இரா.முருகன்
1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு
கண்ணூர் என்றால் என்ன, காசர்கோடு என்றால் என்ன, குட்டநாட்டில் ஆலப்புழை, அம்பலப்புழை என்றால் என்ன? சகலரின் மனதிலும் ஒளிந்தும் தெரிந்தும் பொங்கி வரும் குளிர்ச்சி எல்லாம் குவிந்த மாதிரி இதமும் கும்மாளம் இட்டுப் போகிற வெள்ளப் போக்குமாக இந்த மலையாளக் கரை முழுக்க தண்ணீருக்கு என்றைக்குத்தான் பஞ்சம்?
பகவதி ஆசை தீர கிணற்றடி வாய்க்காலில் சேர்ந்து பிரவகித்து வீட்டை ஒட்டிக் குளிமுறியில் சுழித்தும் நுரைத்தும் அலையடிக்கிற நீர்ப் பிரவாகத்தில் ஆனந்தமாகக் குளித்தாள்.
அவள் பார்வைக்கு எட்டாத தூரத்தில் துர்க்கா பட்டன் அரசூர் அரண்மனை ஜோசியர் வடித்து நிறுத்தின யந்திரம் போல் ஆழக் கிணற்றில் இருந்து ஜலம் இறைத்து வாய்க்காலில் வட்டித்தபடி இருந்தான். அவன் பாடுகிற கொங்கணிப் பாட்டு சத்தம் மெலிசான இழையாக குளிமுறி வரை அவ்வப்போது கேட்டது.
மரத்தில் குயில் விடாமல் பகவதி குட்டி குளிக்கிறியாடீ என்று விசாரித்த சத்தத்தில் பட்டன் பாட்டு போன இடம் தெரியவில்லை. ஆமா, குளிக்கறேன். வந்து பாரு நீ வேணும்னா. உனக்கும் அவருக்கும் லஜ்ஜைன்னா என்னன்னு தெரியுமோ?
பகவதி ஒரு கைப்பிடி தண்ணீரை விசிறி எங்கே என்று இலக்கு வைக்காமல் மேலே எறிந்து சிரிக்க அது அவள் மேலேயே முழுக்க வழிந்தது.
சீக்கிரம் குளித்து முடிக்க வேண்டும். இல்லையோ, மஞ்சள் வாசனை பிடிக்க சங்கரன் குளிமுறியின் கோடிக்குக் குடியேறி விடுவான்.
போங்கோ, பொம்மனாட்டி குளிக்கற இடத்திலே என்ன வேலை உங்களுக்கு?
இன்னொரு கைப்பிடி தண்ணீர் வெள்ளிச் சிதறலாக மேலே எழும்பி தலை நனைக்க, பகவதி உடுப்பு ஈரத்தில் படாமல் உடுபாவாடையும் மேலே கிறிஸ்தியானி குப்பாயமும், சேர்த்துப் போர்த்தின மேல் தோர்த்தும், தலைமுடியை அணைத்துக் கட்டிய நேரியலுமாக பின் வழியாக மாடிக்கு நுழைந்தாள்.
தெரிசா மண்டியிட்டு கையில் ஜபமாலை உருட்டியபடி பிரார்த்தனையில் மூழ்கி இருந்தாள். பகவதிக்கு பிரியமான காரியத்தை அவளுக்குப் பிரியமான கிட்டாவண்ணாவின் பெண் சாரதை ஆழ்ந்த சிரத்தையோடு செய்கிறது மனதுக்கு இதமாக இருந்தது. இதுவே அம்பலப்புழை கிருஷ்ணன் அம்பலம், இவள் அங்கே சீவேலி முடிந்து தொழுது நிற்கிறாள். நாமம் சொல்கிறாள். இங்கிலீஷில்.
எந்த தெய்வம் ஆனால் என்ன? அவளையும் பகவதியையும் மீண்டும் சேர்த்து வைத்த அந்தக் கடவுளுக்கு, அது பெண்ணோ, ஆணோ, அலியோ, மிருகமோ, எல்லாமோ, அந்த இருப்புக்கு அவளும் ஒரு வினாடி கைகுவித்து சேவித்தாள். நிலத்தில் விழுந்து நமஸ்கரித்தாள்.
அவள் பெட்டியைத் திறந்து மாம்பழப் பட்டுப் புடவையை உடுத்திக் கொள்ள எடுக்கும்போது தெரிசா பிரார்த்தனை முடிந்து ஜபமாலையை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு எழுந்திருந்தாள்.
அத்தை, ஒரு நாள் நான் எனக்கு உங்க புடவையைக் கட்டி விடறேளா?
பகவதி அவள் உச்சந்தலையில் முத்தினாள்.
உனக்கு இல்லாத புடவையாடி ராஜாத்தி? எந்த நிறம் பிடிக்கும் சொல்லு. இந்தக் கிளிப்பச்சை? புத்தம்புதுசு. பாந்தமா இருக்கும் உனக்கு.
மேலே போட்டுக்க ரவிக்கை இல்லியே அத்தை.
ஒரு விசாரமும் வேண்டாம்டீ குழந்தே. என்னுதே உனக்கு அளவெடுத்து தைச்ச மாதிரி கச்சிதமா இருக்கும். நீ வேணா பாரு.
இருந்தது. தெரிசா புடவை, ரவிக்கையில் மகாலக்ஷ்மி போல இருந்தாள். மீனாட்சியம்மன் குங்குமம் தொட்டு நெற்றியில் ஒரு திலகம் மட்டும் வைத்திருந்தால் இன்னும் களையாக இருந்திருக்கும். போறது போ.
அத்தை, நீங்க என் சீமைக் குப்பாயத்தை மாட்டிப் பார்த்துண்டா என்ன? ஏக அமர்க்களமா இருக்கும்.
தெரிசா கண்ணில் குறும்பு தெரிக்க, ஓடத் தயாராகப் போக்குக் காட்டியபடி வாசல் பக்கம் ஒரு காலும் உள்ளே மற்றதுமாக நிலைப்படியில் நின்றாள்.
பச்சைக் குழந்தையாட்டமா என்னைக் களியாக்காதேடீ சாரதே. என் கல்யாணத்தும்போது லட்டு உருண்டையோட ஓடின களியெல்லாம் மறந்து போகலியா இன்னும்?
பகவதி அவளைச் செல்லமாக அடிக்கக் கை ஓங்கியபடி ரெண்டு எட்டு ஓடி தலை சுற்ற சுவரைப் பிடித்துக் கொண்டாள்.
பதுக்கெ, பதுக்கெ.
அவளை ஆதரவாகத் தாங்கி மாடிப்படி இறங்கி தெரிசா கீழே வந்தாள்.
‘மேசையில் உட்கார்ந்து மதாம்மா ஊணு கழிக்கும் இல்லியா?
பட்டன் தெரிசாவைக் கேட்டான். அது ஒண்ணும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு தரையில் கால் மடித்து உட்கார்ந்தாள் தெரிசா. நிறைய இடம் விட்டு இன்னொரு இலை போட்டு அதுக்கு முன்னால் ஒரு மனையும் போட்டான் துர்க்கா பட்டன்.
அம்மா, நீங்க வரலாமா?
பகவதியைப் பார்த்துக் கேட்டான் அவன்.
இம்புட்டு இடம் என்னத்துக்கு நடுவிலே? நீயும் வேதையனும் சமாராதனை முடிஞ்ச மாதிரி படுத்து உருளப் போறேளா?
பகவதி இலையையும் மனையையும் கையில் எடுத்து வந்து தெரிசாவின் தோளில் இடிக்கிற மாதிரி நெருக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
என் பிள்ளையாண்டன் எங்கேடா துர்க்கா?
மருதையனை அவள் கண்கள் தேடின.
யாரு பிரின்சிபால் சாரா? அவர் காலையிலே பிராதல் கழிச்சு ஒண்ணு கெறங்கிட்டு வரேன்னு போனவர் தான் இன்னும் காணலே.
பட்டன் ரெண்டு இலையிலும் சோறும் கறியும் இதர விபவங்களும் விளம்பிக் கொண்டே சொன்னான்.
பரிபூரணம் கல்சட்டியில் கொதிக்கக் கொதிக்க புளிக்குழம்பை பிடிதுணி சுற்றித் தூக்கிக் கொண்டு சமையல்கட்டிலிருந்து வந்தாள்.
பரி, போதும். இப்படி ஒரே நாள்லே உடம்பு சக்தி எல்லாத்தையும் சமையல்லே செலவழிச்சுடாதே. கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளையும் சம்பந்திகளும் வந்து இறங்கினா விதவிதமா செஞ்சு போடணும். அதுக்கு உடம்பு ஒத்துழைக்கணும்.
பகவதி சொல்லியபடி பரிபூரணம் பரிமாறினதை ருசித்துச் சாப்பிட்டாள். அவளிடம் சொல்லி விடலாமா என்று பரிபூரணத்துக்கு ஒரு மனது.
என்னதான் அத்தை சொன்னாலும் அவளுக்கு தானே சமைத்து பகவதிக்கு உண்ணக் கொடுக்க மனசு ஒப்பாமல் துர்க்கா பட்டனை விடிகாலையிலேயே எழுப்பி எல்லாப் பதார்த்தமும் அவனைக் கொண்டு உண்டாக்கி வைத்திருந்தாள்.
இப்போது அதையெல்லாம் சூடாக்கி பரிமாறுகிறது மட்டும் தான் அவள் செய்கிறது.
அத்தை சந்தோஷத்தைக் கெடுக்க வேணாம் என்று அவள் தீர்மானித்து ஒன்றும் பேசாமல் சிரித்தபடி வாழை உப்பேறி எடுக்க திரும்ப சமையலறைக்கு நடந்தாள்.
அத்தை, இங்கே வேறே யாரோ இருக்கற மாதிரி இல்லே?
திடீரென்று தெரிசா கேட்டாள். அவள் நெற்றியில் வியர்க்க ஆரம்பித்திருந்ததை பகவதி கவனித்தாள். பயந்திருக்காளா குழந்தை?
நம்மளைத் தவிர யாருமே இல்லியேம்மா. பரிபூரணம் உள்ளே போயிருக்கா. பட்டன் தோட்டத்துலே தண்ணி எறச்சு ஊத்திண்டு இருக்கான்.
இல்லே அத்தே, சுவர் ஓரமா யாரோ. ரொம்ப வாத்சல்யமா பார்த்துண்டு உங்க மாதிரியே ஆனா இன்னும் வயசாகி. எங்கேயோ பார்த்திருக்கேன். அது அது.
தெரிசா சாப்பிட மறந்தவளாக எதிர்ச் சுவரையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
உனக்கு இன்னும் சமுத்திர வழியா வந்த யாத்ரையோட க்ஷீணம் மாறலேடி குழந்தே. சாப்பிட்டு விச்ராந்தியா சித்த நாழி படுத்து உறங்கு. தீர்ச்சையா மாறும்.
பகவதி தரையில் கையை ஊன்றி சற்று சிரமத்தோடு எழுந்தாள்.
கையலம்பப் போகட்டாடீ சாரதே? நீ மெல்லச் சாப்பிட்டு முடிச்சுட்டு வா. ஆகாரம் வேண்டாம்னு ஒதுக்கிடாதே. உனக்குத் தெரியாததில்லே.
இல்லே அத்தை. போதும். நானும் எந்திருக்கறேன்.
பாதி சாப்பாட்டில் தெரிசாவும் எழுந்து விட்டாள்.
பிடிக்கலியா தெரிசா?
பரிபூரணம் கேட்டபோது அவள் அவசரமாக மறுத்து ஆகாரம் உள்ளே எறங்க மாட்டேங்கறது மன்னிம்மா என்று சொல்லியபடி கை அலம்பப் போனாள்.
அவளுக்கு முன்னால் மாடி ஏறி இருந்த பகவதி ஒரு வினாடி ஆச்சரியப்பட்டு நின்றாள். அதெப்படி சாரதை அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அங்கே உட்கார்ந்திருக்கிறாள்? அவள் உடுத்தி விட்ட புடவை கூட நிறம் மாறி, இன்னும் பிரகாசமான வர்ணத்தில் மனதுக்கு நிறைவாக. அந்த புடவையில் இருந்து வருகிற வாடை, பகவதி நினைவு மறந்து போன அம்மாவின் தேக வாடையா?
சாரதே, நீ நீ சாப்பிட்டு முடிச்சுட்டியா? எப்போ?
என் பொன்னு பகவதிக் குட்டி. நான் சாரதை இல்லே. உன்னோட ஸ்வந்தம் விசாலாட்சி மன்னி.
திரும்பிப் பார்த்து சிநேகமாகச் சிரிக்கிற விசாலாட்சி மன்னி. தான் ஸ்வப்ன லோகத்தில் இருக்கிறோமா இல்லை இதெல்லாம் நிஜமாகவே நடந்து கழிந்து கொண்டிருக்கிறதா என்று பகவதிக்குத் தெரியவில்லை.
சந்தோஷமும் பயமுமாக மனதில் மாறி மாறி வருகிறது. விசாலாட்சி மன்னி, இப்போ இங்கே எப்படி? உயிரோடு இருந்தாலும் தொண்ணூறு வயசாவது காணுமே. அன்னிக்குக் கண்ட கோலத்தில் அழியாத யௌவனத்தோடு எப்படி?
தெரிசா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்ததும் சத்தம் கிளப்பாமல் பகவதியின் தோளைப் பிடித்துக் கொண்டு அவள் அருகே அமர்ந்ததும் பகவதிக்கு மனதில் போதமானது.
அவளுக்கும் அர்த்தமானதோ எல்லாம். இல்லை, பகவதி போல் அவளும் கனவுக்கும் நினைவுக்கும் நடுவே அல்லாடிக் கொண்டிருக்கிறாளோ?
விசாலம் மன்னிடீ சாரதே. இங்கே வந்திருக்காடி மன்னி. தெரிஞ்சுதா? விசாலி மன்னி வந்திருக்கா. நம்ம விசாலாட்சி மன்னி. குப்புசாமி அண்ணா ஆத்துக்காரி. வந்திருக்கா. அண்ணா சௌக்கியமா மன்னி? ஏன் இத்தனை வருஷமா பார்க்க வராம? அவர் மட்டும் இருந்தா எவ்வளவு சந்தோஷப் படுவார் தெரியுமா? சாரதே, நமஸ்காரம் பண்ணுடி மன்னிக்கு. நம்ம கிட்டாவண்ணா பொண்ணு மன்னி. எவ்வளவு பெரியவளா வளர்ந்துட்டா பார்த்தேளா? ஆசீர்வாதம் பண்ணுங்கோ.
பகவதி உரக்க முணுமுணுத்தாள். தெரிசாவுக்குச் சொல்வதை விட விசாலாட்சி மன்னி என்று மனதில் பட்ட வடிவத்தோடு பேசுவதை விட தனக்குத் தானே உறைப்பு வருத்த அவள் விடாமல் தணிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.
மன்னி நான் சாப்பிட்டுண்டு இருக்கறபோதே வந்தாச்சு.
தெரிசா பகவதி காதில் சொன்னாள்.
அய்யோ, அதுக்காக பாதியிலே எழுந்திருக்கணுமா? ஆகாரத்தை வீணாக்கலாமாடி என் தங்கம்?
வேண்டியிருக்கலே விசாலம் அத்தை.
தெரிசா தன்னையறியாமல் மாரில் குரிசு வரைந்தபடி சொன்னாள்.
குட்டியம்மிணிக்கு சாதம் போடறியா குழந்தே? பாவம் கொச்சு பெண்குட்டி. அவளும் பர்வதமும் இன்னும் அலைஞ்சுண்டு தான் இருக்கா.
விசாலம் விம்மும் சத்தம் தெரிசாவுக்கும் பகவதிக்கும் நெஞ்சுக்குள் கேட்டது.
(தொடரும்)
- நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)
- பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை
- கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
- புள்ளிகளும் கோடுகளும்.
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- மரத்தின் கௌரவம்
- இரண்டு கவிதைகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு
- மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3
- அதையும் தா
- அப்பாவின் வாசம்
- அதிகமாகும்போது
- நினைவுகள்
- பெண்ணே நீ …..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)
- ‘மம்மி’ தாலாட்டு!
- மீள்தலின் இருப்பு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)
- தாங்கல்
- செம்மொழித் தமிழின் தனித்தன்மை
- ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை
- “நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்
- கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4
- மரம் மறப்பதில்லை
- யட்சியின் குரல்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)
- வெளியேறுதலுக்குப் பின்
- ப.மதியழகன் கவிதைகள்
- பதிவிறக்கக் கனவு
- சாளரங்கள்
- வெயில் நிலவு!
- அவள் நிறையும் கிறுக்கல்கள்
- அவள்
- முடிச்சு
- விடுபட்டவை
- இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]
- சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்
- கொள்ளை..