ந. முருகானந்தம், நியூ ஜெர்சி
சில நாட்களுக்கு முன் பொறியியல் பத்திாிகை ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்த போது, சுவையான செய்தி ஒன்று கண்ணில் பட்டது. வாஷாங்டன் பல்கலைக் கழகத்து வகுப்பு ஒன்றில், நரகத்தின் கதி என்ன என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாகவும், மாணவன் ஒருவன் அதை அறிவியல் முறையில் அணுகி, பதில் அளித்திருப்பதாயும் செய்தி இருந்தது. சொர்க்கமும், நரகமும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது தான். இருந்தாலும், விஞ்ஞான முறையில் இவை பற்றிய புதிர்களை அணுகுவது புதுமையாக இருக்கின்றது. விஞ்ஞானம் படிக்கும் வாசகனுக்குச் சுவையாக இருக்கின்றது.
நரகத்தின் வெப்ப நிலை நாளுக்கு நாள் கூடுகிறதா (endothermic) , இல்லை குறைகிறதா (exothermic) என்பது கேள்வி. இதனை வெப்ப ஓட்டம் (thermodynamics) எனும் அறிவியல் கண்ணோட்டத்தில் மாணவன் அணுகுகிறான்.
இக்கேள்விக்கு விடை காண முதலில் நரகத்தின் கனம் (mass) நாளுக்கு நாள் கூடுகிறதா, இல்லை குறைகிறதா (rate of change of mass of hell) என்றறிய வேண்டும். இதற்கு எத்தனை ஆத்மாக்கள் நரகத்தில் நுழைகின்றன, எத்தனை ஆத்மாக்கள் வெளியேறுகின்றன என்பது தொிய வேண்டும். உலகின் பல மதத்தினரும், மற்றைய மதத்தினர் சென்றடைவது நரகமே என்று நம்புகின்றனர். நரகத்தில் நுழைந்த எந்த ஆத்மாவும் வெளியேறுவது இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இத்துடன், உலகின் பிறப்பு, இறப்பு விகிதாசாரத்தையும் உற்று நோக்கினால், நரகத்தின் கனம் நாளுக்கு நாள் பன்மடங்கு கூடுகிறது என்ற முடிவுக்கு வரலாம்.
இவ்வாறு நாளுக்கு நாள் கனம் கூடுகிற நரகத்தின் அழுத்தமும் (pressure), வெப்பமும் (temperature) ஒரே அளவில் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், ஆத்மாக்கள் நுழைய, நுழைய அதே அளவில் நரகம் விாிவடைதல் அவசியம். இது வெப்ப ஓட்ட நியதி (law of thermodynamics). இந்த விதியை மீறினால் நரகம் அடையும் கதி, கீழ்க்கண்ட இரண்டில் ஒன்றாகும்.
1. ஆத்மாக்கள் நுழைகின்ற அதே அளவில் விாிவடையாத நரகத்தின் அழுத்தமும், வெப்பமும் நாளுக்கு நாள் கூடி, ஒரு நாள் நரகம் வெடித்தே தீரும் (all hell breaks loose).
2. ஆத்மாக்கள் நுழைகின்ற அளவுக்கு மேல் அதிகமாய் விாிவடையும் நரகத்தின் அழுத்தமும், வெப்பமும் நாளுக்கு நாள் தணிந்து, ஒரு நாள் குளிாில் விறைத்தே போகும் (freezes over).
இதுவே அந்த மாணவனின் பதில். இந்த பதிலும், அணுகுமுறையும் சர்ச்சைக்குாியது. ஆத்மாவுக்குக் கனம் உண்டா ? மற்றவர்களை நரகத்திற்கு அனுப்பாத மதங்களும் உண்டே. நரகம் கூட தற்காலிக வாசம் தான் என்று கூறுகிற மதங்கள் இல்லையா ? எது நரகம் ? எங்கே நரகம் ? அறிவியல் கோட்பாடுகள் உண்மை என்ற அடித்தளத்திலிருந்து எழுப்பப்படும் கட்டிடங்கள் தானே ? அந்த அடித்தளம் இங்கு பலமானதாய் உள்ளதா ? இத்தியாதி கேள்விகள் பல நம் மனதில் தோன்றலாம். மாடுகள் வீடு திரும்பும் வரையிலும் நாம் அவற்றை விவாதிக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் மறுக்க இயலாது. மாணவன் அறிவியல் துணையோடு நிரூபிக்க முயல்வது, பலரும் பன்னெடுங்காலமாய் நம்புகிற ஒன்று. அது, கொடிது! கொடிது ! நரகம் கொடிது! என்பதே.
நரகத்திலிருந்து தப்பும் வழி, நரகத்தைச் சென்று அடையாததே. இதற்குாிய வழிகளைச் சொல்வது விஞ்ஞானத்தின் வேலையல்ல. மெஞ்ஞானத்தின் பொறுப்பு. காலந்தோறும் மகான்கள் உதித்து இதற்கான மார்க்கத்தினைக் காட்டுகின்றனர். நம் காலத்திலும் இதற்கு வழி சொல்கிறார் மகாகவி பாரதியார். செத்தால் தானே நரகப் பிரச்சனை. சாகாமலே இருந்து விட்டால் ? அந்த சாகா வரம் பெறும் இரகசியத்தை மந்திரம் போல் சொல்கிறார் மகாகவி:
அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
கொன்றிடுவீர், மேதினியில் மரணமில்லை.
கவலைப் படுதலே கரு நரகமம்மா!
கவலையற்று இருத்தலே முக்தி;
கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம்.
சொர்க்கத்தையும். நரகத்தையும் ஸ்தூலமாகக் கொண்டு அணுகுவதில் உள்ள பொிய பிரச்சனையைக் களைந்துள்ளார் பாரதியார். வாழ்வு முடிந்த பின் வருகிற சொர்க்க நரகத்தை யாரறிவார் ? இப்பிறவியிலேயே சொர்க்கத்தையும், நரகத்தையும் ஒருவன் அனுபவிக்கின்றான். மன அமைதியோடு வாழ்பவன் சொர்க்கத்திலும், வாழாதவன் நரகத்திலும் இருக்கின்றான். அப்படி வாழாதவனை, சாவிலிருந்து, நரகத்திலிருந்து மீட்டு, அவனுக்கு வாழ்க்கையின் இரகசியத்தைச் சொல்வதன்றோ மெஞ்ஞானம். பாரதி மகாகவி மட்டுமல்ல, ஒரு மெஞ்ஞானியும் கூட.
உதவிய நூல்கள், பத்திாிகைகள்:
1. Thermodynamics of hell, a news item in Chemical and Engineering News, pp80, April 10, 2000, Publication of American chemical society
2. பாரதி அறுபத்தாறு- பாரதியார் கவிதைகள்
3. மகாகவி பாரதியார் பொன் மொழிகள்- பிரேமா பிரசுரம், 1962
திண்ணை
|