விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

இரா.முருகன்


25 ஜூலை 1910 – சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை

எத்தனை சீக்கிரம் எழுந்தாலும் ஆபீசுக்குப் போய்ச் சேரும்போது தாமதமாகி விடறது. அதுவும் இந்த திங்கள்கிழமை வந்தாலே தலைக்கு என்னமாயொரு எரிச்சல்! மனுஷனை மட்ட மல்லாக்கப் புரட்டிப் போட்டு கொட்டையை நெறித்து அடிமை உத்தியோகத்துக்கு வாடா தேவடியா மகனே என்று கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி பல்லை நெரிக்கிறது.

அதுக்கு டவாலி ரங்கசாமி நாயக்கனும் ஒண்ணுதான், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஆரோக்ய டிப்பார்ட்மெண்டு ஆபீசு தலைமை குமஸ்தன் நீலகண்டனும் ஒண்ணுதான். ஏன், பரிபாலனம் பண்ணுகிற துரைமார்களுக்கும் கொட்டை இருக்கிறதால் அவர்களும் ஜாப்தாவில் அடக்கம்.

சந்தர்ப்பமும் கூடி அந்தப்படிக்கு அமைந்து போகிறது. ஞாயிற்றுக்கிழமை என்னத்தை வேணாம் வேணாம் என்று புத்தி சொன்னாலும் சின்ன வெங்காயத்தை அப்படியே வேகப் பண்ணி கமகமவென சாம்பார் வைத்து கற்பகம் இலையில் வட்டிக்கும்போது இன்னும் ஒரு கரண்டி வெங்காயமாப் போடுடி பெண்ணே என்று வாங்கி ஆசையாக ருஜித்துத் தின்ன வைக்கிறது. அப்புறம் தாராளமாக பெரிய வெங்காயம் அரிந்து போட்டு மிளகாய்ப் பொடி சன்னமா விதறி கிழங்கு பொடிமாஸ்.

அப்பா வைத்தியநாதன் காலத்தில் எப்போதாவது வீட்டில் தலையைக் காட்டிய வெங்காயமும் உருளைக்கிழங்கும் இப்போது சர்வ சகஜமாக மாசாந்திர தர்ப்பணம் பண்ணி வைக்க வருகிற சீனு வாத்யார் மாதிரி பிரதி ஞாயிறு காலையில் ஆஜராகி விடுகிறது.

வாங்க மறந்தாலும் கற்பகம் விட மாட்டாள். சனிக்கிழமை பாதி நாள் ரஜா என்பதால் ஆபீசுக்குக் கிளம்பும்போதே துணிப்பையும் காகிதத்தில் பென்சிலை அழுத்தப் பதித்து எழுதின காய்கறி பட்டியலோடும் தான் அனுப்பி வைக்கிறாள்.

எழுத மறந்தால் கூட பாதகம் இல்லை. ஆபீஸ் கிளம்புகிற அவசரத்திலும் நீலகண்டனின் கிராப்புத் தலையை முன்னுக்கு இழுத்து உதட்டில் மணக்க மணக்க கிராம்பு வாசனை முத்தத்தோடு கரதலப் பாடமாகச் சொல்கிறாள்.

முட்டைக்கோசு அரை வீசை, சின்ன வெங்காயம் ஒரு வீசை, போறாது, ஒண்ணரை, அப்புறம் பெல்லாரி வெங்காயம் அது அரை வீசை, சீமைக் கத்திரிக்காய் ஒரு வீசை.

ஏண்டி நாட்டுச் சரக்கே இல்லையாடி நம்மாத்து சமையல்கட்டுக்கு?

அவனும் சனிக்கிழமைக்கே ஆன சொகுசோடு அவள் இடுப்பை நிமிண்ட, கொஞ்சம் விலகி பங்கனப்பள்ளி ஒரு கூடை வாங்கிடுங்கோ என்பாள் கற்பகம்.

மல்கோவாவை வச்சுண்டு அது வேறே என்னத்துக்குடி?

சரி, நீங்க ஆபீஸ் கிளம்பலாம்.

அவசரமாக முந்தானையை இழுத்து மூடிக் கொண்டு அவள் உள்ளே ஓடுவதில் முடியும் சனிக்கிழமை காலை முத்தத்துக்கு சாயந்திரம் வரைக்கும் தீராத சக்தி உண்டு. நீலகண்டன் மதியம் கொத்தவால் சாவடிக்குக் கொண்டு போய் கற்பகம் சொன்னது, சொல்லாதது எல்லாம் வாங்கி நிறைக்கும்போது சமயத்தில் கை கனம் அதிகமாகி ஆள் வைத்து வீட்டில் கொண்டு சேர்ப்பித்தது உண்டு.

இது என்ன சனியன் பீர்க்கங்காய் வாங்கிண்டு வந்திருக்கேள்? பெரியவா பார்த்தா கொன்னே போட்டுடுவா.

பீர்க்கங்காய் தொகையல் நன்னா இருக்குமேடி. நாளக்கு ஞாயித்துக்கிழமை காலம்பற இட்லிக்கு தொட்டுக்க.

நன்னா இருக்கு. அதுக்கு ஒரு முழுக்காய் என்னத்துக்கு? அரிஞ்சு தரச் சொன்னா கொடுத்துட்டுப் போறான்.

அவ முடியாதுன்னு சொல்லிட்டாடீ. முழுசா வாங்கினா வாங்கு அய்யரே இல்லே எடத்தைக் காலி பண்ணுங்கறா.

ஓ, பொம்மனாட்டி வியாபாரம் பண்ற கடையா? சுரைக்காயைக் காட்டினாலும் வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டேளே? உங்க முழியும் மூஞ்சியிலே அசடும் பார்த்துட்டு சும்மா விட்டுடுவாளா என்ன?

கழுக்குன்றத்தில் இருந்து காய்கறி கூடையில் கொண்டு வந்து கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்த படுகிழவியை ஒரே நொடியில் கற்பகம் குரல் ரூபமாக அதி சுந்தரி அழகு ராணிப் பெண்ணாக்கி விடுவது வாடிக்கை.

நல்ல வேளை, போன வாரம் ஒரு வீசைக்கு பதில் சின்ன வெங்காயம் மலிவாக் கொடுக்கறான்னு மூணு வீசை வாங்கி வந்தபோது கொஞ்சம் மலைத்தாலும், கற்பகம் முடிவாகச் சொன்னாள் – நாளையிலே இருந்து தினசரி வெங்காய சாம்பார்தான்.

அமாவாசை, திவசம் என்று எதுவும் குறுக்கிடாததால் கற்பகத்தின் அடுக்களை சாம்ராஜ்யத்தில் ஒரு வாரம் கொடி கட்டிப் பறந்த சின்ன வெங்காயம் தினசரி நீலகண்டனை நடு ராத்திரிக்கு உசுப்பி விட்டது. அதுவும் நேற்று ஞாயிற்றுக் கிழமை பகல் நித்திரையும் இருந்ததாலோ அல்லது பீர்க்கங்காய் துவையல் சேர்ந்ததாலோ என்னமோ, கிட்டத்தட்ட ராத்திரி ஒரு மணிக்கு காவல் சேவகன் பிகில் ஊதிக் கொண்டு பாரா கொடுத்துப் போகிற வரை கற்பகத்தை தூங்க விடவில்லை.

இனிமே வெங்காயம் பக்கம் போகாதீங்கோ.

அவள் தூங்க ஆரம்பிக்கும் முன்னால் கடைசியாகச் சொன்னது பாதி அலுப்பும் பாதி திருப்தியுமாக நீலகண்டன் காதில் பட்டுக் கொண்டிருக்க அவனும் நித்திரையில் அமிழ்ந்தான்.

ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டிய நியமம் இந்த எழவெடுப்பான் வெங்காய நிமித்தம் தவறிப் போய் ரெண்டு பேருக்குமே ஏழு மணிக்கு முழிப்பு தட்ட அப்புறம் களேபரம் தான்.

இலுப்பச்சட்டி நிறைய ரவை உப்புமாவைக் கிண்டி குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்து அதையே மதியத்துக்கும் இலையில் பொதிந்து தந்தாள் கற்பகம். நீலகண்டனும் வேண்டாத விருந்தாளியை வரவேற்கிற தோரணையில் அதை விழுங்கி வைத்தான்.

எனக்கு மதியத்துக்கு டிபன் கேரியர்லே இந்த கருமாந்திரம் வேணாம். கூட்டமா சாப்பிடறபோது பக்கத்திலே எவனாவது பேமானி என்ன கொண்டு வந்திருக்கேடா பழின்னு கழுத்தை நீட்டிப் பார்த்தா அவமானமாப் போயிடும். நான் ஆபீஸ் பக்கம் சாப்பாட்டுக் கடையிலே பார்த்துக்கறேன். எலுமிச்சங்கா சாதம் அமிர்தமா கிடைக்கும். தைர் சாதம் புளிச்சாலும் அதிலே திராட்சைப் பழத்தையும் கொத்தமல்லியையும் போட்டு சரிக்கட்டிடுவான் லாலாப்பேட்டை பிராமணன்.

அவன் கிட்டேயே நித்தியப்படிக்கு வச்சுக்க வேண்டியதுதானே? அவாத்து பொம்மனாட்டியும் வியாபாரம் பண்றேன்னு கூட நின்னா, அவளுக்கும் சின்ன வெங்காய சேவை சாதிச்சுக்கலாமே. நான் நிம்மதியா இருப்பேன் பிடுங்கல் இல்லாம.

கற்பகம் அந்த அவசரத்திலும் வாய் வார்த்தையால் குத்தி வேடிக்கை பார்க்க மறக்கவில்லை.

ஏண்டி, தலை முடியை தழைச்சுண்டு நீயும் தானேடி ரதி சுகம் வேணும் வேணும்னு கூப்பிட்டே. உள்ளே வாடா உள்ளே வாடான்னு எத்தனை தடவை வந்து போய் உடம்பே நோகறதுடீ.

சொல்ல முடியாது. அதுவும் திங்கள்கிழமை ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இப்படி சாங்கோபாங்கமாகப் பேச முடியாது.

போன வாரம் மூர் மார்க்கெட்டில் பக்கத்து வீட்டு வக்கீல் வாங்கி படித்து விட்டுக் கொடுத்த நீதி போதனை புத்தகம் நேரம் கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்தது.

காலையில் எழுந்திருந்து எந்தப் பக்கம் உட்கார்ந்து எவ்வளவு நாழிகை வெளிக்குப் போக வேண்டும், என்ன தேவதையை எப்படி பிரார்த்தித்து பிருஷ்டம் சுத்தப் படுத்த வேணும், எப்படி குளிக்கணும், எப்படி சாப்பிடணும், இலையில் கொஞ்சம் மிச்சம் வைத்து வாசலுக்கு கொண்டு வந்து அதை எறிந்து விட்டு நாய்க்கும் காக்காக்கும் எத்தனை தடவை தோ தோ தோ மற்றும் கா, க்கா, க்க்கா சொல்லணும், அப்புறம் நாலு திசையிலும் என்ன என்ன சகுனம் தோன்றும் வரை காத்திருந்து வெளியே கிளம்பணும், அதுவும் கிழமை வாரியாக சகுன சம்பிரதாயம். எல்லாம் விலாவாரியாக அச்சுப் போட்ட புத்தகம்.

இதையெல்லாம் பார்த்து சகுனம் சரியாக நிண்ணுண்டு இருந்தால், சாயந்திரம் ஆகி ஆபீசே மூடிடுவா. தள்ளு சனியனை.

சொன்னாலும் அந்தப் புத்தகத்தை பத்திரமாக ஆபீசுக்கு எடுத்துப் போகிற சஞ்சியில் எடுத்து வைத்திருந்தான் நீலகண்டன்.

டிராமில் வாய் நிறைய வெற்றிலையை மென்றபடி சஞ்சிக்குள் கையை விட்டு புத்தகத்தை எடுத்தான் நீலகண்டன்.

இது என்ன பைண்ட் புஸ்தகம்? அவன் சஞ்சிக்குள் வழக்கம் இல்லாத வழக்கமாக வேறே ஏதோ புத்தகம். குழந்தைகள் விளையாடுகிற போது பாடப் புத்தகத்தை ஒளிச்சு வச்சிருக்குதுகளா என்ன? புஸ்தகம் கொண்டு போகாமல் போய் பாதிரியாரிடம் பிரம்படி வாங்கினால் கஷ்டமாச்சே.

அதுவும் சின்னவனுக்கு பாடம் எடுக்கிற பாதிரி, பிள்ளைகளை இடுப்புக்குக் கீழே கிள்ளுவதாக பிராது வேறே.

சனியன் இந்த பள்ளிக்கூடமே வேணாம். மாத்துங்கோ என்றாள் கற்பகம்.

இங்கே இருக்கற மாதிரி இங்கிலீஷ் படிப்பு வேறே எங்கேயும் கிடைக்காதே. பாதிரி கிள்ள வந்தா, கையைத் தட்டி விட்டுடுடா. நான் எட் மாஸ்டரைப் பார்த்துப் பேசறேன்.

போக முடியவில்லை இதுவரைக்கும். இப்போ அந்த களவாணி பாதிரி சின்னவனின் இடுப்பில் சில்மிஷம் பண்ணிக் கொண்டிருப்பானோ?

கையை முறிச்சு அடுப்பிலே வைக்க.

நீலகண்டன் கொஞ்சம் உரக்க முணுமுணுக்க டிக்கட்டுக்காக கையை நீட்டிய டிராம் கண்டக்டர் அவசரமாகப் பின்னால் வலித்துக் கொண்டான்.

சாமிகளே, டிக்கட் வாங்கறதும் வாங்காததும் அவ்விடத்து இஷ்டம். வாரம் பிறந்ததும் எனக்கு பிராமண சாபம் என்னத்துக்குங் காணும் கொடுக்கறீர்?

வருஷக் கணக்காக இதே வண்டியில் போய் வந்து சிநேகிதமான குரலில் அவன் சொல்ல, நீலகண்டன் நெளிந்தான்.

உம்மை இல்லைய்யா முதலியாரே. ராத்திரி பிரவசனம். திரௌபதி வஸ்திராபஹரணம் கோவில்லே. மனசெல்லாம் இன்னும் அதுதான்.

மனசறிந்து பொய் சொன்னபடி டிக்கட்டுக்கு சில்லரையாக ஒரு அணா எடுத்துக் கொடுத்தான் நீலகண்டன். கையில் வைத்திருந்த பைண்ட் புத்தகத்தைப் பிரிக்க, அதில் ஒரு பக்கம் நீள நீளமாக கோலம். பாதியில் புத்தகம் முடிந்து தலைகீழாக இன்னொரு புத்தகம். அதில் அற்பவீரன் கதை. நூதனமான கற்பனையும் நுண்மான் நுழைபுலனுமாக ஆரணிப் பக்கம் இருந்து யாரோ யாத்த வசனப் புத்தகம்.

கற்பகம் படிக்கிற விஷயம் இதெல்லாம். தூரமானால் பின்கட்டு மச்சில் ஒதுங்கும்போது படிக்க என்றே பிறந்த வீட்டில் இருந்து அவள் கொண்டு வந்த சீதனத்தில் இதுவும் அடக்கம்.

இந்த தூரமீனா புஸ்தகம் சஞ்சிக்குள் எப்படி வந்தது? கூடவே என்னத்துக்கு ஒரு வெற்றிலைக்குள் கட்டின மஞ்சள் துண்டு?

அதென்னமோ, அஞ்சாறு வருஷமாக இப்படி ஏன் எது என்று தெரியாமல் ஏதோ வீட்டில் சின்னச் சின்னதாக நடந்தபடி இருக்கிறது.

அந்த ஸ்தாலிச் செம்பில் இருந்து அவ்வப்போது விட்டு விட்டு குழந்தே குழந்தே என்று ஒரு பெண்குரல் விளிக்கும். பக்கத்தில் போய்ப் பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது.

நாலைந்து தடவை சொப்பனத்தில் அம்மா வயசில் ஒரு ஸ்திரி காசிக்கு என்னை கூட்டிண்டு போடா குழந்தே என்றாள் நீலகண்டனிடம். சின்ன வெங்காயம் சாப்பிட்டு காசிக்குப் போகலாமா என்று அவன் சந்தேகம் கேட்டபோது சொப்பனம் முடிந்திருந்தது.

வீட்டில் வைத்த பொருள் காணாமல் போவது, எங்கேயோ காணாமல் போனது சம்பந்தம் இல்லாமல் வேறே எங்கோ திரும்பக் கிடைப்பது என்று அவ்வப்போது நடக்கிறது.

போன அமாவாசைக்குத் தேடின பஞ்சபாத்திரம் உத்தரிணியில் உத்தரிணி மட்டும் காணாமல் போய், வருஷாந்திர புளி அடைத்து வைத்த அண்டாவில் கிடைத்ததும் இதில் அடக்கம். எலி இழுத்துப் போய்ப் போட்டிருக்கும் என்றாள் கற்பகம். எலி என்ன அமாவாசை தர்ப்பணமா பண்ணுகிறது?

ஹைகோர்ட் பக்கமே டிராமை நிறுத்தி விட்டார்கள். ராஜ பிரதிநிதி கோட்டைக்கு வரப் போகிறதால் கூடுதல் பந்தோபஸ்து ஏற்பாடு.

ஐயய்யோ, ஏற்கனவே தாமதம். இதில் ராஜப் பிரதிநிதி வேறே வந்து.

வந்து என்ன ஆஜர் பட்டியலைப் படித்து எந்த குமஸ்தன் வரலை வந்திருக்கான் என்று கொட்டை நெறிக்க முஸ்தீபோடு கணக்குப் பார்க்கப் போகிறானா என்ன?

ஓட்டமும் நடையுமாக நீலகண்டன் கோட்டைக்குள் நுழைந்தபோது குமஸ்தர்கள் ஏக காலத்தில் பேசிக் கொண்டு அவன் காரியாலய வாசலில் நின்றார்கள்.

சூப்ரண்டெண்ட் துரை இன்னிக்கு காலமே காலமாகிட்டாராம்.

நீலகண்டனுக்கு றெக்கை கட்டி ஆகாசத்தில் பறக்கிற சந்தோஷம்.

ஹெட் கிளார்க் வந்தாச்சு. போகலாமா?

இதோ, வந்தேன்.

எங்கே என்று கூட கேட்காமல் பையை நாற்காலியில் வைத்து விட்டு வாசலுக்கு வந்தான் நீலகண்டன்.

அதை ஏன் விட்டுட்டுப் போகணும்? எடுத்துண்டு வாரும். இனிமே இன்னிக்கு எதுக்கு ஆபீசுக்கு திரும்ப வரணும்? நீர் உம்ம ஆத்துக்குப் போய்க் குளிச்சு சுத்தி பண்ணிக்க வேணாமா? கலெக்டர் துரை நம்ம டிபார்ட்மெண்டுக்கு ரஜா அறிவிச்சிருக்கார். தெரியுமோல்லியோ.

சீனியர் டபேதர் நாதமுனி செட்டியார் பார்ப்பனக் கொச்சையில் நீட்டி முழக்கினார். அவருக்கும் மனசுக்குள் சந்தோஷம் சின்ன வெங்காயம் சாப்பிட்ட மாதிரி பொங்கிக் கொண்டிருப்பதாக நீலகண்டனுக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

சாந்தோம் சர்ச் பக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு போகணும். நாலு வண்டி கொண்டு வரச் சொல்லு.

நாதமுனி இதர கடைசி நிலை சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருக்க, யாரோ அவசரமாக நீலகண்டனை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள்.

நீலகண்டன் திரும்பினான்.

ஹைகோர்ட் ஹெட்கிளார்க் நாயுடு பதற்றமாக பக்கத்தில் வந்து நின்றான்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts