முகம்

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

சத்யானந்தன்


“யாராவது வந்து எடுங்கள்” என்பது போல “லேண்ட் லைன்” மணியொலி செய்து கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் துரையரசன் மாடியிலிருந்து கீழே வந்து எடுக்க வேண்டியிருந்தது.முதல் நாள் வணிகர் சங்கக் கூட்டம் முடிய இரவு வெகு நேரமாகியிருந்த்து. தூக்கக் கலக்கத்தை சமாளித்து படிகளில் பைய்ய இறங்கி வந்தான். “வணக்கம். நான் செல்வ்ராசன் பேசறேன். அம்மா இருக்காங்களா?”
“வணக்கம் அங்கிள் நான் துரை பேசறேன். அம்மா இங்கே இல்ல அங்கிள். அக்கா வீட்டுக்குப் போயிருக்காங்க”
“ரெண்டு நாள் மின்னே கூட போன் பண்ணியிருந்தேன். உன்னோட ஒயிஃப் தான் எடுத்தாங்க. அம்மா ஊரிலே இல்லையா?”
“இருக்காங்க. அப்பா காலமான பிறகு இந்த ஒரு மாசமா அம்மா எங்கேயுமே போகலே. கொஞ்ச நாள் எங்க வீட்டுக்கு வான்னு அக்கா கூட்டிக்கிட்டுப்போயிருக்கு. அக்கா வீட்டு நம்ப்ர் தரட்டுமா அங்கிள்?

“வேணாம் தம்பி. நான் பேச நினைக்கறதை அவுங்க அங்கே இருக்கும் போது பேச முடியாது. உங்க வீட்டிலே அவுங்க இருக்கும் போது பேசினா நல்லா இருக்கும்”

“இன்னும் ரெண்டு நாளிலே வந்துடுவாங்க”

“அது வரையில் தாளாது தம்பி. அவுங்களை இன்னிக்கி மதியம் போல பேசச் சொன்ன நல்லா இருக்கும்.”

“சரி அங்கிள்”. காலைக் கடன் முடியும் வரை அவரது திடீர் ஃபோன் அழைப்ப்பு ஏன் என்ற கேள்வியும் அப்பாவின் மரணம் தன் மீது சுமத்தி இருக்கும் பொறுப்புக்க்ளும் மனதுள் மேல் எழுந்தன. ரியல் எஸ்டேட் விவகாரமோ கட்சி வேலையோ அப்பாவோடு தான் செல்வராசன் பேசுவார். அப்பாவைத்தவிர வேறு யார் எடுத்தாலும் வணக்கம் சொல்லி முடித்துக் கொள்வார். இப்போது அம்மாவிடம் அவசரமாகப் பேச என்ன இருக்கும்? காலை உணவு முடித்து தன் “டிராவெல்ஸ்” அலுவலகம் செல்லும் வரை கேள்வி மனதுள் நெருடியபடியே இருந்தது.

காலையில் முதலில் அலுவலகம் சென்ற பின்னர் தான் வேறெங்கும் செல்வான். அலுவலகப் பெண் வரத் தாமதமானாலும் அவன் திறந்து வைத்துத் துவங்க ஏதுவாயிருக்கும். அலுவலகம் போகும் வழியில் தொடங்கிப் போன பின்னும் முதல் நாள் கூட்டம் பற்றி நிறைய அழைப்புகள்

பதினோரு. மணி போல் மனைவியிடமிருந்து ஃபோன். “சொல்லு சரளா”
“கொஞ்ச நேரத்திலே நான் கிளம்பி வரேன். ஆறு மணிக்கி பஸ் ஸ்டாண்டுக்கு காரை அனுப்புங்க”
“சரி”
“சாப்டீங்களா?”
பேசி முடித்ததும் அம்மாவிடம் செக்வராசன் பேசியதைப் பற்றி சொல்ல நினைத்து அக்காள் வீட்டு லேண்ட் லைனில் அழைத்தான். அம்மாவிடம் மொபைல் அப்பா காலத்திலேயே கிடையாது. அக்கா வீட்டில் வேலை செய்யும் . அம்மாள் ஃபோனை எடுத்தார்.”இங்கே யாரும் இல்லையே தம்பி. உங்க மாமா மெட்ராஸ் போயிருக்காங்க, அவுங்க ரெண்டு பேரும் டாக்டர் கிட்டே போயிருக்காங்க”

மதியம் மூன்று மணிக்கு செல்வராச்னே மறுபடி அழைத்தார். “அம்மா உடனே பேசினா நல்லா இருக்கும் தம்பி”. மறுபடி முயன்றான். இந்த முறை அம்மா தூங்கிக் கொண்டிருந்தார்.
“அப்படி என்ன ரகசியம்? நான் சின்னப் பையனா என்ன?” அடக்க முடியவில்லை. அவருக்கே ஃபோன் செய்து கேட்டான். “என் கிட்டே சொல்லக்கூடாதா அங்கிள்?”
“ஒண்ணுமில்லை தம்பி உங்க அப்பா காலமான பிறகு காலியான இடத்துக்கு எலெக்க்ஷன் வருது. கட்சித் தலைமையிலே நாளைக்கு முக்கியமா ஆலோச்னை பண்றாங்க. உங்க அம்மா சம்மதிச்சா அவுங்க நிக்கலாம். இல்லேயின்னா நீ.” அப்பாவைத்தவிர மாமா தான் அவன் அறிந்து அரசியல்வாதி. அப்பாவும் மாமாவும் சேர்ந்து பணியாற்றி அவன் பார்த்ததே இல்லை.
“தம்பி.. நீங்களே இதை அம்மா கிட்டே பக்குவமா எடுத்துச் சொல்லுங்க. குறிப்பா உங்க அக்கா மாமாவுக்குத் தெரிய வேண்டாம். ”
“சரி”
‘மாலை ஆறு மணிக்குள்ளே சொல்லுங்க”. பிறகு அலுவலக வேலைகளில் ஆழ்ந்து விட்டான். மாலை ஐந்து மணிக்கு சரளா வண்டி அனுப்பியாகி விட்டதா என்று கேட்ட போது தான் குடும்ப நினைவே வந்தது. இந்த முறை அவர்கள் இருவரும் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவுக்குப் போயிருப்ப்து தெரிந்தது. அக்காவின் மொபைலில் அழைத்தான்,
முதலில் ஒரே சத்தமும் சிரிப்பொலியுமாய்க் கேட்டது. “சொல்லுடா தம்பி “என்றாள் அக்கா. ‘அம்மாகிட்டே அர்ஜென்டா பேசணும்”. சத்தமும் சிரிப்பொலியும் மறுபடி. அரை நிமிடத்துக்கும் மேல் ஆன பின் அம்மா “சொல்றா துரை”
“அம்மா உன் கிட்டே உடனே பேசணும்” ஹலோ ஹலோ என்றார் அம்மா. “அம்மா வெளியிலே வந்து பேசு” மறுபடி ஹலோ ஹலோ என்றார் அம்மா.”ஒண்ணும் கேக்க மாட்டேங்குது.மறுபடி பேச்சு சத்தம்.இனி அவரிடம் பேசுவது எப்போது புரியவில்லை. ஆனால் செல்வராசன் விடுவதாக இல்லை.இரவு எட்டு மணிக்கு அழைத்தார். ” அம்மா என்ன சொன்னாங்க?”
“அங்கிள், அம்மாவை என்னாலே ஃபோன்லே பேச வைக்க முடியலே. சாரி.”
‘ஒண்ணு ப்ண்ணுங்க. நீங்களே கிளம்பி வாங்க தம்பி.இன்னும் ரென்டு நாளிலே கட்சியிலே முடிவு எடுக்கறாங்க. இனி தாமதிக்க இயலாது.”
“இன்னைக்கேவா?”
“ஆமா. அம்மாகூட பிறகு சம்பிரதாயமாப் பார்த்துக்கொள்ளலாம். உங்களை நாளையே அறிமுகம் செய்துடலாம். தலைமை அலுவல்கத்துக்குக் காலை பத்து மணிக்கு வந்திடுங்க.” அவரிடம் பேசி முடிக்கும் முன்னே மனைவி தொலை பேசியில் வந்து விட்டாள். “எப்ப வரீங்க?”
அவளிடம் சுருக்கமாகச் சொன்னதும் மிகவும் உற்சாகமாகி விட்டாள். அவன் வீட்டுக்குள் நுழையும் போது பை தயாராக இருந்தது, அவன் உணவு உண்ணும் போது ஏதோ அவன் இப்போதே கட்சியால் தேர்ந்து எடுக்கப்பட்டது போல துள்ளலாய்ப் பேசிக் கொண்டிருந்தாள்.

பேருந்துப் பயணத்தில் சரியான தூக்கமில்லை. ஒரு விடுதியில் அறை எடுத்து உறங்கினான். எட்டு மணிக்கு கடமை தவறாமல் “அலாரம்” அடித்தது.வரவழைத்த தேனீரை அருந்தும் முன்பே செல்வராசன் தொலை பேசியில் தலைமை அலுவலகம் அருகே உணவு விடுதியில் சந்திக்கலாம் என்றார். ஒன்பதரை மணிக்கு அங்கே போன போது ஒரு உணவு மேசையில் இருந்தார்.
“தம்பி, அம்மாவை அக்கா வீீட்டிலேயிரிந்து ஏன் பேச வேண்டாமின்னு சொன்னேன்னு புரிஞ்ச்சுதா?”
புரியவில்லை என்று தலையாட்டினான்.
“உங்க மாமா இந்த வாய்ப்புக்காகத் தீவீரமா வேலை செய்துக்கிட்டு இருக்காரு”
“இது எங்களுக்குத் தெரியாது”
“உங்களைத் தீவீர அரசியலுக்குக் கொண்டு வர உங்க அப்பா எண்ணி இருந்தாரு. அவர் உயிரோட இருந்திருந்தா பேச்சாளர் பயிற்சிக்கு அனுப்பி இன்னேரம் மேடை ஏற்றி இருப்பார்”அவனுக்கு சற்றே அதிர்சியாக இருந்தது. பொதுவாக அவனை மதித்து அவர் எந்த குடும்பப் பிரச்சனை பற்றியும் ஆலோசித்ததில்லை.
“உங்க மாமாவுக்கும் உங்க அப்பாவுக்கும் நிறைய விஷையங்கள்ள கருத்து வேறுபாடு இருந்திச்சு. இப்ப உங்க மாமா வேகமாத் தன் காய்களை நகர்த்தராரு”

அவனோ அல்லது அவன் அம்மாவோ நிற்பதுதான் சரியாக இருக்கும் என்று செல்வராசன் விளக்கினார். பதினொரு மணி போல இருவரும் தலைமை அலுவலகத்துள் இருந்தனர். தயாராகக் கொண்டு வந்திருந்த பொன்னாடையை அமைச்சருக்குப் போர்த்தி வணக்கம் சொல்ல சுமார் ஒரு மனி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. புன்முறுவலுடன் அதை ஏற்ற அமைச்சர் ” சுந்தரம் வாரிசு துரையரசன் கட்சி பணிக்காக முன் வந்திருகிறார். வாழ்த்துக்கள்.” என்றார். செல்வராசன் அப்பா பற்றி அமைச்சரிடம் விவரித்தபடி பேசப் பேச துரையரசனுக்கு அப்பா பற்றி இத்தனை விவரம் ஏன் தெரியாமற் போனது என வியப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது. பொதுவாகக் கட்சி பற்றி அவர்கள் இருவரும் பேசியவையும் துரையரசனின் புரிதலுக்கு சற்றே சிரமம் தரும் விஷயங்களாக இருந்தன. விடை பெற்றுக் கிளம்பும் போது ” தொகுதி பொறுப்பாளர்ங்கற முறையில் தம்பியின் பெயரைக் கண்டிப்பாப் பரிந்துரை செய்யறேன்” என்றார் அமைச்சர்.

பகலுணவுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா நிர்வாகிகளையும் செல்வராசன் அறிமுகம் செய்து வைத்தார். பல பிரமுகர்களையும் சந்திக்க முடிந்தது. கிளம்பும் முன் அமைச்சரை இன்னொரு முறை பார்க்க எண்ணினார் செல்வராசன். சாளரம் வழியே பார்த்த போது துரையரசனின் மாமா மற்றும் இருவர் அமைச்சருடன் உரையாடுவது தெரிந்தது. பொருள் பொதிந்த விதமாகத் தலையை ஆட்டிய செல்வராசன் “கிளம்புவோம்” என்னும் விதமாக சைகை செய்தார்.

காரில் ஏறிய பின் “இப்போப் புரிஞ்சிதா தம்பி நான் ஏன் அவசரமா உங்களை வரச்சொன்னேன்னு” என்றார். “உங்க மாமா நீங்களோ அல்லது அம்மாவோ போட்டியிட ஆர்வமாவே இல்லயின்னு சொல்லிக்கிட்டிருக்கிறார். கட்சித் தலைமயைப் பொறுத்த அளவிலே உங்களை வேட்பாளரா அறிவிக்கறது வெற்றிக்கு வழி வகுக்கும்னு முடிவு எடுப்பாங்க. கவலையில்லே. செலவுக்கு எற்பாடு செய்துட்டீங்களான்னு கேப்பாங்க. தயாரா இருக்கேன்னு சொல்லுங்க. நம்ம ஆதர்வாளரின்னு நிறைய நண்பர்கள் இருக்காங்க. கவலையில்லே.” என்று பலவிதமான அறிவுரை கூறி அவனை விடுதியில் இறக்கி விட்டுச் சென்றார்.

துருவித் துருவி விவரம் கேட்ட மனைவியிடம் தயங்கித் தயங்கி விளக்கினான். ஏனோ மகிழ்ச்சி ததும்ப விளக்க முடியவில்லை. ஆனால் அவளோ படு உற்சாகமாக பதிலளித்தாள். “உங்க முகம் பட்டிதொட்டியெல்லாம் பளிச்சிடப்போவுது. சந்தோஷப்படாம மென்னு முழுங்கரீங்க. அப்பாவுக்கு நல்ல மதிப்பு தொகுதி முழுசும். நீங்க ஜாம் ஜாம்னு ஜெயிச்சு வருவீங்க” என்றாள். கட்சித் தலைவருங்ககிட்டே உங்க மீடிங்க் நல்ல படியா முடிஞ்சா சமயபுரத்து ஆத்தாவுக்கு முகம் வாங்கி போடறதா வேண்டிக்கிட்டிருக்கேன். வரும்போது சமயபுரத்துல இறங்கி சாமி கும்பிட்டுட்டு முகம் வாங்கிப்போட்டுட்டு வாங்க. ஆத்தா சன்னதி எதிரிலே இருக்கற உண்டியல்லே போடணும்.”

முகம், கை,காது,கண் என நேர்ந்து கொண்டோருக்கென பல வடிவ வெள்ளித் தகடுகள் மூங்கிற் தட்டுக்களில் கூவிக் கூவி விற்றோர் வழி மறித்தனர். பை, செருப்பை பத்திரப்படுத்திய பிறகு இருபது ரூபாய் கொடுத்து ஒரு முகம் வாங்கினான். தரும தரிசனம் மிகப் பெரிய வரிசையாய்த் தென்பட்டது. சிறப்பு தரிசனத்தில் பத்து ரூபாய் வரிசையில் இணைந்தான்.

‘ப’ வடிவில் பல திருப்பங்களைத் தாண்டி கிட்டத்தட்ட சன்னதியை நெருங்கும் போது துரையரசனுக்கு முன்பே நின்றிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் குரலும் உடலும் நடுங்கக் குதித்து ஆடியப்டி முன்னும் பின்னும் நகர அவன் சுதாரித்துக் கொண்டு பின்னகர்ந்தான். அவளது உறவினர்கள் அவளைத் தாங்கிப் பிடிக்க ஒரு ஆண் அவள் எதிரே கை கூப்பி நின்றான்.

“உன் குல தெய்வம் ஆருடா?”
” நீ தான் தாயே”
“பின்னே ஏன்டா இத்தனை நாளா வரலே?”
“தப்புத் தான் தாயே. மாப்புக் கேட்டுக்கறேன்”
“நீ ஏரோட்டர நெலம் ஆருது?”
“என்னுதான் தாயே. நல்ல வெள்ளாமை உன் அருளாலே”
“அப்புறம் ஏண்டா உன் புள்ள குட்டிங்களை தவிக்க உட்டு அண்ணன் குடும்பத்துக்கு வாரி உடறே?”
“கொஞ்சம் சிரம திசை அண்ணன் வூட்டுலே. அதான்”
“தனக்கு மிஞ்சித்தான்டா தானமும் தருமமும்”
“சரி தாயே”
“ஏய். எனக்குப் புதுசா பட்டுப் புடவை வாங்கிச் சார்த்தறேன்னு வேண்டிகோடா”
“சரி தாயே”
பின்னேயிருந்து ஒருவர் அவனை “நீங்க நகருங்க” என்றார் தோளில் தட்டி. அவனும் மற்றோரும் அந்தப் பெண் மீது படாமல் முன்னகர்ந்தனர்.

கும்பல் அவனைத் தள்ளிய படியே அவசர தரிசனம் செய்வித்து வெளியிலும் சேர்த்து விட்டது. குங்குமத்தை மடித்து சட்டைப் பையில் வைக்கும் போது தான் கையில் வெள்ளி முகம் உறுத்த அதை சன்னதி உண்டியலில் போட மறந்த தவறு கவனத்திற்கு வந்தது. இனி மறுபடி வரிசையில் செல்லத் தென்பில்லை. ஒரு வரிசையின் கடைசியில் இருந்த ஒரு பெரிய அம்மாள் அன்புடன் உண்டியலில் அதைச் சேர்க்க ஒப்புக் கொண்டார். வரிசை நகர்ந்தது. கொடுக்கும்முன் இன்னொரு முறை முகத்தை பார்திருக்கலாமோ என்று தோன்றியது.

Series Navigation

author

சத்யானந்தன்

சத்யானந்தன்

Similar Posts