ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Primary Image.
Napoleon on the Horse

“எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக் கொள்வேன். என் அரசாட்சி வரலாற்றில் அது வியப்பூட்டலாம். இதுவரை அவர் எனது போலி நிழல் வடிவை மட்டுமே கண்டிருக்கிறார். இப்போது என் நிஜ உருவத்தைக் காட்டப் போகிறேன். எத்தனை தோற்றங்களைத்தான் நான் வெளிப்படுத்த முடியும் ? பல மனிதருக்கு என் பொய்யுருவே தெரிந்திருக்கிறது. ஆயிரக் கணக்காக நான் வெறுக்கத் தக்கவற்றை நாட்டுப் பாரமாக நிரப்பி வந்திருக்கிறேன். முடிவில் எனக்கு அவை என்ன செய்துள்ளன ? என்னை நயவஞ்சகத்தில் எல்லாம் தள்ளிவிட்டன !”

நெப்போலியன் (1769–1821)

நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:

ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.


Fig. 1
Napoleon in the Peterloo War

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் சக்ரவர்த்தி (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலன் : ஓர் ஆஸ்டிரியப் பெண் (21 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான்.

கியூஸெப்: (மலர்ந்த முகத்தோடு) இன்று எங்களுக்கு ஒரு பொன்னாள் ! மேன்மை தங்கிய சக்ரவர்த்தி தங்கள் வருகையால் எங்கள் விடுதி பெருமைப் படுகிறது !

Fig. 2
Napoleon Bonaparte Portait

நெப்போலியன்: (படத்தில் முழுக் கவனத்தைச் செலுத்திக் கொண்டு) எதுவும் பேசாதே ! என் கவனத்தைக் கலைக்காதே !

கியூஸெப்: தங்கள் ஆணைப்படி செய்கிறேன் பிரபு .

நெப்போலியன்: (சட்டெனத் திரும்பி) கொஞ்சம் சிவப்பு மை கொண்டு வா !

கியூஸெப்: ஐயோ சக்ரவர்த்தி ! என்னிடம் சிவப்பு மை இல்லையே !

நெப்போலியன்: (கடுமையாக) எதையாவது கொன்று குருதியைக் கொண்டு வா !

கியூஸெப்: (தயங்கிக் கொண்டு) மேதகு சக்ரவர்த்தி ! என்னிடம் எதுவும் இல்லை ! வெளியே உங்கள் குதிரை ! சிப்பாய் ! விடுதியில் என் மனைவி ! மாடி அறையில் ஓரிளம் பெண் !

நெப்போலியன்: (கோபத்துடன்) உன் மனைவியைக் கொல் !

கியூஸெப்: மேதகு சக்ரவர்த்தி ! அது முடியாத காரியம் ! என் மனைவிக்கு என்னை விடப் பலம் உள்ளது ! அவள்தான் என்னைக் கொன்று போட்டு விடுவாள் !

நெப்போலியன்: அப்படியானாலும் சரி ! அல்லது போ வெளியே சிட்டுக் குருவி, காக்கா எதையாவது சுட்டுக் கொண்டு வா ?

கியூஸெப்: எனக்குச் சுடத் தெரியாது பிரபு ! துப்பாக்கியும் கிடையாது ! நான் கொஞ்சம் சிவப்பு ஒயின் கொண்டு வரட்டுமா ?

நெப்போலியன்: ஒயினா ? வேண்டாம். அதை வீணாக்கக் கூடாது !

கியூஸெப்: ஒயின் குருதியை விட மலிவானது பிரபு !

நெப்போலியன்: (ஒயினைக் குடித்துக் கொண்டு) உன்னைப் போன்றவர்தான் உலகில் அதிகம். ஒயினை வீணாக்காதே !

(உருளைக் கிழங்கு மேல் ஊற்றிய குழம்பை எடுத்து வரைப்படத்தில் குறியிட்டுக் கொள்கிறான். வாயைத் துண்டால் துடைத்துக் கொண்டு காலை நீட்டிச் சாய்கிறான்.)

Fig. 3
Napoleonic Wars

கியூஸெப்: (மேஜைத் தட்டுகளை எடுத்துக் கொண்டு) எங்கள் விடுதியில் ஒயின் பீப்பாய்கள் நிறைய உள்ளன. நாங்கள் எதையும் வீணாக்குவ தில்லை. உங்களைப் போன்ற உயர்ந்த ஜெனரல்கள் மலிவான குருதியை நிரம்ப வைத்திருப்பீர் ! ஆனால் நீங்களும் இரத்தம் சிந்துவதில்லை !

(மேஜை மீது யாரோ விட்டுச் சென்ற ஒயின் மிச்சத்தைக் குடிக்கிறான்)

நெப்போலியன்: கியூஸெப் ! குருதிக்குப் பண மதிப்பில்லை ! அதுதான் மலிவு ! ஆனால் பணம் கொடுத்துத்தான் ஒயினை வாங்க வேண்டியுள்ளது ! (கனல் அடுப்பு அருகில் செல்கிறான்)

கியூஸெப்: நான் கேள்விப் பட்டிருக்கிறேன் ! நீங்கள் எதன் மீதும் கவனமாக இருப்பீராம் மனித உயிரைத் தவிர !

நெப்போலியன்: (புன்னகையுடன்) தோழனே ! மனித உயிர் ஒன்றுதான் தானே தன்னைக் கவனித்துக் கொள்கிறது ! (ஆசனத்தில் அமர்கிறான்) உயிருக்குப் பயந்தவன் வாழ முடியாது. சுதந்திரம் வேண்டுமென்றால் கில்லட்டினால்தான் முடியும் ! அமைதியை நிலைநாட்டப் புரட்சியை உண்டாக்க வேண்டும் ! பிரெஞ்ச் புரட்சி நினைவிருக்கிறதா ?

கியூஸெப்: எங்களுக் கெல்லாம் அறிவு மட்டம் உங்களோடு ஒப்பிட்டால் ! வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் உங்கள் சாதிப்புகளின் ரகசியம் என்ன ? தெரியாது எங்களுக்கு !

நெப்போலியன்: நீ இத்தாலியின் சக்ரவர்த்தியாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள் ! என்ன புரியுதா ?


Fig. 4
Napoleon European War Lord

கியூஸெப்: அது நிரம்பத் தொல்லை சக்ரவர்த்தி ! அரசாங்கப் பொறுப்பு வேலை யெல்லாம் உங்களுக்குத்தான் ! நான் இத்தாலிக்குச் சக்ரவர்த்தி யானால் என் விடுதியை யார் நடத்துவது ? நான் பரபரப்பாய் விடுதியில் வேலை செய்வது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தாங்கள் ஐரோப்பாவுக்கே மகா சக்ரவர்த்தியாகி இத்தாலிக்கும் வேந்தரானால் அது எனக்கு மிகவும் பிடிக்கும் !

நெப்போலியன்: (புன்னகை புரிந்தவாறு) என் மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக் சொல்கிறாயே ! ஐரோப்பியச் சக்கரவர்த்தியா ? ஐரோப்பாவுக்கு மட்டும்தானா ?

கியூஸெப்: தவறிச் சொல்லி விட்டேன். உலகத்துக்கே சக்ரவர்த்தியாக வர வேண்டும் தாங்கள் ! ஒருத்தனைப் போல் மற்றொருவன் ! ஒரு நாட்டைப் போல் மற்றொரு நாடு ! ஒரு போரைப் போல் மற்றொரு போர் ! உங்களுக்கு இருக்கும் போர் அனுபவம் யாருக்குள்ளது ? ஒரு நாட்டை முறியடிப்பது போல்தான் அடுத்த நாட்டை பிடிப்பதும் !

நெப்போலியன்: கியூஸெப் ! நீ எனக்கு மந்திரியாக இருக்கத் தகுதி உள்ளவன் ! போரிட்டு அடிமையாக்க வேண்டும் நான் எல்லா நாடுகளையும் ! ஒவ்வொரு நாட்டுக்கும் நான் அதிபதியாய் ஆக வேண்டும் ! ஆசிய நாடுகள் மீதும் எனது கண்ணோட்டம் உள்ளது ! குறிப்பாக பிரிட்டீஷ்காரரை விரட்டி இந்தியாவுக்கும் வேந்தனாக வேண்டும் ! அதற்காக சூயஸ் கால்வாயை வெட்ட நான் திட்டங்கள் தீட்டி வருகிறேன் ! இந்தியாவின் ஏகச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! மகா அலெக்ஸாண்டர் அப்படித்தான் செய்தார் ! அவர் தரை வழியாகப் போனார் ! நான் கடல் வழியாகப் போகத் திட்டமிடுகிறேன் !

கியூஸெப்: நல்ல யோசனை பிரபு ! ஆனால் அதற்கு முதலில் கால்வாய் வெட்ட வேண்டுமே எகிப்தில் !


Fig. 5
Napoleon Cannon War

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 21, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts