இந்த வாரம் இப்படி – அக்டோபர் 9, 2000

This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue

சின்னக்கருப்பன்


ஜஸ்வந்த சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் சொன்னது உண்மையா ?

சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் ஆச்சரியமானதும் வருந்தத்தக்கதுமான ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

ஐநாவின் ஆரம்பகாலத்தில் இந்தியாவுக்கு பாதுகாப்புக்குழுவில் இடம் அளிக்கப்பட்டது என்றும், நேரு அது வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றும் கூறுகிறார். அது மட்டுமல்ல அவர் சீனாவுக்கு அந்த இடத்தை அளிக்கக் கோரினார் என்றும் ஜஸ்வந்த் சிங் கூறியிருக்கிறார்.

நேரு தனிமனிதராக இருந்தால் அவரது இந்த Gentlemanதனத்தை நான் பாராட்டலாம். அவர் இந்தியாவின் பிரதமராக இந்தியாவின் பிரதிநிதியாக இந்தியாவுக்கு உரிய இடத்தை உலக அரங்கில் பெற்றுத்தர போராட வேண்டிய சூழ்நிலையில் இருந்தவர். இங்கே Gentlemanதனத்துக்கெல்லாம் இடமில்லை. இடமும் இருக்கக்கூடாது. டூப்ளிகேட் சீனர்களான என்,ராமும் சுப்பிரமணிய சாமியும் வேண்டுமானால் இதை பாராட்டலாம். நேருவுக்கு கெளரவ சீனர் விருதும் வேண்டுமானால் வழங்கலாம். நான் பாராட்டத் தயாராக இல்லை.

இது உண்மையா என்பது இந்தியர்களுக்குத் தெளிவாக்கப்பட வேண்டும். அல்லது ஜஸ்வந்த் சிங் பொய் சொன்னாரா என்பதும் வெளிப்பட வேண்டும். இது ஒரு முக்கியமான் தீவிரமான விஷயம். அமெரிக்கப் பத்திரிக்கையில் ஜஸ்வந்த் சிங் பொய் சொல்லியிருப்பார் என்பது கருத முடியாது. அதைப் படிப்பவர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல. பெரும் உலகத்தலைவர்களும் வரலாற்றாசிரியர்களும் படிக்கக்கூடிய விஷயத்தில் ஒரு பெரும் நாட்டின் வெளியுறவு அமைச்சர் தகுந்த ஆதாரம் இல்லாமல் பேசமுடியாது.

இதை இந்தியர்களுக்கு விளக்கவேண்டிய கடமை இந்திய அரசாங்கத்தைச் சாரும்.

***

மீண்டும் திபேத்திய பெளத்த கன்னியாஸ்திரீகள் சித்திரவதைக் கொலை.

திபேத்திய கன்யாஸ்திரீகள் சீன அரசாங்கத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது. யாரும் கண்டுகொள்ளக்காணோம். என்.ராம் இந்த கன்யாஸ்திரிகள் பற்றி சீன அரசாங்கத்தின் ஊழியர்களிடம் கேட்டுச் சொல்வார் என்று நம்புவோம். பிபிஸியும் இதை தெரிவித்துவிட்டு அடுத்த செய்திக்குச் சென்றுவிட்டது.

நாமும் அடுத்த செய்திக்குச் செல்வோம்.

***

யூகோஸ்லாவ் புரட்சி

மக்களுக்கேற்ற தலைவர்கள் என்பதை யூகோஸ்லாவிய மக்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். தலைவன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் (முக்கியமாக இந்தியாவில்), பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் தேர்தலை மதிக்காத தலைவனை தூக்கியெறியவும் தயங்குவதில்லை.

முட்டாள் மக்கள் முட்டாள் தலைவர்கள். படிப்பறிவு வாய்ந்த மக்கள் சிறந்த தலைவர்கள். அதனால்தானோ என்னவோ, இந்தியாவில் சுதந்திரம் இருந்தும், இன்னும் 50 வருடங்களாக படிப்பறிவை காங்கிரஸ் கட்சி தடுத்துகொண்டே இருக்கிறது. மோசமான தலைவர்கள் படிப்பறிவு அற்ற மக்களையே விரும்புகிறார்கள். இன்னும் விசிலடிச்சான் குஞ்சுகளையே உருவாக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

***

ஹைதராபாத்தின் உயிரியல் பூங்காவில் உயிர்க்கொலை

ஒரு புலி இறந்ததற்காக வருத்தப்படவில்லை நான். ஒரு பசு கொல்லப்பட்டு தோலுரிக்கப்படுவதும் ,கோழி கொல்லப்பட்டு தோலுரிக்கப்பட்டு உண்ணப்படுவதும் தினந்தோறும் தெருதோறும் நடக்கும் ஒரு விஷயம். ஆனால் இங்கு இது செய்யப்பட்ட முறையும், பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் எவ்வளவு பாதுகாப்பற்று இருக்கிறது என்பதும்தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

இது போன்ற விஷயங்கள் நாட்டில் அரசாங்கம் இருக்கிறது என்ற எண்ணத்தையே தொலைத்துவிடும். இது ஒரு சாதாரண திருட்டு அல்ல. இது ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பது சாதாரண பார்வையிலேயே தெரிகிறது. இதுபோல் சென்னை உயிரியல் பூங்காவிலும் நடப்பதாக எனது நண்பர் சொன்னார். அதற்கு ஆதாரம் இல்லை. அந்த செய்தி வருவதில்லை. எனவே நடக்கவில்லை என்று கொள்ளலாம்.

இந்த குற்றம் புரிந்தவர்கள் உடனே கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

***

காஞ்சீபுரம் ரயில் நிலையத்துக்கு குண்டு வெடிப்பு மிரட்டல்

ஏன் காஞ்சீபுரத்தை தேர்ந்தெடுத்தார்கள் ?

***

Series Navigation

author

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

Similar Posts