மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

பவளமணி பிரகாசம்


புது மில்லினியத்தில், மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பு யுகத்தில், தூரங்கள் சுருங்கி, உலகம் சிறிய கிராமம் போலாகி விட்டது. ராட்சஸ அளவில் மாறுதல்கள் ஏற்படும் போது மக்கள் வாழ்க்கைத்தரமும், கண்ணோட்டங்களும், குறிக்கோள்களும் மாறிப்போவது எதிர்பார்க்க வேண்டிய ஒரு விளைவு. ஆனால் அந்த மாற்றங்கள் அத்தனையும் நல்லவையாக இருக்குமென்றோ, அவற்றை அனுமதித்து ஆற்றோடு அடித்துச் செல்லப் படும் மரக்கட்டைபோல் நாம் வாழ்க்கை பயணத்தைத் தொடரலாம் என்றோ கூற முடியாது.

மனதை சஞ்சலப்படுத்துகின்ற, புதுமை என்ற பெயரில் அபத்தமான, ஆபத்தான விஷயங்கள் அரங்கேறுவதை பொறுப்புள்ள சிந்தனையாளர்களும், சமூகநலம் விரும்புபவர்களும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியாது, கூடாது. குறிப்பாக என்றும் இல்லாத வகையில் மாதரை இழிவு செய்யும் மடமையை இன்று அதிக அளவில் காண்கிறோம். பொழுதுபோக்கிற்கும், அறிவு வளர்ச்சிக்கும் உதவுகின்ற அற்புத சாதனங்களான திரைப்படங்கள், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் ஆகிய மூன்றிலும் இன்று பெண் சித்தரிக்கப்படும் விதம் மிகவும் ஆத்திரமூட்டுவதாகவும், கவலைப்பட வைப்பதாகவும் இருக்கிறது.

புற அழகு ஒன்றே பிரதானம் என்று புதிய வேதம் ஓதப்படுகிறது. பல நாட்டு நிறுவனங்களின் வியாபாரம் பெருக, ஒப்பனை பொருட்களின்பால் அபரிதமான, ஆடம்பரமான மோகம் ஏற்படும் வகையில் 24 மணி நேரமும் விளம்பரங்கள் வீடு தேடி வந்து தாக்குகின்றன. அழகுணர்ச்சிக்கும், பாலின கவர்ச்சிக்கும் வேறுபாடு தெரியவில்லை. அரைகுறை ஆடையில், அங்கங்களை ஆபாசமாக குலுக்கி ஆடுகின்ற மங்கையரை வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் காணும் போது மதிப்பும், பெருமையும் நிறைந்த பெண்மை இழிவு படுத்தப்பட்டு, வக்கிர உணர்வுகளுக்கு இரையாவதைத் தடுப்பது எங்ஙனம் என்ற ஒரு ஆற்றாமை எழுகிறது.

மூலைக்கு மூலை அழகிப்போட்டி, தேசத்தின் தலைநகரிலேயே சொல்ல நாக்கூசும் வகையில் நடத்தப்படும் ஆடை அலங்கார அணிவகுப்பு இவை இன்றைய தலைமுறைக்கோ, அடுத்த தலைமுறைக்கோ நன்மை பயப்பனவேயல்ல. கண்ணியமான, சக்தி வடிவான, ஆரோக்கியமான சமுதாயத்தை சிருஷ்டிக்கும் பொறுப்புள்ள மாதரை காமக்கேளிக்கைக்கான வெறும் சதைப் பிண்டங்களாய் பாவிப்பது நியாயமேயில்லை.

இது ஒரு புறமிருக்க மற்றொரு அநியாயமும் நடக்கிறது. மேலே கூறிய 3 மக்கள் தொடர்பு சாதனங்களிலும் பெண் பாத்திரங்கள் சித்தரிக்கப்படும் விதமும் சரியேயில்லை. முக்காலே மூணு வீசம் அவர்கள் சிந்தனைகளும், செயல்களும் பாராட்டும் விதத்தில் இருப்பதேயில்லை- வக்கிர புத்தி உள்ள கொடுமைக்காரிகளாய், எதேச்சாதாரிகளாய், சுயகெளரவமற்ற கோழைகளாய், பிறர் பொருளுக்கு ஆசைப்படும் பேராசைக்காரிகளாய், நயவஞ்சகிகளாய், ஒழுக்கமில்லாத குடிகேடிகளாய், கையாலாகாமல் அழுகின்ற அபலைகளாய்- இப்படிப்பட்ட பெண்களைத்தான் 24 மணி நேரமும் சந்திக்கிறோம். இயற்கைக்கு புறம்பான உணர்ச்சிகள், சம்பவங்கள் இவை இன்றைய படைப்பாளிகளின் வறண்ட, விபரீதமான கற்பனையைக் காட்டுகின்றன. யதார்த்தமான மேடு, பள்ளம் நிறைந்த மனித ஜீவிதத்தை, அதிலுள்ள இன்ப துன்பங்களை அழகான கற்பனைக் கதைகளில் காட்டி பார்ப்போரை வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை தாங்கி முன்னேறச் செய்யும் வழிகாட்டிகளாய் அமைப்பது அன்றோ அறிபுடைமை!

சட்டப்படியும், பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமடைந்து, அறிவு தாகத்துடன், ஆளுமைத்திறனுடன், தன்னம்பிக்கையுடன், மனித நாகரிக சிகரத்தை நோக்கி நடை போட சாதகமான சூழ்நிலையிலுள்ள இன்றைய பெண்களை கடிவாளமிடாத காட்டுக்குதிரைகளாய் தறிகெட்டு ஓடி அழிவைக் கொணரத்தூண்டும் அனைத்து போக்குகளையும் எதிர்த்து போராடுவோமாக!

Series Navigation

author

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

Similar Posts