இரா.முருகன்
1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு.
ஒற்றை சுருதியில் ஒரு தம்பூரா இடைவிடாமல் தன் சோகத்தைச் சொல்லிக் கொண்டிருந்ததுபோல் தெரிசாவுக்கு குரல் கேட்டுக்கொண்டிருந்தது.
ஒரு வீணையாக, வாய் விட்டுப் பாடக்கூடிய குரலாக இருந்திருந்தால் துயரத்தை ஒற்றை இருப்பில் முழுக்கச் சொல்லி கரைந்தும் போயிருக்கலாம். அப்படி ஆக முடியாத வலியும் அந்த முணுமுணுப்பான குரலில் கோடிட்டிருந்தது.
பகவதிப் பொண்ணே, என் கரளிண்டெ கரளே, குஞ்ஞே எண்டெ சாரதே எங்ஙனெ நிங்களெ விட்டு நில்க்கான் எனிக்குப் பற்றும்? ஜீவிச்சாலும் அல்லெங்கிலும். சொல்லேண்டி குழந்தே. ரெண்டு பேருமே எனக்குப் பிறக்காத சிசுக்களாச்சே.
விசாலம் மன்னியின் வார்த்தைகள் மலையாளத்திலும் தமிழிலும் மாறிமாறி வந்தபடி இருந்தன. அவள் அழுது பகவதி கண்டதே இல்லை. இத்தனை வருடம் கழித்துப் பார்க்கும்போது அந்த முகத்தில் தேங்கி வைத்த துன்பம் எல்லா வனப்பையும் மூடி மறைத்து ஒரு பனித் திரையாக மேலே படிந்திருந்தது.
பகவதிக்கு அவள் மேல் இரக்கமும் பச்சாதமும் அவள் துக்கத்தில் பங்கு பெற முடியாமல் போன ஆற்றாமையும் தொடர்ந்து அனுபவப்பட்டுக் கொண்டிருந்தது.
அம்மா இல்லாத பகவதியை சிற்றாடை தரித்த பெண்ணாக இருந்தபோதே தத்தெடுத்த தாய் அவள். திரண்டுகுளியும், கல்யாணமும், அரசூரில் புகுந்த வீட்டுக்கு கூட வந்து கொண்டு விட்டுக் கண்ணீரோடு பிரிந்த தள்ளை அவள். கால ஓட்டத்தில் அவளும் அண்ணா குப்புசாமி அய்யனும் காலம் தப்பி அவர்களுக்குப் பிறந்த மகாதேவனும் எல்லாம் யாரோ சொல்லக் கேட்ட தகவல்களாகவும் தாமதமாக வந்து சேரும் சர்க்கார் முத்திரை குத்திய லிகிதத்தில் பாதி கலைந்த எழுத்துக்களாகவும் மாறி மறைந்தே போனார்கள்.
மகாதேவன் பிறந்து அவனுக்கு ஒரு வயது பூர்த்தியாகி அப்த பூர்த்திக்கும் காது குத்தல் வைபவத்துக்கும் கொல்லூருக்கு ஒரு தடவை பகவதியும் சங்கரனும் போயிருந்தார்கள்.
அப்புறம் ரெண்டு தடவையோ மூணு முறையோ ராமேஸ்வரத்துக்கும், குன்னக்குடியில் விருச்சிக மாத நடுவே கார்த்திகையை ஒட்டி பால் குடம் எடுக்கவும் அண்ணா குப்புசாமி வந்தபோது விசாலம் மன்னி மட்டும் மகாதேவனோடு வந்திருந்தாள்.
குப்புசாமி அய்யனுக்கு சர்க்கரை நோய் முற்றி காலில் ஏற்பட்ட பிளவை அவனை எங்கேயும் நடக்கவிடாமல் காலை முறித்து வீட்டிலேயே உட்கார்த்தி விட்டிருந்தது. அவன் காலம் முடிந்தபோது பகவதியை கர்ப்ப ரோக நிமித்தம் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவசமில்லாமல் ஒரு மாதம் படுத்திருந்தாள்.
குணமாகி ரெண்டு மாசம் கழித்தே மரண வார்த்தை பகவதிக்குத் தெரியப் படுத்தப்பட்டது. சங்கரன் மட்டும் போய் வந்த பத்தாம் நாள் சடங்கைப் பற்றிக் கூட பகவதியிடம் ஒற்றை வார்த்தையில் சொல்லி நிறுத்தி விட்டான் அவன்.
அப்புறம் அவன் காலம் முடிந்ததும், அம்பலப்புழைக்கும் பகவதிக்குமான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட விதித்திருந்தது போல. மகாதேவன் கல்யாணமானது சங்கரன் காலமானதற்கு ஒரு மாதம் கழித்து என்று மட்டும் பகவதிக்கு நினைவு இருக்கிறது.
கடுதாசி வந்து வாங்கி வீட்டில் வைத்து மனசில் வாழ்த்தினது தவிர வேறே எதுவும் செய்ய முடியாத, வெளிக்கிளம்ப முடியாத நிலைமையில் இருந்தாள் அவள். கடையைக் கவனிக்க வேறே யாரும் இல்லாததால் அவள் வைதவ்யம் கூட புகுந்த வீட்டிலேயே தொடங்கியது.
அவர் போனார். எனக்கு பூமியே காணாமல் போச்சு பகவதி.
விசாலம் மன்னி விதும்பினாள்.
இங்கேயும் அதேதான் மன்னி. இவர் போய், எங்கே போனார் இருக்கார் இன்னும் என்னோடதான். நீங்களும் அண்ணாவும் தான் இல்லே. கிட்டாவண்ணா, சிநேகா மன்னி யாருமே இல்லே. சாரதை மட்டும் கிடைச்சிருக்கா அருகம்புல்லு மாதிரி.
விசாலம் சாரதையைப் பார்த்துச் சிரித்தபோது ஒரு வினாடி அவள் முகத்தில் பழைய பிரகாசத்தின் தேசலான சாயல் புலப்பட்டது.
இவளை எனக்கு மட்டுமா தெரியும், என் மருமகள் பர்வதவர்த்தினி, குழந்தை குஞ்ஞம்மிணி ரெண்டு பேருக்கும் நன்னா பழக்கம். வயிறு வாடாம அந்நிய தேசத்திலே வச்சு சாதம் விளம்பின மகாராஜி இந்தக் குட்டி. நன்னா இரும்மா.
விசாலம் வாயாற வாழ்த்தினாள். பகவதிக்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. அம்பலப்புழை தேகண்ட குடும்பத்தில் வேதத்தில் ஏறி சமுத்திரம் கடந்து போன கிட்டாவண்ணாவின் பெண் குட்டிகளைப் பற்றித்தான் அவளுக்குத் தெரியும்.
மகாதேவன் குடும்பம் வெள்ளைக்கார தேசம் எப்படிப் போனது? அது கிடக்கட்டும். விசாலம் மன்னி எப்படி எங்கே இருந்து வந்தாள் இங்கே?
நான் இல்லே. ஆனா, அவா எல்லாம் இருக்கா.
மன்னி விரக்தியாகச் சிரித்தாள். பகவதிக்குக் குழப்பம்தான் அதிகமானது.
நான் போய்ச் சேர்ந்து இந்த மகரம் எட்டு வந்தா பத்து வருஷமாச்சு. வருஷாப்தி கொடுக்கக்கூட யாரும் இல்லாம, எலும்பும் புண்ய தீர்த்ததிலே கரைஞ்சு கடைத்தேறாம, பட்டணத்திலே கோர்ட் உத்தியோகஸ்தன் வீட்டுப் பரண்லே அடசலோட அடசலா கிடந்திண்டிருக்கேண்டி பகவதி. எனக்கு வந்த கஷ்டத்தைப் பார்த்தியா? இதைவிடப் பெரிசு என் குழந்தை மகாதேவனுக்கும் அவன் பாரியாள், குஞ்ஞுக்கும் ஆனது. ஏன் கேக்கறே போ. ஒரு பாட்டம் அழுதா நிறுத்த முடியாம போயிடும். கல்யாணம் ஆற வீட்டிலே எதுக்கு அழணும் சொல்லு.
விசாலம் மன்னியின் சிரிப்பு மட்டுமே பகவதிக்கு நினைவில் இருந்தது. இருக்கும். இந்த விசாலம் மன்னி உயிரோடு இருந்தாலும் ஆவி ரூபம் என்றாலும் அந்நியப்பட்டு நிற்கிறவள். அவள் குற்றம் இல்லை. விதின்னா இது விதிதான்.
தெரிசா மௌனமாக இதெல்லாம் கேட்டும் அனுபவித்தும் தீர வேண்டிய சங்கதிகள் என்ற தோரணையில் கையில் ஜப மாலையை உருட்டியபடி அரைக் கண் மூடியிருந்தாள். அவள் உதடுகள் பிரார்த்தனையிலும் காதுகள் அமானுஷ்யமாகப் படியும் வார்த்தைகளிலும் பிணைந்திருந்தன.
மகாதேவனும் பர்வதமும் குழந்தை குஞ்ஞம்மிணியும் கொல்லூர் போகும் வழியில் காணாமல் போனது, அவர்கள் காலம் கடந்த வெளியில் இன்னும் சுற்றிச் சுற்றி வருவது, தெரிசா மூலம் கிடைத்த உபகாரம் என்று மன்னி கோர்வையில்லாமல் சொல்ல பகவதிக்கு ஒரு மாதிரி எல்லாம் புரிந்த மாதிரி இருந்தது. இதுவரை ஜீவித்திருக்கும் காலத்தில் புரிந்த எல்லாம் மறந்த மாதிரியும் இருந்தது.
விசாலம் அத்தை, பர்வதத்தையும் குஞ்ஞம்மிணியையும் நான் எடின்பரோவிலே பார்த்து நாலு வருஷத்துக்கு மேலே ஆச்சு. எங்கே போனா? அவா அடங்கி.
சட்டென்று நிறுத்தினாள் தெரசா. கல்லறை வளாகத்தில் அவர்களை அடக்க அவள் உத்தேசிக்கவில்லை. வேறே மதம். உயிரோடு இருக்கப்பட்டவர்கள் என்று இத்தனை பேர் நம்புகிறார்கள். அவர்களையும் சேர்த்து.
அதை ஏன் கேக்கறே போ சாரதே. உங்க சத்சங்கம், அதான் ஏதோ லோகத்திலே இருக்கப்பட்ட கிறிஸ்தியானிகள் எல்லாம் உங்க ஊர்லே கூடிக்காழ்ச்ச நடத்த வந்தபோது உன்னோட ரெண்டு சிநேகிதிகள் அமெரிக்கை தேசத்திலே இருந்து வந்திருந்தாளே. ஓர்மை இருக்கோ?
தெரிசாவுக்கு எப்படி மறக்கும்? அதுவும் எடின்பரோவில் ஒரு ராத்திரி நேரம் பிசாசுகளைக் காண்பித்துக் கொடுக்கிற வயசனோடு நடந்தபோது அந்த சிநேகிதிகளுக்கு அனுபவபட்டது. பர்வதம் அவர்களோடு பேசினாளில்லையோ.
ஆமா, அந்த ரெண்டு ஸ்திரிகளும் அவங்க ஊருக்குத் திரும்பினதும் உங்க தேசத்து ராஜாவுக்கோ ராணிக்கோ இந்த ஏழைப்பட்ட இந்திய ஸ்திரியும், பெண்குழந்தையும் இருக்கற ஸ்திதியைப் பற்றி மனுப் போட்டாளாம். லண்டன் பட்டணத்து அரண்மனையிலே அந்த காகிதத்தை குப்பைக்கூடையிலே யாரோ சிப்பந்தி விட்டெறிஞ்சு அவன் பாட்டுலே மத்யலகரி ஏத்திக்கப் போய்ட்டானாம்.
தெரிசாவுக்கு இதெல்லாம் தெரியாத விஷயம். பகவதிக்குப் புரியாததும் கூட.
மனுப்போட்டு ஒண்ணும் ஆகப் போறதில்லேன்னு நிச்சயம் ஆனதும் அந்த அமெரிக்கையான ஸ்திரிகள் என்ன பண்ணினா தெரியுமோ? நீ கூட கொஞ்ச நாள் தங்கி இருந்து தீப்பிடிச்சு தெய்வாதீனமாப் பிழைச்சு வந்தியேடிம்மா. அது என்ன பேர், கில்மோர் தெருவோ என்னமோ. அங்கே கன்யாமாட ஸ்திரிகளுக்கு எழுதிப் போட்டிருக்கா. கிறிஸ்தியானியிலேயே ஏகப்பட்ட பிரிவு இருக்காமே. ஆனாலும் சத்சங்கத்திலே சிநேகிதமாச்சாமே. உனக்குத் தெரியுமில்லையோ.
கொஞ்சம் தெரியும், மற்றது தெரியாது. தெரிசா அமைதியாக ஜெபமாலை உருட்டிக் கொண்டிருந்தாள்.
அந்த கன்யாஸ்திரிகள் சாஸ்தாப்ரீதி தோதிலே கிறிஸ்துபகவான் ப்ரீதியோ ஏதோ நடத்த ஸ்ரமிச்சிருக்கா. உசிரோட இருக்கப்பட்டவாச்சே. ப்ரீதிப்படுத்தி சாந்தியாக்க என்னைப்போல் உசிர் போனவா இல்லையே. என்ன ஆச்சோ, உன் கிட்டே பர்வதமும் குஞ்ஞம்மிணியும் அப்புறம் நெருங்கவே முடியாம தடசமாயிடுத்து. யாரையும் குத்தம் சொல்ல மாட்டேன் நான். நல்ல நோக்கத்திலே பண்ணினது. தாறுமாறாயிடுத்துன்னா யார் என்ன பண்ண முடியும் சொல்லு.
தெரிசா நாலைந்து வருஷமாக அம்பலப்புழைக் குடும்பத்தை சந்திக்க முடியாமல் போனதுக்கான காரணம் இதுதான் என்று மனதில் பட்டதை யோசித்தபடி இருந்தாள். இந்தக் குடும்பத்துக்கு இனியும் என்ன உதவி செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
புரியாவிட்டாலும் பகவதிக்கு விசாலம் மன்னி படும் கஷ்டம், அவள் பிள்ளையும் குடும்பமும் படும் கஷ்டம் எல்லாம் மனசை இன்னும் அதிகம் விசனப்பட வைத்தது.
மற்ற எதுவும் செய்யாவிட்டாலும் விசாலம் அத்தையின் அஸ்தி மட்டும் எப்படியாவது பட்டணத்தில் கோர்ட் உத்தியோகஸ்தன் யாரோ சொன்னாளே அவனிடம் இருந்து கிடைத்தால் அவள் கங்கையில் கரைத்துக் கரையேற்றுவாள்.
அம்மா போன்ற, பெற்றவளை விடவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கப்பட்ட ஸ்திரிக்குச் செய்து தீரவேண்டிய அவளுடைய கடமை அதாச்சே.
‘மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு. அத்தையும் மருமகளும் நல்ல பகல் உறக்கத்திலேயா இருக்கீங்க?’
கதவைத் திறந்து வந்த வேதையன் சொன்னான். விசாலம் கலைந்து போயிருந்தாள்.
(தொடரும்)
- கணிப்பொறியும் இணையத்தமிழும்
- தமிழில் முதல் அணுசக்தி நூல்
- இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்
- ”பருத்திக்காடு” – நூல் வெளியீடு
- தமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு
- இவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்
- ராமானுஜ காவியத்தில் சமயப்பதிவுகள்
- மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4
- வாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)
- அதிகமாகும்போது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)
- ஆணவம் கொண்டோர்.
- பேப்பர்காரன்
- அன்று அவ்வெண்ணிலவில்
- ஒற்றைக்கால் இரவு!
- சின்னப்பயல் கவிதைகள்
- ச. மணி ராமலிங்கம் கவிதைகள்
- சமைததெடுத்த மெல்லிய இரவுகள்
- நின்றாடும் மழை நாள்
- பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..
- ‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)
- சீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)
- (65) – நினைவுகளின் சுவட்டில்
- ராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா
- தருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்
- ஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று
- உள்ளபடி
- கற்பது.. கட்டுக்கள்.. இருகவிதைகள்
- உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011
- கை
- நமீதாவூம் கம்ப்யூட்டரும்
- புதிர்
- சாளரம் திறக்கையில்..
- சிறு வாழ்வு சிறு பயணம்
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- வரையறுக்கிற மனம் -2
- நிழல் மோனம் ..
- கண்ணாடி உலகம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl