ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 2 – சைப் டைட்டில் : நித்திய சோதனை

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


சைப் டைட்டில் : நித்திய சோதனை

11ஃ06ஃ2010
வெள்ளிக் கிழமை

மல்லிகா………………………….. இந்த பெயரைக் கேட்டாலே என் எண்ணங்கள் வானத்தின் மேகங்களுக்கு மேலே மிதக்க ஆரம்பித்து விடுகிறது.

வைலட் பூ டிசைன் போட்ட வெள்ளை நிற பாவாடைச் சட்டையும், தலையில் இடது மற்றும் வலது கொண்டையை ஒரு பாலம் போல் இணைத்தபடி மல்லிகைப் பூவையும் அணிந்து கொண்டு வரும் மல்லிகாவை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவள் அடிப்படையான நான்கு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

1. யாரேனும் ரப்பர், பென்சில் எனக் கேட்டு வந்தால், உடனே எடுத்துக் கொடுத்துவிடக் கூடாது. ரப்பரும் பென்சிலும் பெண்களிடம் மட்டும் அல்ல, ஆண்களிடமும் உண்டு என்பதை சுட்டிக் காட்டி திருப்பி அனுப்பிவிட வேண்டும். குறிப்பாக அந்த சுரேஷிடம்.

2. யாரேனம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் ‘எங்க அம்மா யாருக்கும் குடுக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க” என்ற தாரக மந்திரத்தை கூறி தவிர்த்துவிட வேண்டும். அதையும் மீறி வற்புறுத்தினால், ‘நான் எச்சி வச்சு குடிச்சுட்டேன்” என்று கூறி அவமானப்படுத்த வேண்டும். குறிப்பாக சுரேஷ் கேட்கும் போது அவ்வாறு நடந்து கொண்டால் நான் கைதட்டி ஆரவரிப்பேன்.

3. வகுப்பில் முதல் ரேங்க் எடுக்கும் மாணவன்தான் திறமையானவன் என்று நினைத்து விடக் கூடாது. கால்பரீட்சையில் 7வது ரேங்கும், அரைப்பரீட்சையில் 15வது ரேங்கும் எடுத்த மாணவன் கூட திறமையானவனாக இருக்கலாம். காகிதத்தில் கத்திக் கப்பல் செய்வது, உண்டிவில்லால் குறிபார்த்து கொடுக்காபுளி அடிப்பது, பெரிய சைக்கிளில் அரைப்பெடல் போட்டு ஓட்டுவது, இவையெல்லாம் முதல் ரேங்க் எடுக்கும் மாணவனுக்கு தெரியாது. சுரேசுக்கு தரையில் கை வைக்காமல் பல்டி அடிக்கக் கூட தெரியாது. ஆகையால் அனைத்தையும் கணக்கிட்டு ஜாக்கிரதையாக முடிவெடுக்க வேண்டும்.

4. பிறகு ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்கிற பாடலை நீ அடிக்கடி கேட்க வேண்டும். அதில் உள்ள கருத்தாழமிக்க வரிகளை ஆழ்ந்து யோசிக்க வேண்டும். திராவிட இனத்தின் நிறமே கருப்புதான். வெள்ளையர்கள் நம்மை என்ன பாடு படுத்தினார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையர்கள் நம்மை தந்திரமாக மடக்கி ஆட்சி செய்தார்கள் என்று சமூக அறிவியல் ஆசிரியர் அன்று பாடம் நடத்தியதை நீ கவனிக்கவில்லையா? வெள்ளைத்தோல் சுரேஷிடமிருந்து உன்னை எப்படி காப்பாற்றுவது என்றுதான் எனக்குப் புரியவில்லை.

ஆனால் நீ புத்திசாலிப்பெண். நீ அனைத்தையும் புரிந்து கொள்வாய் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அன்று ஒருநாள் துணிக்கடையில் வைலட் நிறத்தில் பூபோட்ட சட்டை கேட்டு தனது தந்தையிடம் அடம்பிடித்த சுரேஷை பார்த்த பொழுதே நான் சந்தேகப்பட்டேன், அவன் உன்னை சைட் அடிக்கிறான் என்று.

‘பூ போட்ட சட்டையெல்லாம் பொம்பள பிள்ளைகளுக்குத்தான் வாங்குவாங்க, ஆம்ளப் பசங்க போடக் கூடாது” என சுரேஷின் தந்தை அடம்பிடிக்கும் அவன் தலையில் ஓங்கி கொட்டிய போது என் நெஞ்சம் இனிக்கத்தான் செய்தது. ஆனால் அதையெல்லாம் அவன் கேட்பவன் அல்ல. நீதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இனிமேல் உன்னை ட்யூசனிலிருந்து கூட்டிக் கொண்டு பத்திரமாக வீட்டில் கொண்டுவந்து விடுவதாக உன் அம்மாவிடம் சத்தியம் செய்துள்ளேன் (மனதிற்குள்ளாக). நான் தினமும் உனக்கு 50 காசுக்கு காபி பைட் சாக்கலேட் வாங்கித் தருகிறேன். என் தந்தைக்கு எங்கிருந்துதான் அந்த 25 பைசா கிடைக்குமோ தெரியவில்லை. அதை தினமும் எனக்கு பாக்கெட் மணியாக கொடுக்கிறார். மீதி 25 பைசாவுக்கு என்ன செய்வாய் என்று என்னிடம் கேட்காதே. அது எங்கள் வீட்டு சாமி அறையில் உள்ள உண்டியல், சமையல் அறையில் உள்ள அஞ்சறைப்பெட்டி, சென்ற மாதம் வரை உளுத்தம் பருப்பு டப்பா, இந்த மாதத்த்திலிருந்து மிளகாய் பொடி டப்பா இவற்றுக்கும் எனக்கும் உள்ள தொடர்பை பொறுத்தது. சிலநாள் ஒரு ரூபாய், சில நாள் 5 ரூபாய், சில நாள் 10 ரூபாய் என எனது வருமானத்தின் அளவுக்கு குறைவேயில்லை. ஆனால் 10 ரூபாயை தொடும் போதுதான் சிறிது மனம் நடுங்கும். அன்றொரு நாள் பாண்டியராஜன் படத்தில் பார்த்தேன். அடுத்தவர்களுக்கு தெரியாமல் எடுக்கும் பணத்தில் பாதியை பிள்ளையார் உண்டியலில் போட்டுவிட்டால், அவரும் பாவமன்னிப்பு வழங்குவார் என்று அதில் கூறப்பட்டிருந்தது. 10ல் பாதி 5 ரூபாயை அநாவசியமாக உண்டியலில் போட எனக்கு மனம் இல்லைதான். இருப்பினும் 2 ரூபாயை மனமுவந்து போட்டேன். பிள்ளையாருக்குத் தெரியாதா என்ன? எனக்கிருக்கும் கம்மிட்மென்ட்சை பற்றி.

பின் முழுப்பெடல் போட்டு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதும் உன்னை கண்டிப்பாக நடக்க விடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். சுரேசுக்கு அவ்வளவு திறமை பத்தாது. அவன் இன்னமும் 3 சக்கர சைக்கிள் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவன் புரிந்துகொண்டு படிப்பதில்லை. மொட்டை மனப்பாடம் செய்கிறான். மொட்டை மனப்பாடம் செய்கிறவர்கள் தான் முதல் ரேங்க் எடுப்பார்கள்.
புரிந்து கொண்டு படிப்பவர்கள் எப்பொழுதும் 7வது மற்றும் 15வது ரேங்க் தான் எடுப்பார்கள். ஏன் சில நேரங்களில் 25வது ரேங்க் கூட எடுக்க வாய்ப்புண்டு. ரேங்க் ஒரு சரியான அளவீடே கிடையாது. புரிந்து கொண்டு படிப்பதுதான் முக்கியம் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு விஷயத்தை உன் தலையில் அடித்து சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சுரேசுக்கு பம்பரம் சுற்றத் தெரியாது. நான் பம்பரத்தை தரையில் மட்டுமல்ல, கையில் கூட சுற்ற விடுவேன், வேண்டுமானால் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். அவனிடம் ஒரு கொடுக்காபுளி அடித்துத்தரச் சொல் பார்ப்போம்.அவனால் முடியாது. 10 கற்கள் கொடுத்தால் கூட அவனால் அடிக்க முடியாது. எனக்கு 3 கற்கள் போதும் குறி பார்த்து அடித்து கீழே விழ வைப்பேன். கொடுக்காபுளி கூட அடிக்கத் தெரியாதவனிடம் உனக்கு பிரண்ட்ஷிப் தேவையா என்பது தான் என் கேள்வி. ஆழ்ந்து யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் மல்லிகா நீ. எனக்குத் தெரியும் நீ நல்ல முடிவைத்தான் எடுப்பாய் என்று.

பின் குறிப்பு:

அரைப்பரீட்சையின் போது சமூக அறிவியல் பரீட்சையில் சுரேஷ் காப்பி அடித்ததை நான் பார்த்தேன். பாவம் என்று நினைத்து அப்பொழுது விட்டுவிட்டேன். ஆனால் உன்னிடம் இதை நிச்சயமாக கூற வேண்டும். அவன் இப்படித்தான் முதல் ரேங்க் எடுக்கிறான் ஒவ்வொரு முறையும். ஞாபகத்தில் வைத்துக்கொள் திருட்டுப் பயல் அவன்.

Series Navigation

author

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்

Similar Posts