட்ட மக்களை அவர் பேட்டி கண்டு தொகுத்தார் ?
உண்மையில் சொல்லப் போனால் இந்து – முஸ்லீம் முரண் முஸ்லிம் படையெடுப்புக்குப் பின்பு தான் உருவானது. தம்மை இந்து என்று உணராவிட்டாலும் கூட , தம்முடைய பொதுத்தன்மை பற்றிய உணர்வு இந்திய மக்களுக்கு இருந்தது. கிறுஸ்தவர்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள் இந்தியாவில் வியாபார நிமித்தமாகவும், படையெடுப்பின் மூலமாகவும் வந்து சேர்ந்த போது தான் மதம் என்கிற கருத்தாக்கத்தின் ஐரோப்பிய விளக்கத்துடன் வந்து சேர்ந்தார்கள். தாம் வேறுபட்டவர்கள் , தம்முடைய தத்துவப் பின்னணி வேறுபட்டது என்பதை அழுத்திச் சொன்னார்கள். கிறுஸ்தவ பாதிரிமார்கள், இந்து பிராமண மற்றும் சைவப் பண்டிதர்களுடன் தத்துவ உரையாடலில் ஈடு பட்டதிற்கும் சான்றுகள் உள்ளன. ஆனால் முஸ்லீம் தத்துவ வாதிகள் இப்படி இந்துத் தத்துவவாதிகளுடன் ஈடுபட்டதற்குச் சான்றுகள் இல்லை. எதிர் விவாதத்திற்குத் தயாராய் இல்லாத, மூடிய மனம் கொண்ட, உன்னைக் காட்டிலும் நான் புனிதமானவனாக்கும்(holier than thou attittude) என்ற உணர்வில் செயல்பட்டனர். அது தான் முதன் முதலில் முஸ்லீம் , கிறுஸ்தவரல்லாதாரின் ஒருங்கிணைப்பைத் துண்டியது என்று சொல்லலாம். அதன் பிறகு பிரிட்டிஷாரின் ஆவணப் படுத்துதல் இதைத் தீவிரப் படுத்தியது.
‘மற்றவர்களை ‘ அடையாளப் படுத்தித் தம்மை உயர்ந்தவர்களாய்க் காட்டிக் கொள்ளும் ஒரு போக்கு ஐரோப்பிய வரலாற்றின் ஒர் அம்சம். ‘பாகன்கள் ‘ (pagans) , காஃபிர்கள்,விக்கிரக வழிபாட்டாளர்கள் (idolators) என்று மற்றவர்களை வரையறை செய்யும் ஒரு போக்கு இருந்து வருகிறது இந்திய மரபில் ‘மற்றவர்களை ‘ அடையாளப் படுத்துவது ‘மிலேச்சர் ‘ -வெளிநாட்டார் என்ற பொருள் கொண்ட வார்த்தை ஒன்றால் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வழிபாட்டு முறைமைகளினால் மற்றவர்களை இழிவு படுத்தும் போக்கு இல்லை.
விசுவ இந்து பரிஷத்தின் முக்கிய தலைவர்களி ஒருவரான ஆனந்த் சாகர் பாண்ட்யாவை இவர் மேற்கோள் காட்டுகிறார். மேற்கோள் இது ‘தங்களது வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் இந்துத்துவத்தைப் பின்னணியாய்க் கொண்டோர் எல்லோரும் இன்று மானவதர்மத்திற்கு வந்துள்ள பேரழிவைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கிறார்களே ‘. இந்த மெற்கோளுக்கு மார்க்ஸ் தரும் விளக்கம் இது. ‘மானவ தர்மம் என்பது மனு தர்மம் தான். ‘ இது ஒரு பெரும் புரட்டு. மானவ தர்மம் என்றால் மானிட தர்மம் என்று பொருளே தவிர , மனு தர்மம் என்று பொருளல்ல.
மார்க்ஸ் சொல்வது : ‘இந்தச் சக்திகளின் இந்துத்துவச் சொல்லாடல் மக்களின் பொதுப் புத்தியில் படிந்து மேலாண்மைக் கருத்தியலாக மாறும் பட்சத்தில் ,
* வருணாசிரமம் புதிய வடிவில் நிலை நிறுத்தப் படும். (வருணாசிரமம் மரணப் படுக்கைக்குப் போய் வெகு நாளாயிற்று. பெரியார், அம்பேத்கர் போன்றோர் ஒரு புறமும், விவேகானந்தர் போன்றோர் இன்னொரு புறமும் வர்ணாசிரம தர்மத்தைக் கழற்றி எறியச் செய்து விட்டனர். ஆனால் மார்க்ஸ் போன்றவர்கள் வர்ணாசிரமப் பூச்சாண்டியை மட்டும் நிறுத்த மாட்டார்கள்.)
* சிறுபான்மையினர் இந்துமயமாக்கல் என்ற பெயரில் அவர்களின் கலாச்சாரங்கள் அழித்தொழிக்கப் படும். தலித் மற்றும் பல்வேறு குழுக்களின் பன்மை கலாச்சாரக் கூறுகள் தீய்க்கப் பட்டு, ஒற்றைக் கலாசார மேலாண்மை நிறுவப்படும். (இதன் முரண்பாடு அவருக்கு உறைக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. தலித் மக்களின் பன்மைக் கலாச்சாரக் கூறுகள் மீது மார்க்ஸின் அக்கறை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இதே புத்தகத்தின் வேறு பக்கங்களில் தலித் மக்கள் இஸ்லாம் மதமாற்றம் பெற்று உய்வு பெற வேண்டும் , இந்து மதத்தின் இழிவிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மதமாற்றம் பெற்றால்,அவர்கள் முஸ்லீம்கள் ஆகிவிட்டால் மட்டும், தலித் பன்மைக் கலாசாரக் கூறுகள் காப்பாற்றப் பட்டு விடுமா ? அவர்கள் கலாசாரக் கூறுகள் காப்பாற்றப்படவேண்டும் என்ற அக்கறை உண்மையில் இருந்தால் இந்து அடையாளத்தின் கீழ் தானே அவர்கள் இருக்க வேண்டும் ? )
* வரலாற்றுப் போக்கில் அடைந்துள்ள பெண்ணுரிமைகள் ஒடுக்கப்படும். ( இது பற்றி நான் சொல்ல ஏதுமில்லை. இதன் அபத்தம் என்னவென்று ,பெண்ணுரிமைகளை இந்துத்துவ சக்திகள் மறுக்கின்றனவா என்பதை நடைமுறை யதார்த்தத்தினைப் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.)
* தகுதி , திறமை என்ற பெயரில் இட ஒதுக்கீடுகள், சலுகைகள், மான்யங்கள் , ஒடுக்கப் பட்டோருக்கான கல்வி, மருத்துவ வசதிகள் நீக்கப் படும். (இப்படி ஏது செயல் திட்டம் இருப்பதாய் எங்குமே காணக் கிடைக்கவில்லை.)
* சுதந்திரமான போட்டி என்கிற வகையில் தொழில் துறையில் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச அரசுக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு பெருந்தொழில் நிறுவனங்கள் மட்டுமே நிலை நிறுத்தப் படும். (இது காங்கிரஸின் ராவ் செயல் திட்டத்தின் தொடர்ச்சி. இந்த்துத்துவ சக்திகளிடையே இது பற்றி முரண்பாடுகள் நிலவுகின்றன. சுதேசி என்ற பெயரில் உள்ளூர்த் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது ஒரு குழுவினரின் நிலைபாடு.)
* கட்டுப்பாடு, ஒழுங்கு என்கிற பெயரில் சனநாயக உரிமைகளும், அரசியல் நிறுவனங்களும் முடக்கப்படும். (அரசு சக்திகள் தமக்குப் பிடிக்காத அமைப்புகள் மீது பாய்வது என்பது எல்லா சக்திகளுக்கும் பொதுவான ஒர் அம்சம்.)
அடைப்புக் குறிகளுக்குள் என் இடையீட்டைத் தெரிவித்துள்ளேன். மார்க்ஸின் வாக்குகள் வெளியே. என் விமர்சனம் உள்ளே.
இந்துமதம் என்பது சில நம்பிக்கைகளின் தொகுப்பு. வர்ணாசிரம தர்மம், மறுபிறவியில் நம்பிக்கை என்பது இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு என்று கொள்ளலாம். செமிட்டிக் மதங்களிலிருந்து இந்து மதத்தினை மிகச் சிறப்பாக வேறுபடுத்திக் காண்பிப்பது மறுபிறவியில் நம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். இந்த மையக் கருத்தில் தான் வர்ணாசிரம தர்மத்தின் வேர்கள் உள்ளன. வர்ணாசிரம தர்மத்தின் இறுகிப்போன விளக்கங்கள் இன்று பலவாறாக உடைபட்ட பின்பும், இந்தப் பிறவியில் நம் செயல்களுக்குத் தக்க அடுத்த பிறவியில் இன்ப துன்பங்கள் விளையும் என்ற நம்பிக்கை இந்திய மக்களின் ஆழ்மனதில் வேரோடிப் போன ஒரு கருத்து. இந்தக் கருத்து ஆழ்மனதில் இருக்கும் வரையில் இந்த மக்களை ஒருங்கிணைக்கிற ஓர் அடையாளம் இருக்கத் தான் செய்தது. இருக்கும். இந்து என்ற பெயரில் இந்த நம்பிக்கை கொண்ட ஜனக் கூட்டத்தை அழைப்பது வேண்டுமானால் ஓரிரு நூற்றாண்டுகளின் முந்திய பழக்கமாய் இருக்கலாம். ஆனால் இன்று இந்து என்று அடையாளப் படுத்தப் படும் மானிடக் குழுவின் அடிப்படை அடையாளங்கள் மிக நீண்டகாலத் தொடர்ச்சி உள்ளவையே.
‘ வகுப்பு என்பது மேலிருந்து வரையறுக்கப் படுகிறது ‘ என்ற மார்க்ஸின் வார்த்தை எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும் . இந்துத்துவ சக்திகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமானவை அல்ல. ‘ஒழுங்கு – நிலைத்தன்மை ஆகியவற்றை இந்துத்துவம்வலியுறுத்துகிறது ‘ என்றால் இஸ்லாம், கிறுஸ்தவம் போன்ற மதங்கள் ஒழுங்கின்மையையும், நிலையற்ற தன்மையையும் வலியுறுத்துகின்றனவா ? இது என்ன விமர்சனம் ?
(ஜீவன் கந்தையா குறுப்பிட்ட விபரத்தவறுக்கு நன்றி. விபரப் பிழையைச் சாராத , என்னுடைய விமர்சனம் அப்படியே இருக்கிறது.தமக்கு ஒப்புக்கொள்ள செளகரியமற்ற கருத்துகளை நேருக்கு நேர் சந்தித்து விமர்சனங்களை எதிர் கொள்ளத் திராணியற்றவர்கள் நடுவில், ஜீவன் கந்தையா கருத்துக் கூறியது பாராட்டுதலுக்கு உரியது. நன்றி.)
(தொடரலாம்)
- பேரன்
- சக்கரம் இல்லா தேர்கள்…
- உன் கூந்தல்!
- அறிவியல் மேதைகள் – அலெக்சாண்டர் கிரகம் பெல் (Alexander Graham Bell)
- அமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது
- அவியல்
- பறங்கிக்காய் பால் கூட்டு
- எனக்குப் பிடித்த கதைகள் – 9 -சுந்தர ராமசாமியின் ‘பள்ளம் ‘ (மோகமும் மூர்க்கமும்)
- காந்தியின் குரங்குகளும் தலித்திய – கறுப்பு அடையாளங்களும். ( ‘மகாத்மாவின் பொம்மைகள் ‘ சிறுகதை விமர்சனம்)
- தூரத்திலிருந்து பார்த்தேன்
- பாப்பா பாட்டு
- ஆசை
- ஊடகம்
- புத்தாண்டுப் பொலிவு
- கவலையில்…
- அழகு
- உயிர்
- ஜெயமோகனுக்கு மறுப்பு
- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
- மறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்
- 7 அனுபவ மொழிகள்
- பொறாமை
- இந்த வாரம் இப்படி, ஏப்ரல் 14, 2002 (ஹ்யூகோ சாவெஸ் பதவி இறக்கம், மீண்டும் ஏற்பு, நாயுடுவும் பாஜகவும், ஈழத்து இஸ்லாமியத் தமிழர்கள்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி -2
- யாரைத் தேடி ஒடுகிறது நதி ?
- இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- இன்னும் ஓர் தீர்மானம்
- மரண வாக்குமூலம்.
- தொலைந்து போனோம்.
- இன்னொரு இருள் தேடும்….