இரா.முருகன்
விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தாறு இரா.முருகன்
1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை
அடே வைத்தா, அந்த ராட்சசி கல்யாணி திட்டம் செய்து வைத்திருந்தது இந்தப் படிக்கு இருந்தது.
யுத்த காலமாச்சா? பெரிய தோட்டம் துரவு எல்லாம் வாங்கி வளச்சுப் போட்டு நிர்வாகம் பண்ணுகிற பரங்கித் துரைகளும், சின்னத் தோதில் தோட்டம் போட்டுப் பயிர் வளர்க்கும் உன் மாதா லோலா மாதிரிப்பட்ட கருப்பு சீமாட்டிகளும் தோட்ட வேலைக்கு ஆள் கிடைக்காமல் ரொம்பத் துன்பப் பட்டார்கள்.
ஏற்கனவே வேலைக்கு இருந்த ஆட்கள் மெய் தளர்ந்தோ சீக்குப் பிடித்தோ இல்லேன்னா, எல்லாம் அலுத்துப் போயோ, பொறந்த பூமிக்குத் திரும்பப் போக துடியாகத் துடித்தார்கள்.
இருந்தாலும், பட்டாளக்காரன் துப்பாக்கி வச்சு சுட்டுத் தள்ளிச் செத்தாலும் அதெல்லாம் சொந்த ஊரிலே, பந்தப்பட்டவர்கள் கூடி இருக்க நடக்கணும் என்று பல பேர் வாய்விட்டுச் சொல்லிக் கேட்டிருக்கேன். புருஷனும் பெண்டாட்டியுமாக வந்தாலும், தனிக்கட்டையாக இங்கே உழைத்துப் பணம் சேர்க்க வந்தாலும், இதே கதை தான். இதே மாதிரி நினைப்பு தான்.
போகிறவர்கள் போகிறதும் புதுசாக வருகிறவர்கள் அவர்கள் இருந்த குச்சுக்குள் மீந்து போன பழைய சட்டி பானையை எடுத்து வீசி விட்டுப் புதுப் பானையும் சருவமுமாக நுழைவதும் இத்தனை வருஷம் நடந்ததுதான். ஆனால், போறவனைப் போக விட்டு, புதுசாக வர ஆள் கிடைக்காமல் துரைகள் பட்ட கஷ்டம்தான் எவ்வளவு.
கரும்பைக் கண் மாதிரி காத்து தண்ணீர் பாய்ச்சி, பூச்சி பொட்டு அண்டாமல் வச்சு அறுத்து எடுக்கணும். அப்புறம் ஆலைக்குக் கொண்டு போறது, நறுக்கித் துண்டு போடறது, உலையிலே ஏற்றிக் காய்ச்சி சர்க்கரை எடுக்கறது இதெல்லாம். இந்த வரிசைக் கிரமத்துலே எங்கேயாவது தப்பு நடந்தா, பொழப்பு நாறிடும் போ.
வேலையிலே இருக்கறவனுக்கு அதிக வேலை செய்ய சம்பளம் கொடுத்துப் பார்த்தாலும் பிரயோஜனமில்லை. பதினாறு மணி நேரம் ஒரு நாள் போல உழைக்க மாட்டுக்குக் கூட முடியாதே. மனுஷன் எம்மாத்திரம்?
அப்புறம் தான் இங்கே வர ஆள் பிடிச்சு அனுப்பற ஏஜண்டுக்கு கமிஷன் கொடுக்கற ஏற்பாடு ஆரம்பமாச்சு. தமிழ் பேசற தஞ்சாவூரா, மாயவரமா, தெலுங்குக்கார வாராங்கல்லா, ஓங்கோலா, மலையாள சமுத்திரக் கரையா, வங்காளமா, கிராமம் கிராமமா அங்கே எல்லாம் போய், தோட்ட வேலைக்கு ஆள் சேர்க்கற வேலை.
முன்னாடியும் இது நடந்தது. நான் கூட புதுச்சேரியிலே இருக்கப்பட்ட ஒரு பெண்பிள்ளை மூலமாத்தான் இங்கே வந்தேன். அப்போ எல்லாம் வர்றவன் ஏஜெண்டுக்குப் பணம் கொடுப்பான். வந்து சம்பாதிச்சதிலே கொஞ்சம் கொஞ்சம் மாசா மாசம் அடைக்க வேண்டி வரும். இது ஒரு மூணு வருஷம் நடந்தா, அக்கடான்னு கடன் தொல்லை இல்லாம அப்புறம் காசு சேர்க்கலாம்.
யுத்த காலத்திலே வர்றவன் ஒரு தம்பிடியும் யாருக்கும் தர வேண்டாம். சகலமும் வரவு கணக்குத்தான். அவனை மனோவசியம் செஞ்சு அவன் பாஷையிலே பேசிக் கப்பலேற்றி விடற ஏஜெண்டுக்கு இந்தக் கமிஷனை தோட்ட முதலாளி கொடுக்கணும். அதான் புது நியதி.
சமுத்திரத்துக்கு அக்கரையிலே ஆயிரத்தெட்டு ஏஜெண்ட் வச்சுண்டு ஒவ்வொருத்தனுக்கும் பணப் பட்டுவாடா பண்றது பிடுங்கல் ஆச்சே. ஆகக் கூடி, இங்கேயே இருந்து ஊர்லே ஆள் அம்பு படையை நியமிச்சு நிர்வாகம் பண்ணி சப்ஜாடா இதையெல்லாம் செய்யற நாலைஞ்சு பேர் இருந்தா தொரைகளுக்கு காசு போக்குவரத்து நடத்த சுலபம். கல்யாணி உத்தேசிச்சது அப்படி ஒரு ஏஜண்ட் ஸ்தானத்தைத்தான்.
என் கூறுகெட்ட வீட்டுக்காரனை கப்பல் ஏத்தி நம்ம பூமிக்கு அனுப்பிச்சது எதுக்குன்னு நெனச்சீரு ரெட்டியாரே?
கல்யாணி என்னைக் கேட்க நான் வழக்கம் போல் அவள் ஸ்தனத்தை வெறித்தேன்.
நாம ரெண்டு பேரும் குஷியா சிருங்காரக் கேளிக்கை நடத்தி சுகத்தை சதா அனுபவிக்கத்தான்.
விடிஞ்சாலும் விட்டுப் போகாத மோகத்திலே மிதந்தபடிக்குச் சொன்னேன்.
அதுதான். அதேதான். இந்த சுகமும் சொர்க்கமும் தொடரணுமா வேணாமா?
வேணும் தான். ஆனா, அவன் திரும்பி வந்துடுவானே? அப்புறம் ராத்திரியிலே பூனை மாதிரி வந்து பாலைக் குடிச்சுட்டுப் போக வேண்டியிருக்கும் போ.
நான் நாற்காலியில் கால் பரப்பி உட்கார்ந்தபடி ஏக்கமாகச் சொல்ல என் தாவாக்கட்டையை நிமிர்த்தி தந்த சுத்தி செய்யாத வாயால் முத்தம் ஈந்தாள் கல்யாணி. அந்த வாடை கூட விடிகாலையில் மனசுக்கு ரம்மியமாக, ரொம்ப வேண்டி இருந்தது. உனக்கு ஸ்திரி பந்தம் அனுபவமானதும் நான் சொல்றது புரியும்.
கல்யாணி குனிந்து என் கால் பக்கம் நெருங்கி உட்கார்ந்து கால் ரெண்டையும் எடுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டாள்.
அவனை தீர்த்துட்டா?
அவள் கபடமாகச் சிரித்தாள். கொலை கிலை செஞ்சுடப் போறாளோன்னு மிரண்டு போனேன் நான் ஒரு நிமிஷம்.
தூக்குக் கயிறை தீர்க்கமா முகர்ந்து பார்த்துட்டு தப்பிப் பொழச்சு வந்தவன் நான். கல்யாணியைக் கொன்னதுக்காகத் தூக்கு தண்டனை. இப்போ கல்யாணி அவளோட ஆம்படையானைக் கொல்ல ஒத்தாசை செஞ்சு அதுக்கும் தூக்கு.
வேண்டாம்டி கண்ணு, அவனை ஒண்ணும் பண்ணிடாதே. ஆயுசோட கை காலோட அவன் பாட்டுக்கு நடமாடிட்டு இருக்கட்டும். நாய், பன்னி மாதிரி ஒரு உபத்திரவமும் கொடுக்காத பிறவி.
நான் நைச்சியமாகச் சொல்ல அவள் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள். அவள் வாயில் என்ன கொழக்கட்டையா என்று கேட்க வேண்டாம். அந்தத் தகவலை மட்டும் அசங்கியம் கருதித் தவிர்க்கிறேன்.
பல்லும் மற்றதும் சுத்தம் செய்து கொண்டு நான் திரும்ப வந்தபோது அவள் கருப்பட்டிக் காப்பி கலந்து சூடு பறக்க நீட்டினாள். ஆடி அயர்ந்த உடம்புக்கு இதமான பானம் அது. நீ குடிச்சிருக்கியோ?
என் வீட்டுக்காரன் ஊர்லே இருபது முப்பது சப் ஏஜெண்ட்மாரை ஏற்படுத்திட்டு வருவான். இன்னும் ரெண்டு மாசத்துலே ஐநூறு பேரைக் கொண்டு வந்து இறக்கிடலாம் பார்த்துக்கிட்டே இருங்க. துரைகள் கிட்டே இருந்து கமிஷன் வகையிலே அப்புறம் நெறைய நமக்கு வரதுக்கு வாய்ப்பு நெருங்கிட்டு வருது.
அவள் சந்தோஷமாகச் சிரித்தபடி சொன்னாள்.
எனக்கு அந்தக் காசிலே எதுக்குப் பங்கு? அவள் வீட்டுக்காரனுக்கும் அவளுக்கும் தானே அதெல்லாம். சப் ஏஜெண்ட்களுக்கு கொஞ்சம் போல பிய்த்து விட்டெறிந்தால் மிச்ச ஆப்பம் முழுசும் இந்தப் பூனைகளுக்குத்தானே.
வீட்டுக்காரனுக்கு ஒரு தொகை கொடுத்து பந்தத்தை தீர்த்துக்கலாம்னு உத்தேசம்.
கல்யாணி சொன்னபோது பரம சந்தோஷமாக இருந்தது. பயமாகவும் இருந்தது.
அப்புறம் ரெட்டியாரும் நானும் தான். நீரு லோலா தடிச்சியை விட்டுட்டு இங்கேயே வந்தாலும் மூணு வேளையும் ஆக்கிப் போடத் தயாரா இருக்கேன். இல்லேன்னாலும் பாதகமில்லே. அங்கே அவ,இங்கே இவ. உம்ம அரைக்கெட்டுலே சதா மழைதான்.
காமம் சரி. அனுபவிக்க நான் இல்லியா காசு கொடுக்கணும்?
எதுக்கு ரெட்டியாரே. என் பணம் உங்க பணம்னு வித்தியாசம் இருக்கா என்ன? இந்த உடம்பே உங்களுக்குன்னு ஆன பிற்பாடு அல்ப விஷயம் பணம் என்ன?
நான் ஜிவ்வுனு மனசுலே றெக்கை கட்டிப் பறந்தேன். ஆம்பிளை வேசைத்தனம்கிறயோடா வைத்தா? என்னமோ போ.
துரை கமிஷன் வந்து சேர கொஞ்சம் காலம் பிடிக்கும். ஆனா டாண்ணு வந்துடும். உமக்குத்தான் இதெல்லாம் அத்துப்படியாச்சே. சம்பளப் பட்டுவாடா, பிடித்தம், ஓவருட்டயம் இதெல்லாம் எந்த துரையாவது ஏமாத்தி இருக்கானா? அவனவன் பொண்டாட்டி கண்ணுலே மண்ணைத் தூவிட்டு அடுத்த ஊரு தொரைசானியோட படுத்தாலும் படுப்பானே தவிர உழைச்ச துட்டை தராமல் போவானா?
நிச்சயம் மாட்டான்கள் இவங்க எல்லோரும். எனக்கும் தெரியும்.
சப் ஏஜெண்ட்களுக்கு முன்கூட்டியே கொஞ்சம் தொகை கொடுத்தால் தான் சுறுசுறுப்பா ஆள் பிடிச்சு அனுப்ப ஆரம்பிப்பாங்க. ஜெகஜாலப் புரட்டனுங்க நான் பார்த்து வச்சிருக்கறவன் எல்லாம். தில்லிக்கு ராஜாவா இருந்தாலும் சாமர்த்தியமாப் பேசி வசப்படுத்தி, கப்பலேத்தி அனுப்பிடுவானுங்க.
அவளோடு நானும் சிரித்தேன்.
ரெட்டியார் தயவு இருந்தா சப் ஏஜெண்ட் பயலுகளுக்கு இந்தத் தொகையை வெட்டி விட்டுடலாம்.
பொடி வச்சுப் பேசினாள் கல்யாணி. நான் கருப்பட்டிக் காப்பியைக் குடித்து முடிக்கிற வரைக்கும் என் பக்கத்தில் பவ்யமாகக் கை கட்டி நின்றபடி இருந்தாள்.
அவள் சொன்னது எனக்குப் புரிந்தது.
நான் நம்ம தோட்டம், மற்ற அண்டை அயல் தோட்டம் இங்கெல்லாம் வேலைக்கு வந்த நம்ம ஊர் ஜனங்களுக்காக மாசாந்திர சீட்டு ஒண்ணு நடத்தி வந்தேன். பிரதி மாசம் பிறந்து ஒரு ரூபா கொடுத்து சீட்டெடுப்பிலே விழுந்தா ஐநூறு ரூபாய். அப்புறம் அதை குறைஞ்ச வட்டி கொடுத்து அடைச்சா போதும். விழாட்டாலும் பாதகமில்லே. அஞ்சு வருஷத்துலே கணிசமான தொகை கைக்கு வரும்.
ஊர்லே, வீட்டுலே சுப காரியச் செலவு, அசுப காரியச் செலவு, குலதெய்வம் கோவிலுக்கு பிரார்த்தனை, கள்ளுத் தண்ணி வாங்கின கடனை அடைக்க. நிலம் நீச்சு வாங்கிப்போட, இப்படி இங்கே வரக்கூடிய எல்லோருக்கும் எதுக்காவது கணிசமான பணம் எப்பவும் தேவைப்பட்டதாலே, சீட்டைத் தள்ளி எடுக்கவும் சதா போட்டா போட்டி.
எனக்கும் லாபமாச்சே. சீட்டுப் பணத்தை அட்டியில்லாமா சம்பளம் வாங்கினதும் அவனவன் கொடுத்துடுவான். பத்திரமா ஐந்தொகை போட்டுப் பதிஞ்சு வச்சுப்பேன் எல்லாத்தையும் ஒரு காசு கூட விடாமல். கணக்குலே நான் சுத்தம். அதுலே மட்டுமாவது.
இப்படி சீட்டு பிடித்த பணத்தை இங்கே அடகுக்கடை நடத்த நம்ம ஊர்லே இருந்து வந்த பெரிய கருப்பன் செட்டியார் வசம் ஒப்படைத்திருந்தேன். அந்த வகையில் பத்தாயிரம் ரூபாய் செட்டியாரிடம் இருந்தது.
உன் அம்மாளும் என் பிரியமான பெண்டாட்டியுமான லோலா சீமாட்டியும் பெரிய கருப்பன் செட்டியார் வசம் நல்ல வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாள். சிக்கனமாக ஜீவனத்தை நடத்தி, உனக்கும் சந்ததிக்கும் வேண்டி சேர்த்து வைத்த அந்தப் பணத்தை நானும் அவளும் பாத்தியஸ்தராக இருந்து செட்டியாரிடம் கொடுத்து வைக்க, வாங்க உரிமை இருக்கிறதாக ஏற்பாடு.
அந்த வகையில் கிட்டத்தட்ட அரை லட்சம் ரூபாய் உங்கம்மா சிறுவாடுப் பணமாகப் பெருந்தொகை சேர்த்திருந்தாளடா என் கண்ணு வைத்தீஸே.
ஒரு முப்பதாயிரம் ரூபாய், இல்லேன்னா, இருபத்தஞ்சு. ரெட்டியார் கடனாக் கொடுத்தா, ஆயுசு பூரா கடன் பட்டிருப்பேன் சந்தோஷமா என்றாள் கல்யாணி. என் கடனை துரை கமிஷன் கிடைச்சதும் பைசல் பண்ணிடறேன்னா.
என்னையும் தீர்த்துடாதேடி கல்யாணிக் குட்டி. ஒக்கல்லே வச்சுக்கோ. இல்லே ரவிக்கை முடிச்சுக்குள்ளே முடிஞ்சுக்கோன்னு நான் அதை பிரிக்க ஆரம்பிக்க, வேணாம், விடிஞ்சு நேரமாச்சு, வீட்டைப் பார்க்கப் போம் என்று துரத்தி விட்டாள்.
ஆக, என் சீட்டுப் பணம் முழுசாக பத்தாயிரம் ரூபாய், லோலா உயிரைக் கொடுத்துச் சேர்த்து வைச்சதில் ஒரு இருபதாயிரம் ரூபாய். செட்டியாரிடம் ஒரே தவணையில் கேட்டால் சந்தேகப்படுவார் என்று மாசத்தில் நாலைந்து தினத்தில் பணம் திரும்ப வாங்கினேன். முதல் தடவை போனபோது செட்டியார் கேட்டார்.
என்ன வே, தொடுப்பு வகையிலே செலவு ஜாஸ்தியாச்சோ?
மனுஷன் மகா புத்திசாலி. சட்டுனு எல்லாம் புரியற கல்பூர புத்தி. இல்லாமலா, காசு கொடுத்து வாங்கி காசு பண்ண இப்படி சமுத்திரம் தாண்டி வந்திருப்பார்?
அதெல்லாம் இல்லே செட்டியார்வாள். சீட்டுக்காரன் ஒவ்வொத்தணும் ஒவ்வொரு செலவுன்னு கையப் பிசஞ்சபடி வந்து நிக்கறான். சீட்டு பணம் வாங்கினதுக்கு மேலேயே கடனாக் கொடுத்து வசூலிக்க வேண்டி இருக்கு. நம்ம மனுஷாளாச்சே. நாமதானே உதவி செய்யணும், சொல்லும்.
நான் தலையைக் குனிந்தபடி சொன்னேன்.
உதவி, உபத்திரவம் எல்லாம் இருக்கட்டும். ஆரியக் கூத்தோ, காப்பிரிக் கூத்தோ. எதை ஆடினாலும் காசு காரியத்திலே கண்ணு வையுமய்யா.
செட்டியார் கண்ணை சிமிட்டிக் கொண்டு திண்டில் சாய்ந்து உட்கார்ந்தார். பொழுது போக்காகப் பேசுகிற உற்சாகம். அவர் நல்ல மனநிலையில் இருந்தால் எனக்கும் நல்லதுதான்.
ரெட்டியாரே. இதைக் கேளும். எங்க பக்கம் ஏகப்பட்ட நிலபுலம் வச்சிருக்கற உடையார் உண்டு. அவுஹ வீட்டு வளவிலே உக்கார்ந்து கணக்கு அய்யர் கண்ணைக் கவிஞ்சுக்கிட்டு கிரமமா வரவு செலவுக் கணக்கு எளுதுவாரு.
அதுக்கென்ன இப்போன்னு கேட்க நினைச்சேன். போறது, செட்டி காசு தரணுமே.
ரெண்டு போகம் விளையற நெலமாச்சே ஓய் நமக்கு. வரவை விட செலவு கூடுதலா எழுதியிருக்கீரே அப்படீன்னு உடையான் கேட்டபோது பாப்பான் என்ன பதில் சொன்னான் தெரியுமா?
எனக்கெப்படித் தெரியுமய்யா நீரே சொல்லும் என்றேன்.
உடையாரே, உம்ம நிலம் தான் ரெண்டு போகம். உமக்கு தினசரி மூணு போகமாச்சே. செலவு ஏறாம என்ன பண்ணும்னாராம் அய்யர்.
செட்டியார் சிரித்தபடி எடுத்துக் கொடுத்த பணத்தை கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டு போய் அப்படியே கல்யாணியிடம் கொடுத்தேன்.
முப்பதாயிரம் ரூபாய் அவள் கைக்குப் போய்ச் சேர்ந்ததும் சிரிப்பாய் சிரித்தது செட்டியார் மட்டுமில்லை. ஊரிலே மிச்சம் மீதி எல்லோரும்.
கல்யாணி காணாமல் போயிருந்தாள்.
(தொடரும்)
- ஹெல்மெட்டின் பாதுகாப்பு
- ஜப்பான் விண்ணுளவி ஹயபுஸா முரண் கோள் மண்ணை எடுத்துப் பூமிக்கு மீண்டது (Japan’s Space Probe Hayabusa Returns to Earth with Aster
- சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ்- தொடரும் விவாதம்
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தாறு
- நதியின் பாடல்.
- யாருக்கும் தெரியாது
- சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்
- முதலில் நல்ல மதிப்பெண் பெற்று படிக்கும் குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -19
- மலர் மன்னன் கட்டுரை: ஹிந்துக்களா அவர்கள் எங்கே இருக்கிறார்கள் பற்றி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -1 கடவுளின் படைப்பு வேலை
- சிட்டு க்குருவி
- பூனைக் கவிதைகள்
- ஏ.தேவராஜன் 5 கவிதைகள்
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 2 – சைப் டைட்டில் : நித்திய சோதனை
- முள்பாதை 34
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 இறுதிப் பாகம்.
- களம் ஒன்று கதை பத்து – 5 சுரப்பி
- சக மொழிபெயர்ப்பாளர் தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி
- நினைவுகளின் சுவட்டில் – (49)
- போபால் – உங்கள் செயல் வேண்டி
- நிலவும், மலையும், நிரந்தர தெய்வீகமும்
- ரிஷியின் கவிதைகள்.
- கண்ணாமூச்சி
- வேத வனம் விருட்சம் 90 –