ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“இன்றிரவு 1213 கிளர்ச்சிக்காரரைச் (Insurgents) சுட்டுக் கொல்லப் போகிறோம். இறுதி விடை தருவோம் அவருக்கு ! அதை நினைக்கும் போது ஆனந்தக் கண்ணீர் பொங்குது என் கண்களில்.”
நெப்போலியன் (1793) [லையான் (Lyon) உள்நாட்டுக் கிளர்ச்சியை அடக்கிய போது]
“அவளுக்கு எல்லாம் வேண்டுமாம் ! நான் அவளை மெய்யாக நேசித்தேன். ஆனால் அவள் மீது எனக்கு மதிப்பு உண்டாகவில்லை. அவளுக்கு மிக்க அழகிய சிறிய கொங்கைகள் !”
நெப்போலியன் (மனைவி ஜோஸ·பினைப் பற்றிய உரையாடல்)
ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :
1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸி லிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !
அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.
நாடகத்தில் பங்கெடுப்பாளர் :
1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)
2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)
3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)
4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)
காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.
இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)
ஆரம்பக் காட்சி :
(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.
உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான். அந்த முயற்சியில் இறுதியில் கடிதங்களைப் பெற்று கொள்கிறான். பிறகு லெ·ப்டினென்டை எழுப்பி அரசாங்கக் கடிதங்களைக் களவாடிய கள்வனைப் பிடித்து வர அனுப்புகிறான்.)
(முன் வாரத் தொடர்ச்சி)
நெப்போலியன்: கியூஸெப் ! எங்கே அந்த முட்டாள் லெ·ப்டினென்ட் ? என்ன செய்கிறான் ? போய் அழைத்து வா அவனை !
கியூஸெப்: மேதகு ஜெனரல் ! வயிறு புடைக்கத் தின்று பூதம் போல தூங்கிறான் குறட்டை விட்டுக் கொண்டு !
நெப்போலியன்: எழுப்பு அவனை ! இழுத்து வா உன்னுடன் ! (கியூஸெப் ஓடிச் செல்கிறான்.) (ஹெலினாவைப் பார்த்து) உனக்குத் தொந்தரவு கொடுக்கிறேன். தயவு செய்து சிறிது நேரம் பொறுத்திரு !
(ஹெலினா திரும்பி வருகிறாள். நெப்போலியன் கடிதக் கட்டுகளை எடுத்துப் பைக்குள் திணிக்கிறான். கியூஸெப் பின்னால் லெ·ப்டினென்ட் மெதுவாக வந்து நெப்போலியனுக்குச் சல்யூட் செய்கிறான். லெ·ப்டினென்ட் தலையில் தொப்பி அணியாது, இராணுவ உடையைச் சரிவர அணியாது, வாளின்றி வந்து ஹெலினாவின் பக்கத்தில் நின்று கொள்கிறான். சாப்பிட்ட பின் சற்று தெம்பாக இருக்கிறான்.)
நெப்போலியன்: லெ·ப்டினென்ட் ! நீ ஓர் இராணுவ அதிகாரி ! இராணுவ உடையைச் சரியாக அணியாது இப்படி ஒரு கோமாளி போல் என் முன் வருவாயா ?
லெ·ப்டினென்ட்: (தயக்கமுடன்) மன்னிக்க வேண்டும் ஜெனரல் ! ஆடை அணிவதற்குள் என்னை அவசரமாய் இழுத்து வந்து விட்டார் இந்த விடுதி உரிமையாளர் !
நெப்போலியன்: பார் லெ·ப்டினென்ட் ! இந்த ஒற்றுப் பெண்ணை என்னால் வளைக்க முடிய வில்லை ! அவளிடமிருந்து எதையும் நான் கறக்க இயல வில்லை ! இவள் ஒரு கர்வக்காரி ! திமிர்ப் பிடித்தவள் ! அடங்கா மடந்தை ! உன்னை நடுவழியில் ஏமாற்றி உன் கடிதங்களைக் களவாடியவன் தன் தமையன் என்று உன்னிடம் ஒப்புக் கொண்டவள் இவள்தான் இல்லையா ?
லெ·ப்டினென்ட்: (வெற்றிப் பெருமிதமோடு) நான் இதைத்தான் சொன்னேன் ஜெனரல் ! இவளை நம்பக் கூடாது என்று சொன்னேன் ! இவளொரு புளுகு மங்கை என்று நான் சொல்ல வில்லையா ?
நெப்போலியன்: முதலில் உன்னை ஏமாற்றிய உளுத்தனைக் கண்டுபிடித்து இங்கு இழுத்துவா ! உன் நேர்மைத்தனம் இப்போது சோதிக்கப் படுகிறது. நமது இராணுவத்தின் விதி உன் கையில் உள்ளது ! ஆஸ்டிரியாவைக் கைபற்றும் திட்டம் அந்த அரசாங்கக் கடிதங்களில் உள்ளது. பிரான்சின் தலைவிதி உன் கடமைப் பணியில் உள்ளது ! ஏன் சொல்லப் போனால் ஐரோப்பாவின் தலைவிதியே அந்தக் கடிதக் கட்டுகளில் உள்ளது ! அது தெரியாமல் எப்படி உனக்கு இரவில் உறக்கம் வருகிறது ? மனித இனத்தின் எதிர்காலப் போக்கே இராணுவ ரகசியமாய் எழுதப் பட்டு அந்தக் கடிதங்களில் இருக்கலாம் !
லெ·ப்டினென்ட்: (கவனமாக) அப்படியா ஜெனரல் ? இந்த அறிவீனனை மன்னித்து விடுவீர் ! அத்தகைய முக்கிய இராணுவ விபரங்கள் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை !
நெப்போலியன்: (அழுத்தமாக) ஆமாம் லெ·ப்டினென்ட் ! அவற்றை என்னிடம் சேர்க்கும் அந்த முக்கியப் பணியில் நீ தவறினாய் ! கடிதங்களை நீ மீட்டு என்னிடம் தரவில்லை யானால் உன் இராணுவப் படையினர் முன்பாக நீ இகழப்படுவாய் !
லெ·ப்டினென்ட்: (மனம் குமுறித் தழுதழுத்து) ஜெனரல் ! அது சரியான தண்டனை எனக்கு ! என்மீது என் சகப் படையாளர் காறித் துப்ப வேண்டும் ! ஏற்றுக் கொள்கிறேன் ஜெனரல் ! ஆனாலும் நான் அந்தக் கடிதத்தைப் பெற்று என் பெயரைக் காப்பாற்ற வேண்டும்.
நெப்போலியன்: உன்னை எல்லாருக்கும் முன் அவமானப் படுத்துவது என் குறிக்கோள் இல்லை ! உன்னை அதிலிருந்து காப்பாற்ற உனக்கொரு வழி காட்டுகிறேன் ! அடுத்தொரு வாய்ப்பு உனக்கு ! தேடிப் போய் அவனைக் கண்டுபிடித்து உன் மதிப்பைக் காப்பாற்றிக் கொள் !
லெ·ப்டினென்ட்: முதலில் பிரான்சின் பெயரைக் காப்பாற்றுகிறேன் !
நெப்போலியன்: முதலில் என் பெயரைக் காப்பாற்று ! கடிதத்தில் உள்ளபடி நான் போரிட வில்லை யென்று அரசாங்கத்திட மிருந்து எனக்குத் தண்டனை கிடைக்கும் ! என்ன கண்டனம் உனக்கு வந்தாலும் சரி, அந்தக் கடிதங்கள் என் கையில் கிடைக்க வில்லை யென்று நான் உலகுக்கு நிரூபிக்க வேண்டும். உன்னை காப்பது எப்படி லெ·ப்டினென்ட் ?
லெ·ப்டினென்ட்: என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் ஜெனரல் ! உங்கள் மனது நல் மனது ! கல் மனது இல்லை ! எனக்குக் கிடைக்கும் தண்டனையைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதீர். நான் எப்படியாவது தப்பிக் கொள்வேன் ! நம் படைவீரர் ஆஸ்டிரியாவைப் பிடித்து விடுவார் கடிதங்கள் கிடைத்தாலும் சரி ! காணாமல் போனாலும் சரி ! ஒளிந்திருக்கும் இந்தக் குள்ள இளைஞனைத் தேடச் சொல்லி என்னை மீண்டும் வற்புறுத்தாதீர் ! எங்கு மறைந்திருக்கிறான் என்று எனக்குத் தெரியாது ! எப்படிக் கண்டுபிடிப்ப தென்று எனக்குத் தெரியாது. எப்போது நானவனைப் பிடிப்பேன் என்பதும் தெரியாது ! எதை வைத்து ஈனப்பயலைக் கண்டுபிடிப்பது ?
நெப்போலியன்: (கோபத்துடன்) நீ ஒரு படைவீரன் ! சொல், உனக்கு என்னதான் தெரியும் ? கடிதங்களைக் கைவிடத் தெரியும் ! கள்வனிடம் ஏமாறத் தெரியும் ! திட்டமின்றி நீ எப்படி ஆஸ்டிரியாவைக் கைப்பற்றுவாய் ?
கியூஸெப்: லெ·ப்டினென்ட் ! மறந்துவிட்டீரே உமது குதிரை அவனிடம் உள்ளதே ! அதை வைத்து அவனைக் கண்டுபிடிக்கலாமே !
லெ·ப்டினென்ட்: நல்ல யோசனைதான். நான் மறந்து விட்டேன் ! ஆனால் ஒரு குதிரைபோல் ஆயிரம் குதிரைகள் இருக்கும் ! அந்தக் குதிரை உயிரோடு உள்ளதோ ? அல்லது செத்து விட்டதோ ? இத்தாலியில் அந்தக் குதிரைத் தேடுவதற்குப் பதிலாக சதிகாரனைத் தேடிப் போகலாம் ! ஜெனரல் ! விடை கொடுப்பீர். நான் போகிறேன். அந்தக் கயவனை நான் எப்படியாவது பிடித்தாக வேண்டும். கியூஸெப் ! போ ! போய் எனக்கொரு குதிரையைத் தயார் செய்வீர் ! செல் சீக்கிரம் செல் !
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Play :
(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)
(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)
(C) The Horizon Book of The Age of Napoleon (1963)
(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 28, 2010)
- எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor) (கட்டுரை -2)
- தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்
- முள்பாதை 27
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986)
- எப்போதும் நம் வசமே
- வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12
- ஆற்றுப்படைநூல்களில் வறியோர் வாழ்க்கை
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
- அமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்
- மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று
- ஆதலினால்..
- மின்னல் விழுதுகள்!
- வேத வனம்- விருட்சம் 83
- தூக்கம் …
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது
- பேசாதவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15
- நினைவுகளின் தடத்தில் – (46)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1
- எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!
- 27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு
- 108எண் வண்டி
- எழுத்தின் வன்மம் .
- குறத்தியின் முத்தம்
- இரவுகளின் சாவித்துவாரம்
- சுஜாதா 2010 விருது வழங்கும் விழா
- அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு