இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 9 in the series 20001022_Issue

சின்னக்கருப்பன்


மார்க்ஸிஸ்ட் கட்சி பிராந்தியக் கட்சியா ?

மார்க்ஸிஸ்ட் கட்சி பிராந்தியக் கட்சி என்று தேர்தல் கமிஷனால் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறது. உடனே பலரும் இதைக் கண்டனம் செய்திருக்கிறார்கள். மார்க்ஸிஸ்ட் கட்சி இந்தப் போக்கைக் கண்டித்து இருக்கிறது. இந்த அங்கீகாரம் அளிக்கப் படுவது தேர்தல் சின்னங்களுக்கான சட்டப் பிரிவையொட்டிச் செய்யப் பட்டுள்ளது.

இந்தச் சட்டப் பிரிவைப் பயன் படுத்தி ஏற்கனவே ஜனதா கட்சி போன்ற சில கட்சிகளின் சின்னங்களைப் பறித்துள்ளது தேர்தல் கமிஷன். அப்போது இது குறித்து எந்த மறுப்பும் சொல்லாத மார்க்ஸிஸ்ட் கட்சி இப்போது புலம்புவதில் அர்த்தமேயில்லை.. இப்போதும் கூட இந்த விதிகளின் அர்த்தமின்மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. தனக்கு 33 சீட்டுகள் நாடாளுமன்றத்தில் உள்ளதைக் காரணம் காட்டி விதிகளை மாற்றச் சொல்கிறது. அதாவது நாடாளுமன்றத்தில் உள்ள எம் பி சீட்டுகளையும் பிராந்தியக் கட்சி என்று தீர்மானிப்பதில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது. அது தவறொன்றுமில்லை. ஆனால், தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும் என்பது போல, தனக்கு பிராந்திய கட்சி என்ற முத்திரை வரும்போதுதான் சத்தம்போடுவேன் என்பது ஒரு தேசீய கட்சி எடுக்கும் நிலை போல தெரியவில்லை. அப்படியென்றால், தெலுகுதேச கட்சி 33 இடங்களுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கும் தேசீய கட்சி அந்தஸ்து கொடுக்க வேண்டுமல்லவா ? (அவர்களுக்கு ஆந்திரா தவிர வேறு எந்த இடத்திலும் போட்டி இட எண்ணமே இல்லாதிருந்தாலும்..)

இதற்கு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாள்பத்திரிக்கையான ‘இந்து ‘வும் தலையங்கமும், உரத்த சிந்தனை கட்டுரைகளையும் வெளியிட்டு ஆதரவு தேடுகிறது. பீப்பில்ஸ் டெமாக்ரஸி ‘ என்னும் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள அதே விஷயங்கள் அதே வரிகளில் இந்த இந்து கட்டுரையிலும் எழுதப்பட்டுள்ளன.

இந்தப் பிரிவே – பிராந்தியக் கட்சி, தேசீயக் கட்சி – அர்த்தமில்லாத ஒன்று. எது பிராந்தியக் கட்சி எது தேசீயக் கட்சி என்று மக்கள் தாம் தீர்மானிக்க வேண்டும்., தேர்தல் கமிஷன் அல்ல. இந்தப் பிரிவு தேவைப் படுகிற அபத்தமான காரணம் என்னவென்றால் , மக்களுக்குப் படிக்கத் தெரியாது அவர்களுக்குத் தேர்தல் சின்னங்கள் தான் தெரியும். அரிவாள் சுத்தியல் சின்னம் வேறு வேறு மானிலங்களில் வேறு வேறு கட்சிகளுக்குக் கிடைக்கலாம் என்பது தான்., மார்க்ஸிஸ்ட் கட்சியின் முக்கியமான கவலை. அதில்லாமல் வானொலி, தொலைக் காட்சியில் தேர்தல் பிரசாரத்திற்கு அளிக்கப் படுகிற நேரம், முக்கியத்துவம் இவற்றையும் இது பாதிக்கும். சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் படிப்பறிவின்மையை நீக்கிட முடியவில்லை நம்மால் என்பது குறித்து யாரும் வெட்கப் படக் காணோம்.

***

சுதர்சனம் : இந்திய ஏசு சேவக் சங்கத்தின் தலைவர் ? ?

ஆர் எஸ் எஸ்-இன் தலைவர் சுதர்சனம், கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஆதியில் இந்துக்களாய் இருந்தவர்கள் தான் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள் இந்திய சர்ச் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். இந்தியாவில் ஏற்கெனவே இந்திய கிறிஸ்தவ சர்ச்சுகள் இருக்கின்றன. உதாரணமாக சிரியன் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் முழுக்க முழுக்க இந்திய சர்ச். அவரது பேச்சு கத்தோலிக்கர்களையும் பாப்டிஸ்டுகளுக்கும் எதிரானது. இதற்கு பதிலலித்த சகோதரி நிர்மலா ‘கத்தோலிக்க சர்ச் ஒரு தேசத்துக்கு சொந்தமானதல்ல, அது அனைத்துலகையும் தழுவியது ‘ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

சுதர்சனம் அவர்களே. கிறுஸ்தவர்கள் ஆதியில் இந்துவாய் இருந்தார்கள். அதற்கு முன்னால் காட்டு மிராண்டிகளாய் இருந்தார்கள். அதற்கு முன்னால் சிம்பன்ஸியாய் இருந்தார்கள்,. அதற்கு முன்பு ஒரு செல் உயிரினங்களாய் இருந்தார்கள். இதையும் ஞாபகம் வைத்துக் கொண்டால் நல்லது.

முஸ்லீம்களாக இருப்பதானாலே அவர்கள் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்று அவர்களைப்பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதுபோலவே இன்று கிறிஸ்தவர்களை முத்திரை குத்த முயல்வதுதான் இந்தப்பேச்சின் நோக்கம் என்பது தெளிவாகவே தெரிகிறது.

உங்களின் தேசபக்தியையும்., சர்ச்சை இந்திய மயமாக்கும் எண்ணத்தையும் பாராட்டுகிறேன். இந்தியா ஜன நாயக நாடு. எனவே, எல்லோருக்கும் வழிகாட்டும் முகமாக, நீங்களும் ஆர் எஸ் எஸ் ஆட்களும் கூண்டோடு, கிறுஸ்தவர்களாவதற்கோ, இந்திய சர்ச் ஒன்றைத் துவக்குவதற்கோ ஒரு தடையுமில்லை. செய்யுங்கள்.

****

பாரதி படம் :

பாரதி படம் தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் குப்பைகளைத் தான் விரும்புகிறார்கள் அதனால் தான் குப்பைக் கூடையைத் தலையில் சுமந்து நாங்கள் செலுலாய்டில் அளிக்கிறோம் என்று பிரகடனம் செய்து கொண்டிருக்கும் பட அதிபர் பண மூட்டைகளுக்கு இது ஒரு பாடமாய் அமைந்தால் நல்லது.

ஞான ராஜசேகரனின் ‘பாரதி ‘யை நான் பார்க்க வில்லை. ஆனால், முந்திய படங்களைப் பார்த்திருக்கிறேன். ‘மோக முள் ‘ என்னை அவ்வளவாய் ஈர்க்கவில்லை. அதில் சில நல்ல காட்சிகள் உண்டு. வெண்ணிற ஆடை மூர்த்தி கூட தன் வழக்கமான கோணங்கிகள் இல்லாமல் நன்றாக சில காட்சிகளில் வந்தார். ஆனால் முழுமையான படம் திருப்திகரமாய் இல்லை.

அவருடைய ‘முகம் ‘ படத்தை நான் ரசித்தேன். நல்ல திரைக்கதை உரையாடல். சினிமாவின் மொழி அறிந்தவர் அவர் என்பதை உணர்த்தும்படி பல காட்சிகள் அமைந்திருந்தன. ‘வித்தியாசமான கதையமைப்பு ‘ என்பதே அதை நான் ரசித்ததற்கு இன்னொரு காரணம். ‘ சினிமாவுக்குப் போன சித்தாளு ‘வின் பாதிப்பைத் தவிர்த்திருக்கலாம். – அந்தக் காட்சிகள் நன்றாய் எடுக்கப் பட்டிருந்த போதும். மற்ற படி, படம் ஒரு கவனிக்கப் பட வேண்டிய படமே.

***

Series Navigation

author

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

Similar Posts