இரா.முருகன்
1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை
மூணு பக்கமும் கரும்புத் தோட்டமும் கிராமமும் சின்னப் பட்டணமுமாக மனுஷ நடமாட்டம் மிகுந்த தரை. கிழக்கிலே எல்லையே இல்லாத சமுத்திரம். இங்கே அங்கே புகுந்து எலி மாதிரி ஊர்ந்து ஓடினால், விரட்டிப் பிடித்து அடித்தே கொன்னுடுவான்கள். இல்லே கடல்லே சாடினாலோ. நீந்தவும் வேறே தெரியாது. கட்டையைப் பிடித்துக் கொண்டு மிதந்தால் அக்கரை சேருவேனோ பரமபதம் அடைவேனோ தெரியாது. கப்பலோ படகோ ஒண்ணும் வருகிற நேரமும் இல்லை.
கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்து ஓட ஆரம்பித்தேன். வெட்டி நிறுத்திய இடம் எல்லாம் காலில் கையில் சிராய்ப்பை உண்டாக்க, நனைந்து கிடந்த தோகை முடை நாற்றம் எடுத்து காலை வழுக்கியது. யாரோ என்னைத் தொடர்ந்து வருகிறார்கள். முகம் தெரியாவிட்டாலும் கால் சத்தம் காதுக்குள்ளே இடி மாதிரி கேட்கிறது. பிராணன் ரட்சைப்பட, ஓடாவிட்டால் வேறே மார்க்கம் இல்லை. ஓடு.
வெட்டி அறுத்து, அறுத்து வெட்டி வளர்த்து சத்தெல்லாம போய் என்னைப் போல் சோகையான கரும்புத் தோட்டத்துக்கு நெருப்பு வைத்துக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். அதைப் பொசுக்கி அழித்து விட்டு அங்கே புதுசாக பயிர் பண்ணுவார்கள். அது வளரும். வெட்டுவார்கள். வளர்ப்பார்கள். அழிப்பார்கள்.
நான் இருந்தால் நீ வளர முடியாது. நெருப்போ, கடலோ, நான் போகவேணும். போறேன்.
முதுகுக்குப் பின்னால் கடல் இரைந்து எக்காளமிட்டு என்னைப் பழித்துக் கொண்டிருந்தது.
உடம்பே லிங்கமாக வளர்த்தி வச்ச மகாலிங்கய்யன் ஓடறான். விடாதே பிடி. இதோ வந்துடறேன். சம்போகம் நடத்தின படிக்கே கூடப் படுக்கிறவளைக் கழுத்தை நெரிச்சும் கொல்ல அஞ்சாத படுபாவி போறான். அந்தப் பொணத்தோட படுத்து மிச்ச மீதி போகத்தையும் அனுபவிச்சு எழுந்திருக்கற நாய்ப் பயல் ஓடறான். ஓடி வாங்கோ. ரம்மண்டி. வரூ. கரும்பு இல்லே. குறியே விஷ விருட்சமா நடக்கிற அசுர ஜீவன். லலிதாம்பிகே, லாராம்பிகே, கல்யாணீ, வாடீ.
ஓடி ஓடி, நாலு கல் தொலைவிலே பழையனூர் கிராம எல்லைக்கு வந்து சேர்ந்தேன். காப்பிரிப் பெயர் எல்லாம் வாயில் நுழையாமல் இருக்கிறதாலே, இங்கே வரப்பட்டவன் அவனவன் பாஷையில் இருக்கற, புழங்கற இடத்தை எல்லாம் நாமகரணம் செஞ்சுக்கற வகையில் அது பழையனூர் தான் எனக்கு.
ஞாயிற்றுக்கிழமை ஆனபடியால், ஊர் ஜனம் முழுக்க மாதா கோவிலில் அடைந்து கிடந்தது. தமுக்கு தட்டிக் கொண்டு கிறிஸ்து நாதரை வாழ்த்திப் பாடுகிற சத்தம் அங்கே இருந்து விட்டு விட்டுக் கேட்டது. இன்னும் அரை மணி நேரம் பிரசங்கம், சங்கீதம் இப்படி பொழுது கழித்து விட்டு அவர்கள் அப்பத்தோடு திரும்புவதற்குள் நான் இங்கே கொஞ்சம் இளைப்பாற வேணும். தூங்கக் கூடாது. அப்புறம் ஒரேயடியாக உறங்கிவிட வேண்டி வரும்.
பசி. எங்கே, யாரைக் கேட்க? யாரையும் கேட்க வேணாம். எந்த வீட்டுக் கதவு அடைந்திருக்கவில்லை என்று பார்த்து தெருநாய் போல நுழஞ்சாப் போதும்.
கோவிலுக்குப் பின்னால் இருபது அடி தள்ளி என்றி மாரிமுத்து வீடு என்பது நினைவுக்கு வந்தது. என்றி வேஷம் கட்டி ஆடுகிறவன். சாமியாடியாக இருந்து வேதத்துக்கு ஏறினவன் என்பதால் ஆட்டமும் பாட்டுக் கட்டுவதும் கூடப் பிறந்து கொண்டுபோன விஷயங்கள். பொங்கல், தீபாவளி, கிறிஸ்துநாதர் ஜன்ம தினம் இப்படி வந்தால் கூத்து ஏற்பாடு பண்ணி, பத்து இருபது இளந்தாரிகளைப் பிடித்து பாட்டுப்பாட, வார்த்தை சொல்லப் படிப்பித்து படுதா கட்டி ராத்திரி முழுக்க கோலாகலமாக நடத்தி காணிக்கைப் பணம் வாங்கினவன் இந்த என்றி.
அவன் செயலோடு இருந்த நாளில் நான் கரும்புத் தோட்டத்தில் கணக்கு எழுதிச் சம்பாதித்ததை விட ரெண்டு துட்டாவது அதிகமாகவே சம்பாதித்தவன் என்ற வகையில் எனக்கு அவன் மேல் பொறாமை உண்டு.
லண்டனில் இருந்து தருவித்த வாசனை திரவியத்தை அக்குளில் பூசிக்கொண்டு மணக்க மணக்க மாதா கோவிலுக்கு என்றி ஞாயிற்றுக்கிழமை காலையிலே நடக்கிற போது முன்னால் முப்பதடி அந்த வாசம் மிதந்தபடி பராக் பராக் என்று ராஜபார்ட் காரன் சபா பிரவேசம் நடத்துகிறது போல கட்டியம் சொல்லும்.
ஆனால், இன்றைக்கு இருக்கப்பட்ட என்றி சீக்குப் பிடித்தவன். பெண் சீக்கு வந்து அரைக்கட்டு நசித்து, மதுமேகம் வந்து மூத்திரம் போகமுடியாமல் கட்டி, இன்னும் என்னென்ன ரோகமோ எல்லாம் அவனை இஷ்ட மித்ர பந்துக்களாக சூழ்ந்து படுக்கையில் தள்ளி விட்டன. அதிலும் சதா இருமி, கடைவாயில் சளியோடு ரத்தமும் வடிய வைக்கிற ஷயரோகம்.
சீக்கு முற்றிப் போய் இனிமேல் ஜீவிப்பது சிரமமான காரியம் என்று ஆஸ்பத்திரி டிரஸ்ஸர் நாடி பிடித்துச் சொன்னதால் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறவன். யாராவது வந்து அப்போ அப்போ ரொட்டியும், பாலும், இட்டலியுமாக வைத்துவிட்டுப் போவார்கள். குடிக்க சிராங்காய் நல்ல தண்ணியும்.
நான் என்றியின் வீட்டுக் கதவை மெல்லத் தள்ளினேன். எனக்காகக் காத்துக் கொண்டிருந்த மாதிரி அது திறந்து கொண்டது. உள்ளே இருந்து புழுத்த வாடை மூக்கில் பலமாகப் படிந்தது. இதே வாடையோடு தான் என்றியும் இப்போது ஊர் நினனவில் ஜீவிக்கிறான். வாடைக்குப் பார்த்தால் முடியுமா? என் பசி எனக்கு.
என்றி படுக்கையில் கண்ணை மூடித் தூங்கிக் கொண்டிருந்தான். கட்டில் பக்கத்தில் மர ஸ்டுல். அதிலே கல்லுக் கல்லாக ரொட்டித் துண்டு நாலைந்து. ஒன்றை எடுத்துக் கடித்தபடியே நித்திரை போயிருந்தான் அந்த சீக்காளி. பக்கத்து ஜன்னலில் நாய்ச் சங்கிலி போட்டுக் கட்டி ஒரு பித்தளை போணியும் அது தழைந்து தொடுகிற தூரத்தில் ஒரு மண் ஜாடியில் பழைய தண்ணியுமாக இருந்தது. தண்ணீரை மாற்றாததாலோ என்னமோ, கொசு மிதந்து கொண்டிருந்தது அதில். சங்கிலி படுக்கையில் படுத்தபடியே அவன் வாய் வரை வருமா என்று தெரியவில்லை. தாகம் எடுத்தால் உதடாவது நனைக்க முடியும். அது போதும்.
நான் கால் ஒச்சை எழுப்பாமல் நடந்து போய் வீட்டு உள்ளே ஒரு இடம் பாக்கி வைக்காமல் தேடினேன். வேறே சாப்பிடக் கூடிய தரத்தில் ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தால் யாதொண்ணும் கிட்டவில்லை. ஒரு பிடி மீன் வத்தல், பழம்புளி, வெல்லம், கோதுமை மாவு. அஸ்கா. ஊஹும். சமைத்துச் சாப்பிட்டு மாமாங்கம் ஆகியிருந்த அடுப்பில் காளான் முளைத்திருந்தது. விஷமாக இருக்கலாம் என்ற பயம். இல்லாவிட்டால் அதைக் கெல்லித் தின்றிருப்பேன்.
இந்த தரித்திரவாசியின் வீட்டில் இவன் கட்டிலுக்கு சேக்காளியாக வைத்த ரொட்டித் துண்டு தவிர வேறே உருப்படியான விஷயம் கிடையாது. குனிந்து அதை எடுத்தேன். போகம் முடித்து உச்சகட்ட சுகம் அனுபவித்து ஓய்ந்து தூங்கி எழுந்தவள் யோனி மாதிரி பிருபிருவென்று காய்ந்து கிடந்தது. பிராணன் போகிற நேரத்திலும் மனசில் வருகிறது அந்த ரூபம்தான். நரகத்துக்குப் போனால் போச்சு.
ரொட்டித் துண்டில் எறும்பு மொய்த்தது. ஜன்னல் ஓரமாக எடுத்துப் போய்ப் பொறுமையாகத் தட்டினேன். எறும்பு எல்லாம் உதிர்ந்து கொஞ்சம் மாவை அவசரமாக வாயில் அள்ளிக்கொண்டு நானாதிசையிலும் ஓடி மறைந்து போனது. நல்ல வேளை, கரப்பான் பூச்சியும் பாச்சை பல்லியும் பாத்யதை கொண்டாடிக் கொண்டு வந்து மொய்க்கவில்லை. இல்லை அதெல்லாம் ராத்திரியே வந்து திருப்தியாகக் கழித்து, இது மேலேயே கழிந்துவைத்து விட்டுப் போயிருக்குமோ.
எக்கேடும் கெடட்டும். மிச்சம் இத்தனையாவது விட்டு வச்சிருக்கே. என்னிக்கு சுட்டெடுத்த ரொட்டியோ. யார் கொண்டு வந்து வீசி எறிந்ததோ. அவர்கள் சொர்க்கம் போகிறபோது நல்ல ரொட்டியை ரெண்டு கையிலும் பிடித்தபடி போய்ச் சேரட்டும்.
சங்கைக்குரிய மார்க்கு பதினொண்ணு திருவசனம் ஒன்பது. அவர்கள் ஓசன்னா சொல்லியபடி நடந்து. போகிறதுக்கு முந்தி, நம்ம கோவில் குட்டியார் பெண் முந்தாநாள் மங்களகரமான வெள்ளியன்று ருதுவான படியாலே கனவான்களும் சீமாட்டிகளும் குழந்தையை ஆசிர்வாதம் பண்ணி நாலு காசு நன்கொடை கொடுத்தால் குழந்தை கல்யாணம் உங்கள் ஆசீர்வாதத்தோடு நடக்கும். பரலோக சாம்ராஜ்யம் நல்ல மனசுக்காரர்களுக்குக் கதவு திறந்து வைத்துக் காத்திருக்கிறது. நடந்து போனார்கள். திருநாமத்தை உச்சரித்தபடி வருகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சங்கீதம் பதினேழு. சீரேசு ராஜனே செவி கொடுத்துக் கேளுமய்யா பரிவோடெம் பிரார்த்தனையை. பாடலாம். காணிக்கை தட்டு வந்துட்டு இருக்கு. காசு போடாம எளுந்திரிக்காதே ஜேம்ஸே. நரகத்துக்குப் போகாதே.
பிரசங்கியார் உச்சமான குரலில் முழங்கி இடைவேளை விட்டுப் பாட்டு எழுந்து கொண்டிருந்தது இங்கே இருந்தே காதில் விழுந்தது. என்றிக்கு ரெண்டு வேளை சாப்பாடு கிடைக்க இப்படி காசு சேர்த்துக் கொடுத்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.
பிரசங்கி உடையான். என்றி குலாலன். அப்பா வகையில் மானாமதுரைப் பக்கம் மண்பாண்டம் செய்து கையிலும் மனசிலும் படிந்த தொழில் தேர்ச்சியோடு இங்கே வந்தவன். செங்கல் சூளை வைத்து கையைச் சுட்டுக் கொண்ட பிற்பாடு கூத்தாடக் கிளம்பிவிட்டான். சக்கரம் கைவிட்டாலும் கைக்கரகமும் தமுக்கு தப்பட்டையும் கைவிடவில்லை அவனை.
சட்டி பானையை விட்டு விட்டு, சிலுவையை கழுத்தில் மாட்டிக் கொண்டு வேதத்தில் ஏறினாலும், வேத பாடசாலையில் பழைய ஆகமமும் புதுசும் படிச்சுத் தேர்ந்து பிரசங்கி ஆனாலும் ஜாதியை யாரும் எதுக்காகவும் மறக்காத காரணத்தால் என்றிக்கு வெறும் பிரார்த்தனை. கோவில் குட்டியார் பெண்குட்டி திரண்டால் காசு பணம் ஆசிர்வாதப் பணம்.
இன்னும் ரெண்டு சங்கீதம், இடையிலே கல்யாண வார்த்தை அறிவித்து ஓலை படித்தல், மரண ஓலை சம்பிரதாயத்துக்காகப் படித்து ஆத்மா நித்திய உறக்கம் கொள்ள பிரார்த்தனை, மிச்ச பிரசங்கம்.
பரிசுத்த ஆவி கொஞ்சம் தாமதமாக பிரசங்கிக்குள்ளே இறங்கினால் அதுக்கு முந்தி நான் ரொட்டி தின்றுவிட்டுக் கிளம்பிவிடுவேன். சொல்லேண்டா என்றி. ஊஹும் அந்தக் சீக்குக் கோழி தூங்கின படிக்கே இருந்தான்.
மண்பானையில் இருந்து அழுக்கு போக தண்ணீரை உள்ளங்கையில் வடித்து விட்டு ரொட்டித் துண்டு மேலே தெளித்து நனைத்து சாப்பிட்டேன்.
அசுரப் பசி. முழுக்கச் சாப்பிட்டு முடித்தும் இன்னும் கொஞ்சம் குடுடா பிரம்மஹத்தி என்றது வயிறு. வேறே என்ன இருக்கு?
சீக்காளியோட ஜாமான் தான் புழுத்துப் போய் கிடக்கு. பல்லாலே கடிச்சு எடுத்து, சுட்டுத் திங்கறியா? தூரத்தில் சமுத்திரம் அக்கறையாக விசாரித்தது.
இந்த ஷயரோகி பாதி கடித்து தூங்கிப் போனதால் கையில் மிச்சமிருந்த அரையே அரைக்கால் ரொட்டித் துண்டு.
எச்சில் தான். பாதகம் இல்லை. கொடுடா பன்னி.
என்றி தூங்கினாலும் தூங்குவேனே தவிர கையை விடமாட்டேன் என்று அடம் பிடித்தான். கையை என் தொடைக்கு நடுவே வைத்து முறுக்கி ஒரு வழியாக அதை விடுவித்தேன். ரொட்டியைக் கொடுத்து விட்டு அவன் கை கீழே விழுந்தது அப்புறம் ஒரு அசைவும் இல்லாமல் தேமேன்னு அது பாட்டுக்கு கிடந்தது.
அவன் செத்துப் போயிருந்தான்.
என் புத்திக்கு அதுவரை உறைக்காத விஷயம். உடம்பே வயிறாக ஆகாரம் பண்ணிக் கொண்டிருந்ததால் புத்தி மரத்துப் போயிருக்கு. இந்தக் கல்யாணிக் குட்டி இடுப்புக்குக் கீழே நான் உசிரோடு ஜீவிக்க, மிச்ச உடம்பை, புத்தியை எல்லாம் வாத நோக்காடு பிடிச்ச மாதிரி மரக்க வச்சுட்டாள். தேவிடியா முண்டை.
ஆமாடா ரெட்டியானே, நீ செத்தா உன் பெண்டாட்டி மோதிரம் கழட்டின முண்டை. நான் தேவிடியாத் தொழில் செஞ்சா உனக்கு வெத்தலைப் பொட்டியும் கூஜாவும் வாங்கித் தரேன். கிராக்கி பிடிச்சு வா. கமிஷன் தரேன்.
கல்யாணி காமம் சொட்டச் சொட்ட சிரித்தாள். ரவிக்கை முடிச்சை அவிழ்த்து திரும்பப் போட்டு அப்புறம் அவிழ்த்து.
கரும்புக் கொல்லையைத் தீவைத்துப் பொசுக்கின மாதிரி இந்த மனசை, அது காட்டுகிற ரதிக்கிரீடை கூத்தை எல்லாம் சொக்கப்பனை கொளுத்தி எரிக்க முடியுமானால் எம்புட்டு நன்றாக இருக்கும்.
பொணத்தோட கையிலே இருந்து ஜபர்தஸ்தாகப் பறித்த எச்சில் ரொட்டியையும் சாப்பிட்டு முடித்தேன். என்றியின் புழுங்கின நாற்றம் என்மேல் பூர்ணமாகக் கவிந்திருந்தது இப்போது. அவன் செயலோடு இருந்த காலத்தில் வழித்து வழித்து கம்புக்கூட்டில் பூசிக் கொண்ட புனுகோ, அத்தரோ, லண்டன் சீமாட்டிகளை வசப்படுத்தும் செண்டோ காலி பாட்டில் கிடைத்தால் கூட சரி. மண்பானை தண்ணீரில் அலம்பி மேலே அபிஷேகம் செய்து கொண்டு இந்த பீடை வாடையிலிருந்து தப்பிக்கலாம். சாவு வாடை போகும்.
வேணாம். சுகந்த பரிமளம் தான் சாவு வாடை. ஆள் இருக்கிறான் என்று காட்டிக் கொடுத்து விடும். இதுவே எதேஷ்டம்.
வாயைத் துடைத்துக் கொண்டு படுக்கைக்குக் கீழே இருட்டில் கையை விட்டுத் துழாவினேன். இரும்பில் பெட்டி ஒண்ணு கரகரவென்று இழுத்த இழுப்புக்குக் கல்யாணி மாதிரி கூடவே வந்தது. களவாணிச்சி. குடிகெடுத்தும் அவள் நினைப்பு மாயமாட்டேன் என்று கூடவே வருகிற மருமம் தான் என்ன.
பெட்டிக்குள் ஒண்ணும் ரெண்டுமாக முன்னூறு ரூபாய் வச்சிருந்தான் என்றி. மேலே பழுப்பேறிய காகிதத்தில் ‘நான் பரலோகம் போனால், கல்லறை செலவுக்கு’ என்று செலவு உத்தேசத்தையும் ஸ்பஷ்டமாக எழுதி வச்சிருந்தான். ஆரியக் கூத்தாடினாலும், அரையில் ரோகம் வந்து அழுகிச் சொட்டினாலும், காசு காரியத்தில் கண் வச்ச புத்திசாலி அவன். என்னைப் போல பைத்தியம் இல்லை.
கோமாளி உடுப்பு, ஒட்டு மீசை, ஏசுநாதர் கூத்தில் ராஜா ஒட்டிக்கும் கத்தாழை நார்த்தாடி, அப்புறம் அட்டைக் கருப்பாக ஒரு சிமிழில் கண்மசி இத்தனையும் அந்தப் பெட்டிக்குள் இருந்தது. பிலாத்து ராஜா உடுப்பு கூட மேல் சட்டை மட்டும் கிடைத்தது. அப்புறம் ஒரு பொட்டலம் அரிதாரம். தண்ணியில் கலக்கினால் நுரை வழிந்து கொண்டு கருப்பாக கையெல்லாம் பூசியது. சாத்தான் வேஷம் கட்ட ஏற்பட்டதாக இருக்கும். எனக்கு எடுப்பான சாயம் தான். பூசிக் கொண்டேன்.
நான் கட்டியிருந்த சாரத்தை அவிழ்த்து விட்டு கோமாளி கால்சட்டையை மாட்டிக் கொண்டேன். கருத்தான் ராவுத்தர் கப்பலேறப் போகிற மாதிரி ரெண்டு பக்கமும் தொளதொளவென்று வழிந்து அது இடுப்பிலேயே நிற்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. ஹென்றியின் இடுப்பு சாரத்தை கீழே இருந்து நாலு அங்குலம் அகலத்துக்குக் கிழித்து அதை இடுபைச் சுற்றி கால்சராயோடு சேர்த்துக் கட்டினேன். மேலே பட்டுத் துணியில் அந்துருண்டை மணக்க பிலாத்து குப்பாயம். மீசையும் தாடியும், கண்ணில் மசியும், கன்னத்தில் கருப்புச் சாயமும் ஏற எந்த தேசக்காரன் என்று சொல்ல முடியாத ஒரு அடையாளம்.
ஹென்றியின் தொப்பி கதவுக்கு மேல் ஒட்டடை அடைந்து கிடந்ததை எம்பி எடுத்து தூசு துப்பட்டை போகத் தட்டி விட்டுத் தலையில் போட்டுக் கொண்டேன்.
ஞாபகமாக, ஹென்றி சேர்த்து வைத்திருந்த காசை ஒரு தம்பிடி விடாமல் அள்ளி கால்சராயில் திணித்துக் கொண்டேன்.
பரலோக சாம்ராஜ்யம் போக இங்கிலீஷ் தேச ராஜா லண்டனில் அடிச்சு அனுப்பின காசு பிரயோஜனப் படாதுடா என்றி. பிரசங்கி வந்து பார்த்துட்டு புதைக்க ஏற்பாடு செய்வார். கோவில் குட்டியார் பெண் திரண்டுகுளிக்கு சேர்த்த காசிலே கொஞ்சம் போட்டா நீ கல்லறைத் தோட்டத்துலே இருமித் துன்பப்படாமல், தும்மி சளியைத் துப்பாமல் தூங்கலாம். நான் வரட்டுமா? ஜாக்கிரதையா இருடா பொணமே.
ஓரமாக வைத்திருந்த குச்சியை ஊணிக் கொண்டு விந்தி விந்தி நடந்து ஊர்க் கோடிக்குப் போகும் போது மாதா கோவிலில் இருந்து கூட்டம் இறங்கிக் கொண்டிருந்தது.
(தொடரும்)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -1
- ஞாநியுடன் ஒரு கலந்துரையாடல் – நியூயார்க் – நியூஜெர்ஸி
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2
- கவிதை கூறும் சிறுகதை: எதிர்காலச் சித்தன்!
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20
- கனவும் நனவும்
- சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன ? [கட்டுரை: 1]
- குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி?
- சிறுபாணாற்றுப்படையில் புலவரின் பண்பும், புரவலரின் மாண்பும்
- எழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும்
- சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை
- நம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள்
- தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள்
- ஸ்ரீமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு:…
- கிரிஜா ராகவன் கடிதத்தை ஒட்டி சில சிந்தனைகள்
- பேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மற்றும் தியாகி கக்கன் அவர்களது சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் உரை
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தேழு
- வேத வனம் விருட்சம் 92
- முள்பாதை 35
- கனம் 1 கதை 10 – வரிசை 6 ஆதலினால் காதலே
- பழைய வாத்தியார்
- ஆட்டோ பயோகிராஃபி ஆஃப் சைல்ட் – 3
- எனக்கான ‘வெளி’
- போதி மரம்
- சாதியும், கணக்கெடுப்பும் –
- முஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி
- நினைவுகளின் சுவட்டில் – (50)
- நாளை தேசத்தைக் காக்க இன்று கடப்பாவைக் காப்பாற்றுவோம்
- ஊமையர்களின் கதையாடல்
- ஒவ்வொரு விடியலும்….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2
- ஒலியும் மொழியும்
- தவித்துழல்தல்
- நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் – ஜமாலன் – புத்தக அறிமுகம்