விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபtத்திரெண்டு

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

இரா.முருகன்25 ஜூலை 1910 – சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை

கற்பகம், கற்பகம். எங்கேடி போனே?

வீடே அமைதியாகக் கிடந்தது. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்திருக்க மாட்டார்கள். அதுகளுக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்து விடுவதாலும், பள்ளிக்கூடம் கொஞ்சம் தொலைவிலே இருப்பதாலும் மதியம் கழிந்து மூணு மணி வாக்கில்தான் திரும்ப ஜட்காவில் வந்து இறங்குவார்கள். கற்பகம் அகத்துக் காரியம் எல்லாம் முடித்து விட்டு குரோஷா வேலை, பாசிமணி கோர்த்த கிருஷ்ணன் படம் என்று கொஞ்ச நாழி பொழுது கழித்து விட்டு, மகா பக்த விஜயம் பைண்ட் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மெழுகு சீலை தலகாணியில் தலை வைத்துப் படுத்தால் பாதியும் முழுசுமாகப் பகல் நித்திரை போய்விடுவது வழக்கம்.

பக்த விஜயத்தைக் கையில் எடுக்கறதுக்கு முந்தி வாசல் அழிக்கதவை அடச்சுத் தாழ்ப்பாள் போட்டுக்கோடி. எவனாவது ரைட் ராயலா உள்ளே வந்து பக்த விஜயம், மடிசார் விஷயம் எல்லாத்தையும் லாவிண்டு போயிடுவான்.

ஆபீஸ் போகிறபோது நீலகண்டன் தவறாமல் கற்பகம் காதில் சொல்வது இது. லாவிண்டு போறதாகப் பயம் உண்டாக்கும் விஷயங்களில் அவனுடைய அழகுப் பொண்டாட்டியும் அடக்கம். பின்னே இல்லையா? கதவை மட்ட மல்லக்கத் திறந்து போட்டுக் கொண்டு தூங்கினால் எவனாவது வந்து.

வந்து என்ன பண்ண? மடிசாரை உருவுவதற்குள் எட்டு ஊருக்கு கத்திவிட மாட்டாளா கற்பகம்? அவளோட அம்மா அவள் பிறந்ததுமே முதல் காரியமாக கோரோஜனை கொடுத்தில்லையா தஞ்சாவூர் மிடுக்கோடு கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனமான அதிகாரக் குரலை அவளுக்கு சொந்தமாக்கி இருக்கிறாள்.

செவிடனாக எவனாவது உள்ளே புகுந்திருப்பானோ. சீ, பாழும் மனசே. சும்மா கிட.

ராஜாத்தி, எங்கேடி செல்லம் இருக்கே?

நீலகண்டன் கூச்சலும் இல்லாமல் மெல்லிய சுவரமும் இல்லாமல் தேனொழுக அழைத்தான்.

உச்சந்தலையில் வெய்யில் இறங்கும் பகல் நேரத்தில் இப்படி மோக வசப்பட்டு வழிவது அவனுக்கே விபரீதமாகப் பட்டது.

குளிரக் குளிர தயிர் சாதமும் மாவடு ஊறுகாயும் கொட்டிக் கொண்டு அலைச்சல் தீர கொஞ்சம் உறங்கி மதியம் கழிந்து வெளியே கிளம்புகிற திட்டத்துக்கு ராஜாத்தியும் செல்லமும் ஏக இடைஞ்சல் ஆகிவிடும்.

வீட்டு முகப்பில் இருந்து சமையல் கட்டுக்கு நுழையும் வழியில் மெழுகுசீலை தலகாணியும் பக்த விஜயம் பைண்டு புஸ்தகமும் தட்டுப்படவில்லை. சமையல் கட்டிலேயே கையைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு இந்தப் பெண்டு உறங்கிப் போய்விட்டாளோ?

கல்ப்பு.

இது பரவாயில்லை. சமையல் கட்டில் அவனுடைய குரல் முன்னால் நுழைந்தது.

ஊஹும். அங்கேயும் கற்பகத்தைக் காணோம்.

தட்டில் விளம்பிய சாதமும் மேலே சாம்பாரும் பாதி சாப்பிட்ட ஸ்திதியில் இருந்தது. மோர்க் கச்சட்டி மட்ட மல்லக்கத் திறந்து கிடக்க, ஊறுகாய்ப் பரணி வாயில் கட்டிய வெள்ளைத் துணி அவிழ்ந்து லீலை முடிந்த கோலம் போல தொங்கிக் கொண்டிருந்தது.

பாதி சாப்பாட்டில் எங்கே போனாள்?

நீலகண்டன் மனம் முழுக்க இனம் புரியாத பயம். தோட்டச் சுவருக்கு அந்தப் பக்கம் நாய் குரைக்கிற சத்தம் கேட்டது.

சுவர் ஏறிக் குதித்து எவனாவது களவாணி நுழைந்து எச்சில் கையோடு இலைக்கு முன்னால் உட்கார்ந்திருந்த கற்பகத்தைத் தோளில் சாத்திக் கொண்டு திரும்ப சுவர் ஏறிப் போய்விட்டானா? தயிர் சாதம் அப்பிய வாயோடு அவளை.

கல்ப்பு. என் கண்ணம்மாடீ.

வந்துட்டேன்னா.

அவன் குரல் திரும்ப உயரும் முன்னால் சமையல் கட்டில் அவசர அவசரமாக நுழைந்தாள் கற்பகம்.

ஏண்டி கழுதே எச்சல் கையோட எங்கே போய்த் தொலைஞ்சே. வாசல் கதவும் தேவடியா வாசல் மாதிரி தெறந்து கெடக்கு. உன்னை நம்பி நான் எல்லாத்தையும் போட்டது போட்டபடிக்கு ஆபீசுக்குப் போறேன் பாரு. நீ ஒரு நாள் இல்லாட்டாலும் ஒரு நாள் எல்லாத்தையும் வழிச்சு வாரிக் கொடுத்துட்டுத்தான் நிக்கப்போறே. கம்ப்ளீட்லி ராப்ட் ஆப் எவ்வரிதிங்.

என்ன உளறல் உமக்கு? தேவிடியா சவகாசம் வேறே வந்தாச்சா? ஹெட் கிளார்க் ஹெட் மட்டும் இல்லே மத்ததும் இங்கிலீஷ்லே தான் அதிகாரம் தூள் பரத்துமோ.

அததோட அதிகாரத்தையும் அடங்கிப் போறதையும் நித்தியப்படிக்கு நீதான் பார்க்கறியேடி.

நீலகண்டன் குரலை சமாதானமாக்கினான். தலை குளித்திருக்கிறாள் கழுதை. அள்ளி முடிந்து மனசை அலைக்கழிக்கிறாள். நாயுடுவும் டாக்குமெண்டும் நாசமாகப் போகட்டும். இப்படியே இவளை ஊஞ்சலில் சரித்து.

பசங்க வர்ற நேரம். பள்ளிக்கூடம் திறந்து நாலு நாள் தானே ஆச்சு. பாவாடைக்காரா கொடுக்கற பாடப் புஸ்தகத்தை எல்லாம் கட்டித் தூக்கிண்டு சீக்கிரமே வந்துடும் ரெண்டும். அட்டை போடணும் அதுக்கெல்லாம். வேலை காத்திண்டுருக்கு. கையை எடுங்கோ.

வலிந்து ஏற்படுத்திக் கொண்ட அவசரமாக அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து விலகி கற்பகம் ஊஞ்சலில் உட்கார்ந்தாள். அந்த அவசரத்திலும் அவன் உதட்டில் வெற்றிலை வாசனையோடு முத்தமிட மறக்கவில்லை அவள். தஞ்சாவூர்க்காரிக்குக் கோபத்தைத் தணிக்கிற வழியைச் சொல்லியா தரணும்?

எச்சக் கையோட எங்கேயும் தொலையலேன்னா. சாப்பிட்டு கையை அலம்பிண்டு போனேன். வாசல் கதவையும் சாத்தி அடச்சுட்டுத்தான்.

தொறந்திருந்ததேடி தங்கம்.

மண்ணாங்கட்டி. நீங்க அழுத்தமா என்னையோ எவளையோ நினைச்சுண்டு ஓங்கி இடிச்சிருப்பேள். தலையாலே தான்.

நீலகண்டன் துரைமார்களும் சாவும் ரோஜாப்பூ மாலையும் நெக்ரோபோபியாவும் இல்லாத உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்தான்.

அடுத்தாத்து வக்கீல் மாமிக்கு குரோஷாவிலே ரோஜாப்பூ போடச் சொல்லிக் கொடுத்திண்டிருந்தபோது காளை மாடு பசுவை அழைக்கற மாதிரி ஏங்கலோட உங்க குரல் கேட்டது. மாமி சொல்றா. பாருடி, பகல்லேயே உங்காத்து மனுஷர் அம்புவிட வந்துட்டார். போய்ட்டு வாடியம்மான்னு குங்குமம் கொடுத்து அனுப்பறா. மானம் போறது.

காவேரிக்கரைக்காரி ஓய மாட்டாள். சொல்ல நினைத்ததைச் சொல்லி விட்டுத்தான் வேறே பேச்சை எடுப்பாள். அவள் கிடக்கட்டும். அந்த எச்சல் இலை?

காணோம். சமையல் கட்டு தரை மொறிச்சென்று கிடந்தது. கல்சட்டி வாயை இறுக்கிக் கட்டி வெள்ளைத்துணி கட்டினது கட்டின மேனிக்கு இருந்தது.

என்ன பிரமை இது? பிரமையா இல்லே கண்கட்டு வித்தையா? ஏதாவது துர்தேவதை இவள் வெளியே போன பிற்பாடு உள்ளே நுழைந்திருக்குமோ?

நாதமுனி பீக்காட்டுப் பிசாசு என்றோ வேறே ஏதோ கண்றாவிப் பெயரிலோ சாயந்திரங்களில் கதை கதையாகச் சொல்வானே.

அவன் மாமியார் ஒரு துஷ்டிக்குப் போனபோது கூடவே அந்தப் பிசாசு வீட்டுக்குள் வந்து விட்டதாம். சாப்பிட இலை போட்டு உட்கார்ந்தால் அன்னத்துக்கும் காய்கறிக்கும் நடுவிலே ஒரு கரண்டி நரகலும் திடீரென்று வீட்டில் தட்டுப்பட ஆரம்பித்ததாம்.

பீத்துண்ண வச்சுட்டா சாமி என் மாமியா. அப்புறம் பூசாரியைக் கூட்டியாந்து கோடாங்கி அடிச்சு. அதான் ரெண்டு நாள் ஆபீசு பக்கமே தலை காட்டலே.

அவன் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய் திரும்பி வந்தபோது விஸ்தாரமாகச் சொன்னதை அப்போது நம்பவில்லை நீலகண்டன். ஆப்பக்காரிச்சி கூட எங்கேயோ ஊர் சுற்றி விட்டு சால்ஜாப்பு சொல்கிறான் என்று டெபுடி சூப்பரண்ட் கிட்டே கூட சொன்னான். ஆனால் இப்போது நாதமுனி சொன்னதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

ஐயர் அகத்துக்குள் அந்த பீக்காட்டு சமாச்சாரம் எல்லாம் வருமோ என்ன? லலிதா சகஸ்ரநாமமும் ஆவணி அவிட்டம் முடிந்து காயத்ரி ஜப தினத்தில் நிறுத்தாமல் புரோகிதர்கள் ஆளாளுக்கு நேரம் ஒதுக்கி முறை வைத்துச் சொல்லும் முறை ஜபமுமாக வேதம் ஒலிக்கிற வீட்டில் அதெல்லாம் எதுக்கு வரணும்?

வேதமாவது, மண்ணாவது. சாப்பாட்டு இலையில் நரகல் தட்டுப்பட தலைவிதி இருந்தால் யாரைக் கொண்டு எத்தைக் கொண்டு அதை வழிச்செறிய?

நீலகண்டன் சமையல்கட்டை ஒட்டி பூஜை அறைக்குள் திரும்பினான். இருட்டும் கொஞ்சம் குளிர்ச்சியுமாக இருந்தது அந்த இடம். வெட்டிவேர்த் தட்டி வாசனையும், காலையில் ஏற்றி வைத்து அணைந்து போன தீபத்தில் நல்லெண்ணெய் வாடையும், கட்டிக் கற்பூர வாடையும் சேர்ந்து சுகமாக இருந்தது.

போகட்டும். எல்லாக் கவலையையும் விட்டொழிக்கலாம். துரை சொர்க்கம் போன புண்ய திவசம் இன்னிக்கு. சந்தோஷம் கொண்டாட வேண்டிய தினம்.

இங்கே கொஞ்சம் அக்கடா என்று படுத்தால் என்ன? முதல்லே சாப்பிடணும். சாப்பிட்டு விட்டுப் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். அதுக்கு முந்தி அந்த காகிதக் கட்டை எடுக்க வேணும். நாயுடு காத்திருக்கிறான்.

அதுக்கும் முன்னால் மாடப்புரையைக் காலி செய்து விடணும். அந்த ஸ்தாலிச் செம்பு அங்கே தான் இருக்கு. வீட்டில் குறக்களி காட்டுவது அதுக்குள்ளே இருக்கப்பட்ட பீக்காட்டு தேவதையா இல்லை முனியா?

அவன் அவசரமாக மாடப் புரை இருட்டில் துழாவ இழைகிற ஜந்து ஏதோ கையில் ஊர்ந்து அப்புறம் தரையில் விழுந்தது.

அம்மாடீ. பூரானா?

அவன் போட்ட சத்தத்தில் கற்பகம் பூஜை அறைக்குள் வந்துவிட்டாள்.

ஏன் என்ன ஆச்சு? எதுக்கு அலறணும்? கேக்கறேன். அலங்க மலங்க முழிச்சுண்டு நிக்கறேளே. என்ன ஆச்சு?

அவனை தோளில் தட்டி பலமாக அசைத்துவிட்டு அப்படியே புடவை விலக்கி மாரில் சாய்த்துக் கொண்டு ஸ்தனங்களால் அவன் முகத்தில் அழுத்தினாள். போன நிமிஷ அதிர்ச்சியும் பயமும் எல்லாம் போக, வியர்வையும் கறிவேப்பிலை வாசனையுமாக இருந்த அவளில் அடைக்கலமானான் நீலகண்டன்.

குழந்தே. ரொம்ப பசியா இருந்ததுடா. அதான் சாப்பிட உட்கார்ந்தேன். சரி, நீங்க ஆம்படையானும் பொண்டாட்டியும் அந்யோன்யமா இருக்கற இடத்துலே இந்தக் கிழவிக்கு என்ன வேலை. நான் வெளியிலே போயிடறேன். சாப்பிட்டுட்டுத் தானே என்னை திரும்ப கூட்டிண்டு போகப்போறே. மெல்ல வா. நான் காத்துண்டு இருக்கேன்.

நீலகண்டனுக்கு மாத்திரம் முணுமுணு என்று கேட்ட சத்தம். ஸ்தாலிச் சொம்பு தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் அது பூஜை அறைக்கு வெளியே உருண்டது.

ஐயோ, இந்தக் குரல். மனசை ஈரப்படுத்துகிற இது நிச்சயம் துர்த்தேவதை இல்லை. அம்மா கோமதியா? பகல் நேரத்தில் தயிர் சாதமும் மாவடுவும் சாப்பிட இறங்கி இருக்கிறாளா? ஆவக்காய் ஊறுகாய் என்றால் அவளுக்கு இஷ்டமாச்சே.

இது அம்மா இல்லை. அவள் குரல் இப்படி இருக்காது. கற்பகத்தை விட அதிகாரமாக, எல்லாவற்றையும் கட்டி ஆள்கிற தொனியில் இருக்கப்பட்டது இல்லையா அது? இந்த அடங்கின குரலும் வார்த்தைக்கு வார்த்தை குழந்தே குழந்தே என்று ஹிருதயத்துக்குள் இருந்து கூப்பிடுகிறதும். எங்கே எப்போதோ கேட்டிருக்கிறோம். சின்ன வயசில் எங்கேயோ பிரயாணமாக குடும்பத்தோடு போனபோது. எங்கே? மலையாளக் கரைக்கு ஒரு விசை போனபோதா? அது ஏன் அந்தப் பிரயாணம் மட்டும் இப்போது ஞாபகம் வருகிறது?

நீலகண்டன் மெல்ல கற்பகத்தின் ஆலிங்கனத்தில் இருந்து விலகினான். அவன் முகம் வியர்த்திருந்தது. கற்பகம் முந்தானையால் ஒற்றி எடுத்தாள்.

இருங்கோ, கொழுமோர் காய்ச்சிக் கொண்டு வரேன். ரொம்பத்தான் பயந்திருக்கேள்.

அவள் சமையல் கட்டுக்குள் நடந்தாள்.

ஏய், அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் என்ன பச்சைக் குழந்தையா மோரும் மத்ததும் குடிக்க?

அப்புறம் ஏன் இப்படி பகல் நேரத்திலேயே பிரமை பிடிச்ச மாதிரி ஒரு கூச்சல்? அது சரி, ஆபீசுக்கு கிளம்பிட்டு இதென்ன இப்பவே திரும்ப வந்து நிக்கறேள்?

கொஞ்சம் தொணதொணக்காம இருக்கியா. துரை படார்னு மார் அடைச்சு பரலோகம் போயிட்டான். இன்னிக்கு எல்லோரும் அவாத்துக்கு மாலையும் மத்ததும் எடுத்துண்டு போறா. நான் இப்படி வந்தாச்சு. தலை போற வேலை.

சாப்பாட்டு கூடை எங்கே? அதுலே ரெண்டு ஆப்பிள் பழம் வச்சுருந்தேனே? இருக்கோ?

எல்லாம் ஆபீசுலே இருக்குடி. சாதத்தைப் போடு. சாப்பிட்டு கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிண்டு போறேன்.

சாயந்திரத்துக்கா கல்லறை இருக்கப்பட்ட இடத்துக்குப் போகப் போறேள்? வேண்டாம்னா. சொன்னாக் கேளுங்கோ. குளிச்சுட்டு கோவிலுக்குப் போயிட்டு வாங்கோ. துரைக்காக வேணும்னா பத்தாம் நாள் காரியத்தன்னிக்கு மோட்ச தீபம் மயிலாப்பூர் கோவில்லே ஏத்திடலாம்.

ஏண்டி அவா ஆச்சாரப்படி ஒரே நாள்லே குழியைத் தோண்டி பொதைச்சு கல்லை மேலே வச்சு சிலுவை நட்டுடுவாடி. பத்தும் பதினஞ்சும் நமக்குத்தான். சரி சாதம் போடு. பசி உயிர் போறது.

ஆனாலும் வர்ற மனுஷன் சாப்பாட்டுப் பாத்திரத்தை இப்படியா விட்டுட்டு வருவீர்? அதிலே வச்ச சாதமும் கூட்டு கறியும் ராத்திரி கெட்டுப் போய் நாளைக்கு நாத்தம் குடலைப் பிடுங்குமே?

எல்லாம் வெளியிலே எறிஞ்சுட்டு சுத்தமா அலம்பிக் கொண்டு வரேன். போதுமா?

உங்க ஆபீசுலே பத்து பாத்திரம் தேய்க்க பெண்டுகள் இருக்காளா என்ன?

உண்டே. நான் தான் தேடிப் போய் மடியிலே உக்காத்தி வச்சுத் தேய்க்கணும்.

இந்த அலட்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. ஒரு நிமிஷம் தனியா விட்டா பீக்காட்டுப் பேயைக் கண்ட மாதிரி கத்த வேண்டியது.

நீலகண்டன் மர பீரோவைத் திறந்தவன் கொஞ்சம் நிதானித்தான்.

உனக்கு யார் பீக்காட்டுப் பேயைப் பத்திச் சொன்னது?

இதுக்காக ஆள் போட்டா தகவல் சொல்ல வைக்கணும்? நீர் தானே அன்னிக்கு அதான் சித்ரா பௌர்ணமிக்கு.

அவள் சட்டென்று நிறுத்தினாள். நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

நீலகண்டனுக்கு ஞாபகம் வந்தது. ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் மேலே பட நக்னமான மேனி கலந்து ரமித்த நடுராத்திரியில் போகம் முந்த விடாமல் இருக்க பேயையும் பிசாசையும் பற்றி கற்பகம் காதில் சொன்னபடி இயங்கினவன் அவன்.

மர பீரோவின் உள்ளறையில் இன்னும் கொஞ்சம் மக்கி அந்த மலையாளக் காகிதக் கட்டு கிடந்தது. பத்திரமாக வெளியே எடுத்து கையில் தூக்கிக் கொண்டு நடக்கும்போது சில்லென்று ஏதோ காலில் பட்டது.

ஸ்தாலிச் செம்பு.

சாப்பிட்டு வெய்யில் தாழக் கிளம்பலாம்டா குழந்தே. எனக்குத்தான் எதுவுமே கொடுத்து வைக்கலே. கற்பகத்தையும் குழந்தைகளையும் ஜாக்கிரதையா பார்த்துக்கோ. சும்மா கண்டதுக்கும் பயந்து நடுங்காதே. கொழுமோர் உடம்புக்கு நல்லது.

முணுமுணுவென்று குரல் ஒலித்து அப்புறம் அந்தக் கூடம் முழுக்கக் கவிந்த மௌனம். ஊஞ்சல் அசைகிற சத்தம் அப்புறம். ஊஞ்சலை ஓரமாகத் தள்ளிக் கொண்டு சமையல்கட்டுக்குள் போனாள் கற்பகம்.

ஸ்தாலிச் செம்பை வெறித்தபடி நின்றான் நீலகண்டன்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts