எங்கே அது..?

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

தேனம்மை லஷ்மணன்


*************************

கொஞ்சம் படபடப்பாய் இருந்தது..

இந்த நேரத்தில் .. என்ன செய்ய..

சீக்கிரம் சீக்கிரம் .. .. உடனடியாய் ..

எல்லாரும் நல்லா தூங்கிக் கொண்டிருக்க மெல்ல எழுந்தாள்..

சத்தம் கேட்டு கணவர் விழித்து விடாதிருக்க வேண்டும்..

பிள்ளைகள் இன்னொரு ரூமில்.. சத்தம் கேட்டு திடீரென்று எழுந்து வந்தால் அர்த்த ராத்திரியில் என்ன செய்கிறாய் என்று அனைவரும் கோபித்துக் கொள்வார்கள்..

திட்டு என்ன புதுசா.. நினைத்ததை நினைத்தவுடன் செய்து முடிக்க வேண்டும்..

எங்கே அது.. மறதி வந்தது போல் இருந்தது..

பூனை நடையில் சென்று மேஜையை துழாவினாள்..

சை.. அவசரத்துக்குக் கிடைக்காது..

இந்த மாதிரி சமயத்துக்காகவே எல்லா இடத்திலும் போட்டு வைப்பாள்..

எங்கே காணமல் போனது..

யார்தான் எடுப்பார்களோ..

சாமி ஷெல்ஃபின் விளக்கில் தென்பட்டது .. அட அது இல்லை..

டீப்பாயில் நிறைய பேப்பர்கள் இருந்தது.. அதன் பக்கம் இருக்கலாம்.

அப்பாடா .. ஒன்று கிடைத்து விட்டது..

அடச் சே.. என்ன இது ஒன்றுமில்லாமல் காலியாய் இருக்கு..

அடடா .. கிச்சன் லைட்டை போடாமல் வேலை ஆகாதோ..

எல்லா பெட்ரூமின் கதவையும் சாத்தியபின் கிச்சன் லைட்டை போட்டாள்..

அப்பாடா கிடைத்து விட்டது மளிகை லிஸ்ட் எழுத வைத்திருந்த இன்னொன்று..

விருவிருவென்று டேபிள் பக்கம் வந்து பேப்பரில் எழுதத் துவங்கினாள்..

தூக்கம் வராமல் மனதில் சிக்கிக் கொண்டிருந்த கவிதையை..

” ஆதி மூர்க்கம் விலா கொய்து செய்த பாதிமூர்க்கம் நான்.. “

மூச்சு சந்தோஷமாய் வெளிவந்தது..

அட ஆரம்பமே நல்லா வருது.. என்று முத்தம் கொடுத்தாள் பால்பாயிண்ட் பேனாவுக்கு..

Series Navigation

author

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்

Similar Posts