கண்ணாடி உலகம்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

தேனு


விழுதுகள் நிறைந்து வழியும் அந்த ஒற்றை மரத்தின் அழகினை நீண்டிருக்கும் எங்கள் மாடி மீது அமர்ந்து ரசிப்பது கொள்ளை விருப்பம் எனக்கு. அதுவே என் வாடிக்கையாகவும் ஆகிப் போனது. என்னோடு வா என்றபடி என்னை அடிக்கடி அழைத்து செல்ல வரும் என் வெளிநாட்டு அத்தையிடம் மறுப்புகளை மட்டுமே பதிலாய் வைத்துவிட்டு பாட்டியுடனே அந்த விழுதுகளை ரசித்தபடி வாழத்தான் எனக்கு விருப்பம். நிதமும் என்னைத் தலைகோதி உறங்க வைக்க வெவ்வேறு வித கதைசொல்லியாகவே மாறிவிடுவாள் பாட்டி.

அப்படித்தான் ஒரு ராஜகுமாரி கதை கேட்கையில் என் அடிவயிறு வலிக்க ஆரம்பித்தது, எதையெதையோ சோதித்துவிட்டு என் பாட்டி என்னதான் பக்குவப்பட்டிருந்தாலும் சிறிது பதற்றத்துடன் தான் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தாள். தனியாக முடியாது என்று என் அத்தைக்கும் அழைப்பு விடுத்தாகி விட்டது. வந்திறங்கிய என் அத்தையைக் கண்டதிலிருந்து என் பாட்டிக்கு மிகுந்த மகிழ்ச்சியாகிப் போனது, “கல்யாணி – கல்யாணி” என வீடெங்கும் அத்தையின் பெயராகவே ஒலித்துக் கொண்டிருந்தது சில நாட்களாய். அத்தையுடன் வந்திறங்கிய மதனும் என்னையே சுற்றி சுற்றி வந்தான் தன் அம்மா இல்லா தருணங்களில் என்னைப் பார்த்து விஷமமாய் கண்ணடிப்பான். ஒரு நாள் இரவில் ஏதோ ஊர்வதைப் போல் உணர்ந்தெழுந்த நான் என் முகத்தைக் கண்டவாறே மதன் அமர்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். நான் எழுந்ததைக் கண்டவுடன் என் வாயைப் பொத்தி கத்தாதே என்று கண்களாலேயே மிரட்டி வைத்தான். ஏனோ அவன் அணிவித்த சங்கிலி கழுத்தில் கம்பளிபூச்சியென ஊர்வதாய் உணர்ந்தும் அவன் மிரட்டலுக்காகவே அதைக் கழட்டாமலேயே வைத்திருந்தேன். அத்தை கிளம்பும் நாளும் வந்தது ஒரு சில தினங்களில், நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் என்னைத் தனிமையில் சந்தித்து நிச்சயமாகத் திரும்பி வருவேன் என்று மிரட்டி ஒரு வில்லச்சிரிப்பும் விடுத்துத்தான் கிளம்பினான் மதன். அத்தையும் மதனும் கிளம்பிய உடனே சங்கிலியை உறுத்துகிறதென பாட்டியிடம் கழட்டிக் கொடுத்துவிட்டேன்.

அன்றொரு நாள் ராஜகுமாரியைக் கடத்திப் போகும் அரக்கனைப் பற்றிய கதை சொல்லிக் கொண்டிருந்தாள் பாட்டி, என்றுமல்லாது அன்று மிகவும் குரூரமாகவே வர்ணித்தாள் அந்த ஒற்றைக் கண் அரக்கனை. அது மட்டுமல்லாது அவன் உயிர் ஏதோ பல கடல் தாண்டி ஏதோ ஒரு கூட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் எனவும் அவனை எதுவும் எதிர்க்க முடியாது எனவும் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவள் தூங்கியும் போனாள். அடுத்த நாள் எழவே இல்லை, பக்கத்து வீட்டிலிருந்து வந்தவர்கள் சில கண்ணீர்த்துளிகளைச் சிந்திவிட்டு என் அத்தைக்கென தாமதிக்க வேண்டாமெனவும் உடனடியாக செய்வதைச் செய்யலாம் எனவும் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஓரளவு புரிந்துதான் இருந்தது, இருந்தும் மனமெங்கும் அவளாகவே நிறைந்திருந்தாள். பாட்டியை என்னிடம் இருந்து பிரித்த அடுத்த சில தினங்களாய் அந்த மாடியில் விழுதுகளையே கண்டவண்ணம் அமர்ந்திருந்தேன், பக்கத்து வீட்டு மாமியும் வந்து சாப்பிடச் சொல்லி கெஞ்ச ஓரிரு வாய் சாப்பிட்டு விட்டு மீண்டும் விழுதுகளையே பார்த்திருந்தேன். அவ்விழுதுகள் ஒவ்வொன்றும் பாட்டி சொன்ன ஒவ்வொரு கதையை நினைவுபடுத்த அந்த இடமே எனக்கு எல்லாமாகிப் போனது.

பாட்டி போலவே என்னைக் கவனித்துக் கொள்கிறாள் என் அத்தை. தினமும் ஒரு கதைசொல்லி, என் தலைகோதி தூங்க வைக்கிறாள். இருந்தும் அந்த விழுதுகள் மட்டும் என் கனவில் அடிக்கடி வந்து போகிறது. என்னுள் எல்லாமாய் நிறைந்து போயிருக்கும் விழுதுகள் என்னைக் கண்டு அழுவது போலவும் உணர்கிறேன் தினமும் இரவினில், அழுகைகள் அதிகமாகும் இரவுகளில் என் அத்தை கைகளைப் பற்றிக்கொண்டு உறங்கி விடுகிறேன். எங்கு தேடியும் அந்த விழுதுகள் போல இங்கே எதையுமே காண முடிகிறதில்லை. மதன் வர வர என்னைக் காணும்போதெல்லாம் உதட்டைக் கடித்து ஒரு விதமாய் புருவங்களைக் குறுக்குகிறான். அவன் கண்ணடிக்கும் போதெல்லாம் அந்த ஒற்றைக் கண் அரக்கன் நினைவிற்கு வந்து கண்களில் ஒருவித குரூரத்துடன் சிரிக்கிறான்.

– தேனு

Series Navigation

author

தேனு

தேனு

Similar Posts