சின்னக் கருப்பன்
தமிழ் நாட்டின் அரசைப் பாராட்ட மூன்று காரணங்கள்.
இந்த வாரம் தமிழ் நாடின் அரசாங்கம் பாராட்டுப் பெறும் படியாய் மூன்று காரியங்களைச் செய்துள்ளது. ‘பாரதி ‘ படத்திற்கு வரி விலக்கு. சாமி சிதம்பரனார் நூல்கள் 10 லட்சம் அவர் குடும்பத்திற்கு அளித்து நாட்டுடமையாக்கப் படுதல். அதே போல் மயிலை சீனி வெங்கட சாமியின் நூல்களும் நாட்டுடமையாக்கப் பட்டுள்ளன. தமிழ் அறிஞர் என்ற வார்த்தையையே அசிங்கம் என்று அறிவிக்கும் அளிவிக்கும் அளவிற்கு தமிழ் நாட்டில் தடுக்கி விழுந்தால் தமிழ் அறிஞர் என்று சொல்லிக் கொள்பவர்கள் மீது தான் விழ வேண்டும் என்ற நிலையில், இவர்கள் இருவரும் உண்மையான தமிழ் அறிஞர்கள். நான்காவதான இன்னொன்றிற்கு அரசைப் பாராட்டுவதா வழக்கமான கோணல் என்று முகம்சுளிப்பதா என்று தெரியரவில்லை. முடியரசன் என்ற ஒருவர் நூல்களூம் நாட்டுடைமைப் பட்டுள்ளன. தி மு க விசுவாசி ஒருவரைக் கெளரவிக்க வேண்டும் என்றால் அதற்கு திமுக-வின் கருவூலத்திலிருந்து தான் பணம் அளிக்க வேண்டுமே அல்லாது, அசின் கருவூலத்திலிருந்து அல்ல. இவருடைய தகுதி பற்றித் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
நம் தமிழ் நாட்டில் இருந்த பலவித சமூகக் குழுக்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்து, பல சிறப்பான கட்டுரைகள் மூலம் அவர்கள் வாழ்வைப் பதிவு செய்த பிலோ இருதயநாத் அவர்களின் படைப்புகளும் இன்றைய தலைமுறைக்குத் தெரிய ஏற்பாடு செய்தால் நல்லது.
*****
புனிதர் பிஸினஸ்
கத்தோலிக்க மதத்தில் புனிதர் பட்டம் அளிப்பது என்பது ஒரு பெரிய கெளரவம் . அது கெளரவம் மட்டுமல்ல, அரசியலும் கூட. புனிதர் பட்டம் பெறுவதற்கு அவர் மூன்று ‘அற்புதங்களை ‘ நிகழ்த்தியிருக்க வேண்டும். சாதாரணமாக போப் ஆண்டவர் ஏதாவது ஒரு நாட்டுக்கு வருகை புரிந்தாரென்றால் அந்த நாட்டு ஆள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து புனிதர் பட்டம் வழங்குவது வழக்கம். இப்போது தெரஸாவிற்குப் புனிதர் பட்டம் வழங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. நல்ல விஷயம் தான். ஆனால் சிக்கல் என்னவென்றால், தெரஸா என்ன ‘அற்புதங்கள் ‘ நிகழ்த்தினார் என்று பதிவு செய்ய வேண்டும். ஆயிரமாயிரம் நோயாளிகளூக்கு ஆறுதலும் மன்நிம்மதியும் தருவது ‘அற்புதம் ‘ அல்ல. அது இயற்கைக்கு மீறிய செயலாகவும் இருக்க ஏண்டும். எப்படி இதை நிரூபிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
******
காங்கிரஸ் தலைவர் ‘தேர்தல் ‘
காங்கிரஸைப் பொறுத்த வரையில் தேர்தலே கேலிக்கூத்து. சோனியா காந்தியை எதிர்ப்பின்றித் தேர்ந்தெடுக்க முடியாமல் உத்தரப் பிரதேச ஆள் ஜிதேந்திரப் பிரசாத் முட்டுக் கட்டை போடுகிறார். உ.பியில் யார் யார் வாக்களிக்க முடியும் என்று பட்டியலைக் கேட்டு தகராறு செய்கிறார்.
உம். பார்க்கலாம் , சோனியாவை எதிர்ப்பதன் மூலம் , காங்கிரஸில் தீண்டத் தகாதவராய் ஆகப் போகும் இவர் கதி என்னவென்று.
*****
கல்வியில் ஒரு சோதனை முயற்சி
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சில சோதனை முயற்சிகள் பாராட்டத் தக்கன. சிறைக்கைதிகளுக்குக் கல்வியைக் கொண்டு செல்லும் முயற்சி அத்தகைய ஒன்று. இப்போது, பள்ளிக் கூடங்களில் உள்ள வசதிகளைப் பயன் படுத்திக் கொண்டு கல்லூரிக் கல்வியை இன்னும் பரவலாக்க முயல்கிறார்கள். இதன் துணை வேந்தர் க.ப.அறவாணனின் இந்த முயற்சி வெற்றி அடைய வேண்டும். ஆனால் சுய நிதிக் கல்லூரிகள் இந்த முயற்சிக்குத் தடை போட முயல்வதாய் அறிந்து வருந்துகிறேன்.