தோழி

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்


காலை பதினோரு மணியிருக்கும் ,மயிலாப்பூர் குளத்துக்கு அருகில் நடந்துகொண்டிருந்த போது ஏன் பெயரைச்சொல்லி யாரோ மீண்டும் மீண்டும் அழைப்பதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு யாரென்று தேடினேன். நாங்கள் மதுரையிலிருந்து சென்னை வந்தே சில மாதங்கள் தான் ஆகிறது , எனக்குத் தெரிந்தவர்கள் சென்னையில் அதுவும் மயிலாப்பூர் பகுதியில் யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் , அப்படியிருக்க யார் அழைத்திருப்பார்கள்? என்ற கேள்வியொடு சுற்றும் முற்றும் பார்த்தேன். “ஹேய்! நீ சந்தியா தானே? பாளையங்கொட்டை கதீட்ரல் ஸ்கூல்ல ” வந்தவள் முடிக்குமுன்னே எனக்கு அவளை அடையாளம் தெரிந்து விட்டது. “நீ நீங்க சித்ரா தானே ?” என்று இழுத்தேன் . “ஒரு வழியா கண்டு பிடிச்சியே ?” என்றவள் பொது இடம் என்றும் பார்க்கமல் என்னை ஆரத்தழுவிக் கொண்டாள். அடங்கா வியப்பு எனக்கு !! பள்ளி நாட்களிலும் சரி , கல்லூரி நாட்களிலும் சரி மிகவும் கூச்ச சுபாவம் உள்ள சித்ராவா இது?

நானும் , சித்ராவும் ஆறாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்தவர்கள். அதுமட்டுமல்ல ஒரே தெருவில் எதிர் எதிர் வீடு என்பதால் இணை பிரியாத தோழிகள் ஆனோம்.நான் எப்போதும் சற்று துணிச்சலும் , எதிலும் முன்னிற்கும் ஆளுமையும் உடையவள்.சித்ரா அதற்கு நேர் மாறு , வெட்கமும் ,தயக்கமும் அவளுடன் பிறந்தவையாக விளங்கின. ஆனால் புறம் பேசுவது அவளுக்கு பிடித்த ஒன்று என்று நான் பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். கல்லூரியில் எங்களோடு படித்த கலைச்செல்விக்கு மிக நீண்ட முடி. நீண்டதென்றால் குதி கால் வரை நீளும். பார்க்கவே மிக அழகாக இருக்கும் . அவள் குடும்பத்தில் பணப் பிரச்சினை , சொத்துத் தகராறு , இதுபோன்று பல பிரச்சினைகள் இருந்ததால் அவள் அமைதியின்றி இருந்தாள். பல சமயங்களில் அழுதிருக்கிறாள் என்பதை அவள் கண்களே காட்டும். ஒரு முறை எனக்கும் , கலைச்செல்விக்கும் ஏதோ காரணத்தால் சண்டை , இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தையில்லாமல் இருந்தது.ஆனால் சித்ரா கலையோடு பேசுவாள். அந்த சமயத்தில் கலை ஒரு நாள் மிகவும் கலக்கமாகவும் , இரவு முழுவதும் அழுதவளாகவும் தோன்றினாள். அதுகுறித்து சித்ரா என்னிடம் சொன்னபோது நான் எதார்த்தமாக “தலைமுடி நீளமா இருக்கற பெண்களுக்கே வாழ்க்கையில துக்கம் அதிகம்னு எங்க பாட்டி சொல்லுவாங்க , அதான் அவளுக்கும் ரொம்ப துக்கம் வருது போல ” என்று சொன்னதை கலையிடம் “சந்தியாவிற்கு உன்னைப்போல முடி நீளமா இல்லன்னு பொறாமை , ஒன் முடியாலதான் நீ கஷ்டப் படறேன்னு சொல்றா “என்று திரித்துக் கூறிவிட்டாள். மற்ற எல்லாருக்கும் விஷயம் தெரிந்து என்னை வெறுப்போடு பார்த்தனர். கடைசியில் சித்ராவின் வேலைதான் அது என்று தெரிந்ததும் என்னால் அந்த துரோகத்தை மன்னிக்கவே முடியவில்லை.பிறகு சித்ரா மன்னிப்புக் கேட்ட பிறகும் மனம் விட்டு பழக முடியவில்லை. ஒருவேளை தனியே பேருந்து ஏறி கல்லூரி செல்ல பயந்து என் துணையை நாடுகிறாளோ சித்ரா? என்ற எண்ண ஓட்டத்தையும் மாற்ற முடியவில்லை.கல்லூரி இறுதியாண்டு முடியும்முன்னே நாங்கள் நகரத்தின் வேறு பகுதியில் சொந்த வீடு கட்டி குடி புகு போய்விட்டோம். அதனால் கல்லூரியில் மட்டுமே எங்கள் நட்பு தொடர்ந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாணமாகி வேறு வேறு திசைகளில் பறந்து கிட்டத்தட்ட இருபதாண்டுகள் முடிந்த நிலையில் இந்த சந்திப்பு.

சித்ராவின் நகைகளும் , உடையும் அவள் பொருளாதாரத்தைப் பறை சாற்றின. அவள் நல்ல நிலைமையில் இருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.சித்ராவின் அம்மா அடிக்கடி சொல்வாள் “எம்பொண்ணுக்கு என்ன அவ நெறத்துக்கும் , அழகுக்கும் ஒரு ராஜகுமாரன் வருவான்” என்று. அது போல இராஜகுமாரனே வந்துவிட்டான் பொலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். ” என்னடி பேசாமே இருக்கே? வா எங்கியாவது ஒக்காந்து பேசலாம் ” என அங்கிருந்த ஒரு ஓட்டலை நோக்கி இழுத்தாள். என் வீடு மிக அருகில் நடை தூரத்தில் இருப்பதாகச் சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்து வந்தேன். சித்ரா அடையாறில் இருப்பதாகவும் , மகளும், மகனும் பள்ளிக்குச் சென்று விட்டதாகவும் , அவள் கணவன் பிசினஸ் விஷயமாக மும்பை சென்றிருப்பதாகவும் , நிறுத்தாமல் பேசிக்கொண்டே வந்தாள். கபாலி கோயிலுக்கு வந்துவிட்டுத் திரும்பும் போதுதான் என்னைப் பார்த்ததாகவும் அடுக்கினாள்.வீடு வந்து விட்டது.”எங்க வீடு செகண்ட் ஃப்ளோர்ல இருக்கு , லிஃப்ட் கிடையாது ஏறித்தான் போகணும்” என்ற சொன்ன என்னை “ஐயோ! பாவம்” என்பது போல் பார்த்தாள். “வீடு சின்னதா இருந்தாலும், நீட்டா அழகா இருக்குடி ” என்று சொல்லவும் எனக்குச் சிரிப்பு வந்தது. “நீ நெனக்கிற அளவு பெரிய வீடு வேணும்னா வாடகை இருபதாயிரம் , முப்பதாயிரம் குடுக்கணும் மயிலாப்பூர்ல , என்று வீடு பற்றிய பேச்சிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன். என்னைப் பற்றிக் கேட்பாள் என்று எதிர்பார்த்தேன் , கேட்கவில்லை. அதனால் நானே என் கணவர் ஒரு பெரியதனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதையும் , என் மகள் பக்கத்திலே இருக்கிற ஒரு புகழ் பெற்ற பள்ளியில் படிப்பதையும் சொன்னேன். பள்ளியின் பெயரைக் கேட்டவுடன் “அது ஸ்டேட் போர்டு ஸ்கூலாச்சே” என்றாள். அவளிடம் குழந்தைகளின் கல்வி பற்றிய என்னுடைய கொள்கையைச் சொல்லவில்லை , சொன்னாலும் புரிந்து கொள்வாளா? என்ற சந்தேகம் இருந்ததால் வெறுமே “ஆமாம்” என்றேன்.

அன்று முழுவதும் என்னுடனேதான் இருந்தாள். மதியம் நான் வைத்திருந்த புளிக் குழம்பையும் , வாழைத்தண்டு பொரியலையும் இரசித்து சாப்பிட்டாள். சைனஸ் டிரபுள் என்று தயிரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். இதெல்லாம் செய்யும் போது பேச்சுபாட்டுக்கு நடந்து கொண்டே இருந்தது. இவளுடைய அழுகுகாகவே , வரதட்சிணை எதுவும் வேண்டாம் என்று இந்த மாப்பிள்ளை அவளைக் கட்டிக் கொண்டாராம். என் கணவர் என்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அழுத்தமாக நின்று என்னை மணந்தது அனைவருக்கும் தெரியும். அதை நினைவூட்டியவள் ” ஒன் கல்யாண ரிசப்ஷன்ல நானும் விஜியும் பேசிக்கிட்டோம் என்ன தெரியுமா? என்னத்தைக் கண்டு இவரு உன்னக் கல்யாணம் கட்டிக்கிட்டாருன்னு தான்” என்று சொல்லி ஜோக் அடித்தவள் போல சிரிக்க ஆரம்பித்தாள். என் மனது புண் பட்டாலும் , வீட்டிற்கு வந்த விருந்தினர்களை ஒன்று சொல்ல வேண்டாம் என்று பேசாமல் இருந்து வீட்டேன் . அவள் பேச்சு முழுவதும் மற்றவர்களை குறை கூறுவதாகவோ , இழிவு படுத்துவதாகவோ இருந்தது. என் வியப்பு எரிச்சலாக மாறிகொண்டிருந்தது.ஒரு நிலையில் பொறுக்க முடியாமல் “ஏன் சித்ரா இது வரை நீ பேசினத வெச்சுப் பாத்தா ஒங்க அப்பா , அம்மா தவிர எல்லாரும் ஒம் மேலப் போறாமப் படறாங்க போலயிருக்கே? ஒன் வீட்டுக்காரர் ஒன்ன தங்கத்தட்டுல வெச்சு தாங்கறார்னு சொல்லு” என்றேன் கேலியாக. சற்று நேரம் பேசாமல் இருந்தவள் ” எனக்கு மதியம் சாப்பிட்ட ஒடனே கொஞ்சம் படுக்கணும் ” என்றாள். பெட்ரூம் வேண்டாம் எனத் தோன்றவே கூடத்திலேயே பாயை விரித்தேன் , அவளும் மறுப்பேதும் சொல்லாமல் படுத்துக் கொண்டாள்.

அவள் மௌனம் மேலும் நீடிக்கவே ” என்ன லவுட் ஸ்பீக்கர் நின்னு போச்சு ” என்றேன் வேடிக்கையாக. தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். இம்முறை உண்மையிலேயே அதிர்ந்து போனேன். அவள் கணவன் அதிகமாகக் குடிப்பதாகவும் , மற்ற பெண்களோடு தொடர்பு உள்ளதாகவும் சொன்னாள். இவள் திருத்த முயற்சி செய்தும் முடியவில்லை என்றும் இந்த விஷயத்தில் சித்ராவின் பெற்றோர்களும் அதிகம் தலையிடுவதில்லை எனவும் அவள் பேச்சிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.”எல்லாரும் ஒனக்கு என்ன கொற? கை நிறைய பணம் , பெரிய வீடு , அழகான ரெண்டு கொழந்தைங்க , போதாக் கொறைக்கு மாசாமாசம் நகை வேற , வேற என்ன வேணும்னு கேக்கறாங்க , பணம் மட்டும்தான் வாழ்க்கையா ? மனசுல நிம்மதி வேணாமா? , எனக்கு மட்டும் சுய மரியாதை இல்லியா” என்றெல்லாம் புலம்பினாள். சித்ராவின் படாடோபமான பேச்சு வெறும் வெளி வேஷம் மனதில் உள்ள குறையை மறக்க என்று நினைத்துக் கொண்டேன்.அவள் புலம்பல் மேலும் தொடர்ந்தது , “நான் தீபாவளிக்கு ஒரு தடவை ஊருக்குப்போயிருந்த போது என் மாமியார் என்னைக் கொலை செய்யப் பாத்தாங்க தெரியுமா? ” என் அதிர்ச்சியைப் பார்த்து விட்டு “ஒனக்கு நம்ப முடியாமதான் இருக்கும் , இடிஞ்சி விழறா மாதிரி பாத்ரூம்ல ஒயரெல்லாம் பிஞ்சி தொங்கிட்டிருந்துது , நான் கவனமா இருந்தேனோ , பொழச்சேன் இல்லன்னா அவ்வளவுதான் , அதுகூடப் பரவால்ல நான் வெளில வந்தஒடனே குளிச்சுட்டு வந்துட்டியான்னு கேக்கறாங்க , என்ன கொழுப்பு பாத்தியா ?” என்று அடுக்கிக்கொண்டே போனாள். எனக்கு அவள் மன ஆரோக்கியத்தின் மீதே முதல் முறையாக சந்தேகம் வந்தது. அவளுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். மூன்று மணிக்கு டீ குடித்து விட்டு குழந்தைகள் வந்து விடுவார்கள் என்று சொல்லி விடைபெறும்போது வரும் திங்கட்கிழமை காலை பத்து மணிக்கே அவள் வீட்டிற்கு வந்து விட வேண்டுமென்றும் , சாயந்திரம்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தினாள்.நானும் அவ்வாறே வருவதாக உறுதி கூறினேன்.

இரவு என் கணவரோடும் , என் மகளோடும் இந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டேன். இருவருக்குமே சித்ராவைப் பிடிக்கவில்லை. “என்னதான் பல வருஷப் பழக்கம்னாலும் ஒரே நாள்ல குடும்ப விஷயங்கள் பூராத்தையும் சொல்லியிருக்காங்கன்னா… எனக்கென்னவோ அதல்லாம் உண்மையா இருக்குமான்னு சந்தேகமா இருக்கு?”என்றார். என் கணவர்.”நீங்க நகரத்துல பொறந்து வளந்தவுங்க , ஆனா நாங்க அப்படியில்ல , கிராமத்துல வாழ்ந்தவுங்க எதயும் மறச்சு வெக்க எங்களுக்கு தெரியாது” என்று சொன்னேன். என் மகளுக்கு எங்கள் திருமண விஷயதைப் பற்றி சித்ரா கூறியது சுத்தமாக பிடிக்கவில்லை.”நீ அவங்க வீட்டுக்குப் போகாதேம்மா , ஒன்ன இவ்ளோ கேவலமா பேசியிருக்காங்க , அப்றம் அவங்க மொகத்துலயே முழிக்கக்கூடாது”என்றாள். உடனே என் கணவர் “நீ சும்மாரும்மா! அவங்க சொன்னதுலயே அது ஒண்ணுதான் உண்மை” என்றார் சிரித்துக் கொண்டே. உடனே நான் பத்ர காளியாக மாற அப்பவும் பெண்ணும் சிரித்ததிலிருந்து என்னைக் கேலி செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டு நானும் சிரித்தேன்.

திங்கட் கிழமை ஒன்பதுமணிக்கெல்லாம் கிளம்பிவிட்டேன். அடையாறில் அவள் வீட்டைக் கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை. தனி வீடு. கீழே அவள் கணவரின் அலுவலமாகவும் , மாடியில் வீ டும் இருந்தது. நல்ல விசாலமான படிகள் , சுற்றிலும் குரோட்டன்ஸ் செடிகள். இடம் மிக அமைதியாக இருந்தது. அந்த சூழலை அனுபவித்துக்கொண்டே மேலேறினேன்.ஏறஏறவே சித்ராவின் பேச்சுக் குரல் கேட்டது. “யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாள்? அவள் கணவர் ஒருவேளை டூர் முடிந்து வந்து விட்டாரோ?” என்று தயங்கினேன்.இல்லை ஃபோனில்தான் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சில் என் பெயர் அடிபடவே உள்ளே நுழையப் போனவள் நின்றுவிட்டேன். “ஆமாங்க! அப்படித்தான் சொன்னேன். அவ ரொம்ப சாதாரண நெலயில இருக்கா , பொண்ணக்கூட கவர்மெண்ட் ஸ்கூல்லதான் சேத்திருக்கா , நகையும் ரொம்பப் போடலை , அதான் அப்படிச் சொன்னேன்” அதற்கு மறுமுனை என்ன பதில் சொன்னதோ தெரியாது “நீங்க சும்மாருங்க! நான் அப்படிச் சொல்லலேன்னா அவ என்மேல ரொம்ப திருஷ்டி போட்டுருப்பா! கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக் கூடாதுங்க!”என்று பேசிக்கொண்டே போனாள்.வெளியில் நின்றிருந்த எனக்கு கல்லடி பட்டது போல வலித்தது. சத்தம் போடாமல் கீழிறங்கி தெருவில் நடந்தேன். நடக்கும்போது “சித்ரா வேண்டுமென்றே நான் வரும் இந்த நேரத்தில் அவள் கணவனுக்கு ஃபோன் செய்திருப்பாளோ” என்ற எண்ணத்தைத் தவிர்க்க என்னால் முடியவில்லை.

Series Navigation

author

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Similar Posts