உலக வர்த்தக மையம் மீது தாக்குதல்

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

பாரி பூபாலன்


September 11, 2001. வழக்கம் போல் காலையில் எழுந்து கிளம்பி அலுவலகம் செல்ல சப்வே ‘E ‘ ட்ரெயினில் ஏறினேன். ஏறும் போதே தடங்கலாக இருந்தது. முந்தைய ட்ரெயினை யாரோ அபாயச் சங்கிலி மூலமாக நிறுத்தியதால் பல நிமிடங்கள் தாமதம். அந்த விவகாரம் முடிந்து ஒரு வழியாக உலக வணிக மையத்தை அடைந்தால் அங்கே வழக்கத்தை விட சிறிது பரபரப்பு அதிகமாக இருந்தது. அப்போது மணி சுமாராக எட்டே முக்கால் அல்லது ஒன்பது இருக்கும். என்னவென்று விசாரித்தால் ‘ஏதோ குண்டு வெடிப்பாம் ‘ என்று சிலர் கூறினர். என்னால் நம்ப முடியவில்லை. சில மாதங்களுக்கு முன் தான் அங்கு மின் கம்பிகள் பழுது காரணமாக புகை மண்டலம் கிளம்பி எல்லோரையும் வெளியேற்றினர். இதுகூட அது மாதிரியாகத்தான் இருக்கும் அல்லது ஒருவேளை வதந்தியாகக் கூட இருக்கும் எனக் கருதி, மேற்கொண்டு அலுவலகம் செல்ல PATH ரயில் நிலையத்தை நோக்கி விரைந்தேன். இரண்டடி கூட வைத்திருக்க மாட்டேன். திடாரென்று எதிர்த்திசையிலிருந்து எல்லோரும் திடுதிப்பென்று வெகு வேகமாக ஓடி வந்தனர். ‘குண்டு வெடிப்பு! ‘ என்று சத்தமிட்டபடி அனைவரும் ஓடி வந்ததைப் பார்த்ததும், நானும் வந்த வழியே திரும்பி, அங்கு நின்று கொண்டிருந்த ‘E ‘ ட்ரெயினில் திரும்பி ஏறி விட்டேன்.

வெளியே வந்து பார்க்காமல், சப்வே நிலையிலேயே நான் இருந்ததினால், குண்டு வெடிப்பின் பாதிப்பை நான் பார்த்திருக்கவில்லை. எங்கு செல்லலாம் என்று யோசித்து, பாதிப்பின் அளவீடு அறியாத நிலையில், சரி அலுவலகம் சென்று விடுவோம் எனத் திட்டமிட்டு, PENN ஸ்டேஷனை அடைந்து அங்கிருந்து PATH ரயில் நிலையம் சென்று, நியூ ஜெர்ஸி பக்கமுள்ள அலுவலகம் அடைந்தேன்.

நியூ ஜெர்ஸி பக்கம் சென்று பார்த்தபின் தான் தெரிந்தது கொடுமையின் கொடூரத்தை. கண்ணெதிரே இரண்டு கட்டிடங்களும் எரிந்து கொண்டிருந்தன. ஹட்சன் ஆற்றுக்கு இந்தப் பக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் அந்த கொடுமையினைப் பார்த்துக் கொண்டிருந்தனர், சிலர் ஆத்திரத்துடன், சிலர் அதிர்ச்சியுடன், சிலர் கண்ணீருடன், சிலர் பயத்துடன். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத நிலையில் அலுவலகம் மூடப்பட்டது. அதனால், மறுபடியும் PATH ரயில் மூலமாக நியூ யார்க் பக்கம் வந்தடைந்தேன். அன்று அதுதான் கடைசி ரயில், அதன்பின், எல்லா ரயில்களும் நிறுத்தப்பட்டு விட்டன. மக்கள் அனைவரிடம் ஒரு பயமும் பரபரப்பும். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று தெரியாத நிலையில் மக்களிடம் ஓர் அச்ச உணர்வு. ‘அடுத்து எம்பையர் ஸ்டேட் கட்டடமாம் ! ‘ என்று சிலர். ‘மொத்தம் 10 விமானங்கள் கடத்தப் பட்டனவாம் ! ‘ என்று சிலர். ‘பென்டகனும், வெள்ளை மாளிகையும் தாக்கப் பட்டனவாம் ! ‘ என்று சிலர். ‘இது அமெரிக்காவின் தவறு. அமெரிக்கா, வேற்று நாட்டவர்கள் எவரையும் உள்ளே விட்டிருக்கவே கூடாது. அதனால் தான் இத்தனை பிரச்னைகளும். வேற்று நாட்டவர்கள் எல்லோரையும் துரத்தி அடிக்கவேண்டும் ! ‘ என்று சிலர்.

இந்நிலையில், வீட்டுக்குப் போன் செய்து சொல்லலாம் என்றால், செல்போன் வேலை செய்ய மறுத்து விட்டது. பொது தொலை பேசிகள் அனைத்திலும் மிக நீள மக்கள் வரிசை. அவரவர்கள் வீடு நோக்கி நடை கட்ட ஆரம்பித்து விட்டனர். நடந்தவர்களில் பலர் மீது கட்டிடச்சரிவினால் ஏற்பட்ட புகையும் தூசும். நானும் அவர்களுடன் ஒருவராக வீடு நோக்கி நடந்தேன். சுமார் ஆறு மைல் நடந்த பிறகு, முன்பின் அறிந்திராத ஒரு சீனாக்காரன் காரில் இடம் பிடித்து வீட்டருகில் இறங்கி வீடு சேர்ந்தேன். வீடு சேர்ந்து, வீட்டோர்களின் அழுகை புலம்பல்களை அடக்கி விட்டு டி.வியை பார்த்தால் காட்சிகளின் சோகம் கடுமையாகத் தெரிந்தது.

தாக்குதலும், தாக்கப்பட்ட கட்டிடங்களின் நிலையும், மக்களின் அலங்கோலமும், அந்த கட்டிடங்களின் மேல் மாடி சன்னல்களின் வழியே தெரிந்த அதிர்ச்சியும் பயமும் கொண்ட முகங்களும், உயிர் பிழைப்போமா என்று தெரியாத நிலையில் அங்கிருந்து குதித்தவர்களின் நிலையும் இன்னும் கண் முன் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படித் தரைமட்டமாக்கப்பட்ட கட்டடங்களின் கீழ்தான் தாக்குதல் நடந்தபோது நின்றிருந்தோம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. உதிரும் கட்டடங்களின் இடையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மற்றவர்களைக் காப்பாற்ற முனைந்தனர் காவலர்களும், தீயணைப்பார்களும். இவர்களில் பலர் தன்னுயிரை நீத்து தியாகத்தின் சின்னமாய்த் திகழ்ந்தனர்.

உலக வர்த்தக மையம் ஒரு பெருமையின் அடையாளமாக இருந்தது. நியூ யார்க் நகரின் சின்னமாய்த் திகழ்ந்தது. அந்த கட்டடத்தில் வேலை செய்யும் நண்பர்கள், தாங்கள் அங்கு வேலை செய்வதைப் பற்றிப் பேசும் போது அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷமும் பெருமையும் தென்படும். அந்த சந்தோஷமும் பெருமையும் இப்போது தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. இப்போது தொலை தூரத்திலிருந்து பார்க்கும் போது பெருமை சாற்றும் இரட்டை மாடிக் கட்டிடங்களுக்குப் பதில் கொடூரமான புகை மண்டலம்தான் தெரிகிறது. தொலைக்காட்சியில் காணும் ஒவ்வொரு காட்சிகளும் மனதில் அதிர்ச்சியையும், ஆங்காரத்தையும், நீங்காத துயரத்தையும் ஏற்படுத்துவதாய் இருந்தன. இதற்கு காரணமானவர்களின் மீது, ஒன்றுமறியா மக்களைக் கொன்றுவிட்டவர்களின் மீது எண்ணிலடங்கா கோபமும் வெறுப்பும் இனி என்றெல்லாம் நிறைந்திருக்கும்.

Series Navigation

author

பாரி பூபாலன்

பாரி பூபாலன்

Similar Posts