இந்த வாரம் இப்படி — செப்டம்பர் 16, 2001

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

மஞ்சுளா நவநீதன்


இரண்டு கட்டடங்கள் – இரண்டு விமானங்கள்

உலக வர்த்தக மையம் நியூ யார்க் நகரில் நெடிதுநின்ற உலகச் சின்னம் 110 மாடிக் கட்டடம்; பொருளாதார மையம்; ஏறத்தாழ 50000 பேர்கள் வேலை செய்கிறார்கள். சுமார் 50000 மக்கள் இதை வேடிக்கை பார்க்க தினம் வருகிறார்கள். இதைக் கடந்து ஏறத்தாழ 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் இருக்கும் மின்சார ரயிலில் இறங்கி நகரத்துக்குள் வேலைக்கு வருகிறார்கள். தற்கொலைப் படையின் விமானிகள் விமானங்களைக் கைப்பற்றி கட்டடத்தில் கொண்டு சென்று மோதி கட்டடத்தைத் தரைமட்டமாக்கித் தீக்கு இரையாக்கினார்கள் . கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர் இந்தக் கட்டடத்தில் மரணமுற்றார்கள். இதில்லாமல் பெண்டகன் கட்டடத்தில் இதே நேரத்தில் கடத்தப்பட்ட விமானம் மோதி ராணுவப் பணியாளர்கள் கிட்டத்தட்ட 200 பேர் மரணமுற்றிருக்கிறார்கள். பரபரப்பும், எதிர்பாரா அதிர்ச்சியும் நாட்டை ஸ்தம்பிக்க வைத்தது. 19 அராபியர்கள் இதற்குக் காரணம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. எல்லா இடங்களிலும் அமெரிக்கக் கொடி உயர்த்தப் பட்டது. இதற்குக் காரணமானவர்களைக் கொன்று போட வேண்டும் என்றும், இது அமெரிக்காவின் மீது தொடுக்கப் பட்ட போர் என்றும் குரல்கள் எழுந்தன. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், பேர்ல் ஹார்பர் என்ற துறைமுகத்தின் மீது ஜப்பான் நடத்திய எதிர்பாராத தாக்குதலுடன் இதனை ஒப்பிட்டுப் பலர் பேசத் தொடங்கியுள்ளர். (இதைத் தொடர்ந்து தான் ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப் பட்டது. இந்த அணுகுண்டு வீச்சு தான் போரின் முடிவைத் துரிதப் படுத்தியது என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள் . வேறு சிலர் இது அவசியமற்ற குண்டு வீச்சு, ஏற்கனவே போர் கிட்டத் தட்ட முடிவு பெற்று விட்டது. புதிய தொழில் நுட்பத்தைப் பரிசீலிக்கத் தான் இந்த குண்டு வீச்சு என்று இவர்கள் கூறுகிறார்கள்.)

போர் தொடுப்பது என்று அமெரிக்கா முடிவு எடுத்து விட்டது. ஆஃகானிஸ்தான் துயரக் கதையில் இன்னொரு ரத்த அத்தியாயமாகத் தான் இது இருக்கும். சாதாரண மக்களின் மீது தாக்குதல் நடத்தாமலிருக்க முடியாது.

வளைகுடாப் போரின் போது நடந்த மாதிரி இஸ்லாமிய நாடுகளையும் உள்ளடக்கித் தான் வியூகம் அமைக்கப் படும் என்று தெரிகிறது. ஈரான் ஏற்கனவே தன் ஆதரவைத் தெரிவித்து விட்டது. பாகிஸ்தான் அமெரிக்கப் படைகளுக்கு இடம் அளிக்க ஒப்புக் கொண்டு விட்டது. மிகத் துயரமான நாட்களை எல்லா நாடுகளும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

*****

காரணங்கள் காரணங்கள் காரணங்கள்

இப்படிப் பட்ட பயங்கரவாத நடவடிக்கைளை நியாயப் படுத்தவே முடியாது. ஆனால் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் தான். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து பாலஸ்தீன மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது என்பது உண்மை தான். ஆனால் கடந்த சில வருடங்களாக அமைதி தேடி யாசர் அராஃபத்தும் , இஸ்ரேலிய பிரதி நிதிகளும் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். ஈராக்கின் மீது இடப்பட்ட பொருளாதாரத் தடையினால் ஏராளமான சாவுகள் நடந்துள்ளன. ( ஈராக் குவைத் மீது தொடுக்கப் பட்ட போரின் பின் விளைவு தான் இது என்பது மறக்கப் பட்டு விடுகிறது. )

எல்லாவிதமான குழுக்களுக்கும் இது போன்ற குற்றங்கள் இழைக்கப் பட்டிருக்கின்றன. தலித்கள் இந்திய வரலாறில் அனுபவித்து வந்த அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஹிட்லர் காலத்தில் யூதர்கள் மீது இழைக்கப் பட்ட அநீதி மட்டுமல்லாமல் ஜெஹோவாவின் சாட்சிகள் என்ற தனித்த கிறுஸ்தவக் குழு , ஜிப்சிகள் என்று அழைக்கப் பட்ட நாடோடிகள், ஒருபால் உறவுக்காரர்கள், வயதானோர், உடல் ஊனமுற்றோர் என்று எல்லா குழுவினரும் சமூகத்திற்குப் பயனற்றவர்கள் என்று கொல்லப் பட்டனர். இப்படிப் பட்ட குழுக்கள் எல்லாமே தம்முடைய எதிரிகளின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தினால் உலகம் முழுவதும் ரத்தக் காடாய்த் தான் காட்சியளிக்கும். வன்முறைக்கான காரணங்கள் அல்ல, சேர்ந்து வாழ்வதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது தான் சிறப்பு.

**********

கனவுகள் கனவுகள்

5000க்கும் மேலானவரின் கனவுகள், வாழ்வின் எதிர்காலம் பற்றி, தம்மைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சி பற்றி எல்லாம் கொண்டிருந்த ஆசைகள் தரைமட்டமாக்கப் பட்டன. தேசம் முழுதும் துயரத்தின் நிழல் மட்டுமல்ல. பழி வாங்க வேண்டும் என்ற வெறியும், ஏன் இந்த மண்ணில் என்ற கேள்வியும் எழுந்த வாறு இருக்கின்றன. தீர சிந்தித்து முடிவு செய்ய முடியாதபடி 5000 உயிர்க்கொலை அவர்கள் முன்பு நிற்கிறது. எங்கே எப்படி போர் மூளும் என்று தெரியவில்லை. யுத்தம் எனில் மீண்டும் மக்கள் முன் துயரக் கடல்.

***********

அமெரிக்கா முஸ்லீம்களின் எதிரியா ?

ஈராக் மீது பொருளாதாரத்தடையைக் காரணம் வைத்து அமெரிக்காவை முஸ்லீம்களின் எதிரியாய்ச் சித்தரிக்கிற ஒரு போக்கு இருக்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மை ? அமெரிக்காவின் உண்மையான மதம் டாலர் தான். இந்த மதத்திற்குத் தான் அதன் எல்லா வழிபாடும். ஈராக் மீது உள்ள பொருளாதாரத்தடையைக் காரணம் காட்டினால், குவைத் மீது ஈராக் தொடுத்து போர் நியாயமா என்று கேட்க வேண்டியிருக்கும். கோசோவோவின் முஸ்லிம்களுக்குச் சார்பாக அமெரிக்கா மற்ற ஐரோபிய நாடுகளுடன் சேர்ந்து போரிட்டதையும் சுலபமாய் மறந்து விட முடியாது. சவூதி அரேபியா அமெரிக்காவுடன் சுமுக உறவு கொண்டுள்ளது. அதில்லாமல் ஜோர்டான், எகிப்து போன்ற அரசாங்கங்களும் அமெரிக்காவுடன் உறவை முறித்துக் கொள்ளவில்லையே.

அமெரிக்காவில் வேகமாக வளரும் மதம் இஸ்லாம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அதில்லாமல், பல்வேறு பட்ட மக்கள் அமெரிக்காவில் குடியேற்றம் பெற வேண்டுமென்ற ஒரு சட்டம் இயற்றி பங்களா தேஷ் போன்ற முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேற்றம் பெறவும் அமெரிக்கச் சட்டம் வழி செய்கிறது. அமெரிக்க வானொலியில் தீவிர வலதுசாரிகளிலிருந்து தீவிர இடதுசாரிகள் வரை எல்லோருமே, இந்த அழிவுக்கும் அமெரிக்க முஸ்லீம்களுக்கும் அமெரிக்க அராபியர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், அப்படி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய மக்களை கண்டிக்கவும் செய்தார்கள்.

***********

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts