விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

இரா.முருகன்


1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு

என்ன எதுக்கு என்று சொல்லாமல் அழுகிற குழந்தை போல் வானம் பொத்துக் கொண்டு ஊற்றிய சாயந்திர நேரம். கண்ணூரில், ஏன், மலையாள பூமி முழுக்கவே விருச்சிக மாசத்தில் இப்படி மழை பெய்கிற வழக்கம் இல்லை என்று பகவதிக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும்.

விருச்சிகத்திலும் கர்க்கடகம் போல் மழை வர்ஷிக்கலாம்னு இன்னொரு அனுபவத்தைக் கூட்டிச் சேர்த்துக்கோ

சங்கரன் பகவதி தோளில் தட்டிச் சிரித்தான். அவன் இன்னும் பக்கத்திலேயே இருப்பதாக பகவதி உணர்வதும் அனுபவ பூர்வமாகத்தான். அவளுக்குத் தெரிந்தது அத்தனை பேருக்கும் தெரிந்திருக்க வேணும் என்று கட்டாயமா என்ன?

காலையில் ரயிலை விட்டு இறங்கி, துர்க்கா பட்டன் அவளையும் மருதையனையும் பத்திரமாக வேதையன் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டான். அவர்கள் வந்த மோட்டார் வழியில் நாலு இடத்தில் நின்று போய் துர்க்கா பட்டனும், மருதையனும் வண்டி தள்ள வேண்டிப் போனது தவிர வேறே புத்திமுட்டில்லை.

பட்டரே, இப்படியே போகிற இடம் வரைக்கும் தள்ளிக்கிட்டே போயிடுவோமே. உடம்பு இளைக்க கசரத்து செய்த மாதிரி எனக்கும் இருக்கும். உமக்கும் கொஞ்சம் ஊளைச்சதை கரையும். என்ன சொல்றீர்?

மருதையன் துர்க்கா பட்டனை வம்புக்கிழுக்க மறக்கவில்லை.

அது ஒண்ணும் இல்லே மாஷே. உம்ம மாதிரி பிரமுகர்கள் ஏறிண்ட பெருமையிலே அடிக்கடி இந்த மோட்டார் இது நிஜமா பிரமையான்னு நிலைச்சுப் போயிடறது.

இது எதுவும் என்னை பாதிக்கலையாக்கும் என்கிறது போல் நேர் பார்வை பார்த்துக் கொண்டு தரக்கன் வண்டியை ஓட்டித்துப் போய் ஒரு வழியாக வேதையன் வீட்டுத் தெருவில் வளைத்துத் திருப்பினான்.

முண்டும் கச்சுமாக வாழைக்குலையும் குடத்தில் தண்ணீரும் எடுத்து வந்து கொண்டிருந்த சின்ன வயசுப் பெண்கள் கூட்டம் தரக்கன் வண்டியின் ஹாரனை அடிக்கும்போதெல்லாம் உரக்கச் சிரித்தபடி கடந்து போனது. பகவதி அம்மாள் பக்கத்தில் இல்லாவிட்டால் அதைக் கட்டாயம் மருதையன் ரசித்திருப்பான்.

இதுகளுக்கு என்னமா ஒரு சிரியும் கொம்மாளியும் பாரு.

பகவதி சொல்லும் போதே அவளும் நாணிக்குட்டியும் அம்பலப்புழையில் இந்த வயசில் சேர்ந்து திரிந்த, இதே தரத்தில் சந்தோஷமாகப் பறந்த நாட்கள் நினைவில் வந்து போய்க் கொண்டே இருந்தன.

வாசலில் கார் நின்று பகவதி இறங்கியதுமே, அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த வேதையனும் பரிபூரணமும் அவள் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள்.

பரிபூரணம் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்த சிலுவையை ஒரு தடவை ஆதரவாக முத்தம் கொடுத்தபடி கண்ணில் ஒற்றிக் கொண்டாள். பகவதி அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

என் கண்ணே, உனக்கே இப்பத்தான் கல்யாணப் பிராயம் வந்த மாதிரி இருக்கு. விடிஞ்சா உன் குழந்தைக்குக் கல்யாணம். காலம் எத்தனை வேகமாப் பறக்கறது.

அத்தை, இவ ஏற்கனவே எனக்கும் சேர்த்து சதை போட்டிருக்கா. நீங்க சொன்னதைக் கேட்ட சந்தோஷத்திலே இன்னும் ஊதிட்டா, ஆலப்பாட்டுத் தாத்தன் மாதிரி பறக்கவே ஆரம்பிச்சுடுவா.

வேதையன் சிரிக்காமல் சொன்னான். பகவதி அவனை செல்லமாக கன்னத்தில் அடித்தாள்.

அட போடா அசடே உனக்கு ஆலப்பாட்டு வயசரையும் தெரியாது ஆத்துக்காரி சௌந்தர்யமும் கண்ணுலே படாது.

வயசன் எப்போ காலமானார்? சிநேகா மன்னி அப்போ எங்கே இருந்தாள்? பகவதி எத்தனை யோசித்துப் பார்த்தும் நினைவு வரவில்லை.

அத்தை நீங்க தங்க தனியா ஜாகை ஏற்பாடு செஞ்சு வச்சிருக்கேன்.

வேதையன் அவளுடைய படுக்கை சஞ்சியைத் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தபடி சொன்னான்.

எதுக்குடா? இங்கேயே தங்கிக்கறேனே. நீங்க குடித்தனம் நடத்தற அழகை ஆற அமர இன்னிக்கு முழுக்கப் பார்த்துண்டு இருக்கலாமே.

நல்லா சொல்லுங்க அத்தை. நான் அப்போ பிடிச்சு நீங்க இங்கே தான் இருக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். உங்களுக்காக மாடியிலே இடம் கூட விருத்தியாக்கி கட்டில், கிருஷ்ணன் சாமி படம், வீபுதி, குங்குமம் எல்லாம் மேடிச்சு வச்சிருக்கு. நான் உண்டாக்கற பட்சணம் கழிக்க முடியாதுன்னா குழப்பம் ஒண்ணுமில்லே. துர்க்கா பட்டனை விட்டு பாகம் பண்ணித் தரச் சொல்லி இருக்கேன். இத்தனை செஞ்சும் இவரானா உங்களுக்குத் தனி ஜாகை வேணும்னு பிடிவாசியோட ஏற்பாடு செய்து வச்சிருக்கார்.

பரிபூரணம் நீளமாகப் பேசி நிறுத்தினாள். புகார் மாதிரியும் இருந்தது, அன்போடு வைக்கிற கோரிக்கை மாதிரியும் இருந்தது அது.

ஏண்டி அசடே, நீ பாகம் பண்ணின சாதம் நய்யும் சம்பாரமும் குத்தி நான் சாப்பிட மாட்டேன்னு என்னிக்காவது சொல்லியிருக்கேனா? ஆனா மூணு வேளையும் சாதம் போட்டுடாதேடீயம்மா. சாயந்திரம் நல்லா மொறுமொறுன்னு தோசை வார்த்துடு.

பரிபூரணம் முகத்தில் சந்தோஷம் பரிபூரணமாகப் படர, அவளை முந்திக் கொண்டு வீட்டு மாடிக்குப் படியேறிக் கொண்டிருந்தாள் பகவதி. வயசு காரணமாக வரும் ஆயாசமும் அயர்ச்சியும் போன இடம் தெரியவில்லை.

இது அவளோட வீடாக்கும். அண்ணா கிட்டாவய்யன் மேல் மச்சில் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கான்.

அண்ணா, சௌக்கியமா இருக்கேளா? சினேகா மன்னி எங்கே? அம்பலத்துக்குப் போயிட்டாளா? கொஞ்சம் நின்னிருந்தா நானும் வந்திருப்பேனே.

மாடிப்படியின் கோடியில் அவள் நின்று உள்ளே விசாலமான மாடியறையை நோட்டமிட்டாள்.

கட்டில் ஒன்று நட்ட நடுவே கிடந்தது. வெளுத்த படுக்கை விரிப்பில் தாமரைப்பூ அடுக்கடுக்காக விரிந்து கட்டிலைச் சுற்றி நாலு பக்கமும் வழிந்தது.

அந்த இடம் முழுக்க வெள்ளைக்கார வாடை. அவளுக்குத் தெரியும். எப்படி என்றால் சொல்ல முடியாது.

சங்கரன் கப்பலில் பிறந்த மேனிக்கு வெள்ளைக்காரிகளோடு கிடந்ததை அணுஅணுவாக விவரித்துச் சொல்லி அந்த வாடை சகிக்கவொண்ணாமல் இன்னும் மூக்கில் குத்துகிறது. அவனோடு பிணங்கியும் பிணைந்தும் கிடந்த போதெல்லாம் அந்த வாடை அவளைச் சுற்றி சூழ்ந்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.

சங்கரன் தப்பு செய்ததாக ஒரு வினாடி தோன்ற வைத்து அப்புறம் அதை மறக்க வைத்து செப்பிடு வித்தை செய்து கொண்டிருந்த வாடை அது. அனுபவிக்காமலேயே அதை உணர்ந்திருந்தாள் பகவதி.

சங்கரனை எரிக்கத் தூக்கிப் போனபோது கடைத்தெரு பிரமுகர்கள் ஆளுயரத்துக்கு, ஆள் நீளத்துக்குச் சார்த்தின ரோஜாப்பூ மாலையின் சாவு வாடையை மீறி அந்த வெள்ளைக்காரி வாடை ஒரு வினாடி எட்டிப் பார்த்துத் துக்கம் விசாரித்துப் போனது.

அதற்கு அப்புறம் இத்தனை வருஷம் கழித்து இப்போது தான் அது திரும்பி இருக்கிறது.

கிடக்கையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வெள்ளைக்காரி யார்? எந்தக் கப்பலில் இருந்து வந்தவள்? இல்லை இன்னும் கப்பலில் தான் இருக்கிறாளா?

அப்போ, பகவதி எப்படி சமுத்திரத்துக்கு வந்தாள்? இது கண்ணூர் இல்லையோ? பையாம்பலம் மாயானம் பக்கத்தில் இரைகிற கடல் இங்கேயும் உண்டுதான். ஆனால் கப்பல் எல்லாம் வராதே.

பகவதிக்கு ஒண்ணும் புரியவில்லை. ஏதோ பிரமையாக இருக்கணும். அசதி அசதியாக ரயிலில் தூங்கிக் கொண்டு வந்தது இன்னும் மிச்சம் இருந்து கண்ணை மறைக்கிறது. நாசியையும் அது கட்டிப் போட்டு விட்டது. மாடியை விட்டு இறங்கி வெளியே காற்றோட்டமாக உட்கார்ந்தால் சரியாகி விடும்.

கிடக்கையில் மல்லாக்கப் படுத்து நித்திரை போயிருந்த வெள்ளைக்காரி அசைந்த மாதிரி தெரிந்தது. போர்த்தியிருந்த புதைப்புக்கு வெளியே வந்த கையில் ஒரு வளையல்.

இவள் என்ன மாதிரி மதாம்மை? மதாம்மையும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. அது என்ன வளை குலுங்குகிற சத்தமா?

பகவதி கதவுப் பக்கம் அவசரமாக நகர்ந்தபோது பின்னால் வெள்ளைக்காரி எழுந்து படுக்கையில் உட்கார்வது ஒரு வினாடி கண்ணில் பட்டது.

வேதையா, அனியா. ஆரு அவிடே?

பகவதிக்குப் பழக்கமான பாஷையில் உரக்க கூப்பிடுகிற மதாம்மை.

க்ஷமிக்கணும். தவறுதலா நான் இங்கே.

பகவதி பாதி திரும்பி அவளைப் பார்த்தும் பார்க்காமலும் முணுமுணுப்பாகச் சொன்னாள்.

அத்தை. பகவதி அத்தை. இது நான் தான் அத்தை.

அந்தப் பெண் ஓடி வந்து பகவதியை இறுகக் கட்டிக் கொண்டாள்.

என் குழந்தே, நீ சாரதை இல்லையோடி?

பகவதி வியப்பும் சந்தோஷமுமாக கண்ணை அகல விரித்தபடி அவளை இன்னொரு தடவை உடம்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டு உச்சந்தலையில் முத்தினாள்.

அண்ணா வேதையனின் மூத்த பெண்குட்டி. எத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவளைத் திரும்பப் பார்க்க வாய்த்திருக்கு. பகவதி கல்யாணத்தில் லட்டுருண்டையை சிற்றாடையில் மறைத்து வாசலுக்கு எடுத்துப் போனதற்காக அவளுடைய அம்மா சிநேகாம்பாள் கன்னம் சிவக்க விரலால் நிமிண்டி அழ வைத்த குட்டிப் பெண். இப்போ, இத்தனை வருஷம் கழித்து மதாம்மை போல் ஆகிருதியும், வனப்பும், உடுப்பும், இருப்பும்.

நன்னா இருக்கியாடி சாரதே?

தெரசாவுக்குக் கண்ணில் நீர் நிறைந்தது. அவளை சாரதா என்று கூப்பிட இன்னும் உலகத்தில் ஒரு சொந்தம் உண்டு. பகவதி அத்தைக்கு அவள் சாரதாவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். தெரிசாவாக இல்லாவிட்டால் ஒரு குறைச்சலும் இல்லை.

ஏண்டி குழந்தே தனியாவா இத்தனை தூரம் வந்தே? அகத்துக்காரர் வரல்லியா? எப்படி இருப்பார்னு பார்க்க கொள்ளை ஆசைடி அம்மா. உனக்கு எத்தனை குழந்தை குட்டி? அவர் என்ன உத்தியோகம் பார்க்கிறார்? கோர்ட்டு கச்சேரியா, நேவிகேஷன் கிளார்க்கா?

பகவதிக்குத் தெரிந்த உத்தியோக உலகத்தில் இதற்கு மேல் பதவிகள் இல்லை. கரண்டி பிடித்து ஊர் ஊராக கல்யாணத்துக்கும், அடியந்திரத்துக்கும் சோறும் கூட்டானும் அடைப் பிரதமனும் உண்டாக்கிக் கொடுக்க ஒரு கும்பல் இன்னும் இந்தப் பிரதேசங்களில் திரிந்து கொண்டிருக்கலாம். பகவதி வந்த பரம்பரை அது. ஆனால் அதை எல்லாம் உத்தியோகமாக எடுத்துக்க முடியாது அவளுக்கு.

அப்ப, புகையிலைக் கடை?

சங்கரன் அவள் தோளைத் தொட்டுத் திருப்பிக் கண்ணை ஊடுருவிப் பார்த்துக் கேட்டான்.

சித்தெ சும்மா இருக்கேளா? என் குழந்தை இத்தனை வருஷம் கழிச்சு வாய் நிறைய அத்தைன்னு கூப்பிட்டுண்டு வந்திருக்கா. அவளைக் கொஞ்சிட்டுத்தான் மத்த எல்லோரும். புகையிலைக் கடைக்காரா, போய்ட்டு மத்தியானம் வா.

அவளுக்கு உற்சாகம் பொங்கி வழிந்தது. தெரிசா இழுத்த இழுப்புக்குச் சின்னப் பெண் போல குதித்து ஓடி கூடவே அவளோடு கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

அத்தை நீங்க ஏன் இப்படி இளைச்சுப் போய்ட்டீங்க? அந்தக் கண்ணு மட்டும் இன்னும் அப்படியே சிரிக்கறது. அதுக்கு வயசாகாதா?

தெரிசா பகவதியின் இமைகளை நீவிக் கொண்டே அவள் தோளில் முகம் புதைத்தாள்.

நான் எப்பவும் இதைத்தானே சொல்றேன்.

சங்கரன் பகவதிக்கு முத்தம் கொடுக்க அடியெடுத்து வைத்தான்.

ஒரு லஜ்ஜையும் கிடையாதாடா புகையிலைக்காரா? குழந்தை வந்திருக்கான்னு சொல்றேன். கேட்டாத்தானே?

தெரிசா பகவதியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

அப்புறம் சொல்லுங்கோ அத்தை.

விட்ட இடத்திலிருந்து கதை சொல்லச் சொல்கிறாள். எத்தனை வருஷக் கதை பாக்கி இருக்கு.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts