ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -5

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


“ஆறு வயதில் நானொரு சமையல்காரனாக ஆக ஆசைப்பட்டேன். ஏழு வயதில் நெப்போலியனாக ஆக விரும்பினேன். அதற்குப் பிறகு என் பேராசை பெருகிக் கொண்டே போகிறது.”

“என்னைக் கொல்லக் போகும் அந்த ஒரு புல்லட் இன்னும் உருவாக்கப்பட வில்லை.”

“மேலிருந்து கேலிக்குட்பட்டுத் தடுமாற ஒரு படிக்கட்டு போதும்.”

நெப்போலியன்,

Fig. 1
The Young Lady Helena

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான்.)

(முன் வாரத் தொடர்ச்சி)

Fig. 2
Napoleon & The Young Lady

லெ·ப்டினென்ட்: (கேலியாக) பெண்ணழகியா அவள் ? அவள் ஓர் ஆடவன் ! என்னை ஏமாற்றிய எத்தன் உம்மையும் ஏமாற்றுகிறான் ! இந்த வஞ்சகனை நம்பாதீர் பிரபு !

ஹெலினா: (நெப்போலியன் பின்னால் ஓடி நின்று) அவனை நிறுத்துவீர் ஜெனரல் ! யாரையோ நினைத்து என்னைத் தூற்றுகிறான் ! மதி கலங்கி நிற்கிறான் !

நெப்போலியன்: நிறுத்து உன் புலம்பலை ! நெருங்காதே என்று நான் ஆணையிட்டும் நீ அவளை ஏன் மிரட்டுகிறாய் ? உன்னைக் கைது செய்கிறேன் ! முதல் குற்றம் : அரசாங்கக் கடிதங்களை இழந்தது ! இரண்டாம் குற்றம் : அழகிய பெண்ணை ஆடவன் என்று அடிக்கப் போனது ! மூன்றாவது குற்றம் : என் ஆணையை மீறியது !

லெ·ப்டினென்ட்: மேதகு ஜெனரல் ! இவன் ஓர் ஆஸ்டிரிய ஒற்றன் ! வஞ்சிப்பது இவன் தொழில் ! வழிப்பறி செய்வது இவன் பணி ! என் கண்ணை நான் நம்புவதா இல்லையா ?

ஹெலினா: ஜெனரல் ! இவன் ஏசுவது என் சகோதரனை ! என்னைப் போலிருப்பவன் அவன் ! என் இரட்டைப் பிறவி ! ஆம் அவன் ஆஸ்டிரியப் படையில் இருக்கிறான்.

லெ·ப்டினென்ட்: (வியப்புடன்) அப்படியா ? என்னை ஏமாற்றியவன் உன் சகோதரனா ? என்னால் நம்ப முடிய வில்லையே ! உன்னைப் போல் ஒருவனா ?

ஹெலினா: என்னை நம்பலாம் ! ஆனால் என் சகோதரனை நம்பக் கூடாது !

லெ·ப்டினென்ட்: உன் சகோதரனை நம்பினேன், ஏமாந்தேன் ! உன்னைத்தான் நம்ப முடியவில்லை என்னால் !

ஹெலினா: சரி, என்னை நம்ப வேண்டாம் ! சகோதரனை நம்பினால் மகிழ்ச்சிதான் !

கியூஸெப்: குழப்புகிறாயே ஹெலினா ! உன்னை நம்ப வேண்டாம் என்று சொல்கிறாயே !

ஹெலினா: என்னை நம்புவதற்குதான் அப்படிச் சொன்னேன் !

நெப்போலியன்: நான் உன்னை நம்புகிறேன் ஹெலினா ! நீ ஒரு பெண் ! ஆணில்லை !

லெ·ப்டினென்ட்: அவள் பெண் வேடம் போட்ட ஆண் ! அல்லது அவள் சகோதரன் ஆண் வேடம் போட்ட பெண் !

ஹெலீனா: நான் லெ·ப்டினென்டை நம்புகிறேன் அவர் என்னை நம்பாவிட்டாலும் !

நெப்போலியன்: அறிவற்று உளறுகிறாய் ! போ வெளியே ! கட்டளைக்கு அடி பணி !

லெ·ப்டினென்ட்: ஒற்றரை நம்பக் கூடாது என்று கற்றுக் கொண்டேன் ! ஒன்றாய்த் தெரியும் இரட்டையரையும் நம்பக் கூடாது ஜெனெரல் !

நெப்போலியன்: என் பொறுமையைச் சோதிக்கிறாய் லெ·ப்டினென்ட் ! வெளியே போ !

ஹெலினா: வேண்டாம் ! லெ·ப்டினென்ட் உண்ண வேண்டும் ! உறங்க வேண்டும். நான் அவருக்குப் பதிலாக வெளியே போகிறேன் !

நெப்போலியன்: நீ போகக் கூடாது ஹெலீனா ! உன்னிடம் ஒன்றைக் கேட்க வேண்டும். உன் சகோதரன் ஏன் எமது கடிதங்களைப் பறித்துக் கொண்டு போனான் ?

Fig. 3
Napoleonic Wars

கியூஸெப்: தளபதி ஸார் ! தயவுசெய்து போய் விடுங்கள் (கதவைத் திறக்கிறான்) விடுதியில் சண்டை நேர்ந்தால் வாடிக்காரர் எல்லாம் ஓடிவிடுவார் !

லெ·ப்டினென்ட்: (நெப்போலியனைப் பார்த்து) எச்சரிக்கை ஜெனரல் ! இந்தப் பெண்ணை விடாதீர் ! இவள் மூலம் அவள் சகோதரனைப் பிடிக்கலாம் ! நமது இரகசியக் கடிதங்களைக் கைப்பற்றலாம் ! (பெண்ணைப் பார்த்து) மேடம் ! நான் வருந்துகிறேன் என் தவறுக்கு ! உன் சகோதரனாக எண்ணி விட்டேன் உன்னை !

ஹெலினா: அது உமது தவறில்லை ! உமது கோபம் தணிந்தது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். (கைகுலுக்கக் கரத்தை நீட்டுகிறாள்)

லெ·ப்டினென்ட்: (ஹெலினா கையை முத்தமிட்டு) உன் கரம் உன் சகோதரன் கரம் போல் உள்ளது. மோதிரமும் அதே மாதிரித் தெரிகிறது !

ஹெலினா: நாங்கள் இருவரும் இரட்டையர் அல்லவா ? ஒரே மாதிரி நடப்போம், பேசுவோம், உடை அணிவோம் ! மோதிரம் கூட ஒன்றுதான் !

லெ·ப்டினென்ட்: அதுதான் தெரிகிறதே ! ஏமாற்றுவதிலும் கூட ஒரே மாதிரி இருக்குமா ?

ஹெலினா: அதில் மட்டும் ஒற்றுமை இல்லை ! அவன் ஓர் ஆண்மகன் ! நானொரு பெண் ! அவனுக்குக் கல் மனது ! எனக்குப் பெண் மனது ! ஆண் ஏமாற்றுவான் ! பெண் ஏமாறுவாள் !

லெ·ப்டினென்ட்: என்னைப் பொறுத்த வரையில் ஆண் ஏமாறுவான் ! பெண் ஏமாற்றுவாள் ! ஆனால் நீ நல்ல பெண் ! எவரையும் ஏமாற்றாதவள் ! சரி நான் போகிறேன் ஜெனரல். (போகிறான்)

நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு) முட்டாள் ! போய்த் தொலைந்தான் !

ஹெலினா: (புன்னகையோடு) நான் எப்படி நன்றி சொல்வேன் உங்களுக்கு ? நீங்கள் கனிவான மனிதர் ஜெனரல் ! அந்த தளபதியின் முகத்தில் கடுகடுப்புதான் தோன்றுகிறது.

நெப்போலியன்: (புன்னகையுடன்) எனக்கு உன் உதவி தேவை. உன் சகோதரனைக் கண்டுபிடித்து என் அரசாங்கக் கடிதங்களைக் கொண்டுவர வேண்டும். (சற்று அதட்டலுடன்) என் காவலை ஏமாற்றி விட்டான் அந்தக் கயவன் ! அந்தக் கடிதங்கள் எனக்குத் தேவை. அதை உடனே செய்வாயா என்ன ?

ஹெலினா: (அதிர்ச்சி அடைந்து கண் கலங்கிக் கண்ணீரைத் துடைத்து) என்ன மிரட்டுகிறீர் ஜெனரல் ? எனக்கு ஒன்றும் தெரியாது !

நெப்போலியன்: என்ன ? உன் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறாயா ? என் ஆயுதமெல்லாம் உன் ஆயுதத்தின் முன் தோற்றுப் போய்விடும் ! அழாதே ஹெலினா ! நீ கண்டுபிடிக்காவிட்டால் நான் கண்டுபிடிக்கிறேன் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 17, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts