விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஆறு

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

இரா.முருகன்



22 மே 1910 – சாதாரண கர வருஷம் வைகாசி 9 ஞாயிற்றுக்கிழமை

பியானோ வகுப்பு முடிந்து தெரிசா செயிண்ட் ஜான் தேவாலயத்தை விட்டு இறங்கும்போது கோவில் மணி ஒன்பது அடிக்கத் தொடங்கி இருந்தது. ராத்திரி குளிர் விலகியும் குளிர்ச்சி விலகாமல் இருட்டோடு இழைந்த நேரம். பிரின்சஸ் தெருவில் இரண்டு மணி நேரம் முன்னால் இருந்த பரபரப்பு எல்லாம் ஓய்ந்து போய் குடிகாரன்கள் அலைய ஆரம்பித்திருந்தார்கள். எல்லா வயசிலும் இருக்கப்பட்டவர்கள். வாயைத் திறந்தால் வசையைத் தவிர வேறே எதையும் உதிர்க்க முடியாதவர்கள்.

தெரிசா செயிண்ட் ஜான் வாயில்படி இறங்கி வெளியே இடப்புறம் தெருவுக்கு வர கம்பி அழிக்கதவைத் திறந்தபோது அந்தக் கதவின் மேலேயே சிறுநீர் பொழிந்து கொண்டிருந்த ரெண்டு மத்திய வயது ஆண்களைக் கண்டாள். அருவறுப்போடு அவள் வந்த வழியே திரும்பி தேவாலயத்தில் நுழைந்தபோது பின்னால் இருந்து லேடி லேடி என்று சத்தம்.

மூத்திரம் ஒழித்தாலும், மூக்கு முட்டக் குடித்தாலும் பெண்பிள்ளை வாடை மாத்ரம் இந்தக் கடன்காரன்களுக்கு புத்தியில் உறச்சுடும்.

அவள் கல்லறை வளாகம் வழியாக வெளியேற முடிவு செய்து பிரார்த்தனை இருக்கை வரிசைகளுக்கு நடுவே மெல்ல நடந்தாள்.

பியானோ பயில வந்த பெண்களோடும் அவர்களுக்குத் துணையாகக் கூட்டிப் போக வந்த கனவான்களான தமையன், தகப்பன்மாரோடும் போயிருந்தால் இன்னேரம் கல்லறைப் பக்கம் போக வேண்டியிருக்காது. பிஷப் வருகைக்காகக் காத்திருந்தது நேரமாகி விட்டது.

அடுத்த மாதம் மிஷனரி மாநாடு எடின்பரோவில் நடக்கப் போகுதே. அறுநூறு பிரதிநிதிகள் அமெரிக்கா, கனடாவிலே இருந்து, இங்கேயிருந்து ஏன், கிழக்கே மதராஸ்லே இருந்தெல்லாம் வராங்க. அவங்களை எங்கே தங்க வைக்கறதுன்னு பேசி முடிவு செய்யணும். இன்னிக்கு சாயந்திரம் உட்கார்ந்து முடிச்சுடுவோம்.

பிஷப் அனுப்பிய வர்த்தமானம்.

காலை பிரார்த்தனை நேரத்தில் பிரசங்கிக்க ஆரம்பிப்பதற்கு முன் அவர் துண்டு சீட்டில் கோழி கழிந்த மாதிரி கிறுக்கி இருந்தார். நட்டமாக நின்றபடிக்கே எழுதியது இது.

அவர் கோவில் நுழைவாசலில் நின்று வழக்கமாக பிரார்த்தனைக்கு வருகிறவர்களை வரவேற்கிறது மட்டுமில்லாமல் தெருவில் பராக்கு பார்த்தபடி நகர்ந்து போகிற வழிப்போக்கன், சுற்றுலாப் பிரயாணி, சும்மா வேலை வெட்டி இல்லாமல் தண்டத்துக்கு மூச்சு விட்டபடி ஊர் சுற்றுகிறவன் என்று ஒருத்தர் விடாமல் உரக்கக் கூப்பிட்டு உள்ளே அழைப்பார்.

சூடாக ஒரு சாயா குடிச்சுட்டு போகலாம் வாங்க.

சர்ச்சுக்கு வரவழைக்க இப்படி சாயாக் கடை மாதிரி கூப்பிடுவதை தெரிசா அறவே விரும்பவில்லைதான். ஆனால் என்ன, வழி தவறிய ஆடுகளை மந்தைக்குக் கொண்டு வர இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று பேராயர் மெக் நிக்கல் அடித்துச் சொன்னபிறகு அவள் வாயைத் திறக்கவே இல்லை.

தேவ ஊழியம் செய்ய வந்து, அதுவும் தரக்கேடில்லாமல் நடந்து கொண்டிருக்கும்போது இருக்க இடம் கொடுத்தவர்களைப் பகைத்துக் கொண்டு உள்ளதும் போச்சுது என்று திரும்ப முடியாது அவளால்.

பிஷப் ஒரு துண்டு சீட்டில் எழுதி கூட்டத்தில் அனுப்பியதை, கூடுதல் காணிக்கைக்கான விண்ணப்பம் என்று நினைத்தோ என்னமோ பல பேர் படிக்காமலேயே அடுத்தவரின் கைக்கு மாற்றி விட்டார்கள்.

அந்த சீட்டு கடைசி வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு வந்தபோது கீதம் முடிந்து பிரசங்கிக்க பேராயர் கம்பீரமாக உள்ளே நடந்து வந்தார்.

சீட்டு அனுப்பினதற்கு பதிலாக அவரே ஒவ்வொருத்தராகக் கூப்பிட்டு சாயாவுக்காக உள்ளே வரும்போதே சொல்லியிருக்கலாம். அல்லது பிரசங்கத்தின் இடையில் அறிவிப்பாக இதை நுழைத்திருக்கலாம் என்று தெரிசாவுக்குப் பட்டது.

தேவாலய மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு சதா மழை வெள்ளம் உள்ளே சால் கட்டித் தேங்குகிறது. அதில் கொசு முட்டையிட்டு இனவிருத்தி செய்த வகையில் பிரசங்க நேரத்தில் தேவைப்படாத இடத்தில் எல்லாம் கைதட்டி கொசு விரட்டுகிற சத்தம் மிரள வைக்கிறது. இது நாலு மாதம் முன்பு அனுப்பிய சீட்டு.

கூரையை தார்ச்சீலை போட்டு மூடலாம் என்று நாலைந்து கிழவர்கள் சீட்டிலேயே கிறுக்கி அனுப்பினார்கள் அப்போது. அதில் ஒருத்தர் சர்ச் கல்லறை வளாகத்துக்கு போன வாரம் தான் உறக்க ஸ்தலத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

பிஷப் புதுசாக குரோவ்னர் தெருவில் வீடு வைத்தபோது சுண்ணாம்பு அடிக்கப் பணம் தேவைப்படுவதால் நன்கொடை கேட்டு சீட்டு அனுப்பி வைத்திருந்தார்.

கல்லறை வளாகத்தில் அடிக்க போன தடவை நன்கொடை கேட்டு வாங்கிய சுண்ணாம்பு மிச்சம் இருக்கிறதாமே, அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாமே என்று ஒரு முதிர்கன்னி பிரசங்கத்தின் இடைமறித்து அபிப்பிராயம் சொல்லி ரசாபாசமாகி விட்டது ரெண்டு மாசம் முன்பு. இவ்வளவுக்கும் அவள் பிஷப் மேல் பட்சம் உள்ளவள் தான்.

இந்தச் சீட்டு உள்ளபடிக்கே கால் காசு தருமம் கேட்டு பிஷப் அனுப்பவில்லை. பொத்திப் பொத்திச் சேர்த்து வைத்திருக்கும் தேவாலய சொத்திலிருந்து கொஞ்சம் செலவு கணக்கில் போய்ச் சேர்ந்து விடும். என்ன மாதிரி அதை மிச்சம் பிடிக்கலாம் என்றுதான் ஆலோசனை கேட்கிறார் அந்த மனுஷர்.

எடின்பரோ மிஷனரி மாநாடு இரண்டு வருடமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இங்கிலாந்து, ஸ்காட்லாந்தில் இருக்கப்பட்ட புராட்டஸ்டண்டுகள் தவிரவும், ஐரீஷ் கத்தோலிக்க பாதிரியார்களும் இது என்ன மாதிரி நடக்கிறது, யாரெல்லாம் பேசி என்ன திட்டம் எல்லாம் உருவாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்ததாக சர்ச் வட்டாரத்திலும், வெளியே சும்மா பொழுது போகாமல் அரட்டை அடிக்கிற நேரத்திலும் பலரும் பேசிக் கொண்டது.

வாத்திகனில் போப் கூட இந்த மகாநாடு ரொம்ப பிரம்மாண்டமாக வெற்றி பெற்று விட்டால் ஐரோப்பாவில் நம் செல்வாக்கு கிஞ்சித்தும் மிச்சம் இருக்காதே என்று துக்கித்து ராத்தூக்கம் தொலைத்து அவதிப்பட்டதாகச் செய்தி.

கிறிஸ்துவத்தில் நம்பிக்கை வைக்காத, அதைப் பற்றி யாதொரு விதமான அறிவும் இல்லாத பெரும்பான்மை உலக மகாஜனங்களை ஞானஸ்நானம் செய்வித்து வேதத்தில் ஏற்றுகிற விஷயம் தான் இங்கே முக்கியமாக விவாதிக்கப்படும் என்று முடிவு செய்தாகி விட்டது. முக்கியமாக இந்தியா மாதிரியான அஞ்ஞான நிலப்பரப்புகளில் லட்சோப லட்சம் அறியா ஜீவன்களை ஆகமத்துக்குத் திருப்ப வேண்டியிருக்கிறதால் ஆயர்களுக்கு தலைக்கு மேல் வேலை காத்திருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து எண்ணூறு பேரும் இங்கே இருக்கப்பட்ட ஆர்ச் பிஷப், பிஷப் தொடங்கி, கோவில் குட்டியார் வரைக்குமாக ஒரு எண்ணூறு பேர், அப்புறம் இந்தியா, ஆப்பிரிக்கக் கண்டம், மலேயா தீபகற்பம், இலங்கை இங்கே இருந்து வரப்பட்ட பிரதிநிதிகள் என்று திருவிழாக் கூட்டம் அடுத்த மாதம் எடின்பரோவில் கூடிவிடும். இவர்களை எங்கே தங்க வைப்பது? எப்படி போஜன, ஸ்நான, உறக்க சௌகரியங்கள் செய்து கொடுப்பது? ஆர்ச் பிஷப் சதா தலையைக் குடைகிறார்.

தெரிசா தேவாலய ஊழியை இல்லைதான். ஆனாலும் தேவ ஊழியம் செய்ய லண்டனில் இருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறவல். அதுவும் இந்தியாவில் பிறந்த பெண்பிள்ளை. இதைவிட விசேஷம் ஒரு பிராமண ஸ்திரியால் ஒரு வைதீக பிராமணனுக்கு கர்ப்பம் தரித்து பிராமண கன்யகையாக வளர்ந்து அப்புறம் மதம் மாறியவள். படிப்பும், மிடுக்கும் துணை செய்ய இங்கிலீஷ்காரன் தாமஸ் மெக்கன்சியைக் கல்யாணம் செய்து இங்கே நிரந்தரமாகக் குடியேறியவள் என்பது உபரியான விசேஷம்.

யார் பிஷப் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்துக்கு இருக்கிறார்களோ இல்லையோ, தெரிசா நிச்சயம் இருப்பாள். ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் மனசு ஒட்டாமல் கடனே என்று உட்கார்ந்து கேட்டதற்கு அது பிராயச்சித்தம் ஆகும்.

இந்தப்படிக்கு அவள் பிரசங்கம் முடிந்து வந்த கூட்டம் எல்லாம் கலைந்து போனபிறகும் இருந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தாள். அவ்வப்போது கைப்பையைத் திறந்து கொஞ்சம் பழசான ஒரு கடிதாசைப் படிக்கிறதும், கண்ணை மூடி யோசிக்கிறதுமாக இருந்தாள் அவள்.

பீட்டர் மக்கென்சி போயர் யுத்தத்துக்குப் போன இடத்தில் இருந்து எழுதித் தபாலில் சேர்ப்பித்தது அந்தக் கடிதம். எழுதி மூன்று மாதமாகி விட்டது. உலகம் முழுக்க பிரதட்சணம் செய்தது போல் ஏகப்பட்ட தபால் முத்திரைகளை உடம்பெல்லாம் வாங்கிக் கொண்டு அந்தப் பழுப்பு உறை தெரிசா கைக்குக் கிட்டியபோது அவள் மிஷனரி ஸ்கூல் மூணாம் பாரம் பெண்பிள்ளைகளுக்கு தேவ கீதங்கள் பாடக் கற்பித்துக் கொண்டிருந்தாள்.

போன வருடம் வரைக்கும் பீட்டர் தெரிசாவுக்கு அனுப்பிய கடிதம் எல்லாம் ‘தாமஸ் மெக்கன்சி மேற்பார்வையில் பட்ட தெரிசா மெக்கன்சி சீமாட்டி’ என்றுதான் விலாசம் எழுதி வரும். தாமஸ் லண்டனுக்குத் திரும்பிப் போய் இனி வரமுடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது முதல் அது மாறிப்போய் விட்டது.

தாமஸை லண்டனுக்கு ஒரே முடிவாக அனுப்பி வைக்க பிஷப் வரை தகவல் போய் சர்ச்சைக்குரிய விஷயம் ஆனது தெரிசாவை வெகுவாக பாதித்துப் போட்டது.

பின்னே இல்லையா? ஒரு டாக்டர். அதுவும் லண்டன் பட்டணத்தில் ஸ்ட்ராண்ட் பக்கம் அபோதிகரி ஒருத்தனையும், டிரஸ்ஸர் இரண்டு பேரையும், இன்னும் மருந்து கலக்கித் தருகிற கம்பவுண்டர் ஒருத்தனையும் பகுதிநேர ஊழியத்துக்கு வைத்துக் கொண்டு நோய் சிகிச்சைக்கு கடை திறந்தவன் அவன். தரக்கேடில்லாத வருமானம் வந்தாலும், எடின்பரோவில் இன்னும் கொஞ்சம் அதிகம் காசு பார்க்கலாம் என்று தேவ ஊழியத்தை சாக்காக வைத்து இங்கே வந்தான். பீட்டர் மக்கென்சி தெரிசாவுக்குப் பாதுகாப்பாக வரச் சொன்னது ஒரு சாக்கு. இந்த இந்தியக் கறுப்பியின் மர்ம ஸ்தான வாடையை முகரவும், நேரம் கூடிவந்தால் முயங்கவும் சந்தர்ப்பம் வாய்க்கும் என்றும் எதிர்பார்த்துத்தான் கூட வந்தான் தாமஸ்.

வந்த இடத்தில் அவனுக்கு கிடைத்த சிநேகிதம் தான் சரியாக அமையாமல் போய்விட்டது. நாடகக்காரன் தானியல் நல்ல சேக்காளிதான். ஆனால், எத்தனை நாள் அவனோடு நாடகத்தையும், கவிதையையும், பிரஞ்சு மதுவகைகளையும் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பது? அவன் இல்லாத நேரத்தில் அவனுடைய சிநேகிதியின் மாரைப் பிசைய முயற்சி செய்வதை கொஞ்சம் யோசித்து செய்திருக்கலாம் தான். நாடகக் காரன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் டாக்டர் தாமஸை அப்போது. அவன் எடின்பரோவில் ஏற்படுத்தவிருந்த ஆஸ்பத்திரியும் திறக்காமலேயே ஆயுசு முடிந்து போனது அப்போதுதான்.

தாமஸ் அப்புறம் ஒண்ணுக்குள் ஒண்ணாக இருந்து பழகிய சிநேகிதர்களை தெரிசா நினைத்துப் பார்த்தாள். சிநேகிதர்கள் கூட இல்லை. பெண்வாடை பிடித்துத் திரிந்து அவன் டால்கிரேவ் பக்கம் ஒரு வீடு வைத்துக் கொண்டான். அங்கேயே மேல் மாடியில் தெரிசாவைத் தங்கி இருக்க அவன் யாசித்தாலும், இடம் தோதுப்படாது என்பதோடு இவனுக்கு நெருக்கமாக இருப்பதும் உசிதமானதாக இருக்காது என்றுபட, தெரிசா தோப்புத்தெரு விடுதியிலேயே தங்கிவிட்டாள். இன்று நேற்றல்ல, கடந்து போன பத்து வருஷமாக இதுதான் ஸ்திதி.

அப்புறம் தான் தாமசுக்கு பெண் சீக்கு வந்து சேர்ந்தது. டாக்டருக்கு சீக்கு வந்தாலே கொஞ்சம் அந்தஸ்து குறைச்சல் ஆகிவிடும். அதுவும் பெண்சீக்கு வந்த ஸ்திரீலோலன் மருத்துவனாக அவதாரம் எடுத்து நாடி பிடித்துப் பார்க்க வந்தால், குல ஸ்திரிகள் மட்டுமில்லை, கூட வரப்பட்ட கனவான்களும் அவன் அண்டையில் வர யோசிப்பார்களே. தெரிசாவுக்கு நிலைமை தெரிந்திருந்தாலும் தாமசை நினைக்கப் பாவமாக இருந்தது. அவனை தேவாலயத்திலேயே படி கடத்தாத போது தேவ ஊழியம் செய்ய ஒத்தாசைக்குக் கொண்டு போய் எப்படி நிறுத்துவது?

அவன் கல்யாணம் கட்டியிருந்த ஸ்திரி ரத்துப் பண்ணி விட்டுப் போய் வேறு ஒரு தடியனோடு கூட அமெரிக்காவுக்கு ஓடிப் போகாமல் இருந்தால் தாமஸ் வேலி தாண்டி இருக்க மாட்டானோ என்னமோ.

தாமஸ் பிரச்சனை இருக்கட்டும். பிஷப் இன்னும் வரவேயில்லையே, விடுதிக்கு எப்போது போய்ச் சேர்ந்து ராத்திரி ஆகாரம் கழித்து நித்திரை போவது என்று தெரிசா குழம்பியிருந்தபோது தான் பிஷப் வந்து சேர்ந்தது.

காண்டர்பரி ஆர்ச் பிஷப் அனுப்பிய போதகர் லண்டனில் இருந்து காலையில் வந்து சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்ததால் உத்தேசித்தபடி இந்தக் கூட்டத்தை நடத்த தாமதமானதாக அவர் அறிவித்தபோது தெரிசாவைத் தவிர இரண்டே இரண்டு விசுவாசிகள் மாத்திரம் பாக்கி இருந்தார்கள்.

அப்புறம் சர்ச் ஊழியர்களை அனுப்பி மற்ற முக்கியஸ்தர்களை தருவித்து, அவர்கள் வருவதற்காகக் காத்திருக்க வேண்டிப் போனது. சொல்லி வைத்தாற்போல் பலருக்கும் காலை பிரார்த்தனைக்கு வந்து போன பிற்பாடு உடம்பெல்லாம் வலி, நோவு, சுகவீனம். பிஷப்பின் பிரசங்கத்துக்கு இப்படியான சக்தி உண்டென்று ஊரெல்லாம் பிரசித்தமான செய்தியாகிப் போனது பழங்கதை.

கடைசியில் அப்படி இப்படி எட்டு பேரோடு ஆரம்பமான ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் ஆளாளுக்கு ஒரு திசையில் பேச்சை வளர்த்துக் கொண்டே போனார்கள். வயசர்கள் அவர்கள் எல்லோருமே என்பதால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், சாயங்காலத்தை வெருதாவாக செலவழிக்காமல் கோவில் கணக்கில் சாயா குடித்தபடி லோக விவகாரம் பேசி நேரம் கடத்த உத்தேசித்து வந்ததாக தெரிசாவுக்குத் தோன்றியது.

எல்லோரையும் ஒவ்வொரு விசுவாசியின் வீட்டிலும் ஒரு பிரதிநிதியாகத் தங்க வைத்துக்கொள்ளலாம் என்று பிஷப் சொன்னபோது எட்டு வயசன்மார்களும் அது சரிப்படாது என்று சொல்லி விட்டார்கள்.

அமெரிக்கர்கள். வெள்ளைக்காரன், அதுவும் இங்கே ஸ்காட்லாந்திலிருந்து போனவர்களின் வம்சாவளி. என்றாலும் நாகரீகமும் மரியாதையும் தெரியாத கூட்டம் இல்லையா அது.

தேவ ஊழியம், மிஷனரி மகாநாடு என்று வந்தாலும், வீட்டு ஆண்பிள்ளைகள் இல்லாத நேரத்தில், மகாநாடுமாச்சு மத்ததுமாச்சு என்று வீட்டுக்குள் சுற்றி வந்து பெண்பிள்ளைகளைத் தொட்டுப் பார்க்கவும் செய்வார்கள். பொலிகாளை மாதிரியான அந்த பிரகிருதிகளை பாவம் வெள்ளந்தியான இங்கிலீஷ், ஸ்காட்டீஷ் பெண்களும் பெருவாரியாக இச்சிக்க இடமுண்டு என்பது வயசர்கள் சுற்றி வளைத்துப் பேசியதில் தெரிசாவுக்குத் தெரிந்த விஷயமானது.

ரயில்வேக்காரர்கள் திறந்திருக்கும் பல்மோரா ஹோட்டல் வேவர்லி ஸ்டேஷன் பக்கம் தானே இருக்கு. அங்கே அறைக்கு மூன்று அல்லது நான்கு பேராக தங்க வவத்தால், பிரின்சஸ் தெருவில் இருந்து போக வர, ஆகாரம் போன்ற சமாசாரங்களுக்கு எளுப்பமாக இருக்குமே என்று தெரிசா சொன்னபோது பிஷப் வேண்டாம் என்று சொல்லி விட்டார். அந்த அளவு காசு நம்ம சபையில் கிடையாது சீமாட்டியே என்றார்.

போன வாரம் தான் புதுசாக கட்டின வீட்டில் கக்கூஸில் மர வாளி முதல் கொண்டு ரெட்டைக் கட்டில் வரைக்கும் சபை செலவில் வாங்கிப் போட்டார் அவர் என்று சபையில் தகவல் உண்டு. தேவ ஊழியத்தில் அதுவும் தான் சேர்த்தி. தெரிசா கேள்வி கேட்கப் போவதில்லை.

செவ்வாய்க்கிழமை மதியத்துக்கு மேல் ஒரேயடியாக உட்கார்ந்து ஏழு மணிக்குள் இறுதி முடிவு எடுப்பதாகவும் செவ்வாய் மதியமாவது இருபது முப்பது பேர் வந்திருந்தால் விஷயம் சீக்கிரமாக முடிவெடுக்கப்பட்டு விடும் என்றும் பிஷப் சொல்லி கூட்டத்தைக் கலைத்தது அவசரமான ஒரு பிரார்த்தனையோடு. ராச்சாப்பாட்டு அவசரம் அது. தெரிசாவுக்கும் தான் பசித்தது.

பிஷப் வெளியே போனபிறகு குடையையும், கைப்பையையும் இருட்டில் தேடி எடுப்பதற்குள் வெளிவாசல் இரும்பு அழிக் கதவைச் சார்த்திப் போயிருந்தார் அவர். உள்ளே இருந்து அதைத் தள்ளித் திறக்கலாம் தான். வண்டி வண்டியாக மூத்திரம் ஒழிக்கும் குடிகாரன்களும் அவர்களுக்கு நீர் வார்க்கும் மதுக்கடைகளும் வெளியே லோத்தியன் தெருவில் சர்ச்சுக்கு முன்பாகவே அமைந்திருக்கின்றன. உடுப்பு நனையாமல் தெரிசா தெருவில் இறங்க முடியாத சூழ்நிலை.

அவள் கல்லறைகளுக்கு நடுவே மெல்ல நடந்தாள். புதிய கல்லறைகளில் உறங்கிக் கிடந்தவர்கள் சுத்தமான சூழலில் இளைப்பாற, ஒரு நூற்றாண்டு முன்னால் போய்ச் சேர்ந்தவர்களில் சிலரைப் புதைத்த இடத்தில் நட்ட கல்தூண்கள் அடி பெயர்ந்து போய்க் கல்லறை மேல் குறுக்கும் மறுக்குமாகக் கிடந்தன. உள்ளே மூச்சு முட்டி வெளியே வந்து விடலாம் அவர்கள்.

வேவர்லி பிரபு குடும்ப சவ குடீரங்கள் பக்கம் நடக்கும்போது தெரிசாவுக்குப் பழக்கமான குரல்.

அக்கா, செத்தெ நில்லுங்கோ. அக்கா. விசப்பு உசிரு போறது. தாகம்.

அவளுக்குத் தெரியும் அந்தப் பெண்ணை. கூட நிற்கும் பெண் குழந்தையை.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts