கால அதிர்ச்சி!

0 minutes, 5 seconds Read
This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

கண்ணன்


(kalachuvadu@vsnl.com)

இருபது வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் நுழையும் திகிலோடு பள்ளி இறுதி ஆண்டுகளில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவர்களிடையே எழும் பேச்சுகளில் ஒன்று மேல்நிலைக் கல்வியை அமெரிக்காவில் கற்பது பற்றியது. அமெரிக்காவை ஹாலிவுட் படங்கள் மூலம் டெக்னிக்கலரில் கற்பனை செய்து வைத்திருந்தோம். அமெரிக்காவில் எதுவுமே பூமியில் நிற்பதாகத் தோன்றியதில்லை. எங்கள் வீட்டுப் பணிப்பெண் ஒருமுறைக் கேட்டார் : ‘அமெரிக்காவில் மண் இருக்குமா ? ‘

அமெரிக்காவில் இருப்பவர்கள் முற்போக்கானச் செயல்பாடுகளைக் கொண்டவர்கள்; பத்தாம் பசலிகள் அல்ல என்ற எண்ணம்கூட எங்களுக்கு இருந்தது. சுதந்திரமான பெண்கள், முற்போக்கான மனிதர்கள் என விரிந்தது கற்பனை.

அமெரிக்காவில் மேல்நிலைக் கல்வி கற்பது தொடர்பாக அடிக்கடிப் பேச்சில் வரும் ஒரு தொடர் Cultural shock என்பது. மேல் நாட்டுக் கல்லூரிகளின் பண்பாட்டுச் சூழல், ஆண் பெண் உறவு, இந்திய மாணவர்களுக்குப் பண்பாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது. (மேல்நிலைக் கல்விக்கு அமெரிக்கா செல்பவர்களில் அன்றும் இன்றும் மிகப் பெரும் பகுதி ஆண்கள்தான்.) விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்குப் புகைப்படங்களுடன் கூடிய வெளியீடுகளை அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் அனுப்பி வைத்தன. அமெரிக்க வாழ்வு, பண்பாடு, கல்லூரி வளாகத்தின் கலாச்சாரம், ‘டேட்டிங் ‘ பழக்கம் பற்றிய செய்திகள் மற்றும் பண்பாட்டு அதிர்ச்சியைத் தவிர்ப்பதற்கானக் குறிப்புகளோடு எண்ணற்ற விபரங்கள் அவற்றில் இடம் பெற்றன.

இத்தகைய அறிவுறுத்தல்கள் இன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்களிலும் காணக்கிடைக்கின்றன. இவற்றைத் தொகுத்துப் பார்ப்பது பண்பாட்டு அதிர்ச்சி பற்றி அறிந்துகொள்ள உதவும்.

பண்பாட்டு அதிர்ச்சி என்பது பழக்கப்பட்டச் சூழலிலிருந்து பரிச்சியமற்ற சூழலுக்குக் குடிபெயரும் ஒருவரின் உணர்வு நிலையில் ஏற்படும் தடுமாற்றம், குழப்பம் போன்றவற்றைச் சுட்டும். இதன் தாக்கம் நபருக்கு நபர் மாறக்கூடியது. இதன் அறிகுறிகள் பயம், தூக்கமின்மை, எரிச்சல், வீட்டிற்கான ஏக்கம், மனச்சோர்வு, புதிய கலாச்சாரத்தை நோக்கிய எதிர்ப்புணர்வு போன்றவை. புதிய கலாச்சாரத்தின் கூறுகளை அறிந்து, ஆமோதித்து, பிறந்த கலாச்சாரத்தின் கூறுகளையும் புகுந்த கலாச்சாரத்தின் கூறுகளையும் ஒருங்கிணைக்க இயலும்போது பண்பாட்டு அதிர்ச்சி என்பது இல்லாது போகிறது.

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இளம் இந்திய அமெரிக்க டாக்டர் ஒருவர் இந்தியா வந்திருந்தபோது பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான சுவையான தகவல்கள் அப்போது பல இதழ்களில் வெளிவந்தன.

முன்னர் அவருக்கும் ஒரு பெங்களூர் பெண்ணுக்கும் திருமணம் பெற்றோரால் நடத்தி வைக்கப்பட்டது. சுமார் இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்த பின்னர் அந்தப் பெண் பெங்களூர் திரும்பிவிட்டார். விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். அமெரிக்கக் குடும்பத்துடன் வாழ முடியவில்லை; கொடுமை செய்தார்கள் என்றார். இப்போது அந்த டாக்டர் ஒரு கருத்தரங்கிற்காக இந்தியா வந்த இடத்தில் அவரது முன்னாள் மனைவியின் புகாரின் பேரில் போலீஸார் அவர்மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். திருமணம் முறிந்ததற்கானக் காரணங்கள், அமெரிக்கக் குடும்பம் சம்பந்திகளுக்கு எழுதியக் கடிதங்கள் எல்லாம் இதழ்களில் வெளியாகியிருந்தன.

கைதியான இந்திய அமெரிக்க டாக்டர் உலகிலேயே சிறிய வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர். அதிபர் கிளிண்டன் அவருக்கு விருதும் விருந்தும் கொடுத்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகியிருந்தது. டாக்டரின் குடும்பத்தினர் அனைவருமே டாக்டர்கள் என்று நினைவு. ஐம்பதுகளில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த குடும்பம்.

அமெரிக்கக் குடும்பத் தலைவர் பெண்ணின் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

1. திருமணத்திற்காக வந்த மாப்பிள்ளை குடும்பத்தினரை விமான முனையத்தில் மாலையிட்டு உரிய முறையில் வரவேற்கவில்லை.

2. முதலில் கொடுத்த காப்பி சூடாக இருக்கவில்லை.

3. சீர்வரிசை சரியாக வைக்கவில்லை.

4. வைதீகச் சடங்குகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.

5. மணப்பெண் அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ளவில்லை.

இன்னும் இதுபோல் பல.

ஐம்பது வருடங்களுக்கு முன் வந்த தமிழ்த் திரைப்படக் காட்சியை நினைவூட்டும் இந்தக் குற்றச்சாட்டுகள் நூற்றாண்டின் இறுதியில் சாட்டப்பட்டவை.

இந்தியாவில் நகரத்தில் வாழும் படித்த மேட்டுக்குடிக் குடும்பங்களில் இவ்வாறு இன்று ஒரு பரிமாற்றம் நிகழும் என்று தோன்றவில்லை. எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் உள்ளே கனன்று கொண்டிருந்தாலும் இவ்வாறு பச்சையாக எழுதுவது இங்கிதக் குறைவாகக் கருதப்படும். இது ‘மாடர்ன் ‘ ஆன பார்வை அல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். குழந்தைகள் இதைப் படித்துக் கூசிப் போவார்கள். ஆனால் அமெரிக்கக் குடும்பத்தில் இது நிகழவில்லை. அவர்கள் நம்பியிருந்த இந்தியப் பண்பாடு, அடக்கமான இந்தியப் பெண் கிடைக்கவில்லை என்ற ஆத்திரமே அவர்களிடமிருந்து வெளிப்பட்டது.

இந்தியா பற்றிய இந்த அமெரிக்கக் குடும்பத்தின் கற்பனை ஐம்பதுகளில் அவர்கள் புலம்பெயர்ந்த காலத்தில் தேங்கி நிற்கிறது. தொண்ணூறுகளின் இந்தியா அவர்களுக்குப் ‘பண்பாட்டு ‘ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நவீன இந்தியப் பெண்ணை அவர்கள் அடக்க முயன்று தோற்கிறார்கள். ஐஸ் பாறையில் உறைந்த உடல் போல ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் இந்தியப் பண்பாட்டோடு உறைந்து கிடந்திருக்கிறது இந்தக் குடும்பம். இது இந்தக் குடும்பத்தின் கதை மட்டும்தானா ?

அமெரிக்கா பழமையைப் பேணும் சமூகமா அல்லது உடைக்கும் சமூகமா ? அமெரிக்காவினுள் பல அமெரிக்காக்கள் இருக்கின்றன. பொதுமைப்படுத்துவதில் சிக்கல் உண்டு என்றாலும் அதிகமும் அமெரிக்கா பழமையைப் பேணும் சமூகம் என்றே தோன்றுகிறது. மடிசஞ்சிகளை அது பேணுகிறது; சாதி அடையாளங்களை மேல்நிலையாக்கத்தை ஊக்குவிக்கிறது; மாற்றுச் சிந்தனைகளை மழுங்கடிக்கிறது என்றே இங்கிருந்து பார்க்கத் தோன்றுகிறது. இவற்றை மீறிய எதிர்சிந்தனைகளின் இருப்பை, மாற்றுக்கருத்து கொண்டோரின் ஊக்கமான செயல்பாடுகளை, மறுப்பதற்கில்லை. இருப்பினும் அமெரிக்காவிலிருந்து நீண்ட இடைவெளியில் இந்தியாவிற்குத் திரும்பும் அமெரிக்கத் தமிழர்கள் பலரும் வெளியே சொல்ல முடியாத அதிர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இந்த அதிர்ச்சிக்குக் காலத்தின் இடைவெளியே காரணம் என்பதால் இதைக் ‘கால அதிர்ச்சி ‘ என்று அழைக்கலாம்.

சமஸ்கிருதமயமாதல், மேற்கத்தியமயமாதல் போன்ற முக்கிய மேல்நிலையாக்கக் கோட்பாடுகளை உருவாக்கிய, சமீபத்தில் மறைந்த சமூகவியலாளர் எம். என். ஸ்ரீநிவாஸ் இந்தியாவில் ஒரு புரட்சி நடந்து கொண்டிருப்பதாக எழுதினார். ஆனால் பிற சமூகங்களில் நிகழ்ந்தது போன்ற திடார் தலைகீழ் மாற்றமாக இது ஏற்படாமல் பல பத்தாண்டுகளாக விரிந்து நிகழ்வதாகக் குறிப்பிடுகிறார். ஒரு ஐம்பது ஆண்டுகளில் பண்பாட்டு மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, சமூகவியல் மாற்றங்களைத் தொகுத்து ஆராய்ந்தால் இது புலப்படும் என்றார். கிழக்கில் – இந்தியாவில் காலம் உறைந்து கிடப்பதாக மேற்கில் கருதப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து மீளும் அமெரிக்கத் தமிழர்களைப் பார்க்கும்போது காலம் அங்குதான் உறைந்து கிடக்கிறதோ என்று தோன்றுகிறது. தொழில் நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டாலும் அங்கு மதிப்பீடுகள் மாறுவதில்லையோ ? பொருளாதார தொழில்நுட்ப மாற்றங்கள் நடைபெறும் வேகத்தில் பண்பாட்டு மாற்றங்கள் எங்குமே ஏற்படுவதில்லை என்று ஒரு சமூகவியல் பார்வை உண்டு. அமெரிக்கத் தமிழர்களிடையே இந்தப் பண்பாட்டுப் பின்னடைவு பெருமளவிற்குக் தென்படுகிறது. மேலும் ஐரோப்பாவைவிட அமெரிக்கா பழமையானப் போக்குடையது என்று பரவலாகக் கருதப்படுகிறது.

சிந்தனையின் தீவிரம் என்பது காலத்திற்குக் காலம் மட்டுமல்ல ஒரே காலகட்டத்தில் பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறக்கூடியது. பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து, பிரான்ஸுக்குக் குடிப்பெயர்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரும் அமெரிக்கப் புரட்சிவாதியுமான தாமஸ் பெய்ன் – புகழ்பெற்ற துண்டறிக்கையாளர் இவர் – பிரான்ஸில் மிதவாதியாக அடையாளம் காணப்பட்டார்!

இன்று அமெரிக்கா பயணமாகும் இந்திய மாணாக்கர்களுக்குப் பண்பாட்டு அதிர்ச்சி பற்றிய வெளியீடுகள் பெரிதும் தேவை இல்லை. அந்த அளவுக்கு மீடியா இடைவெளியை நிரப்பிவிட்டது. அமெரிக்கப் பண்பாட்டுத் தாக்கமும் இங்கு அதிகரித்துவிட்டது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா திரும்பும் இந்தியத் தமிழர்களுக்கு அறிவுறுத்தல் தேவைப்படுகிறது. தமிழ் பண்பாட்டு இலக்கிய, அரசியல் சூழலில் ஏற்பட்டு வரும் விரைவான மாற்றங்கள் இவர்களுக்கு நிலைகுலைவை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை அவர்களுக்கு அறிவிக்கும் வெளியீடுகளை விசாவுடன் இணைத்து இந்தியத் தூதரகம் வழங்கலாம். காலப்போக்கில் தமிழ் இணையத்தின் வளர்ச்சி இந்தக் கால அதிர்ச்சியை முற்றிலும் இல்லாமல் ஆக்கிவிடலாம்.

பி.கு. : இந்தக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் 11.8.2001 தினமணி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.

(கண்ணன் காலச்சுவடு இருமாத இதழின் ஆசிரியர்)

Series Navigation

author

கண்ணன்

கண்ணன்

Similar Posts