விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

இரா.முருகன்


1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு

‘அம்மா, எந்திருங்க. கண்ணூர் வந்தாச்சு’.

மருதையன் எழுப்பினான்.

அசதியோடு கண் விழித்தாள் பகவதி. அவளுக்கு எழுந்திருக்கவே மனசு வரமாட்டேன் என்றது. இந்த ஐப்பசியில் அறுபது வயசை எட்டிய முத்தச்சி பகவதி இல்லை அவள். பச்சைப் பட்டுப் பாவாடையும் கரு நீல வண்ண ரவிக்கையும் தரித்தவள். தலை கொள்ளாமல் முல்லைப்பூவும் மல்லிப்பூவும் கலந்து நெருக்கமாகத் தொடுத்த சரம். மஞ்சள் தாவணியை இழுத்துச் செருகினது எடுப்பான மார்பை இன்னும் நிமிர்த்தி சவால் விட்டு நிற்கச் சொல்கிறது. காலில் சலங்கை பாதத்து மருதாணிச் சிவப்பை புதுப் பெண்டாட்டி போல் அடிக்கொரு தடவை வருடி வருடி ஆசையோடு விசாரித்துக் கொண்டிருக்கிறது.

விடிந்தால் அவளுக்குக் கல்யாணம். அரசூர்ச் சங்கரன் என்கிற பிள்ளையாண்டான் அரசூர்ப் பட்டணத்தில் இருந்து வந்து பகவதியை வாரி எடுத்து மலையாள பூமியில் இருந்து தமிழ் புழங்குகிற பிரதேசத்துக்கு எடுத்துப் போகப் போகிறான். புகையிலைக் கடை வைத்திருக்கிற பிராமணன். மலையாளம் அறியாதவன்.

அவனுடைய கரளை கரளையான கையும் காலும் அவனுக்கு வேறே என்ன சங்கதி எல்லாமோ தெரிந்திருக்கும் என்று அவளிடம் ரகசியம் சொல்கின்றன. பகவதிக்கு மார்பு படபடக்கிறது, நெற்றியில் வியர்வை பூக்கிறது.

விசாலாட்சி மன்னி அவள் முகத்தைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்து விட்டு ‘என் கண்ணே பட்டுடும் போல இருக்குடி குழந்தே’ என்று அவள் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கிறாள்.

சிநேகாம்பாள் மன்னியின் ரெண்டு பெண்குட்டிகளும் எட்டிப் பார்க்கின்றன. கல்யாணப் புடவையும் பூமாலையும் பட்சணமும் வைத்த அம்பலப்புழை வீட்டு அறையில் இருந்து லட்டு உருண்டைகளை எடுத்துக் கடித்தபடி ரெண்டும் ஓடுகின்றன. சிநேகா மன்னி அதுகளை பிசாசி என்று இரைகிறாள். அவள் கண் ஏனோ நிறைந்து இருக்கிறது.

பொண்ணைக் கூட்டிண்டு வாங்கோ.

அரசூர் ஜோசியர் உரக்கச் சொல்கிறார். பழுத்த சுமங்கலியான ஒரு கிழவி வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்று தமிழில் பாடுகிறாள். யார் எழுதினது என்று தெரியவில்லை பகவதிக்கு. யாரோ பெண்தான் அது என்று மட்டும் படுகிறது.

எடி எண்டெ பொன்னு பகவதி. எழுந்நள்ளூ எண்டெ கரளின் கரளே.

அடித்தொண்டையில் கரகரவென்று குரல் மாற்றிப் பேசி எல்லாரையும் சிரிக்க வைத்து நாணிக்குட்டி அவளை கல்யாண மேடைக்கு அழைத்துப் போகிறாள்.

சங்கரன் நிமிர்ந்து பார்த்துச் சிரிக்கிற மாதிரி இருக்கிறது. சாந்தி முகூர்த்தம் நாளை ராத்திரி. யாரோ உரத்த குரலில் ரகசியம் பேசுகிறது பகவதி காதில் விழுகிறது. சங்கரனும் கேட்டிருக்க வேண்டும். கூர்ந்து அவளைப் பார்க்கிறான். பூமி பிளந்து விழுங்கி விடக்கூடாதா என்று வெட்கம் பகவதிக்கு.

ஒண்ணும் பண்ணிட மாட்டேளே.

கண்ணால் சங்கரனிடம் கேட்கிறாள். சத்தியமாக மாட்டேன் என்கிறது அவன் சிரிப்பு. கள்ளத்தனத்தைக் கண் துல்லியமாகச் சொல்லி விடுகிறது. அப்புறம்?

அம்மா, நாம் தான் கடைசி. துர்க்கா பட்டர் காத்திட்டு இருக்காரு. எழுந்திருங்க.

மருதையன் தலையில் அன்போடு கை வைத்து சொந்த அம்மாவை எழுப்புகிற வாஞ்சையோடு எழுப்புகிறான் பகவதியை. அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

பொலபொல என்று விடிந்து விட்டிருந்தது. ஓடி முடித்திருந்த ரயில் ஓ என்று ரீங்காரத்தோடு சத்தம் முழக்கியது.

ஐயோ, வண்டி கிளம்பிடுமே.

பகவதி பரபரப்பாக எழுந்து நிற்க முற்பட்டு கால் தடுமாற ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். வயசாகிக் கொண்டிருக்கிறது.

வண்டி எங்கேயும் போகாதம்மே. இதுதான் கடைசி நிறுத்தம்.

துர்க்கா பட்டன் ரயில் பெட்டிக்கு உள்ளே வந்து உட்கார்ந்தபடி சொன்னான். அவன் கையில் ஒரு பித்தளை கூஜா உள்ளே ஏதோ தளும்பி வழிந்தபடிக்கு.

சூடா நம்ம சாப்பாட்டுக் கடையிலே இருந்து காப்பி போட்டு எடுத்து வந்திருக்கேன். குடிச்சுட்டு தெம்பாக் கிளம்புங்கோ.

நாம ஆர அமர காப்பி குடிச்சு முடிக்கறதுக்குள்ளே வண்டி யார்டுக்குப் போயிடப் போகுது பட்டர் சாமிகளே. வெளியே காத்தோட்டமா மர பெஞ்சுலே உட்கார்ந்து குடிச்சா என்ன குறைஞ்சுடும்?

மருதையன், பகவதி மெல்ல இறங்க ஆதரவாகக் கை கொடுத்தபடி சொன்னான்.

பகவதிக்கு ஒரு வாய்க் காப்பி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இந்தத் தேவ பானத்தைக் குடிச்சுட்டுக் கிளம்பினா ஏழு லோகத்தையும் சமுத்திரத்தையும் தாண்டி சூளாமணியைக் கொண்டு வந்து உன் காலடியிலே வைப்பேண்டி கண்ணம்மா. சங்கரன் சொல்வான்.

பகவதி கைக் காப்பிக்கு அத்தனை மணம். அவள் சங்கரனுக்காகக் காப்பி கலக்கும்போது ரெண்டு முட்டைக்கரண்டி அஸ்கா சர்க்கரை போட்டுத்தான் கண்ணை மூடுகிற காலம் வரை காலையில் சுகம் கொண்டாடிக் கொண்டிருந்தான் அவன். எந்த பூமியில், எந்த சமுத்திரத்துக்கு அடியில் சூளாமணியைத் தேடிட்டிருக்கானோ.

நல்ல வேளையாக கண்ணூர் நெருங்கி விட்டது என்று தவறாக கணக்குப் போட்டு நாலு மணிக்கே எழுந்து அவளும், மருதையனும் தந்த சுத்தி செய்து முகம் அலம்பிக் கொண்டதால் காப்பி குடிக்க தடை ஏதும் இல்லை. ஆனாலும் அவள் இப்படித் திரும்பப் படுத்துக் கண் அயர்ந்திருக்கக் கூடாதுதான். ரயிலின் ஆட்டம் தூங்கு தூங்கு என்று எல்லோரையும் பச்சைக் குழந்தையாக்கி கிடத்தி விடுகிறது.

துர்க்கா, கொஞ்சம் ஜலம் கொடேன்.

பகவதி கேட்டாள்.

இருங்கோ அம்மா, பிடிச்சுண்டு வரேன்.

துர்கா பட்டன் கூஜா மூடியாக இருந்த கிண்ணத்தை மரை திருகிக் கழற்றிக் கொண்டு ஓடினான். பக்கத்துக் குழாயில் இருந்து அருவி மாதிரி கொட்டிக் கொண்டிருந்த குளிர்ந்த தண்ணீரைப் பிடித்து வந்தான் அவன்.

வாங்கி ரெண்டு தடவை வாய் கொப்பளித்தாள் பகவதி. அந்தக் காப்பியை ஆர அமர பெஞ்சில் உட்கார்ந்தபடி வாய் எச்சில் படாமல் குவளையை உசத்தி விட்டுக் கொண்டு அதன் சூட்டையும் மணத்தையும் ஒரு வினாடி கண்ணை மூடி அனுபவித்தாள். பிரயாணக் களைப்பும் அசதியும் எல்லாம் ஓடி ஒளிந்த மாதிரி உற்சாகம்.

தெம்பாக எழுந்து தண்ணீர்க் குழாய்ப் பக்கம் போய் கையைக் குவித்து வெள்ளமாக எடுத்து முகத்தில் விசிறி அடித்துக் கொண்டாள். இதமான மலையாளக் கரைக் காற்று சிநேகிதமாக பகவதிக் குட்டீ சுகம் தன்னே என்றது.

அம்மா, பட்டர் மோட்டார் வண்டி கொண்டாந்திருக்காராம். போகலாமா.

மருதையன் குழந்தை போல் குதூகலத்தோடு சொன்னான். மோட்டார் வண்டி அரசூருக்கு வரும் முன்பே கண்ணூருக்கு வந்து சேர்ந்து விட்டது போலிருக்கு.

அதெல்லாம் எதுக்குடா மருதையா. நடந்தே போயிடலாம். எங்கேயாவது போய் முட்டி வச்சா கையோட காலோட கல்யாணத்துக்குப் போய்ச் சேர முடியாது.

பகவதி அவசரமாகச் சொன்னாள். கண்ணில் மிரட்சி தட்டுப்பட்டது.

ஏதொண்ணுக்கும் விசனப்பட வேண்டாம் அம்மே. வண்டி ஓட்டிக்கப் படிச்ச ஆள்கார்தான் இதுக்குன்னு நியமிச்சு வைச்சிருக்கறது.

பட்டன் பகவதியின் ஹோல்டாலை கையில் இடுக்கிக் கொண்டே சொன்னான்.

அதென்ன பட்டரே ஆள்கார். அய்யங்காருக்கு அண்ணன் தம்பி முறையா?

மருதையன் கடகடவென்று சிரித்தான். அவனுக்கும் இந்த இதமான சீதோஷ்ணமும், விடிகாலையில் ரயிலை விட்டு இறங்கி ஒரு அழகான ஊரில் அடியெடுத்து நடக்கிறதும் எல்லாத்துக்கும் மேலாக நாலு நாள் காலேஜ் போக வேண்டி இல்லாமல் ரஜா வாங்கி வந்ததும் எல்லாம் சேர்ந்து உற்சாகத்துக்குக் காரணம். பகவதி அம்மாளோடு பிரயாணம் செய்கிறதிலும் இப்படி ஒரு சுப காரியத்துக்காக அது நடப்பதிலும் கூடுதல் சந்தோஷம் அவனுக்கு.

சாமாவும் வந்திருக்கலாம். கல்யாணத்துக்கு அழைக்க வேதையனும் பரிபூரணமும் அரசூர் வந்து பத்திரிகை கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினபோது பகவதி மட்டுமில்லை, முழுக் குடும்பமுமே வருகிற திட்டம் தான் இருந்தது.

ஆக ஒரு வழியாக அரசூர்க் குடும்பம் பிரயாணம் கிளம்பியாகிவிட்டது. ஒரு நாளா ரெண்டு நாளா? நாலு வருஷமாக யோசித்து, பிரயாணத்துக்கான ஏற்பாடு செய்ய ஆரம்பித்து ஏதாவது காரணத்தால் தள்ளி வைக்க வேண்டியது.

அதென்னமோ, பகவதியம்மாளின் கல்யாணம் கூட நிச்சயம் ஆன தினத்தில் இருந்து நாலைந்து மாதத்தில் நடந்து விட்டது. அது ரயில் வண்டி ஓடாத, சாலை வசதி இத்தனை கூட இல்லாத காலம். நாற்பது வருஷம் முந்திய சங்கதி அதெல்லாம். நாற்பது கொல்லம் கழித்து பகவதி பயணமாகலாம் என்று பகவான் விதித்திருக்கிறான்.

வேதையன் பெண் தீபஜோதி திரண்டுகுளி சுபமூகூர்த்தத்துக்கு ரெண்டு வருஷம் முந்தி ஏற்பாடு செய்தபடி கிளம்ப முடியாமல், நெருங்கின சொந்தத்தில் ஒரு சாவு வந்து சேர்ந்தது.

கல்யாணச் சாவுதான். எண்பத்தெட்டு வயசு முழுசாக வாழ்ந்து எத்தனையோ பேருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் கூட தகனம், திவசம் என்று கிரமமாக நடத்திக் கொடுத்து விட்டு கனபாடிகள் போய்ச் சேர்ந்த தருணம் அது.

போகிறதுக்கு முந்தின தினம் கூட அரசூர் பக்கம் சாளூரில் யாருக்கோ பத்தாம் நாள் காரியம் என்று வந்து பகவதி வீட்டில் தான் ராத்தங்கினார் அவர்.

எள்ளுருண்டை பிடிக்கும்போது எள்ளைக் கொஞ்சம்போல வறுத்துட்டு வெல்லத்தைப் பாகு முத்தறதுக்கு முந்திக் கலந்து பிடிச்சா அமிர்தமா இருக்கும்னு நானும் ஆயுசு முழுக்க ஒரு பொம்மனாட்டி விடாம சொல்லி ஓஞ்சு போய்ட்டேண்டியம்மா.

எள்ளுருண்டையும், உளுந்துவடையுமாக அவர் போய்ச் சேர்ந்த சுவர்க்கம் சதா எள்ளெண்ணெய் மணத்துக் கொண்டிருக்கட்டும் என்று பகவதி வேண்டிக் கொண்டாள். ஆகாரம் மூலம் ஆத்மபோதத்துக்கு வழி கண்டவர் அந்தப் பெரியவர் என்று அவள் சொன்னபோது சாமா அடக்க முடியாமல் சிரித்தான்.

அம்மா, கனபாடிகள் ஸ்தூல சரீரத்தோட அங்கே யாருக்கு தெவசம் நடத்தப் போறார்? அதுக்கு வேண்டிய உருப்படி எல்லாம் கைலாசம் போன கேசு ஆச்சே.

போடா, பெரியவா, ஆசீர்வாதம் என்னென்னைக்கும் குடும்பத்துக்கு நல்லது. எத்தனன பேரைக் கடைத் தேத்தினவர். சாப்பாடு தவிர வேறே என்ன கண்டார்? வீட்டுக்காரி கூட எப்பவோ போய்ச் சேர்ந்துட்டா.

ஆமாமா, பூஜை பண்ணறேன் பேர்வழின்னு பகல் மூணு மணி வரை கொலைப் பட்டினி போட்டா படியளக்கிற பரமசிவன் காலடியிலே சேராம என்ன பண்ணுவா?

சாமா அம்மாவைச் சீண்டினான். அவள் ஏதாவது மனசு ஒட்டாமல் வைய வேண்டும். அதைக் கேட்டு இன்னும் கொஞ்சம் சீண்ட வேண்டும். வீட்டுக்காரி கோபித்துக் கொண்டாலும் அம்மா கையால் செல்லமாகக் குட்டு வாங்குவது சந்தோஷம்தான்.

அவளோடு நாள் முழுக்க இருந்து வார்த்தை சொல்ல முடியாமல் உத்தியோகம் குறுக்கே நின்று தொலைக்கிறது. இப்போ, இந்த கண்ணூர்க் கல்யாணத்தைச் சாக்கு வைத்தாவது ஒரு வாரம் அக்கடாவென்று அம்மாவையும் இவளையும் கூட்டிக் கொண்டு மலையாளக் கரையில் டேரா அடித்து விட வேண்டியதுதான்.

சாமா மனதில் முடிச்சுப் போட்டு வைத்தபடி ரஜா விண்ணப்பம் சப் கலெக்டர் துரைக்கு அனுப்பி வைத்தான். அது சாங்க்ஷனும் ஆனது.

ஆனாலும் என்ன செய்ய? சனியன் போல் கலெக்டர் துரையின் ஜமாபந்தி வந்து சேர்ந்தது. தாசில்தார் சாமா ஊரை விட்டு நாலடி வெளியில் எடுத்து வைக்கக் கூட ஏழெட்டு சாணித்தாள் காகிதத்தில் சகல துரைகள், அவர்களை அண்டி இருக்கிற, சிவப்புத் தோலும் நூலுமாக கித்தாய்ப்பாய்ப் பேசி நடக்கிற உள்ளூர்த் துரைகள் என்று சகலரிடமும் நூற்றுச் சில்லரை இடங்களில் கையெழுத்து போட்ட உத்திரவுகள் வாங்க வேணும்.

கொஞ்ச நாளாக ஜில்லா கஜானாவுக்கும் சாமா தான் பொறுப்பான, சாவியை அரைஞாண்கொடியில் முடிந்து வைத்துக் கொள்ளும் அதிகாரி. அப்படித்தான் தொங்க விடணும் என்கிறது சர்க்கார் மேன்யுவல்.

நான் வர முடியாத இக்கட்டுலே இருக்கேன்’மா. நீயும் அவளும் போய்ட்டு வாங்கோ. துணைக்கு வேணும்னா நம்ம ஆபீஸ் டவாலி புலியேறுத்தேவனை அனுப்பறேன், அவனுக்கு மலையாளம் அர்த்தமாகும்.

சாமா சொன்னான்.

அவன் புலியேறவும் வேண்டாம். சிங்கத்தை விட்டு இறங்கவும் வேண்டாம். என் மலையாளமே ஏழு தலைமுறைக்குப் போதும்.

பகவதி சிரித்தாள். ஆனாலும் தனியாக அவ்வளவு தூரம் போக மனசு ஒத்துழைத்தாலும் உடம்பு யோசிக்கிறது. சித்தே இரு, படபடன்னு வருது, கொஞ்சம் தலை சாஞ்சுட்டுக் கிளம்பலாம் என்று முரண்டு பிடிக்கிறது.

நானும் வரல்லே அம்மா.

சாமா வீட்டுக்காரி பகவதி காதில் சொன்னாள். அவளுக்கு தூரத்துக்கு நாள். அதுவும் இப்போதெல்லாம் உதிரப் பெருக்கு அதிகமாகி மாசத்துக்கு நாலு, அஞ்சு நாள் பிராணன் போகிற மாதிரி அந்தப் பெண் அவஸ்தைப் படுகிறதை பகவதி மௌனமாகப் பார்த்து அனுதாபப்படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.

இங்கிலீஷ் வைத்தியம் படித்துவிட்டு மதுரையில் ஆஸ்பத்திரி நடத்தும் எர்ஸ்கின் துரையிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் குணப்படுத்தலாம் என்று சாமா சொன்னபோது, துரை கிட்டே எல்லாம் உடம்பைக் காட்டணுமா? நாணக்கேடு. உங்களுக்கு ஏன் இப்படி அபத்தமான யோசனை எல்லாம் தோணறதோ என்று அவள் புலிப்பாய்ச்சல் பாய்ந்தாள்.

மருத்துவனிடம் போயிருக்கலாம் என்று பகவதிக்குப் பட்டது. ஆனால் ஆம்பிளை வைத்தியனிடம் இதை எப்படிச் சொல்லி, அவன் என்னத்தைப் பரிசோதித்து என்ன மருந்து கொடுப்பான்?

அம்பாளுக்கு நேர்ந்து கொள்வது, குங்குமம் கரைத்து ஆரத்தி எடுப்பது என்று அவளுக்குத் தெரிந்த பிரார்த்தனை வைத்தியம் அந்தப் பெண்ணை சுவஸ்தப் படுத்தவில்லை. கொஞ்சம் போல் நிம்மதியாவது கொடுத்திருந்தால் அவளுக்கு சந்தோஷம். இன்னும் ஒன்பது தடவை கோவில் பிரகாரத்தில் பிரதக்ஷணம் செய்வாள் மனசெல்லாம் நன்றியோடு.

அம்மாவை நான் வேணா கண்ணூர் கூட்டிப் போய் வரட்டா?

எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டு நின்ற மருதையன் கேட்டான். வேதையனும் வீட்டுக்காரியும் அரசூர் வந்து திரும்புகிற வழியில் மதுரையில் அவனனயும் சந்தித்து கல்யாணப் பத்திரிகை வைத்திருந்தார்கள். இல்லாவிட்டாலும் அவன் பகவதி அம்மாளை பத்திரமாகக் கூட்டிப் போய்க் கொண்டு விட வந்து நிற்பான்.

ராஜ உபச்சாரம்னா இதுதான். ராஜாவே உபச்சாரம் பண்றார் பாரு உனக்கு.

சாமா அவன் பகவதி அம்மாளிடம் காட்டும் பிரியத்தை சந்தோஷத்தோடு பகடி செய்வான். ராணியம்மாவும் ராஜாவும் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களுக்கும் மனசில் எந்த வருத்தமும் இல்லாமல், அதே சந்தோஷத்தோடு அந்தக் கிண்டலில் கலந்து கொள்வார்கள். சங்கரன் மட்டும் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பான்.

ராஜா வம்சம் என்ற மரியாதை ஒரு பக்கம். எப்போதாவது நினைவில் வந்து கஷ்டப் படுத்துகிற இன்னும் குளிக்கிற கொஞ்சம் போல் இளமையான ராணி இன்னொரு பக்கம். சாமிநாதன் ஏன் வீட்டோடு எரிந்து போனான் என்று மனதில் குடைகிற விடை தெரியாத கேள்வி இன்னொரு பக்கம். ஒதுங்கி இருக்க ஒன்பது காரணம்.

அம்மா, ஒதுங்கி உட்கார வேணாம். சவுகரியமா சாய்ஞ்சு உட்காருங்கோ.

மோட்டார் வண்டியைக் கிளப்பியபடி அரைகுறை தமிழில் மாத்யூ தரக்கன் சொன்னான்.

அஸ்ஸலாயி. ஞான் அல்ப நேரம் விஸ்ரமிக்கட்டே பிள்ளேரே. நம்முடெ மனை வன்னபாடே என்னெ ஒண்ணு உணர்த்தியா மதி.

பகவதி பச்சை மலையாளத்தில் சரளமாகப் பேச ஆரம்பிக்க ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்த தரக்கன் படு குஷியாக பாம் பாம் என்று ஹாரனை அடித்தபடி வண்டி ஓட்டி போனான்.

இப்படியே போய்ச் சேர்ந்தா எப்படி இருக்கும்?

பகவதி கூடவே இருக்கும் சங்கரனைக் கேட்டாள்.

அசத்தே. என்ன அவசரம். இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வா. எனக்கு இங்கே காப்பி கிடைக்கறது.

சங்கரன் அட்டகாசமாகச் சிரித்தான் வழக்கம் போல.

சும்மா இருங்கோ. காப்பியை இடுப்பிலே தேடுவானேன். கையை எடுங்கோ.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts