இரயில் பயணங்களில்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

லாவண்யா


எங்கள் ஊாில் இருந்து தினமும் ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்து படித்துவர வேண்டிய அவசியம் என் சகோதரனுக்கு. பஸ் கட்டணம் இதுவரையில் 12 ரூபாய் 75 பைசாவாக இருந்துவந்தது. தமிழக அரசாங்கத்தின் மினிபட்ஜெட்டில் பஸ் கட்டணம் ஏற்றப்பட்டபிறகு, பதினேழரை ரூபாயாகிவிட்டது, அதன்பின்னர், விஷத்தில் ரெண்டு சொட்டு குறைத்துக்கொள்வதுபோல ஒரு ரூபாய் குறைத்திருக்கிறார்கள், எப்படியோ தினமும் ஏழு ரூபாய்க்குமேல் கூடுதல் செலவு என்பதென்னவோ உண்மை. புதிய கட்டணத்தின்படி ஒரு நாளைக்கு போக வர முப்பத்துமூன்று ரூபாய் செலவாகிறது.

இப்போது கடந்த சில நாட்களாய், அவனுக்கு ஒரு வேளைக்கு பயணம் செய்ய நான்குரூபாய்தான் ஆகிறது. அதாவது, ஒரு நாளைக்கு எட்டு ரூபாய். பேருந்துக் கட்டணத்தோடு ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்குக்கும் குறைவு.

ஏதும் மந்திர தந்திரம் இல்லை, பஸ் கட்டணம் அதிகம் என்பது தொிந்தவுடன், உடனடியாக அவனும், அவன் நண்பர்களும் மற்ற வழிகளைத் தேடியிருக்கிறார்கள். நான்கு பேர் சேர்ந்து செல்கிற டாக்ஸி, வேன் போன்றவற்றை முயன்றுபார்த்து தோல்வி அடைந்தபிறகு, ரயில்வேத்துறையிடம் சரணடைந்திருக்கிறார்கள். அவர்கள் மாதத்துக்கு நூற்று அறுபது ரூபாய் வாங்கிக்கொண்டு, தினமும் இருவேளையும் பயணிக்க அனுமதிக்கிறார்கள். சனி, ஞாயிறுகள் தவிர்த்து மாதத்துக்கு இருபது நாட்கள் பயணம் செய்வதாய் வைத்துக்கொண்டு கணக்குபோட்டுப்பார்த்தால் ஒரு நாளைக்கு எட்டு ரூபாய்தான் ஆகிறது. இப்படி மொத்தமாய் சீசன் டிக்கெட் வாங்காமல் தினமும் டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணித்தாலும் இருபது ரூபாய் அளவில்தான் செலவு, அதுவும் பேருந்துக் கட்டணத்தோடு ஒப்பிடும்போது குறைவு.

இதில் கஷ்டங்களும் இல்லாமல் இல்லை, முன்போல நினைத்த நேரத்தில் கிளம்பமுடியாது. ஒரு நாளைக்கு நூறு பஸ்களாவது ஓடிக்கொண்டிருந்த தடத்தில், இப்போது ஒரே ஒரு ரயில், அது காலை ஏழு பதினைந்துக்கு வருகிறதென்றால், அந்த நேரத்திற்குள் நாமும் புறப்பட்டாக வேண்டும். அதைவிட்டால் அவ்வளவுதான். பஸ் ஒன்றேகால் மணி நேரத்தில் போய்ச்சேர்கிற அதே இடத்துக்கு, ரயில் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

ஆனால் அரசாங்கம் உயர்த்தியிருக்கிற பஸ் கட்டணத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் மாதம் ஐநூறு ரூபாயாவது மிச்சமாகிறது, ஒரு நடுத்தரக் குடும்பத்துக்கு இது பொிய தொகை என்பதில் சந்தேகமே இல்லை.

இந்திய ரயில்வே உலகத்திலேயே மிக அதிகமான பணியாட்களைக்கொண்டது. உலகிலேயே இரண்டாவது மிகப்பொிய ரயில்வே இணைப்பும் இதுதான். இப்படி உலகளவில் புகழ்பெற்றிருக்கும் இந்திய ரயில்வேக்கு உள்ளூாில் அவ்வளவாய் நல்ல பெயர் இல்லை என்பது சோகமே. தாமதமான ரயில்கள், பராமாிப்பின்மை, விபத்துகள் – இப்படி இதற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பினும், ரயிலில் மக்கள் ஏறத்தயங்குவதற்கு முக்கியமான காரணம், அதிலிருக்கிற சவுகர்யங்கள் மக்களுக்கு சாியாக சொல்லப்படவில்லை என்பதுதான். பஸ் நிலையத்தை நன்றாகத் தொிந்துவைத்திருக்கிற மக்கள், ரயில் நிலையத்தை ஊருக்கு வெளியே எங்கோ ஒரு மூலையில் இருக்கிற பாழடைந்த கட்டிடம் அளவுக்குதான் மதிக்கிறார்கள்., பயணம் என்று வரும்போது பெரும்பாலானோர் ரயிலைப்பற்றி யோசிப்பதே இல்லை.

தமிழக அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது, மற்ற அரசுகளும் படிப்படியாக இதைச் செய்தாக வேண்டிய நிலைமையில் இருப்பதாக சொல்கிறார்கள், இந்த நிலைமை ரயில்வேத்துறைக்கு மிகவும் சாதகமானது. விழித்துக்கொண்டு செயல்பட்டால், பேருந்துகளின்மேல் நம்பிக்கையிழக்கிற, அல்லது அதற்கு ரொம்ப செலவாகிறதே என்று யோசிக்கிற மக்களைப் பிடித்துக்கொண்டுவிடலாம்.

இதற்கு முக்கியமாய் செய்ய வேண்டியது – விளம்பரம், அரசாங்க நிறுவனம் விளம்பரம் செய்யக்கூடாது என்பதெல்லாம் அந்தக்காலம், சேவை மனப்பான்மை என்பது இருக்க வேண்டியதுதான், ஆனால் ஒரு அரசாங்கத்துறை மக்களுக்கு சிரமம் தரும்போது, இன்னொரு துறை அதை நிவர்த்தி செய்ய முயல்வதில் தவறேதும் இல்லை. இன்றைய சூழலில் விளம்பரம் செய்யாமல் எந்தத் தொழிலும் பிழைக்கமுடியாது. பேருந்துக் கட்டணங்கள் உயர்ந்திருப்பதை நேரடியாக குறிப்பிட்டு விளம்பரம் செய்தாலும் குற்றமில்லை – இரண்டு கட்டணங்களையும் ஒப்பிட்டு எது குறைவு என்பதை அவர்களே தீர்மானிக்கச் சொல்லலாம். இந்த குறைவான கட்டணத்திலும்கூட, மாணவர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு இன்னும் கட்டணச்சலுகைகள் அளிக்கிறது இந்திய இரயில்வே. இதுவும் சாியான அளவில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பேருந்தோடு ஒப்பிடுகிறபோது நல்ல இருக்கைகள், பை, சூட்கேஸ் போன்றவற்றை வைப்பதற்கு நிறைய இடம், பெண்களுக்கு தனிப்பெட்டிகள், நீண்டதூரப் பயணங்களுக்கு முன்பதிவு வசதி, படுக்கை வசதி, கேன்ட்டான் வசதி, கழிப்பிட வசதிகள் போன்ற சவுகர்யங்கள் ரயிலில் உண்டு, அவையும் சொல்லப்படுவது அவசியம்.

வழக்கமாக இந்திய ரயில்வேயின் விளம்பரங்கள் – போஸ்டர்கள், வீடியோ படங்கள் போன்றவை ரயில்வே ஸ்டேஷனில் மட்டும்தான் வெளியிடப்படுகிறது, இதைவிட பொிய வேடிக்கை இருக்கமுடியாது. ஏற்கெனவே ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டவர்கள் மட்டும்தான் நம் வாடிக்கையாளர்களா ? அதற்கு வெளியே கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் – அவர்களை விளம்பரம் சென்றடைவது மிக அவசியம். ஆகவே இந்த விளம்பரங்களை பிரபல நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள், விளம்பரப்பலகைகள் போன்றவற்றின்மூலமாக மக்களுக்கு சென்று சேர்க்க வேண்டும். குறிப்பாக விளம்பரப்பலகைகள் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்படுவது மிகவும் உதவியாக இருக்கும். யார்கண்டது, இப்படி பேருந்துத்துறையோடு நேரடியாக போட்டியிடுவதால் அவர்களும் கட்டணத்தை நியாயமான அளவுக்குக் குறைக்க முன்வரலாம் !

இதற்கு ஏற்றபடி ரயில்வேத்துறையும் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும், நிறைய பஸ்கள் ஓடுகிற வழித்தடங்களில், ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும், ஏற்கெனவே ஓடுகிற ரயில்களிலும், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது அவசியம். தாமதமில்லாமல் ரயில்கள் ஓடுவதற்கு வழி செய்ய வேண்டும், ரயில் பெட்டிகளின் பராமாிப்புக்கும் நல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விளம்பரங்களில் காட்டுகிற ‘சுகமான ‘ ரயில் பயணம் நிஜமாகவே சாத்தியமாவதற்கான வழிவகைகள் செய்யவேண்டும்.

சுருக்கமாய் சொன்னால் – எல்லா அரசாங்க அலுவலகங்களையும்போல இன்னும் மசமசவென்று தூங்கி வழிந்துகொண்டிருக்காமல், ஒரு புதிய தொலைக்காட்சிப் பெட்டியையோ, குளிர்பானத்தையோ அறிமுகப்படுத்துகிற நிறுவனம் எப்படி அதைப் பொிய அளவில் விளம்பரப்படுத்துமோ, அப்படி இரயில் சேவையும் சொல்லப்பட வேண்டும்.

இதனால் பஸ்ஸில் பயணிக்கிறவர்கள் எல்லோரும் ரயிலுக்குத் தாவிவிடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதிகம் விளம்பரங்கள் இல்லாத சூழ்நிலையிலேயே இந்த கட்டண உயர்வுக்குப்பிறகு பலர் ரயிலேறத் துவங்கிவிட்டார்கள், விளம்பரங்கள் அதை இன்னும் வேகப்படுத்தும். நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிற இந்திய ரயில்வேத்துறை லாபம் பார்க்க இது நல்ல வாய்ப்பு, மற்றபடி இதைப் பயன்படுத்திக்கொள்வது, ரயிலே, உன் சமத்து !

***

20 12 2001

***

Series Navigation

author

லாவண்யா

லாவண்யா

Similar Posts