விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

இரா.முருகன்


1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

ஏண்டா பரதேசிங்களா என்ன ஊருடா இது?

ராஜா சத்தமாகக் கேட்டார். இருமலில் பிசிறடிக்காமல், கபத்தை முழுங்கிக் கொண்டு கொழகொழவென்று எதிரொலிக்காமல் கணீரென்று இருந்த அவருடைய குரலைக் கேட்க அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. அட, கேக்குதே எளவு இம்புட்டுத் துல்லியமா!

யாரோ றெக்கை கட்டின சாமியான் மாதிரி பறந்து வந்து பக்கத்தில் நின்றது கவனத்தில் பட்டது. புஸ்தி மீசையும் புதுசாக் கல்யானம் ஆன மிடுக்குமா இது அந்த மாமனார்க் கிழவன் இல்லியோ?

ஆமா, நீ இன்னும் இளந்தாரின்னு நெனப்போ.

புஸ்தி மீசைக் கிழவன் கொக்கரித்தான்.

வக்காளி, நெனைக்க விட மாட்டேங்கறான். சரி, கொஞ்சம் மரியாதையாத்தான் கதச்சுப் பார்ப்போம்.

நல்லாயிருக்கீகளா மாமா?

ஏதோ இருக்கேன்’பா. காலையிலே தான் நம்ம பொம்பளை சொன்னா நீ வந்து சேர்த்துட்டேன்னு. போக்குவரத்து எல்லாம் பிரச்சனை இல்லியே?

என்ன போக்கு வரத்து? எங்கிட்டு இருந்து எங்கிட்டுப் போறதுக்கு?.

ராஜாவுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை. மசங்கலாக அவருக்கு நினைவு இருக்கிறது. நினைப்பும் கனவுமாக ஒரு மாசம் போல கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார். மருதையனோ, அடுத்த வீட்டு தாசீல்தார் அய்யர் பையனோ சட்டியிலே இவர் மூத்திரம் போக, கொண்டு போய்க் கொண்டிக் கொண்டிருந்தார்கள். பழனியப்பன் இல்லை அது நிச்சயமாக. அவன் சொர்க்கவாசி ஆகி நாலு மாசம் ஆகிவிட்டது. ராஜா பயிர் செய்து வைத்திருந்த புகையிலையை ஆசை தீர மென்றபடிக்கே அவன் மேற்கொண்ட யாத்திரை அது. போகட்டும் அவனுக்காவது அரண்மனை சாகுபடி பிரயோஜனப்பட்டதே.

பழனியப்பன் வியோகமானதற்கு ரெண்டு நாள் கழித்து மீதி புகையிலையை மண்வெட்டியால் கெல்லி தூரப் போட்டு விட்டு அரண்மனைத் தரையில் காரைக் கட்டடம் எழுப்ப மருதையன் மெற்பார்வை பார்த்தபடி நின்றதை ராஜா கட்டிலில் இருந்தே கவனித்திருக்கிறார்.

தீர பசி என்பதே இல்லாமல், சகல நேரமும் தாகம், அதுவும் தேத்தண்ணியோ காப்பியோ குடிக்க இச்சை. தாசீல்தார் சாமா வீட்டில் இருந்து படிக் கணக்கில் அனுப்பின காப்பித் தண்ணி குடிக்க வேண்டியது, யாரையாவது மூத்திரச் சட்டியைப் பிடிக்கச் சொல்ல வேண்டியது, தூங்க வேண்டியது இப்படியே போன ஜீவிதம் என்ன ஆச்சு?

நேத்து பகல் ஒரு மணிக்கு அது முடிஞ்சுது மாப்புளே.

புஸ்திமீசையான் ரொம்ப சந்தோஷமாகச் சொன்னான். மூணு சீட்டு விளையாட ஒரு கை குறைந்த நேரத்தில் ஏப்பை சாப்பையாக ஒருத்தன் நானும் வரேன் என்று வந்து உட்கார்கிற மாதிரி அவன் சந்தோஷம் அவனுக்கு.

ஏதோ பொம்பளை என்றானே வந்ததும் வராதுமாக. எந்தப் பொம்பளை? இந்தாளு இங்கேயும் வந்து தொடுப்பு வச்சுக்கிட்டானா? செய்யக் கூடியவன் தான். சரி நமக்கு எதுக்கு வம்பு?

ராஜா கொஞ்சம் அடக்கி வாசிக்க முடிவு செய்தார்.

வந்தது வந்தாகி விட்டது. இது அவன் இருக்கப்பட்ட இடம். ரொம்ப நாள் முன்னாடியே துண்டையோ கோவணத்தையோ உருவிப்போட்டு இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறான். ராஜா அனுசரித்துத் தான் போகணும் அவனை.

மாமா உடம்பெல்லாம் சொடக்கு எடுத்து விட்ட மாதிரி சீரா இருக்குது.

எதையாவது பேச வேண்டியிருக்கிறது. கஷ்டத்தை சொன்னால் இவன் சந்தோஷப் படுவான். சந்தோஷத்தைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாமே.

மாப்புளை தொரை, உடம்பா? அது எங்கே இருக்குது இங்கே? அலங்காரமாப் பாடை கட்டித் தூக்கிப் போய் அடக்கம் பண்ணிட்டாங்களே.

கிழவன் கபடமாகச் சிரித்தான். என்ன கருமாந்திரமோ அவனுக்கு மட்டும் தொளதொளவென பாதிரியார் ஞாயித்துக்கிழமை மாதா கோவிலுக்குப் போக அங்கி மாட்டிக் கொண்டு வந்த மாதிரி ஒரு உடுப்பு, முகமும் உடம்பும் அன்னிக்கிக் கண்ட மேனிக்கு அழிவில்லாமே அப்படியே தான் இருக்குது. சுகலோலப் பிரியனாக இன்னும் எத்தனை காலம் சுற்றி வருவானோ.

அதென்னமோ தெரியலே மாமா, என் கண்ணுக்கு நீங்க தெரியறீங்க நல்லாவே. உங்க குரல் கூட அட்டகாசமாக் கேக்குது. கூடவே தொப்பு தொப்புன்னு சத்தம் வேறே.

என் இடுப்புக்குக் கீழே குனிஞ்சு பாரு. முடி உதுர்ற சத்தம்.

நாறப் பயபுள்ளே. இவன் எத்தனை காலம் இங்கனக்குள்ளே சுத்திக்கிட்டுக் கெடந்தா என்ன, கவட்டுக்குள்ளே தான் புத்தி.

ஆமா மாப்பிளே, வாச்சிருக்கறவன் வச்சுக்கிட்டு என்ன வேணும்னாலும் செய்யுவான். உனக்கு ஏன் பொச்சாப்பு?

அட போடா வக்காளி, உன்னை அப்பாலே கவனிச்சுக்கறேன்.

ராஜா நடந்தார். அவர் நினைப்பு முழுக்க ராணியைத்தான் சுற்றி இருந்தது. எங்கே போனாளோ? அறியாப் பொம்பளையாச்சே பாவம். நாலு வருசம் முந்தி மதுரைத் தேர்த் திருவிழா முடிஞ்சு அழகர் ஆத்துலே இறங்கற நாள்லே புட்டுக்கிட்டுக் கிளம்பினவளாச்சே. என்னதான் கடிஞ்சுக்கிட்டாலும், என்னப் பார்க்க வராம இருப்பாளா என்ன?

நாச்சி, ஏம்புள்ளே எங்கிட்டு இருக்கே?

அவர் சத்தம் நாலு திசையிலோ அதுக்கும் மேலே கீழே எல்லாம் எதிரொலித்தும் பிரயோஜனம் இல்லை. புஸ்தி மீசைக் கிழவனைக் கேட்கலாமா? மகளாச்சே? இருப்பிடம் தெரியாமலா இருக்கும்?

மாமோய்.

கூப்பிடத் திரும்பினார் ராஜா. கிழவன் போய் விட்டிருந்தான்.

இதென்னமோ மேளமும் கொம்பு வாத்தியமுமாகச் சத்தம்.

அட, அரண்மனை இல்லையோ. நடந்து நடந்து இங்கேயா வந்து சேர்ந்திருக்கோம்.

இத்தனை கம்பீரமாக அவருடைய அரசூர் அரண்மனை இருந்து இந்த ஜன்மத்திலே பார்த்ததில்லையே. சுத்தமாக வெள்ளை அடித்து, ஓட்டை உடைசல் ஏதும் தட்டுப்படாமல் அங்கங்கே காரை அடைத்து தில்லி சுல்தான் கோட்டை மாதிரி என்னமா எழும்பி நிக்குது. அரண்மனையிலே ஒரே சந்தடி.

நடுநாயகமாக மருதையன் நிற்கிறான். பக்கத்தில் அடுத்த வீட்டுக்காரப் பிள்ளை டெப்புட்டீ தாசீல்தார் சாமா. என்னமோ படையல் நடக்கிறது போலிருக்கு. ஜோசியக் காரர் வேறே சட்டமா நட்ட நடுவிலே பூசணிக்காயை வைப்பாட்டி மாதிரி அணைச்சுப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கார். எம்புட்டு காசு பிடுங்கினானோ அந்த ஓமம், இந்த சுக்கு, திப்பிலின்னு வாக்குதத்தம் கொடுத்து.

முன்னாடி ரோஜாப்பூ மாலையெல்லாம் போட்டு சார்த்தி வச்சிருக்கற படம்? ராஜாவே தான். தான் இத்தனை கோலாகலமாக எப்போ இருந்தோம் என்று அவர் யோசித்தார். கல்யாணமான போது இருந்திருக்கலாம். அப்போது அரண்மனை நிதிநிலைமை ஏதோ இழுத்துப் பிடிச்சு மெச்சத் தகுந்த தரத்தில் இருந்ததால் அவரை எல்லா ராஜ உடுப்போடும் நாற்காலியில் நட்டக்குத்தலாக உட்கார வைத்துப் படமாக எழுத ஆரம்பித்தது. காரியஸ்தன் ஏற்பாடு அது. அந்தப் பயலும் இங்கே தான் எங்கேயோ செனைப் பூனை மாதிரி கீச்சுக் கீச்சென்று இரைந்து கொண்டு கிடப்பான். கிடக்கட்டும். அவனை சாவகாசமாப் பார்த்துக்கலாம்.

ஆமா, அந்தப் படம் என்ன ஆச்சு? முடிஞ்சாத்தானே என்ன ஆச்சுன்னு கேட்க? வங்காளத்தில் இருந்து வந்த சித்திரக்காரனை மேற்படி வர்ணச் சித்திரம் வரைய அமர்த்த, அவன் உள்ளூர்ச் சாப்பாட்டு ருசி பிடிக்காமல் சமையல்காரி அழகம்மையோடு சவாரி விட்டு விட்டான். அழகம்மை மேலே அமர்க்களமா சதா மீன்வாசனை அடிக்கும். ராஜா ஏகப்பட்ட தடவை ஆசைதீர அனுபவித்திருக்கிறாள். அவள் கூட வங்கிழடாக இங்கே தான் இருப்பாளோ?

அப்புறம் இந்தக் களவாணி குட்டையன் நெட்டையன். பனியன் பிரதர்ஸ்னோ என்னமோ மருதையனும் தாசீல்தார்ப் பையனும் அவங்களைப் பத்திப் பேசி சிரிக்கிறது அரைகுறையாக ராஜா காதில் விழுந்திருக்கு. அப்போ அவர் சீக்கு முத்திப் போன கோழியாக படுக்கையே கதியாகக் கிடந்ததால் ரொம்ப ஒண்ணும் எதைப் பத்தியும் யோசிக்க முடியவில்லை.

குட்டை பனியன், நெட்டை பனியன் ஆளுங்களும் இங்கே தான் திரிஞ்சுக்கிட்டு இருப்பாங்க. எத்தனை கேட்டானுங்க, ராஜா ஒரு படம் பிடிச்சிருந்தா இப்போ அதை இல்லே வச்சு ஐயர் சகலமானதையும் படைச்சுக்கிட்டு இருப்பார். மூஞ்சியும் கைகாலும் கோணண கோணையா இருந்தாலும் அவர் இருந்த மாதிரிக்கு அச்சு அசலாப் படம் அமைஞ்சிருக்குமே.

சாமா, முடிஞ்சுதா இன்னம் இருக்குதா? எனக்கு இந்த சடங்கு சம்பிரதாயத்துலே எல்லாம் நம்பிக்கை விலகிப் போய்க்கிட்டே இருக்கு.

அதான் நூறு தடவையாவது சொல்லிட்டியே மருதா. இப்போ சும்மா இரு.

சாமா அவனை சத்தம் போட்டு அடக்கினான்.

டெபுடி தாசீல்தார் நீ ஆர்டர் போட்டு இருக்கே. ஆர்டினரி சிட்டிசன் ஆஜராகம முடியுமா? புண்ணியமாப் போகுது. சீக்கிரம் முடிப்பா. காலேஜ்லே அடுத்த வாரம் பாடம் எடுக்க ஏகத்துக்குப் பழைய புத்தகத்தைப் புரட்ட வேண்டியிருக்கு.

தோ முடிஞ்சாச்சுடா மருதையா. செத்தெ இரு. அம்மா வந்துண்டு இருக்கா. ஜோசியக்கார அய்யங்கார் ஏதோ பதார்த்தம் பண்ணி எடுத்துண்டு வரச் சொன்னாரோல்லியோ. கொண்டு வரா.

பகவதி ரொம்பவே தளர்ந்து போய் கையில் தூக்குப் பாத்திரத்தோடு உள்ளே வந்ததை ராஜா பார்த்தார். பாவம் இந்தம்மாவும் சீக்கிரமே இங்கனக்குள்ளே வந்துடும் போல இருக்கே.

காலம் தான் என்னமா பறக்குது. நேத்துக்குத்தான் இது சங்கரய்யரைக் கல்யாணம் கட்டி மலையாளச் சீமையிலே இருந்து அரசூருக்கு அடியெடுத்து வச்ச மாதிரி இருக்கு. கருக்கடையான பிள்ளை. இப்படியா தலை நரைச்சு கிழவியாகி ஓய்ஞ்சு போகணும்?

கம்பங்காடு கரிசல்காடு வித்தியாசமில்லாம மேயற புஸ்தி மீசையான் இம்புட்டு நாள் போயும் உரமா பேசிக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு கிடக்கான். இந்த மாதிரி நல்ல ஜென்மங்க தான் தும்பப்படும் போல.

பகவதியம்மா கூட வந்த பெண்ணை இதுக்கு முன் பார்த்ததாக ராஜாவுக்கு நினைவு இல்லை. இது தாசீல்தார் பொண்டாட்டி இல்லை. அந்தக் குட்டியை விட கொஞ்சம் வயது அதிகம். உடுப்பும் அது என்ன வேட்டியை இடுப்புலே சுத்திக்கிட்டு மேலே ஆம்பளைக் குப்பாயத்தை மாட்டிக்கிட்ட மாதிரி? காது முழுக்க மறைக்கற மாதிரி தங்கத்துலே காதுவாளி. நம்ம பக்கத்து சமாச்சாரம் இல்லியே. யாரு இதுன்னு ராஜா யோசித்தார்.

அந்தப் பெண்ணுக்குப் பின்னால் ஒரு ஓலைக் கொட்டானில் வெற்றிலை பாக்கும், பூவன் பழக் குலையுமாக வந்த மனுஷனைப் பார்த்ததும் ராஜாவுக்கு எல்லாம் விளங்கியது. மலையாளத்துப் பிள்ளை. பகவதியம்மா உடம்புறந்தான் வேதத்துலே ஏறி பிள்ளை பெத்துக்கிட்டானே. திருவனந்தபுரமோ கொல்லமோ பள்ளிக்கூட வாத்தியார். அட, அவனும் வந்தாச்சா.

எங்கே எங்கே இருந்தெல்லாம் வேண்டப்பட்டவங்க வந்து மரியாதை செலுத்தறாங்க. ராஜ சாவுதான் தனக்கு. கௌரதை அப்படி. புஸ்திமீசைக் கிழவனா என்ன? தாரை தப்பட்டையோடு தோலான் துருத்தியான் எல்லாம் கள்ளுத் தண்ணி முட்டக் குடிச்சுட்டு குழிக்குள்ளே கொண்டு தள்ள?

இந்த மலையாளத்தான் பேரு என்ன? ராஜா நினைவு படுத்திப் பார்த்தார். ஊஹும், புஸ்தி மீசைக் கிழவனின் ரோமம் உதிர்கிற சத்தம் தான் காதுக்குள்ளே கேக்குது.

மருதையன், அரண்மனையை பிரமாதமா ஆக்கிட்டீங்களே. ராஜ குடும்பத்து ரத்தமாச்ச்சே. நினைச்சா முடிச்சுட்டுத்தான் மத்த வேலை.

வேதையன் மனசு திறந்து பாராட்டிச் சொன்னான்.

வேதையன் சார், ராஜ குடும்பத்து ரத்தமும் இல்லே. அரண்மனையும் இல்லே. இன்னொரு அரசூர்க்காரன், இன்னொரு அரசூர்க் கட்டிடம். அம்புட்டுத்தான், இந்தத் தாசீல் சாமா அய்யரு ஆளு அம்பு எல்லாம் ஏற்பாடு பண்ணித் தராட்ட, நம்ம மாதிரி வாத்தியாருங்களுக்கு ஏது செல்வாக்கு? பார்ப்பார ராஜா. சர்க்காருக்கு வேண்டப்பட்டவன் ஆச்சே.

சாமா தோளில் மருதையன் பலமாகத் தட்டிச் சிரிக்க, ஏதுக்கென்று தெரியாமல் ஜோசியக்கார ஐயரும் சிரித்து வைத்தார்.

அசமஞ்சமான பயலா இருக்கானே. ராஜா அவனைப் பார்த்ததுமே நினைத்தார். அரசூரில் ஜோசியக்காரக் குடும்பங்களே அஸ்தமித்துப் போய், வேறே எங்கே இருந்தோ தாசில்தார் சாமா முயற்சியில் கொண்டு வந்து இறக்கப்பட்டவன்.

என்ன இருந்தாலும் அந்தக் காலத்தில் அரண்மனையில் யந்திரம் பிரதிஷ்டை செய்த ஜோசியருடைய புத்திசாலித்தனத்தில் அரைக்கால்வாசி கூட இந்தப் பிள்ளையாண்டானுக்கு வராது. வராகன் வராகனாக சிரித்துக் கொண்டே பிடுங்கி, அரசூர்ச் சக்கரவர்த்தி, மயிராண்டி மகாராஜன் என்றெல்லாம் உரக்க சுலோகம் சொல்லி உற்சாகப் படுத்திய அந்த ஜோசியக் கார அய்யரும் இங்கே தான் எங்கேயோ மிதந்து கொண்டிருப்பார் போல. மனுஷன் சவரனையும் பத்திரமாக அரைஞாண்கொடியில் முடிச்சுக் கொண்டு வந்திருப்பார். புஸ்தி மீசையானுக்கு சளைத்த ஆள் இல்லை அந்த அய்யனும்.

யாரோ தயங்கித் தயங்கி பின்னால் நிற்கிற ஓசை. ராஜா திரும்பிப் பார்த்தாள். மத்திய வயது பிராமணப் பெண். எங்கேயோ பார்த்த ஞாபகம் ராஜாவுக்கு.

பகவதி, என் பொன்னு பகவதிக் குட்டி.

அந்த ஸ்திரி தீனமாக அரற்றினாள். கையை கையை முன்னால் நீட்டி இங்கே இருந்தே பகவதியம்மாவைத் தொட்டுத் தோளைத் திருப்பி பேச முயற்சி செய்கிறவளாகத் தெரிந்தாள் அவள்.

அம்மா, நீங்க?

ராஜா மரியாதை விலகாமல் கேட்டார்.

விசாலம். அம்பலப்புழை விசாலம். பகவதிக்குட்டிக்கு மன்னி. யாராவது எங்க குடும்பத்தை கடைத்தேத்துவாளான்னு பிச்சைக்காரியா அலைஞ்சிண்டு இருக்கேன் மகாராஜா.

அவள் அழ ஆரம்பித்தாள்.

உயிரோடு இருக்கப்ப்பட்டவர்கள் தானே அழ சபிக்கப்பட்டவர்கள்?

உசிரோடு சந்தோஷமா இருந்தேன். செத்ததும் தான் துக்கமே.

அந்த ஸ்திரி ஓரமாக விலகி நின்று முணுமுணுக்கிற ஸ்வரத்தில் பேசினாள். அவள் மூச்சுக் காற்று ஓசை கூட ராஜா காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது.

செத்தாத்தான் துக்கம். சாவும் இல்லாம ஜீவனும் இல்லாமே, அது இன்னொரு மாதிரி.

அந்த ஸ்திரி சொல்லியபடிக்கு கரைந்து போனாள்.

அரண்மனையில் எள்ளுருண்டை வாடை எழும்பி ராஜா மூக்கில் சுகமாகக் கவிந்தது. அவர் கண்ணைச் சற்று மூடிக் கொண்டார். இதுதான் சாவு வாசனையா?

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts