நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


“மாதராகிய நாங்கள் ஆண்களின் நேர்மைக் குணத்தை எதிர்பார்த்திருந்தால் நிச்சயம் திருமணம் நடக்கப் போவதில்லை எமக்கு.”

“என் மீது குறிவைத்து நீவீர் என் தந்தையுடன் ஓர் வர்த்தக ஒப்பந்தம் செய்து வைத்திருந்தீர் ! உமது குறி தவறி விட்டது. ஒரு பெண்ணுக்கு வேண்டிய ஒப்பந்தம் திருமணம். இல்வாழ்வு முறையில் இப்போது நான் உம்மை என் நண்பராக ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது ?”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Miss Ellie in The Heartbreak House)

“நானோர் உபதேசி அல்லன். நீ வழிகேட்ட நானொரு வெறும் சகப் பயணியே ! எனக்கும் உனக்கும் முற்போக்காக இருக்கும் ஓர் எதிர்பார்ப்பைச் சுட்டிக் காட்டுவோன் நான்.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Bishop of Chelsea)

++++++++++++++++

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

***************************

(இரண்டாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : இரவு

அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார்.

+++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -2

(மூவங்க நாடகம்)

(சென்ற வாரத் தொடர்ச்சி)

மிஸ். எல்லி: மிக்க நன்றி மிஸ்டர் மாங்கன், இப்படி மனம் திறந்து பேசுவதற்கு ! என்னைப் பிடிக்க வில்லை என்பதைச் சாமர்த்தியமாகச் சொல்வதற்கு மிக்க நன்றி !

மாங்கன்: நீ என்னைப் புறக்கணிப்பதை நானின்று நேராகவே பார்த்து விட்டேன் ! நீதான் மனம் மாறி விட்டாய் ! என்னை திருமணம் செய்ய விரும்புகிறாயா நீ இப்போது ?

மிஸ் எல்லி: அப்படித்தான் நான் நினைக்கிறேன் ! ஏன் நான் உம்மைத் திருமணம் செய்யக் கூடாது ?

மாங்கன்: மிஸ் எல்லி ! என் மனமும் மாறி விட்டது !

மிஸ் எல்லி: நாமிருவரும் இல்லத் தம்பதிகளாய் ஒருமித்து வாழ முடியும் என்று நன்னம்பிக்கை உள்ளது எனக்கு !

மாங்கன்: நீ ஆடவர் குணத்தில் நேர்மை எதிர்பார்க்கும் பெண் அல்லவா ?

மிஸ். எல்லி: மாதராகிய நாங்கள் ஆண்களின் நேர்மைக் குணத்தை எதிர்பார்த்திருந்தால் நிச்சயம் திருமணம் நடக்கப் போவதில்லை எமக்கு, மிஸ்டர் மாங்கன் !

மாங்கன்: (வெகுண்டு) மங்கையான நீ மாதராக எண்ணிக் கொண்டு பேசுவாயா ? உனக்கு நேர்மை உள்ளதா ?

மிஸ். எல்லி: ஆமாம். ஆனால் உமக்குத்தான் நேர்மை இல்லை.

மாங்கன்: நீ என்னைப் புறக்கணித்தாலும் நான் உன்னை ஏற்க வேண்டுமா ?

மிஸ். எல்லி: திருமண உறுதியை மீறி நீவீர் விலகிச் செல்வீரா ?

மாங்கன்: நான் விலகிச் செல்ல வில்லை ! ஆனால் என் இதயம் வேறு ஒருத்தியை நாடிச் செல்லலாம் இப்போது !

மிஸ். எல்லி: அப்படி யென்றால் என்ன அர்த்தம் இப்போது சொல்கிறேன். என் மனமும் வேறொருவரைத் தேடிச் செல்லலாம் என்று சொல்வேன் !

மாங்கன்: ஏட்டிக்குப் போட்டியா ? என்ன இது கேலி விளையாட்டா ?

மிஸ். எல்லி: கேலியும் இல்லை. விளையாட்டும் இல்லை ! நீவீர் சற்று முன் சொன்னது உண்மையா ? யார் அந்த மாது ?

மாங்கன்: சொன்னால் நம்புவாயா ? நான் உன் தோழி ஹெஸியோனை நேசிக்கிறேன் ! அவள் அருகில் நீண்ட காலம் இருக்கவே நான் விரும்புகிறேன் !

மிஸ். எல்லி: ஓ ! அப்படியா ? அவள் திருமணம் ஆனவள் இல்லையா ?

மாங்கன்: அதனால் என்ன ? ஹெஸியோன் தன் கணவனை வெறுப்பது நன்றாகத் தெரிகிறது ! அவள் கணவனும் வேறு ஒருத்தியை விரும்புகிறான் ! அது சரி ! நீ யாரை நேசிக்கிறாய் ?

மிஸ். எல்லி: நான் ஹெக்டரை விரும்புகிறேன் ! என் தோழியின் கணவன் !

மாங்கன்: (அதிர்ச்சியோடு) என்ன ? ஹெஸியோன் எனக்கு ! ஹெக்டர் உனக்கா ? உன் தேர்ந்தெடுப்பு வியப்பாக இருக்கிறதே ! ஹெக்டர் திருமணத்தை எப்படி நீ முறிப்பாய் ?

மிஸ். எல்லி: அது என் கவலை ! உமது தேர்ந்தெடுப்புதான் எனக்கு வியப்பாக உள்ளது ! ஹெஸியோன் என் அருமைத் தோழி ! ஆதலால் நாம் எப்போதும் நண்பராய் இருக்கலாம்.

மாங்கன்: இந்த மாதிரி ஒப்பந்தம் எல்லாம் எனக்குப் பிடிக்காது.

மிஸ். எல்லி: மிஸ்டர் மாங்கன் ! என் மீது குறிவைத்து நீவீர் என் தந்தையுடன் ஓர் வர்த்தக ஒப்பந்தம் செய்து வைத்திருந்தீர் ! உமது குறி தவறி விட்டது. ஒரு பெண்ணுக்கு வேண்டிய ஒப்பந்தம் திருமணம். இல்வாழ்வு முறையில் இப்போது நான் உம்மை என் நண்பராக ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது ?

மாங்கன்: நான் அப்படித் தேர்ந்தெடுப்பதில்லை ! உன் தந்தை போல் நானொரு மந்தை ஆடு இல்லை.

மிஸ். எல்லி: (கோபத்தோடு) என் தந்தையின் பூட்ஸைக் கூடத் துடைக்கும் தகுதி உமக்கில்லை மிஸ்டர் மாங்கன் ! உம்மை ஒரு நண்பராக நான் ஏற்றுக் கொள்வதே உமக்கு அளிக்கும் மதிப்பென்று தெரிய வில்லையே ! நமது திருமண உறுதியைப் புறக்கணிக்க உமக்கு முழு உரிமை உள்ளது. அப்படி நிராகரித்தால் ஹெஸியோன் வீட்டுக்குள் நீவீர் மீண்டும் நுழைய முடியாது ! அந்தத் தடுப்பைக் கடைப்பிடிக்க நான் முன் நிற்பேன் !

மாங்கன்: (கோபத்தோடு) நீ ஓர் சின்னப் பெண் அரக்கி ! சாது போல் தெரியும் நீ பெண் காதகி ! இந்தக் கோமான் மாங்கனை நீ எளிதில் விரட்டவும் முடியாது ! மிரட்டவும் முடியாது ! நான் இப்போதே போய் ஹெஸியோனிடம் நீ அவளுடைய அருமைக் கணவனை நேசிப்பதாய்ச் சொல்லட்டுமா ?

மிஸ். எல்லி: (புன்னையுடன் கண்ணியமாக) அது ஹெஸியோனுக்குத் தெரியம் !

மாங்கன்: (வெகுண்டு) நீயே அவளிடம் சொல்லி விட்டாயா ?

மிஸ். எல்லி: இல்லை ! தோழி ஹெஸியோன் அதை என்னிடம் கூறினாள் !

மாங்கன்: (நெற்றியில் இருகைகளை வைத்துக் கொண்டு) பொறுக்க முடியவில்லை என்னால் ! என் தலை வெடிக்கப் போகிறது ! இது ஒரு பைத்திய இல்லம் ! இங்கு வாழும் மாதர் அரக்கியர் வம்சம் ! இந்தப் பிசாசுகளைத் திருமணம் செய்பவனுக்கும் பைத்தியம் பிடித்து விடும் ! (தலை சுற்றி நாற்காலியில் விழுகிறார்)

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : StanleyWeintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 27, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts