விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

இரா.முருகன்


10 ஜூன் 1910 – சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை

கிளாரா என்றாள் இந்தப் பக்கம் நின்ற பெண். வெளுத்து மெலிந்த வெள்ளைக்காரி. அவளுக்குப் பின்னால் நின்றவள் கறுப்பி. கொஞ்சம் சதை போட்டு, முன் உதடு பெருத்த குட்டைப் பொண்ணு. சாரா என்றாள் அவள் தன் பெயரை.

ரெண்டு பேரும் மிஷனரி மகாநாட்டுக்கு வந்தவர்கள். வெள்ளைக்காரி அமெரிக்காவில், வாஷிங்டனில் இருந்து வந்து சேர்ந்தவள். கறுப்பி ஆப்பிரிச்சி. அபிசீனியாக்காரி. சீனாவில் வேதம் பரப்புகிற ஊழியம் செய்கிறவள். அங்கேயும் வேதாகமம் கப்பலும் வண்டியும் ஏறிப் போய்ச் சேர்ந்துள்ளது. பரத வர்ஷே பரத கண்டே மேரோஹு என்று கிழக்கே வந்த பிற்பாடு ரொம்ப நாள் கழித்துத்தான் அது. அப்படித்தான் தெரிசாவுக்குப் பட்டது.

எடின்பரோ கிறிஸ்துவ மிஷனரி மகாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகளை ஹோட்டல், விடுதி என்று தங்க வைப்பதை விட, கூடிய மட்டும் விருந்தினர்களாக வீடுகளில் தங்க வைத்தால் நலம் என்று முடிவானபோது தெரிசா சொன்னாள் –

நானே விடுதியில் தான் தங்கியிருக்கிறேன். என்னால் முடிந்த காரியம் இரண்டு பெண் பிரதிநிதிகளை நான் தங்கியிருக்கும் தோப்புத் தெரு விடுதியில் இருத்திக் கொள்கிறேன். அவர்களுடைய ஆகார சௌகரியம், போக்குவரத்து, இளைப்பாற ஒத்தாசை எல்லாத்துக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்ளுவேன்.

அவள் சொன்னதற்கு உடனடியாக பிஷப் சம்மதம் தெரிவித்ததோடு, அம்மாதிரி கட்டணம் குறைச்சலான விடுதிகளில் மகாநாட்டுக்கு வரக்கூடிய பிரதிநிதிகளைத் தங்க வைக்க பண உதவி செய்ய மற்றவர்களும் முன்வர வேண்டும் என்று யோசனை சொன்னார். அதை முன் யோசனையுடன் துண்டு சீட்டில் எழுதி ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை நேரத்தில் கடத்தி விடாமல், பிரசங்கத்தை ஆரம்பித்ததுமே காரியத்தில் கண்ணாக சொல்லிப் போட்டார்.

பெண் பிரதிநிதிகள் ரொம்பவே குறைவாக இருந்ததால் அவர்களை விடுதிகளில் தங்க வைப்பதை விட வீடுகளில் தங்க வைப்பதே பத்திரமான ஏற்பாடு என்று சபை உறுப்பினர் ஒருத்தர் ஆலோசனை சொன்னாலும், தெரிசா கண்காணிப்பில் தோப்புத்தெரு விடுதியில் வருகிற பெண்கள் எல்லோரையும் தங்க வைக்கலாம் என்று முடிவாயிற்று.

இதைத் தவிர, குடும்பத்தோடு வரும் பிரதிநிதிகளின் ஒத்தாசை இருந்தால் நாலைந்து ஆண்கள் ஒரு விடுதியிலும் அவரவர்களுடைய பெண்சாதிகள் வேறே இடத்திலும் சேர்த்துத் தங்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் சொல்லப்பட்டு, உடனே நிராகரிக்கப்பட்டது. இது வந்தவர்கள் விருப்பத்தைப் பொறுத்ததில்லையோ.

ஆகக் கூடி நேற்று லண்டனில் இருந்து ஃப்ளையிங் ஸ்கோட்மேன் ரயில் எடின்பரோ வந்து சேர்ந்ததும், தெரிசா பங்குக்கு இரண்டு பெண் பிரதிநிதிகளை வரவேற்றுத் தோப்புத் தெரு விடுதிக்குக் கூட்டிப் போனாள். கிளாராவும், சாராவும்.

கிளாரா அவள் குடும்ப வேர்கள் ஸ்காட்லாந்தில் இருப்பதாகவும் மிஷரரி மகாநாட்டில் பங்கெடுப்பதோடு பூர்வீக கிராமத்தைப் பார்த்து வர வேண்டும் என்றும் புறப்பட்டு வந்ததாகவும் ஆசை ஆசையாகச் சொன்னாள்.

தெரிசாவுக்கு அம்பலப்புழை நினைவு வந்தது. எத்தனை தடவை போக நினைத்து முடியாமல் தள்ளிப் போட்டிருக்கிறாள்.

அடுத்த வருடம் போகணும் என்று முடி போட்டு வைத்தால், அடுத்த வருடம் வேறே ஏதாவது காரியம் முளைக்கும். ஒதுக்குப்புற பகுதி தேவாலயத்தை ஒட்டி பெண்கள் பள்ளிக்கூடம், அல்லது கில்மோர் தெருவில் பியானோ வகுப்பு எடுக்க கோரிக்கை.

கில்மோர் தெருவில் இருந்த கத்தோலிக்க கன்யாஸ்த்ரிகளின் கன்னிமாடத்தில் இருந்து கூட இப்படி வகுப்பெடுக்க கோரிக்கை வந்தபோது பிஷப்புக்கே தாங்க முடியாத ஆச்சரியம். அவருடைய ஜீவிதத்தில் கத்தோலிக்கர்கள் இவ்வளவு இணக்கமாக இதுவரை வந்ததாக ஒரு நிகழ்ச்சி நடந்ததே கிடையாது. அவசியம் போய்ச் சொல்லிக் கொடுக்கச் சொல்லி அவர் கோரிக்கை விடுத்ததால் போன வருடமும் தெரிசா இந்தியா போவதைத் தள்ளிப்போட வேண்டிப் போய்விட்டது.

கிளாராவுக்கு வயசு அறுபதாவது காணும். சாரா சின்ன வயசு. தெரிசாக்கு இடமும் வலமுமாக ஒவ்வொருத்தரும் இருபது வயசு வித்தியாசம் என்றாலும் பார்த்த மாத்திரத்திலேயே அவளோடு பிரியமாக ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.

நாளைக்கு மகாநாடு இருக்கு. அதுக்குள்ளே எடின்பரோவை கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா?

சாரா கேட்டபோது தெரிசாவுக்கு சிரிப்பு வந்தது. அவளே எடின்பரோவை இந்தப் பத்து வருடத்தில் முழுக்கப் பார்த்ததில்லை. இரண்டு வாரத்துக்கு ஒருதடவை லண்டன், அங்கே வீட்டைப் பராமரிப்பது, ஓட்டம் ஓட்டமாகத் திரும்பி வந்து எடுத்துக் கொண்டிருக்கும் வகுப்புகளைத் தொடர்வது, திரும்ப அடுத்த லண்டன் பயணம் இப்படி ரயில் வண்டியில் தான் பாதி வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

எல்லா தேவாலயமும் போகணுமா? தெரிசா கேட்டபோது சொல்லி வைத்தாற்போல் இரண்டு பேரும் அதொண்ணும் வேண்டாம் என்று தீர்மானமாக அறிவித்துவிட்டார்கள். கோவில், மதப் பிரச்சாரம், வேதாகமம், அனுஷ்டானம் இத்யாதி விஷயங்களைத்தான் திகட்டத் திகட்ட இன்னும் ஒரு வாரம் பேசித் தீர்க்கப் போகிறோமே. வேறே எடின்பரோவில் பார்க்க என்ன எல்லாம் இருக்கு?

கோட்டை. அதில் அரச பரம்பரையின் வீர வாள், மகுடம்.

தலை இல்லாத கிரீடமும் வாளும் ரசிக்காது என்று சொல்லி விட்டாள் கிளாரா. லண்டனில் இப்போதான் லண்டன் கோபுரப் பகுதியில் சுற்றித் திரிந்து அனிபோலினைச் சிரச்சேதம் செய்த இடம் விடாமல் தரிசித்து சரித்திரத்தை தொண்டைக்குழி வரைக்கும் விழுங்கி விட்டேன். இதுக்கு மேலே ஸ்காட்லாந்த் சரித்திரம் வேறே என்றால் கடுத்த அஜீர்ணமாகிவிடும், வேணாம் என்றாள் சாரா.

நாடகம், ஓபரா? தெரிசா கேட்டாள். அவளே இந்தப் பத்து வருடத்தில் இரண்டே இரண்டு நாடகம் தான் பார்த்திருக்கிறாள். அதில் ஒண்ணு பாதியில் இறங்கி வந்த ஓ சோசன்னா நாடகம். தங்கியிருந்த விடுதி தீயில் கருகிப்போன ராத்திரி அது. நாடகம் என்றாலே ஏனோ அடிவயிற்றில் பயம். வற்புறுத்தி நாலைந்து வருடம் முந்தி கிறிஸ்துமஸ் சமயத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் நடித்த ஏசு பிறப்பு நேட்டிவிட்டி நாடகம் பார்த்தபோது கூட பாதியில் எழுந்து போய் விடுதி என்ன ஆச்சு என்று பார்க்கத் தோன்றிக் கொண்டே இருந்தது.

நாடகம், சங்கீதம் எல்லாம் சாவகாசமாகப் பார்த்துக் கொள்ளலாம். அதான், மகாநாட்டில் சாயந்திரம் கொஞ்சம் கொஞ்சம் இந்த இனங்களை கைகார்யம் செய்வார்களாமே. வேறே பரபரப்பான ஏதாவது.

சாரா இழுத்தாற்போல் சொல்ல, தெரிசாவுக்கு செயிண்ட் ஜான் தேவாலய கம்பி அழிக் கதவின் மேல் மூத்திரம் ஒழித்துக் கொண்டிருந்த குடிகாரக் குப்பன்கள் ஏடாகூடமாக நினைவுக்கு வந்தார்கள்.

என்ன தெரிசா சிரிக்கறே?

சாரா ஆர்வமாக விசாரித்தாள்.

ஒண்ணுமில்லே. ஸ்காட்லாந்தில் சாப்பாடும், குடியும் தவிர வேறே மும்முரமான, சுவாரசியமான விஷயம் இருக்கறதா தெரியலே. சாப்பாட்டு விஷயத்திலே நான் சுத்த சைவம். அடுத்த சமாசாரம் அருகே அண்டக்கூட விடமாட்டேன்.

அது ஏன் இந்தியாக் காரங்க எல்லாரும் சுத்த சைவம்? மீன், முட்டை கூட இல்லையா? புத்த மதத்திலே இதுவும் ஒரு ஆசாரம் தானே?

கிளாரா கேட்டாள். அமெரிக்கப் பெண்மணிக்கு இந்தியா தெரியாததில் அதிசயம் இல்லை. ஆனாலும் தெரிசா வேறு மதம் என்று நினைத்துக் கொண்டிருந்தது தான் ஆச்சரியமாக இருந்தது. அதுவும் புத்த மதம்.

அவளிடம் தான் வேதத்தில் ஏறின கதையை சாவகாசமாகச் சொல்லிக் கொள்ளலாம். வேறே எடின்பரோவில் என்ன சுவாரசியமான விஷயம்? மழை? அதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது? வருஷம் முழுக்க மழையில் கருப்புக் கல் கட்டிடங்கள் நனைந்து சதா துக்கம் அனுஷ்டிக்கிறதைப் பார்க்க மனசு முழுவதும் அழுகை பீறிட்டு வரும். இதயம் இருக்கப்பட்ட எல்லோருக்கும் தோணும் இப்படி.

ஊர் பார்க்க வந்தவர்களிடம் இப்படியான துக்கத்தை என்னத்துக்கு பகிர்ந்து கொள்ளணும்?

ஆமா, இங்கே பேய் பிசாசு எல்லாம் நிறைய உலாவுவதாகச் சொன்னார்களே.

சாரா கேட்டாள்.

ஆமா, நானும் கேட்டிருக்கேன். அமானுஷ்ய அனுபவங்கள் இங்கே இருக்கற இடங்கள்லே கிடைக்கும்னு என் மாமி சொல்லியிருக்காங்க. அவங்க கிளாஸ்கோவிலிருந்து நாற்பது வருஷம் முந்தி வாஷிங்டன் வந்தவங்க.

கிளாராவும் அமானுஷ்யத்தில் ஆர்வம் காட்டினாள். இதெல்லாம் கிறிஸ்துவம் இல்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிடலாம் தான். ஆனால் தெரிசா இங்கிதம் தெரிந்தவள். விருந்தாளிகள். பெண்ணுக்குப் பெண் துணையாக இருக்க வந்த கூட்டுக்காரிகள்.

அப்புறம், அமானுஷ்யம் தெரிசாவைத் தொடர ஆரம்பித்து எத்தனை வருஷம் ஆகி விட்டது.

சேச்சி, அக்கா என்று மாறி மாறி அழைத்தபடி அவளை எங்கே போனாலும் தொடர்கிற பெண். கூடவே வருகிற அவளுடைய குழந்தைப் பெண். ஒரு வினாடி எதிர்ப்பட்ட வாகனத்தில் உட்கார்ந்தபடி அவளை விளித்த தெக்கத்தி சாயல் கொண்ட குடுமிக்காரப் பையன். எல்லோரும் இருக்கப்பட்டவர்களா?

காலத்தின் சுழற்சியில் எப்படியோ இசகு பிசகாக இடம் மாறி கதி கிட்டாமல் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள் தெரிசாவுக்கு உற்றவர்கள். உறவுக்காரர்கள். பீட்டர் போல், இப்போது விலகிப் போனாலும் பீட்டரைக் கல்யாணம் கட்டியதால் உறவான தாமஸ் மக்கென்ஸி போல, சில நேரங்களில் அவர்களையும் விட இத்திரி அதிகமாக தொடர்கிற உறவுகள். அதிலே அமானுஷ்யம் எங்கே இருக்கு?

சாரா படம் போட்ட ஒரு புத்தகத்தைப் பிரித்தாள். இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் பார்க்க வேண்டிய இடங்கள், வரைபடம், பிரயாண வசதிகள் என்று சகல தகவலும் கொண்ட புத்தகம்.

இந்த இடம் எங்கே இருக்கு?

அவள் படத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்ட இடத்தை தெரிசாவுக்கு நன்றாகவே தெரியும். அங்கே பக்கத்தில் கல்யாணம், பொது நிகழ்ச்சி என்று எத்தனையோ தடவவ போயிருக்கிறாள். கிரமமாக அரைப் பாவாடை கட்டிய நாலைந்து கிழவர்கள் பேக்-பைப் வாசித்து வரவேற்பார்கள். அந்த சங்கீதம் அசைப்பில் மகுடியும் நாதசுவரமும் சேர்ந்ததுபோல் அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலத்தை நினைவுபடுத்தும். இத்தனை வருடம் கழிந்தும் மறக்காத இசை. ஆனாலும் இடக்க வாசித்து சோபான சங்கீதம் பாடுகிற மாரார் ஸ்திரி போல பாவாடை உடுத்தியிருக்க மாட்டார்.

இங்கே ராத்திரி ராத்திரி விநோதமான அனுபவம் எல்லாம் ஏற்படுகிறதாமே. நம்பாவதர்களும் ஒரு தடவை அனுபவப்பட்டால் இந்த உடம்பில்லாத பிரகிருதிகளை நம்பி அவர்களைத் தொடர வைத்து விடுவார்களாமே.

சாரா புத்தகத்தில் இருந்து கண்ணை எடுக்காமலேயே சொன்னாள்.

நான் பார்த்ததில்லையே அதெல்லாம் என்றாள் தெரிசா.

வாங்க, இன்னிக்கு ராத்திரி பார்த்துட்டு வரலாம். மதியத்திலேயே போனால், இன்னிக்கு ராத்திரி பேய் பிடிக்கக் கூட்டிப் போகறதுக்கு பதிவு பண்ணிக்கலாம்னு போட்டிருக்கே புத்தகத்திலே.

சாரா பலமாகச் சிரித்தாள்.

தெரிசாவுக்கு எடின்பரோ தெரிந்ததைவிட அபிசீனியாவில் இருந்து வந்த சாராவுக்கு இந்த ஊரை அங்குலம் அங்குலமாகத் தெரிந்திருக்கிறது.

சாயந்திரம் மூன்று மணிக்கு தெரிசா பதிவு செய்கிற இடத்துக்குப் போனபோது ஏற்கனவே பத்து பேர் ராத்திரி கல்லறைகளையும் பேய் அலையும் கட்டடங்களையும் பார்க்க பெயர் பதியக் காத்திருந்தார்கள்.

தெரிசாம்மா, நீங்க கூடவா இதைப் பார்க்க நிக்கறீங்க?

யாரோ பின்னால் இருந்து கூப்பிடும் சத்தம். திரும்பிப் பார்த்தாள் தெரிசா. தோப்புத்தெரு விடுதி சொந்தக்காரன் காணாததைக் கண்ட சந்தோஷத்தில் சிரித்தபடி நின்றிருந்தான்.

எனக்கு இல்லே. நம்ம விருந்தாளிகள் வந்திருக்காங்களே, அவங்களுக்கு நிஜமாகவே பேய் அலையுதான்னு பார்க்க இஷ்டம்.

நீங்க வேணும்னா பாருங்க. இன்னும் அரை மணி நேரத்திலே முப்பது பேர் சேர்ந்தா, பேயைக் காட்டறேன்னு சாயந்திரமே ஒரு கோஷ்டியைக் கூட்டிட்டுக் கிளம்பிடுவாங்க. பிசாசு தட்டுப்படுதோ என்னமோ, ஊர்லே நல்ல பியர் கிடைக்கிற ஒரு கடை விடாமல் படி ஏறிடலாம். மப்புலே அவனவன் அலையறபோது எதிர்ப்பட்டது எல்லாம் பிசாசாத்தான் தெரியும். ஆனா, நல்ல பியர். மர பீப்பாய்லே அடைச்சு பதப்படுத்தின சரக்கு. பேய் கிடைக்காட்டாலும் அதுக்கே போகலாம்.

விடுதிக்காரக் கிழவன் பியர் சுகத்தில் கண் கிறங்கிச் சிரித்தான். இவன்களுக்கு போக சுகம் கூட மறந்து போகும். குடிக்கிற சொர்க்கம் அந்திம உறக்கம் வரை கூட வருவது ஒருக்காலும் நிற்காது போல.

பாவம், விருந்தாளிகள் மிஷனரி மகாநாட்டுக்கு வந்துட்டு பியரையும் பீப்பாயையும் பார்க்கணும்னு ஏன் ஆசைப் படறாங்களோ தெரியலை.

தெரிசா அவனுக்கு பதில் மரியாதையாகச் சிரிப்பைத் திருப்பிக் கொண்டே சொன்னாள். அவளுக்கும் ஏனோ இந்த மாதிரி ஒரு குழுவாக அலைய வேணும் என்று தோன்றியது. பிசாசு இருந்தால் நல்லது தான். இருக்கட்டுமே. அதோடும் அலைந்தால் போச்சு. பெண் பிசாசாக இருக்கணும். அத்ரயே உள்ளூ.

எத்தனை பேர்?

சீட்டு கிழித்துக் கொண்டிருந்தவன் கேட்டான்.

அஞ்சு.

எதுக்காக ஐந்து கேட்டோம் என்று தெரிசாவுக்குப் புரியவில்லை.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts