ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1

This entry is part [part not set] of 14 in the series 20010129_Issue

தேஜஸ்வினி நிரஞ்சனா


ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட நிகழ்ச்சி , கன்னட மொழி அடையாளம் பற்றியும், இன்று கன்னடியர் என்று அழைக்கப் படுவதன் பொருள் பற்றியும் புதிய விசாரணைகளைத் தூண்டியுள்ளது.

இந்தச் சிக்கல், கடந்த சில வருடங்களாக இருந்துவரும் அச்சங்களையும், கன்னடியர்களுக்கும் தமிழர்களுக்கும் அவ்வப்போது நடந்து வரும் சண்டைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தக் குரல் கன்னடியரின் ‘ஆண்மை ‘க்கு விடப்பட்ட சவாலாக, மீண்டும் மீண்டும் உருக் கொள்வதை இங்கு நான் விவாதிக்க இருக்கிறேன்.

மொழிக்கு ‘நேர்ந்த ‘ ஆபத்தை எதிர் கொள்வோரின் ஆண்மை பற்றிய கனல் தெறிக்கும் விவாதங்கள் இங்கு நான் உதாரணம் தரும் பிரதிகளில் பதிவாகியுள்ளன.

இந்தக் கடத்தல் நிகழ்ச்சி , கன்னட மொழி பற்றிய புதிய கலாசார நடவடிக்கைகளுக்கான வெகுஜனத் தர்க்கமாய் உருவாகியுள்ளது.

கன்னட மொழி என்பதே ராஜ்குமார் என்கிற நட்சத்திரத்தின் இருப்பில் வெளியாகும் அடையாளமாகிறது. ( ‘ என் ரத்தம் கன்னடம், என் வாழ்க்கை கன்னடம், என் இதயமும் சிந்தையும் கன்னடம் ‘ என்பது ராஜ் குமாரின் படங்களில் உரையாடலாய் வருகிறது. மேடைப் பேச்சுகளிலும் எதிரொலிக்கிறது.)

ஒரு வெகுஜனப் பத்திரிகை இந்தக் கடத்தல் செய்தியை வெளியிட்ட போது ‘ மொழியின் இருப்பையே கோடரி கொண்டு வெட்டிய ‘தாகக் ( ‘தரங்க ‘, செப்டம்பர் 14) குறிப்பிடுகிறது.

கன்னட அடையாளத்தின் வெளிப்பாடு ஏன் மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ளது ? நிச்சயம் மலையாளம், தெலுங்கு பேசுவோரின் சிறப்படையாளமாய் மொழி மட்டுமே முன்வருவதில்லை. கன்னட மொழிப் பெருமை என்பது ஏன் எப்போதும் தமிழ் மொழிப் பெருமைக்கு எதிரானதாகவே கட்டமைக்கப் படுகிறது ? இந்தப் போக்கு – சினிமா நட்சத்திரத்துடன் இணைந்து காணப்படுவது தென் கர்நாடக மானிலத்தில் மட்டும் தானா ?

1990ம் ஆண்டிலிருந்து ஆக்கிரமிப்பு மிக்க ஒரு ஆண்மையை வெளிப்படுத்துகிற முறையில் வெகுஜனச் சொல்லாடல் பெங்களூரில் கிளம்பியதுடன் தொடர்புபடுத்தித்தான் , கடத்தலுக்கு ஏற்பட்ட எதிர்வினைகளை எடை போட வேண்டும்.

இந்த வெகுஜன உணர்விற்கு உபேந்திராவின் வெற்றிகரமான படங்கள் ‘ஏ ‘ (1998) ‘ஸ்வஸ்திக் ‘ (1999) ‘உபேந்திரா ‘ (2000) தூபம் போட்டன.

அதில்லாமல், வார ஏடுகளான ‘ஹை பெங்களூர்! ‘ , ‘அக்னி ‘ , ‘போலிஸார ஹோராட்ட ‘ (போலிஸ் போராட்டம்) , ‘கிரைம் நியூஸ் ‘ , ‘ஸ்டார் ஆஃப் பெங்களூர் ‘, ‘சஞ்சே ஸ்ஃபோட்டா ‘( மாலை வெடி) போன்றவையும் காரணம்.

இவை, உள்ளூர் பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதுடன், அரசியல் விமர்சனமும் செய்கின்றன. முதல் இரண்டு பத்திரிகைகள் மற்ற பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமானவை.

வெகுஜன உணர்வுகளைத் தொடும்போது, கூடவே இலக்கியகர்த்தாக்கலூடனும் தொடர்பை வைத்திருக்கின்றன. 1. லங்கேஷ் பத்திரிகை (ஏறத் தாழ ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை) இதில் முன்னோடி. குறிப்பிடத்தக்க எழுத்தாளர் லங்கேஷ் 25 ஆண்டுகள் முன்பு துவங்கியது. இப்போது லங்கேஷின் மகள் கெளரி லங்கேஷ் நடத்துகிறார். ஆனால் அவர் தவிர மற்ற பணியாளர்கள் அனைவருமே ஆண்கள் தான். பல முக்கியமான இலக்கியகர்த்தாக்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.

நான் பெரிதும் இங்கு விவாதிக்கவிருப்பது ‘ஹை பெங்களூர் ‘ ஆசிரியர் ரவி பெலகேரே. ‘அக்னி ‘ – இதன் ஆசிரியர் ஸ்ரீதர். இருவருமே கதையாசிரியர்கள், கட்டுரையாசிரியர்கள்.

ரவி பெலகேரே கவிஞரும் கூட. இருவரும் மாஃபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதகச் சொல்கிறார்கள். ஸ்ரீதர் ‘குற்றங்களீன் உலகில் ‘ தனக்கு இருக்கும் தொடர்பை பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளவும் செய்கிறார். பெலகேரேயின் கார் ஜென், புது சிவப்பு நிற ஜிப்ஸி கார், இளைஞர்களின் கொச்சைமொழியைப் பேசுகிற தொடர்கட்டுரைகள் உள்ளன.

‘ஹலோ பெங்களூர் ‘ ‘அக்னி ‘ இரண்டுமே உலகமயமாக்கலுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. கன்னடர் சார்பாகவும், ‘அன்னியரு ‘க்கு எதிரானதாகவும் தம்மை வெளிப்படுத்துகின்றன. அன்னியர்கள் எல்லோருமே பணம் படைத்த மேல் தட்டுக் காரர்கள். இந்திரா நகர் , ஜெய நகர் போன்ற சொகுசுப் பகுதிகளில் வசிப்பவர்கள். பிஸினஸ் செய்பவர்கள் அல்லது கம்யூட்டர் மென்பொருள் எழுதுபவர்கள். பிரிகேட் ரோட், மகாத்மா காந்தி ரோட் போன்ற பகுதிகளில் பார்களில் அடிக்கடி காணப்படுபவர்கள். ஏழை அன்னியர்கள், தமிழ் உழைப்பாளிகள் – இவர்கள் தாம் அன்னியருக்கு எதிரான வன்முறையால் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் — இந்தப் பத்திரிகைகள் இவர்களைக் கண்டு கொள்வதில்லை என்றாலும், அவர்களும் குறிதான் என்று உணர்த்தவும் தயங்குவதில்லை.

புதிய மலிவான தொழில் நுட்பம் மூலமாய்த் தயாராகக் கூடிய ஒலிப் பேழைகள் வெகுஜனக் கலாசாரப் பொருளாய் இப்பொது வந்துள்ளது. முதன் முறையாக இது, மக்கள் கலைவடிவங்களான மிமிக்ரி, பக்திப் பாடல்கள் என்பதிலிருந்து நகர்ந்து அரசியல் விமர்சனங்களுக்குப் பயன் படத் தொடங்கியுள்ளது. ராஜ் குமார் கடத்தலைத் தொடர்ந்து 11 ஒலிப் பேழைகள் வெளியிடப் பட்டுள்ளன. கன்னட மொழியில் ஒன்பது, இந்தியில் ஒன்று, உருதுவில் ஒன்று. இந்த ஒலிப்பேழைகள் தயாரிப்பு தொழில் நுட்பம் சிறந்ததாகவெ உள்ளது. அவற்றின் உரைகளும் நல்ல முறையில் தயாரிக்கப் பட்டுள்ளன. நகைச்சுவை நடிகர்கள், பின்னணிப் பாட்கர்கள், மிமிக்ரி கலைஞர்கள் , நாடகக் நடிகர்கள் பலரும் குரல் தந்துள்ளனர். ராஜ் குமார் கடத்தப் பட்டு பத்து நாட்களில் முதல் பேழை வெளியிடப் பட்டது. 2 மாதம் கழித்து கடைசி பேழை வெளியிடப் பட்டது. லங்கேஷ் பத்திரிகையில் – இந்த ஒலிப் பேழைகள் ஒவ்வொன்றும் 20,000-25000 அளவில் வெளியிடப் பட்டதாகக் குறிப்பு ஒன்று காண்கிறது.

இதன் அமைப்பு மிக எளிதானது தான். ஹரிகதை பாணியில் இருவரின் பேச்சு. ஒருவர் கேள்வி கேட்க இன்னொருவர் பதில் சொல்ல என்று. நடுவில் பிறரின் இடையீடும் உண்டு.பெண்கள் யாருமே இல்லை.ஆனால் உரையாடல்களுக்கிடையில் பாடல்களில் பெண் குரல் ஒலிக்கிறது. இதற்காகவே தயார் செய்யப்பட்ட பாடல்களைத் தவிர பிற ராஜ் குமார் படங்களில் இடம் பெற்ற பாடல்களின் மறு பிறவி. ராஜ்குமார் ‘எரட கனசு ‘ என்ற படத்தில் மஞ்சுளாவை நோக்கி ‘உன்னை மறந்தால் நான் உயிர் வாழ மாட்டேன் ‘ என்ற பாட்டு ரசிகர்களை நோக்கிப் பாடுவது போல் மாற்றம் பெறுகிறது : ‘இன்னை மறந்தால் நான் உயிர் வாழ மாட்டேன், கன்னடத்தை விட்டுப் பிரிந்தால் நான் வாழ மாட்டேன் ‘ என்று மாற்றம் பெறுகிறது. கடத்தலுடன் தொடர்பு படுத்தியோ அல்லது ராஜ்குமார் தன் ரசிகர்களிடம் கொண்டிருக்கும் அன்பை வெளிப் படுத்துவதாகவோ பாடல்கள் பாடப் படுகின்றன. சில பாடல்கள் இதற்காகவே பிரத்தியேகமாய் எழுதப் பட்டுள்ளன: ‘நாடின் அண்ணா காட்டினிலே ‘ ‘ராஜண்ணா நாட்டிற்கு வாருங்கள் ‘ ; மக்கள் ராகத்தில் ஒன்றும், வடக்கு கர்நாடக மொழிப் பாங்கில் இன்னொன்றும் உள்ளது. ‘ஜனபத ‘ என்றழைக்கபப்டும் நாடுப் பாடல் என்று சொல்லிக் கொண்டாலும் கூட சினிமா பாடல்கள் தாம் எதிரொலிக்கின்றன. இரண்டு பேழைகள் தயரித்தவர்கள் : சஞ்சே ஸ்ஃபோடா , போலிஸர ஹோராட்ட , ஸ்டார் அஃப் பெங்களூர் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழு. ஒரு பேழை அ இ அ தி மு கவின் கே. முத்து பணத்திலும், பெங்களூர் பழனி என்ற தமிழர் எழுத்திலும் உருவாகியுள்ளது.

(தொடரும்)

Series Navigation

author

தேஜஸ்வினி நிரஞ்சனா

தேஜஸ்வினி நிரஞ்சனா

Similar Posts