விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

இரா.முருகன்


மீண்டும் விஸ்வரூபம் தொடர்கிறது.
முந்திய அத்தியாயம் 68 இணைப்பு கீழே
விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு

1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

துர்க்கா பட்டனுக்கு மனசு சந்தோஷத்தில் றக்கை கட்டிப் பறந்தது. கூடவே ஒரு துள்ளி வருத்தமும்.

குழந்தை தீபஜோதிக்குக் கல்யாணம் வந்து கொண்டிருக்கிறது. பட்டனின் முதுகில் ஆனை சவாரி போன தீபம் இப்போது பதினாறு பிராயம் திகைந்த கன்யகை.

அம்மாவா என்று வாய் நிறையக் கூப்பிட்டு நேரத்துக்குக் கழிக்க ஆகாரம் விளம்புவதும், பட்டனுக்கு உடம்பு சுகக்கேடு என்றால் பிஷாரடியைப் பார்க்கக் கூட்டிப் போய் வருவதும், ஆத்மார்த்தமான கூட்டுக்காரிகளின் உள் வீட்டு வர்த்தமானம் பகிர்ந்து கொள்வதுமாக அவள் இப்போது ஒரு ஆத்மார்தமான சிநேகிதியுமாகி விட்டாள்.

துர்க்கா பட்டனுக்குக் கல்யாணம் ஆகிப் பெண் குழந்தை பிறந்திருந்தால் இப்படித்தான் அவன் மேல் பிரியத்தைப் பொழிந்திருப்பாள். அவனும் உயிரையே கொடுக்கவும் இதுபோல தயாரெடுப்பில் சதா இருந்தபடி இருப்பான்.

அவள் விஷயமாக பாண்டி பிரதேசத்திலும் கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளத்திலும் வரன் தேடி அலைந்த அனுபவம் துர்க்கா பட்டனுக்கு இன்னும் மனதில் நிறைவாக இருந்தது.

சுபாவமாகவே அலைந்து சுற்றி நடக்கிறதிலும் இட்ட வேலையைக் கர்ம சிரத்தையாகச் செய்து முடிப்பதிலும் உற்சாகம் கொண்டாடுகிற பட்டனுக்கு, இதெல்லாம் அவனுடைய ப்ரியமான தீபக்குட்டிக்காக என்றபோது இன்னும் இஷ்டமானதாகக் கலந்து போயிருந்தது.

ரெண்டு வருஷ அலைச்சல் இப்போது கல்யாணமாகக் குதிர்ந்ததில் அவனுக்குப் பரம சந்தோஷம். இந்தக் காரணமாக இனியும் அலைய வேண்டியதில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம். ஆனாலும் என்ன, அலைய ஆயிரம் விஷயம் உண்டே. காலாற நடந்து கெறங்கி வராவிட்டால் உறக்கம் எளுப்பத்தில் வருமோ.

எல்லாம் பரிபூரணம் ஒரு ஞாயிற்றுக்கிழமை விடிகாலை சத்தம் கூட்டி துர்க்கா பட்டனை எழுப்புவதில் ஆரம்பித்தது. நீளமாக நிறுத்தாமல் பேசினாள் அவள். பட்டன் கேட்க இல்லை. வேறே யாரோ கேட்க வேண்டியவர்கள் காதில் விழ.

எடோ துருக்கா. நாள் முழுக்க சாப்பாட்டுக் கடை. ராத்திரி வந்து அடிச்சுப் போட்ட மாதிரி ஒரு உறக்கம். எழும்பினா பின்னே துணி அலக்கல். பிராதலுக்கு சதா தோசை. கட்டன் காப்பி. திரும்பக் கடை. உன் பொழைப்பு உனக்குப் பெரிசு. இந்த வீட்டுலே அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க காரியம் தான் முக்கியம். என்னடா திரண்டு குளிச்ச பெண்குட்டி ஒண்ணு தங்கக் கொடி மாதிரி வளர்ந்து இருக்காளே. அவளை நல்ல வரனாப் பார்த்துக் கல்யாணம் கழித்து அனுப்பணும்னு ஒருத்தருக்காவது கருதல் உண்டோடா. நான் தான் நெல்லிப்பரம்பு முத்தச்சி மாதிரி ஒச்சை வச்சுட்டு கிடக்கேன். போடி கிழவின்னு அவங்க அவங்க போய் வந்துட்டு இருக்காங்க. எழும்பித் தொலைடா. உன்னை உபத்ரவிக்காம நானே இன்னிக்கு அலக்கிக் கூட முடிச்சுட்டேன். குறிசுப் பள்ளிக்கு ஆஜர் பட்டியல் கொடுக்கப் போயாகணும். அது மட்டும் இகத்துக்கும் பரத்துக்கும் போதும். குடும்பம், குழந்தை குட்டி எல்லாம் எப்படியோ போகட்டும் போ. அடே, எழும்பு.

கையில் வைத்திருந்த துணி காயப்போட உபயோகிக்கும் மரக் கொம்பால் போர்வைக்கு மேலே அவள் லொட்டு லொட்டென்று அடித்தது துர்க்காவின் கால் மூட்டில் இதமான வலியாக வந்து விழுந்தது. அந்த சுகத்தோடு தூக்கம் விழித்த துர்க்கா பட்டனுக்கு நிமிஷத்தில் நிலைமை மட்டுப்பட்டது.

பரிபூரணம் மன்னி புகார் எதுவும் அவனைக் குறித்து இல்லை. அண்ணா வேதையனைப் பற்றி அவளுக்கு இருக்கப்பட்ட குறைச்சல் எல்லாத்தையும் இப்படித்தான் கொட்டித் தீர்க்க வேண்டி இருக்கிறது. துணி உலர்த்துகிற கொம்பு கூட அதற்கு ஒத்துழைக்கிறது. துர்க்கா பட்டன் மட்டும் சும்மா கிடக்க முடியுமா?

மன்னி, நீங்க சொல்றது எல்லாம் ரொம்ப சரி. ஆனா, உங்களை யார் எப்போ கிழவின்னு அபாண்டமா சொன்னா சொல்லுங்கோ, அந்தப் பேப்பட்டியை சவட்டிட்டு வந்துடறேன். மகாலக்ஷ்மி மாதிரி என் மன்னியை நிந்திச்ச தூர்த்தன் வைதாரணி கடந்து ரௌராவாதி நரகம் ஒண்ணொண்ணாப் போய்த் தொலையட்டும்.

அவன் எழுந்து உட்கார்ந்து ரெண்டு கை விரல்களையும் சேர்த்து நெரித்துச் சொடக்கி சாபம் கொடுக்க, பரிபூரணம் படு சிரத்தையாக அலக்கிய முண்டும் மற்ற வஸ்திரமும் மடிக் கொடியில் கைக் கொம்பின் துணையோடு உலர்த்திக் கொண்டிருந்தாள்

அவள் மாமனார் கிட்டாவய்யன் காலத்தில் இருந்து இதுதான் வழக்கம். அதாவது மாமியார் சினேகாம்பாள் செய்து வைத்த ஒழுங்குக் கட்டுப்பாடு.

வீட்டுக் கூடத்தில் உத்திரத்துக்கு இணையாக மூணு தாம்புக் கயிறுகள் ரெண்டு பக்கச் சுவரிலும் வலுவான இரும்பு முளை அடித்து அதிலிருந்து இறுகிப் பிணைத்துக் கட்டி இருக்கும்.

முதல் கொடியில் சுக்காகக் காய்ந்த வஸ்திரம். எடுத்து முறுக்கி தரித்துக் கொண்டு கிளம்ப வசதிக்காக அது. ரெண்டாம் கொடியில் நேற்றைக்கு அலக்கிய வஸ்திரம் முழுக்கக் காயாமல் கொஞ்சம் ஈர வாடையோடு. கடைசிக் கொடியில் இந்த நாளில் அலக்கின துணி எல்லாம் வரிசையாக ஈரம் சொட்டத் தொங்கும்.

தரித்துப் போக வேண்டியவர்கள் சரியான நேரங் காலத்துக்குத் தரித்துப் போனால் முதல் கொடி சூரியன் உதித்து ஒரு மணிக் கூரில் வெறுமையாகிக் கிடக்கும். பரிபூரணம் குளித்துக் காய வைத்த தலைமுடியில் வெள்ளை வஸ்திரத்தோடு, ரெண்டாம் கொடியில் இருந்து முதல் கொடிக்கு உலர்ந்த துணியும், கடைசிக் கொடியிலிருந்து நடுக்கொடிக்கு பாதி உலர்ந்ததையும் மாற்றுவாள். அப்புறம் அவளோ, துர்க்கா பட்டனோ அலக்கிய துணியை எல்லாம் கடைசிக் கொடியில் அந்தக் கொம்பால் உலர்த்துவதும் அவள் சிரத்தை எடுத்துச் செய்யும் காரியம்.

மடி வஸ்திரம் எல்லாம் தனியா வைக்கணும். அரைகுறை ஈர வஸ்திரம் பிணத்துக்கு உடுத்திக் களைஞ்ச அடி வஸ்திரம் மாதிரி நரகலா வாடை அடிக்கும். அதைத் தனியா போட்டு அக்கடான்னு விட்டா அதுபாட்டுக்கு காய்ஞ்சு அடங்கும். புதுசா அலக்கினதுக்கு இருக்கவே இருக்கு. ஒண்ணொண்ணும் தனி. கலந்துடாதே.

கல்யாணம் ஆகி வந்தபோது சினேகாம்பாள் தன் மருமகளுக்குப் படிப்பிச்சுக் கொடுத்த முதல் வீட்டுப் பாடம் அதுதான். அதுமட்டும் இல்லை. களைந்த வஸ்திரத்தை எல்லாம் பின்னங்கட்டில் பிரம்புக் கூடையில் சேகரிக்கிற ஏற்பாடும் அவள் உண்டாக்கி வைத்துவிட்டுப் போனதுதான்.

அவள் பிறந்து வந்த ஆலப்பாட்டு தமிழ் பட்டன்மார் குடும்ப நடைமுறை அது. வைக்கத்தில் பரிபூர்ணம் வீட்டுப் பரம்பில் துணி காய வைத்து மர அலமாரியில் மடித்து வைத்து அணிந்து கொள்கிற பரிபாடியிலிருந்து ரொம்பவே மாறுபட்டது. பட்டன்மார் ஆச்சாரம்.

மூணு கொடி நடைமுறையில் இருந்து, பூண்டு கிள்ளிக்கூடப் போடாமல் சமையல் செய்வது, அமாவாசைக்கு வெங்காயம் விலக்கல் வரை ஒரே மாதத்தில் கரதலப் பாடமாகக் கற்றுக் கொண்டு சிநேகாம்பாளையே அசத்தி விட்டாள் பரிபூரணம்.

சிநேகாம்பாளுடைய ஆலப்பாட்டுத் தமிழ்க் கொச்சை மட்டும் அவள் நாக்கில் சிக்க மறுத்து விட்டது. என்ன போச்சு. இல்லாமலேயே இப்படி ஒரு தங்க விக்ரகம் போல் ஒரு பெண்குஞ்சைப் பெற்று வளர்த்துப் பெருமையோடு நிற்கிறாள்.

அந்தக் குட்டிக்கு வரன் பார்க்க இங்கே இருக்கிற தடிமாட்டு ஆண்பிள்ளைகளுக்கு, பிள்ளைகள் என்ன, அப்பனான இக்னேஷியஸ் வேதையர் சுவாமிக்கு ஆயாசமாக இருக்கிறது. சமையலில் பூண்டு சேர்த்தால் இந்த அசமஞ்சம் போகும். நாக்கில் ஏறின விறுவிறுப்பு காரியத்திலும் தட்டுப்படும்.

சரிதானேடா துருக்கா?

துணி உலர்த்திக் கொண்டே அரைச் சிரிப்போடு துர்க்கா பட்டனை நோக்காமலேயே கேட்டாள் பரிபூரணம். அவள் மனசில் ஓடின எண்ணம் எல்லாம் அர்த்தமானது போல் துர்க்கா பட்டன் அப்போது சொன்னது இது –

மன்னி, கவலையை விடுங்கோ. நான் இன்னிக்கு கடைக்குப் போகலை. தமிழ்ப் பிரதேசத்துக்கு யாத்திரை. ஜாதகம் பொருந்தி இருக்கற சம்பந்தம் கிடைக்காம படி ஏற மாட்டேன். ஜிவ்வுனு ஒரு பூண்டு ரசம் மாத்திரம் உண்டாக்கி சாப்பாடு போட்டு அனுப்புங்கோ.

பூண்டு ரசம் தயாரானது. நம்பிக்கை இல்லை என்றாலும், கிட்டாவய்யன் ஜீவியவந்தனாக இருந்த காலத்தில் ஜோசியனை வைத்துக் கணித்த தீபஜோதிப் பெண்குழந்தையின் ஜன்ம நட்சத்ர ஜாதகமும் அப்புறம் பரிபூரணமே முன்கை எடுத்து துர்க்கா பட்டன் மூலம் உண்டாக்கின ருது ஜாதகமும் கள்ளியம்பெட்டியில் பத்திரமாக நாலு மூலையிலும் மஞ்சள் தடவி பத்திரமாக இருக்கின்றன.

ருது ஜாதகத்தைக் கணித்தது அரசூர் அரண்மனை ஜோசியராக இருந்த அண்ணாசாமி அய்யங்காரின் வம்சத்தில் வந்த பூச்சி அய்யங்கார் என்ற சோழியன். அரசூர் சாமா மூலம் அது சாத்தியமானது.

குழந்தைக்கு அத்தையான பகவதி அம்மாள் சகல ஒத்தாசையும் செய்து அந்த ஜாதகக் கடுதாசை ஒரு பட்டுப் புடவை, ஒரு பவுனில் மோதிரம், காதுக்கு ஜிமிக்கி, தலையில் வைக்க தங்க ராக்கோடி இப்படி நாலைந்து நகைநட்டோடு சர்வ ஜாக்கிரதையாக அனுப்பி வைத்திருந்ததை பரிபூரணம் மறக்கவில்லை.

அந்தப் புடவை உடுத்தத் தயாராக ஜாதகத்தோடு கூடப் பெட்டியில் இருக்கிறது. நகை எல்லாம் வேதையன் பத்திரமாக இரும்பு பீரோவில் பூட்டி வைத்திருக்கிறான். அவனுக்குக் கரிசனம் இல்லை என்று சொல்ல முடியுமா என்ன?

துர்க்கா பட்டன் அலைச்சல் இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஒரு மாசம் போல் ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் ஒரு சேர கடைக்கு மட்டம் போட்டு விட்டு கண்ணூர், சாவக்காடு, ஏற்கனவே சொன்ன ஆலப்புழை, ஆலப்பாடு, கன்னட பூமியில் மங்கலாபுரம், மல்ப்பே இப்படி பல இடம் அலைந்தும் பிரயோஜனம் இல்லை.

வேதத்தில் ஏறின பிராமணர்கள் அரிதாகவே தட்டுப் பட்டார்கள். கொங்கண பிரதேசத்தில் நாலு தலைமுறைக்கு முந்தி அப்படியானவர்கள் இருந்ததென்னமோ வாஸ்தவம் தான். ஆனால் மீனும் மாமிசமும் இல்லாமல் ஆகாரம் உள்ளே இறங்காது அவர்களுக்கு எல்லாம்.

வீட்டுக்கு கல்யாணம் கழித்து வருகிற பெண்குட்டிக்கும் மீன் கறி பாகம் பண்ணத் தெரிந்திருக்கணும் என்பதை வேதையன் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான்.

வேதத்தில் ஏறினவனாகவும் இருக்கணும். கோழி முட்டை தவிர வேறே மாமிச பதார்த்தம் புசிக்காதவானகவும் இருந்தாகணும். வயசும் இருபதுக்கு மேலே தாண்டக்கூடாது. ஒரு உத்தியோகம், இல்லையோ பூர்வீகர் விட்டுப் போன ஆஸ்தி, பள்ளிக்கூடம் முழுக்கப் போய் போர்ட் பரீட்சை குடுத்து ஜெயித்த வித்யாப்யாசத் தகுதி இத்தனையும் கட்டாயம் தேவை. கையில் கால்காசு கூட இருக்க வேணாம்.

வேதையன் சொன்னபடிக்கு ஒரு ஒற்றை வரன் கூட அங்கெல்லாம் அமையாது வெறுங்கையோடு திரும்பி வந்தபோது தமிழ்ப் பிரதேசத்தில் இப்படியான குடும்பங்கள் தஞ்சாவூர் பக்கம், சரியாகச் சொன்னால் திருச்சிராப்பள்ளியில் குடியும் குடித்தனமுமாக இருக்கிறார்கள் என்று குரிசுப் பள்ளிக்கு அந்த ஊர்ப்பக்கம் இருந்து வந்த பிரசங்கியார் தெரிவித்தார். சந்திக்கத் தோதாக சில நபர்களின் பெயர் விலாசமும் அவர் வேதையனுக்குக் கொடுத்தார்.

வேதையனே நேரில் போக முடிவு செய்திருந்தாலும், வருடாந்திரப் பரீட்சை நேரமாதலாம் கூடி வரவில்லை. வழக்கம் போல் துர்க்கா பட்டன் தான் இதற்கும் சுற்றிக் கெறங்க வேண்டி வந்தது.

அடுத்த நாள் தமிழ் பேசுகிற திருச்சிராப்பள்ளிக்கு வந்து சேர்ந்தான் அவன். வேதத்தில் ஏறின தமிழ் பிராமணர்கள் இருக்கப்பட்ட ஊர் அது என்று வேதையன் தகவல் சொல்லி இருந்தான்.

போக வேண்டிய இடத்துப் பெயரையும், வழியையும், சந்திக்க வேண்டிய மனுஷர்களின் விலாசங்களையும் எழுதின ஹோ ஏண்ட் கோ கம்பெனி டயரி ஒன்றையும் வேதையன் துர்க்கா பட்டனுக்குக் கொடுத்து வழிச் செலவுக்கு தகுந்த துரைத்தனத்துப் பணமும் ஒரு தோல் சஞ்சியில் பத்திரமாக வைத்துத் தந்தான்.

திருச்சிராப்பள்ளியில் மேரித் தோப்பு எங்கே இருக்கிறது என்று பட்டன் டயரியைப் படித்து வழியை மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் மறந்து விட்டது. பிரம்மாண்டமான அந்த மலைக்கோட்டையையும், மேலே இருக்கிற கணபதி கோவிலையும் சுற்றி வந்து அந்த ஊரின் அதி உஷ்ண சூழ்நிலை காரணமாக உடம்பு தொப்பமாக நனைந்து போய் ரெண்டு தடவை கொள்ளிடத்தில் குளித்து வஸ்திரம் மாற்ற வேண்டிப் போனது.

நல்ல விதமாக வந்த காரியம் முடிந்தால் பக்கத்தில் தான் சீரங்கம், அப்புறம் அதென்ன ஊர், குருக்கள் புடவை கட்டிக் கொண்டு அம்பிகைக்கு பூஜை செய்வாரே. பட்டன் ஈரம் உலராத குடுமியைப் பறக்க விட்டுக் கொண்டு ஆற்றங்கரையில் நின்று டயரியைப் புரட்டினான்.

திரு ஆனைக்காப்பு. கண்ணடை எங்கே போச்சு. மடி சஞ்சியில் இருந்த மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு திரும்பப் படிக்க அது திருவானைக் கோவில்.

ஆனைக்கோவிலுக்கும் போகணும். முன்னால் மேரித் தோப்பு. வேதண்ணா டயரியில் எழுதிக் கொடுத்த தகவல் சரியானது தான். ஆனால் அது போதாது. நாலு பேரை விசாரித்தால் முழுக்க முழுக்க பாண்டித் தமிழில் அல்லாது வேறு அந்நிய பாஷையில் பேசுவது இல்லை இங்கே யாரும்.

பொம்மனா நீர்?

கன்னடம் கலந்த தமிழில் அவனை விசாரித்த இனிப்பு மிட்டாய்க் கடைக்காரன் ஓசூர்க்காரனாம். அவனிடம் முழுக் கன்னடத்திலேயே பேசி ஒரு மாதிரி வாங்க வேண்டிய சகல தகவலையும் வாஙகிக் கொண்டான் துர்க்கா பட்டன்.

அதுக்கு சன்மானம் தரமுடியாது ஆதலால் நாலு பொட்டலமாகக் கட்டிய அரை வீசை அல்வாவையும் காசு கொடுத்து வாங்கியானது. போகிற வீடுகளில் சின்னக் குழந்தைகள் இருக்குமானால் வெறுங்கையோடு போய் நிற்க வேண்டாமே.

ஜோசப் பரசுராம அய்யர் என்ற முதல் விலாசத்தில் வேதையன் குறித்திருந்த மனுஷர் பரலோகம் போய் பதினைந்து வருஷம் ஆகி விட்டது என்று பட்டனுக்குத் தெரிய வந்தபோது விசனமாக இருந்தது.

மேற்படி பரசுராம பட்டரின் புத்திரர்கள் வேதத்தில் இருந்து இறங்கி சுய ஜாதிக்கே திரும்பிப் போனதாகவும், அங்கே அவர்களை ஏற்றுக் கொள்ளாததால், சென்னைப் பட்டணம் போய் வெள்ளைப்படுகிறதை சுவஸ்தப்படுத்துகிற மருந்து தயாரித்து விற்று அமோகமாக ஜீவிக்கிறதாகவும் தெரிய வந்தது.

ஸ்ரீமடத்தின் அங்கீகாரம் அவர்கள் தனத்துக்கும் அவர்களுக்கும் கிடைத்ததால் பட்டணத்தில் சத்காரியங்களை முன்கை எடுத்து நடத்துகிறவர்கள் அவர்கள் தானாம். வேதபாடசாலை, கோவில் கும்பாபிஷேகம், சமஷ்டி உபநயனம், ஜாதகம் பரிமாறிப் பொருத்தம் பார்த்து கல்யாணம் நடத்திக்கொடுக்க ஒத்தாசை செய்யும் மகாசபை இப்படி எத்தனையோ சொல்லலாமாம். ஆனாலும் என்ன செய்ய? முழு பிராமண சம்பந்தம் தவிர வேறே எதையும் கருத மாட்டார்களாம்.

துர்க்கா பட்டன் படி ஏறின அடுத்த விலாசம் ரெண்டு தலைமுறைக்கு முந்தி சீர்காழி பக்கம் அஷ்ட சகஸ்ர வகுப்பு பிராமணர்களாக இருந்து, கலாசாலையில் படிக்க வேண்டி தன உபகாரம் கிட்டியதால் வேதத்தில் ஏறினவர்கள் என்று தெரிந்தது. கல்யாண வயதில் வீட்டில் பிள்ளை இருந்தாலும், மலையாளக் கரையில் பெண் எடுக்க அவர்கள் யோசிப்பதாக துர்க்கா பட்டனுக்கு அர்த்தமானது.

யட்சி மாதிரி மயக்கி ரத்தம் குடிக்கிற பெண்டுகளா நம்ம தேசத்தில் இருக்கப்பட்டவர்கள்? பட்டன் எத்தனை யோசித்தும் அப்படி யாரும் நினைவுக்கு வரவில்லை. இருந்தால் அதில் ஒருத்தி பட்டனைக் கல்யாணம் கழித்து பீஜத்தில் அழுந்தக் கடித்து குருதி பானம் பண்ணி இருப்பாளே?

என்னை விடவா அவளுடைய அரையின் கீழ் உபச்சாரம் லகரி ஏற்றும்?

பட்டன் மனசில் இருட்டுக் குகையில் இருந்து எழுந்து வந்த பரசு சிரித்தான்.

சவமே, செத்து ஒழி.

பட்டன் வெறுங்காலை சவட்டி கல்படியில் உதைத்தபடி கொள்ளிடக் கரையில் இன்னொரு தடவை குளிக்க இறங்கின போது சாயந்திரம் ஆகியிருந்தது.

அவன் திருவானைக்கோவிலுக்குப் போனபோது ராத்திரி அர்த்தஜாமம் முடித்து புடவவ கட்டின குருக்கள் சந்நிதியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

அம்பிகே, நம்ம் தீபஜோதிக் குட்டிக்கு ஒரு நல்ல ஆம்படையான் அமைய ஆசிர்வாதம் பண்ணும்மா.

பட்டன் வேண்டிக் கொண்டபோது தோளில் புடவையை அங்க வஸ்திரம் மாதிர்ப் போட்டுக் கொண்டு தூரத்தில் நடந்த அர்ச்சகர் இருட்டில் திரும்பிப் பார்த்தார்.

பொம்மனா நீர்?

அவர் கேட்டது போல் இருந்தது.

நீ வீட்டுக்குப் போடாப்பா குழந்தே. சம்பந்தம் தானே தேடி வந்திருக்கும்.

யார் குரலோ பட்டன் காதில் சொன்னது. அர்ச்சகர் இல்லை. பெண்குரல். வாத்சல்யமானது. அம்மையைப் போல், பாட்டித் தள்ளையைப் போல்.

என் பேத்தி குட்டியம்மிணிக்கு ஒரு வரன் கிடைக்குமாடா துர்க்கா?

இருட்டில் கேட்ட அந்தக் குரலை சுவர்க்கோழிகள் அடக்கி விட்டன.

துர்க்கா பட்டன் திரும்பத் திரும்பக் கோவிலுக்குள்ளே பார்த்தபடி வெளியே வந்தான்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts