விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

இரா.முருகன்


1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

இன்னிக்குப் பலபலன்னு விடிஞ்ச மொதக்கொண்டு உனக்கு கடிதாசு எழுதிண்டு இருக்கேன். வயித்திலே பசி. தாகம். தெருவோடு போற வெள்ளைக்காரன் கிட்டே வயித்தைத் தொட்டுக்காட்டி பல்லை இளிச்சு ஒண்ணும் ரெண்டுமா காசு தண்டினேன். நாலு ரொட்டித் துண்டு. நதித் தண்ணீ தகர டப்பாவிலே. போதும்.

இன்னும் கொஞ்சம் நேரத்திலே இருட்டு வந்து கவிஞ்சுடும். அப்புறமா ஆத்தங்கரை ஓரமா, இல்லே பாலத்துலே ஒரு முடுக்குலே கட்டையைக் கிடத்தினா காலம்பற பொழச்சுக் கிடந்தா பாத்துக்கலாம். பிச்சைக்கார பொழப்பு.

அதுக்குள்ளே உனக்கு எழுதி முடிச்சுடணும். தபால்லே அனுப்பக்கூட காசு கிடையாது. அனுப்பினாலும் எனக்குத் தெரிஞ்ச விலாசத்துலே நீ இருப்பியோ, உனக்குப் படிச்சு சொல்ல யாராவது உண்டோன்னு தெரியாது. நீ படிக்காட்டாலும் உன் தாயார் புரிஞ்சுப்பான்னா நிம்மதியோட சாவேன். லோலா என்னைத் தீர்த்துத் தலை முழுகினாலும் லவலேசமாவது அபிமானம் என்பேரிலே இருக்காதா என்ன?

கிராமத்துலே இருந்து கோமாளி உடுப்பும் செத்தவன் கிட்டே திருடின காசும் வயித்திலே அவன் எச்சில் ஊறின ரொட்டியுமா ஓடினேன்னு சொன்னேன் இல்லியா? கால் சுபாவமா நம்ம ஊரு, நம்ம வீடுன்னு இழுக்கறது. மனசு சட்டுனு முழிச்சுண்டுது. பொணமே, எங்கேடா வீடும் மண்ணாங்கட்டியும் தெருப்புழுதியும்?

லோலாச்சி ஒரு தீர்மானத்தொட எல்லாத்தையும் தீர்த்து விடுதலைப் பத்திரம் வாங்கித்தான் ரெண்டு நாளாச்சே. இனிமே படி ஏறினா உன் பொட்டலத்தை அறுத்து வாயிலேயே திணிச்சு சாக்கடைப் பன்னி மாதிரி தெருவிலே கிடத்திடுவா.

ஆமாடா கொழந்தே வைத்தாஸே. கல்யாணியோட குச்சே கதின்னு கிடந்தது கூட உங்கம்மாவுக்கு ஒண்ணும் பஞ்ச மாபாதகமாப் படலே. செட்டியார் கிட்டே சேர்த்து வச்சிருந்த தொகையிலே குறையறதே, என்ன பண்ணினீருன்னு கேட்டா.

நான் சீட்டுப் பணத்துலே கொஞ்சம் நெருக்கடி வந்ததாலே எடுத்துண்டேன்டீன்னு சமாளிச்சேன். சீட்டுக் கணக்கைக் காட்டுடா நாயேன்னு விடாம கேட்டதோட மட்டுமில்லாம, அரைகுறையா கணக்கு வழக்கு தெரிஞ்ச ஒரு கிழட்டு காப்பிரியை அதையெல்லாம் பரிசோதிக்கச் சொல்லணும்னு கூட்டி வந்து வேறே பிடிவாதம்.

ஏண்டி சிறுக்கி, நீ ஆம்படையானா, நானா? போகத்துலே கூட நான் தானேடி மேலே எப்பவும்? காசும் மசிரும் உனக்குச் சொல்லிட்டு நான் புடுங்கணும்னு எந்தத் தேவிடியாப் புள்ளை சாஸ்திரத்துலே எழுதி வச்சுருக்கு. சொல்லுடி தேவிடியாளேன்னு நான் அவள் பிருஷ்டத்துலே சூரல் கம்பாலே ரெண்டு தட்டு பலமாத் தட்டினேன்.

இப்படி ஆரம்பமான சண்டை அன்னிக்கு அவ என் இடுப்புக்குக் கீழே இறுக்கிப் பிடிச்சு நெறிச்ச வலியிலே பிராணன் போக நான் கத்தி மூர்ச்சையான மாதிரி மூச்சு அடக்கிச் சவம் போல கிடந்தேன்.

உனக்கும் எனக்கும் தீர்ந்துதுடா ரெட்டி. உன் அசுத்தமான குதம் இந்தப் படியேறி இனிமே வந்தா வெட்டிப் பலி வைக்கவும் யோஜிக்க மாட்டேன்.

கொட்டையை நசுக்கிண்டே நாலஞ்சு காகிதத்தைக் கொடுத்து கையொப்பம் போடச் சொன்னா. கல்யாணியோட ராக்கூத்து அடிச்சுட்டு வந்த அசதியிலே எனக்கு உடம்பே ஓஞ்சு கிடக்கு. இவளானா பத்ரகாளியா ரகளை பண்றா. அக்கப்போர் முடிஞ்சா கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கலாம்.

விடுடி ராட்சசின்னு என்ன மன்னாடியும் பலம் இல்லே. போறது போன்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

கோர்ட்டு கச்சேரி நாலு நாள் அடச்சிருக்கு. திறந்த உடனே சட்டப்படி உனக்கு ரத்து பண்ணின உத்தரவு வந்துடும். ஓடிப் போ சாத்தானேன்னு காறித் துப்பினா.

ஜீவனாம்சம்னு ஒரு சல்லி கூட கொடுப்பேன்னு சொப்பனத்திலேயும் நினைக்காதேடி தடிச்சின்னு வாசல்லே நின்னு மீசையைத் தடவிட்டு கத்தினேன்.

போடா நோஞ்சான். உன் சிரத்திலே இருக்கற ரோமமும் இதுலே எனக்கு இருக்கறதும் ஒண்ணுதான்னு லோலாச்சி எங்கேயோ கைவச்சு அபிநயிச்சா.

நினைச்சுண்டா வழிச்சுப் போடற அந்த மயிருக்குக் கிடைக்கற மதிப்பு கூட இந்த ரெட்டியானுக்கு இல்லை. அங்கே கோமாளி உடுப்போட படியேறி அவளோட புதுப் புருஷனுக்கு, அதாண்டா உன்னோட இன்னத்தி அப்பன். அவனோட நிறுத்தினாளோ, இன்னும் நாலஞ்சு அப்பனை உனக்கு ஏற்படுத்தியிருக்காளோ இந்தக் கடுதாசை நீ படிக்கற போது. தெரியலை போ.

எவனாவது கருப்பனுக்கு ஒத்தாசையா, அவளோட கட்டில் பக்கத்துலே நின்னு மண்ணெண்ணெய் விளக்கு பிடிக்க எனக்கு கவுரதை இடம் கொடுக்காதுடா வைத்தாஸே.

ஓடி ஓடி எங்கெங்கோ குச்சிலும் சாவடியிலும் ஊர்ப் பொதுவிலும் எல்லாம் ராத்தங்கி, யார் யாரோ பெரிய மனசு பண்ணிக் கொடுத்த சகலமான ஆகாரத்தையும் உசிரோடு ஜீவிச்சு இருக்க வேண்டிய ஒரே காரணத்துக்காக சந்தோஷமா ருஜிச்சு சாப்பிட்டேன். நாலஞ்சு காப்பிரிச்சிகளுக்கு ஆம்பிளை தேவடியானாவும் படுத்துப் பணம் பண்ணினேன். தடிமாட்டுக் கருப்பனோ, ஒடிசலா உசரமா வளர்ந்து நிக்கற வெளுத்தானோ கிடைக்காட்ட, வத்தக் காய்ச்சிப் பய வேண்டியிருந்தது அந்தச் சீமாட்டிகளுக்கு.

உங்கம்மா லோலாவைப் பத்தி அப்படி நான் சொன்னா நீ கோபப்படுவே. உனக்கு அது நியாயம். எனக்கு இதையெல்லாம் சொல்றது மனசுக்கு இதம். என்னமோ போ.

கோமாளி உடுப்போட போனதாலே அங்கங்கே கூத்தாட வேண்டியிருந்தது. கள்ளுக் குடிச்ச குரங்கு மூக்குப் பொடியை ஆசனத் துவாரத்திலே ஏத்திண்டு குதிக்கற மாதிரி யாரோ டொம் டொம்முனு கொட்டி முழக்கின தாளத்துக்கு ஆடினேன். இங்கிலீஷும் தமிழும் நம்ம ஊர் பாஷைகளோட கலப்புமா கர்ண கடூரமா வேறே பாடினேன். எவனையும் உக்கார வச்சு சோத்துக்காக வாய் உபச்சாரம் பண்ணலே. மத்த எல்லாம் பண்ணியாச்சு ஏக கோலாகலமா.

சமுத்திரக் கரைப் பட்டணத்துக்கு வந்து சேர்ந்ததும் முதல் காரியமா தாணாக் கச்சேரி எதிலும் என் பெயர் அங்க அடையாளம் எழுதி ஒட்டி வச்சிருக்கானான்னு மனசு படபடக்கத் தேடினேன். ஆயிரக் கணக்குலே காசை மோசம் பண்ணிட்டு கட்டின பெண்டாட்டிக்கும் பட்டை நாமம் சாத்திட்டு பொழுது ஒரு பக்கம் விடிஞ்ச போதே தப்பிப் பொழச்சு வந்தவன் ஆச்சே.

ஒருத்தன் ரெண்டு பேர் இல்லே லோலாச்சி அதுவும் இல்லாட்ட பெரிய கருப்பன் செட்டி இப்படி யாராவது புகார் எழுதின மகஜர் கொடுத்திருந்தாலும் துரைத்தனத்து போலீஸ் மோப்பம் பிடிச்சுண்டு வந்து பிருஷ்டத்திலே வெடுக்குனு பிடுங்கி திரும்ப இருட்டு ஜெயில்லே ஜீவ பரியந்தம் அடைச்சு வச்சுடும். மெட்றாஸ்லேயாவது களி கிடைக்கும். இங்கே பூச்சி புழு, நத்தைன்னு வென்னீர்லே வேகவைச்சுப் போடுவான்னு நினைக்கறேன்.

நல்ல வேளையா எந்த தாணாக் கச்சேரியிலும் என் பெயர் இல்லை. லோலா நல்லவதான். போன சனியன் போய் ஒழிஞ்சது. காசு போனா என்ன சம்பாதிச்சுக்கலாம். நிம்மதி திரும்பக் கிடைச்சது பெரிய சங்கதி இல்லையான்னு சமாதானம் செஞ்சுண்டு அடுத்த வேலையைக் கவனிக்கப் போயிருக்கலாம்.

தோட்ட வேலை ஜனங்களுக்கு இருக்கவே இருக்கு பிராப்தமும் கலியும். நம்ம பிராப்தம் சேர்த்த பணத்தை ரெட்டிக் கண்டாரவாளி அடிச்சுண்டு போகணும்னு நம்ம தலையெழுத்து இருந்தா யார் மாத்த முடியும். தன நஷ்டம்னு ஜோசியன் சொன்னது பொய்க்குமா என்ன? கலி முத்தலை. காசு போனாலும் உசிரு மிச்சம்.

இப்படி மனசைத் தேர்த்திண்டு கரும்புத் தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சக் கிளம்பிப் போயிருக்கலாம். வண்டை வண்டையா ரெண்டு மாசம் திட்டிட்டு பொண்டாட்டியோட படுத்து எழுந்து நித்தியப்படி காரியத்தை கவனிக்கறதுலே அவனவன் முழுகியிருக்கலாம்.

ரெண்டு மாசமாவா நான் தேசாந்தரியா சுத்தினேன்?

பின்னே இல்லியா? இனிமேலும் திரிய முடியாதுன்னு ஸ்திதி. உடுத்த உடுப்பு நஞ்சு போய் லாலி லாலின்னு குண்டியிலே கிழிஞ்சு தொங்கறது. கால்லே வங்குசொறி மாதிரி ஏதோ பற்றி சதா அரிப்பு. இனிமேலும் சுத்தவோ ஆடிப் பாடி பிச்சை எடுக்கவோ கருப்பிகளுக்கு தேக ஊழியம் செய்யவோ இயலாத ஸ்திதி.

பகவானே பார்த்து அனுப்பின மாதிரி யுத்தம் பலமாச்சு. அது வந்ததே ரொம்ப தாமதமாத்தான் எனக்குத் தெரியும். கல்யாணி தான் ஒரு ராத்திரி ஜோலி எல்லாம் முடிஞ்சதும் யுத்தத்துக்கு நம்ம ஊர்லே மட்டும் ஆள் சேர்க்கலே ரெட்டிப் பயலே, இங்கேயும் கட்டு மஸ்தான பசங்களை தேடிக்கிட்டு அலையறாங்கன்னா.

நான் வேணா அதுலே ரெண்டு மூணு பேரை உனக்குப் பிடிச்சுண்டு வரட்டான்னு கேட்டேன். அவள் வேறே யாரோடயாவது சல்லாபமா இருக்கறதை குரிச்சி போட்டு உக்காந்து ரசிக்கணும்னு என்னமோ வெறி. அதுலே அவ வீட்டுக்காரன் மட்டும் வேண்டாம்னேன். அவன் குரங்கு நாயை விடக் கேடு கெட்டவன் ஆச்சே.

கல்யாணி சொன்ன வார் ஆபீசை கடல் கரைப் பட்டணத்துலே பார்த்தேன். நாலோ அஞ்சு பேரா காப்பிரிகள் கால் சட்டையை மாட்டிண்டு தலையிலே பழைய கங்காணித் தொப்பியை பழசு விக்கற கடையிலே வாங்கியோ குப்பையிலே பொறுக்கியோ தூசி தட்டிப் போட்டுண்டு வரிசையிலே நின்னுண்டு இருந்தது கண்ணுலே பட்டுது. நானும் போய் வரிசைக் கடைசியிலே நின்னேன்.

கால்லே அரிப்புத் தாங்காமா சொரிஞ்சு ரத்தம் கட்டிப் போயிருந்த இடத்தைச் சுத்திக் கட்டியிருந்த சுருணையை பிரிக்கலேன்னு உறைச்சது. இதோட போனா குஷ்டரோகின்னு விரட்டிடுவானேன்னு அவுத்து வீசினேன். கேட்டா, ராத்திரியிலே இருட்டுலே ஏதோ ஜந்து கடிச்சு படை மாதிரி கிளம்பிடுத்து. காப்பிரி வைத்தியன் மருந்துலே சுவஸ்தமாயிண்டு இருக்குன்னு சொல்லிக்கலாம். கப்பல்லே ஏத்தி எங்கேயாவது அனுப்பின அப்புறம் நடுக் கடல்லே போடா திரும்பன்னு அனுப்ப முடியுமா என்ன?

எங்கே கூட்டிண்டு போவான்? யுத்தம் எப்படி பண்றது? பிராமணனாப் பிறந்தவன் ஷத்திரியனா யுத்தம் பண்ணவா முடியும்? யாரு, நீயாடா பிராமணன்ன்னு மலையாளத்தான் சிரிக்கற சத்தம் ஸ்பஷ்டமாக் கேட்டது. அந்தக் களவாணி எங்கேயும் போகலே. என் மனசுலேயே விக்கிரமாதித்தன் சுமந்து போன வேதாளம் மாதிரி உப்பு மூட்டை தூக்க வச்சு சதா கூடத்தான் இருக்கான். கல்யாணியைக் கூட அசுர பலத்தோட மூணு போகம் அனுபவிச்சது அவன் தான். நான் இல்லே.

நானும் இல்லே ஸ்வாமி. உடம்பு இல்லாம உசிரோட மாத்திரம் அலைஞ்சுண்டு இருக்கேன். ஸ்தாலி சொம்பைக் கொடுத்தா வச்சுக்க துப்பு இல்லாம தொலைச்சுட்டே. அது கோர்ட்டு கச்சேரிக்கும் உன் தமையன் வீட்டுக்குமா உதச்சு விட்ட பந்து மாதிரி மாறி மாறிப் போய் விழுந்துண்டு இருக்கு. உள்ளே எங்கம்மா வேறே கடைத்தேத்துடான்னு கெஞ்சறா. என் பொண்ணு குஞ்சம்மிணி.

அவன் வழக்கம்போல பிலாக்கணம் பாட நான் காலில் சுத்திச் சீழ் படிந்த சுருணையோடு கூட அவன் நினைப்பையும் அவிழ்த்து வீசி எறிந்தேன். பின்னாலே பார்த்தேன். இன்னும் ஏழெட்டு பேர் என்னை விட சொங்கியா நின்னாங்க. அவங்களை முன்னாலே போக விட்டுட்டு நான் ஆகக் கடைசியா நின்னேன்.

அவா யாரையும் துரை ஏறெடுத்தும் பார்க்கலே. நான் இங்கிலீஷ்லே வந்தனம் சொல்லி யார் என்னன்னு வர்த்தமானம் வேறே கூட்டிச் சேர்த்தேன். வாராங்கல் ஸ்வதேசி வரதராஜ ரெட்டி சன் ஓஃப் எர்ரா ரெட்டி சன் ஓஃப் ஒபுல் ரெட்டிகாரு.

துப்பாக்கி பிடிச்சு பழக்கம் இருக்கான்னான். கட்டைப் பேனாவாலே கணக்கு வழக்கு எழுதியிருக்கேன். நல்லா சைவ பட்சணம், மிலிட்டேரி சாப்பாடு எல்லாம் பாகப்படுத்துவேன்னு சொன்னது அவனுக்கு ரொம்பவே இதமா இருந்தது போல.

யோவ் ரெட்டி, துப்பாக்கி பிடிக்க அப்பியாசம் பண்ண வேண்டி வரும். உம்மை இப்போ சிரத்தைக்கு லங்கர்லே சேத்துக்கறோம். சரியான்னான்.

லங்கர்னா என்ன எழவுன்னு தெரியாம முழிச்சேன். ஏய்யா, மதராஸ்காரன்கறீர். நான் இங்கிலாந்து தேசத்துலே பொறந்து விழுந்தது முதல்கொண்டு இருந்தாலும் நாலு வருஷம் டெல்லிப் பட்டணத்துலே இருந்து ஹிந்துஸ்தானி தெரிஞ்சவன். நீயும் அது பேசறவன் தானே? லங்கர் தெரியாதா? ஹிந்துஸ்தானி வார்த்தை.

ஸ்வாமி, மன்னிக்கணும். இங்கிலீஷும் கணக்கு வழக்கையும் தவிர ரெட்டிப் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடத்துலே அடிமை பாஷை எதுவும் போதிக்கலே. தனியா வச்சு படிக்க அதுகள்லே ஒரு குசுவும் இல்லேன்னு ரொம்ப அடக்கமா சொன்னதும் அவனுக்குப் பிடிச்சுப் போயிடுத்து.

மாத்ருபாஷையை மண்ணை வாரித் தூத்தற தாசாதிதாசக் கருப்பனுக்கு கடாட்சம் காமிக்கறதே தனக்குப் புண்ணிய காரியம்னு அவனுக்குப் பட்டிருக்கும். அஞ்சேல்னு அடைக்கலம் கொடுத்தான்.

லங்கர்னா சமையல் கட்டாம். வாழக்காய் நறுக்கித்தர, மீன் செதில் போக தேச்சு சுத்தம் பண்ண, மாடும் பன்னிக் கொடலும் எடுத்து மாமிசம் வறுக்க, துரை சாப்பிட ரொட்டித் துண்டும் வெண்ணெய்க் கட்டியும் கொண்டு போய் ஏந்தன்னு வேலை.

யுத்தத்துலே துப்பாக்கியைத் தூக்கிட்டு ஓடறவனுக்கு நீதான் போஷாக்கு கொடுக்கப் போறே. பக்கத்திலேயே கண்ணி வெடி வெடிச்சாலும் கலங்காம ரொட்டி தட்டி அடுக்கிட்டு இரு. மெடல் குத்தி கவுரவம் பண்ணுவாங்க உசிரோட, கையோட காலோட ரிட்டயர் ஆனா.

அவன் என் தோளில் தட்டினான். ஜன்ம எதிரி எந்த தேசம்? யாரெல்லாம் லோக மகா யுத்தத்துலே நமக்கு இஷ்ட மித்திரங்கள்? எதுக்காக யுத்தம்? எங்கே எல்லாம் போய் சண்டை போடணும், இல்லே கோதுமை மாவு பிசையணும்?

ஒரு கண்றாவியும் தெரியலே. ஆனா, இந்த பாவப்பட்ட பூமியிலே இருக்க வேண்டாம். கப்பல்லே போகலாம். பொழச்சுக் கிடந்தா உன்னை, உங்க பெரியம்மா லலிதாம்பிகையைப் பார்க்கலாம்னு நப்பாசை.

லலிதாம்பிகையை எரிச்ச இடத்துலே கள்ளிச்செடி முளைச்சு அதுவும் பூச்சி அரிச்சு உதிர்ந்திருக்கும். சாகறதுக்கு முந்தி அவளுக்கு இன்னொரு கடிதாசாவாது எழுதிட்டுத்தான் கட்டையைக் கிடத்தணும்.

சரிடா குழந்தே, என் கையே எனக்குத் தெரியாதபடி ராத்திரி வந்து கவிஞ்சுடுத்து. அப்புறமா மிச்சத்தை எழுதறேன்.

உன் பொசைகெட்ட அப்பன் மகாலிங்க ரெட்டி.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts