வாழ்க்கை

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

எஸ்ஸார்சி


‘சோலி எல்லாம் முடிஞ்சுட்டுதா வண்டிய பூட்டுலாமா’ என்றான் வலசக்காட்டான். அது என்ன வலசக்காட்டான் என்றால், ஒரே பதில் அவன் வலசக்காடு என்கிற திருநாமம் உடைய கிராமத்துக்காரன் என்பதே.
என்றோ அவனின் முன்னோர்கள் அந்த கிராமத்தில் வாழ்ந்து பின்னர் தருமங்குடிக்குக் குடிபெயர்ந்து வந்திருக்கவேண்டும். தருமங்குடிக்காரர்களுக்கு அவனை வலசக்காட்டான் என்றால்தான் தெரியும்.
‘ எல்லாம் வாங்கியாச்சு நாம கெளம்புலாம்’ நான் தான் பதில் சொன்னேன். வலசக்காட்டானின் கட்டை வண்டியில் நான்கு சிமென்ட் மூட்டைகள் ஏற்றியாயிற்று.
அம்மா வீட்டுக்கு என்ன என்ன வேண்டும் என்று கேட்டார்களோ எல்லாமே வாங்கிமுடித்தாயிற்று.
கட்டை வண்டி முதுகுன்றம் போகிறது என்றால் சும்மா விடுவார்களா என்ன. காடுவெட்டிக்கடிய நிலம் திருத்திய வகையறா நாட்டுகோட்டைச் செட்டியார் கடை குண்டுக்கொட்டை முத்துராம்காபித்தூள் தொடங்கி கொல்லி மலை சரக்கான நடகாய லேகிய டப்பா ஈறாய் என்னை வாங்கிவரச் சொல்லி இருந்ததும் உண்மை.
தருமங்குடி கிராமம் அது பேருந்திலிருந்து இறங்கினால் நான்கு தப்படியில் போய்ச்சேர்ந்துவிடுகிற ஊரா என்ன. ஒரு கிலோ மீட்டருக்கு குறையாமல் நடந்தேதான் வேண்டும்
தருமங்குடி கிராமத்து என் ஔட்டு வீட்டில் தாழ்வார சிமென்ட் எல்லாமே இற்றுக்கொண்டு விட்டது. பொக்கையும் போறையும் என துருத்திக்கொண்டு அருவருப்பாய்க் காட்சி தந்தது. படித்துமுடித்து வேலைக்குப்போனதும் முதல் சம்பளம் வாங்கி இதனை மாற்றி ச்சிவப்புச்சிமென்ட்டாகப் போட வேண்டும் என்று மனதிற்குள் ஒரு சின்னக்கணக்கு போட்டதுண்டு..
தருமங்குடியில் ஆற்று மணல் கிடையாது. பத்து கிலோ மீட்டருக்கு போனால் கம்மாபுரம்
மணிமுத்தாற்றிலிருந்து சத்தவண்டி பிடித்து அள்ளி வரலாம். இதே வலசக்காட்டன்தான் வண்டியில்போய் ஆற்று மணல் அள்ளி வந்துள்ளான். அந்த மணல் அள்ளிவரும் பயணத்திற்கு நான் உடன் செல்லவில்லை.
‘ நீனு வண்டியில குந்திகினு வண்டிக்குப் பாரமா வர்ரதுக்கு நாலு தட்டு மணல் கொண்டாருலாம்’ அவன் தான் சொன்னான்.
முதுகுன்றம் தாண்டி வண்டி வந்துகொண்டிருந்தது.
அர்ரி அர்ரி’ என மாடுகளை முடிக்கினான். வலசக்காட்டன் முடுக்கத்தான் மாட்டுக்கு வால்கள் முளைத்தனவா என்ன. மாடுகளுக்கு வலசக்காட்டான் பாஷை புரிந்தேயிருக்க வேண்டும். அவை அவன் குரலுக்கு ஒரு அடி வேகமாய் எடுத்து வைப்பதும் பின்னர் தமக்கு தோன்றியபடி நடப்பதுமாகப் பழகி இருந்தன.
‘ நீ எண்ணைக்கும் ஒட்டாரம் பண்ணுறவன்தான் நான் தான் பாக்குறேனே’ மாடுகளில் ஒன்றைத்தான் அப்படித் திட்டித்தீர்த்தான் . அவை தம் போக்குக்கு போய்க்கொண்டே
இருந்தன. மாடாய் உழைப்பது என்பது இதுதானோ என்னவோ.
விதை நசுக்கப்பட்ட காளைகளை வைத்து ஒயா வேலை வாங்கும் நாம் என்ன மாட்டுப்பொங்கல் படைப்பதுவோ பசுங்கன்றுகளைக்கொன்றுவிட்டு பாலை மட்டும் கறந்துவிட இயந்திரம் கண்டுபிடித்துவிட்ட நமக்கு இது என்ன தருமமோ.
காளை மாடுகள் மாத்திரம் முன் வைத்த காலை பின் வைக்கவே வைக்கதாம் என்றோ தமிழ் சார் திருக்குறள் நடத்தும் சமயம் சொன்னது நினைவுக்கு வந்துபோனது
‘ செத்த மு¢ன்னால நவுந்து குந்துங்க வண்டியில மும்பாரம் இல்ல . நொ¡வத்தடி மேல தூக்குது’
‘ ஏன் ‘
‘ நவுந்து குந்துங்க இது எல்லாம் என்கிட்ட என்னா கேழ்வின்றேன்’ அவன் எரிந்து விழுந்தான்.
நான் வண்டியில் முன்புபுறம் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்துகொண்டேன். அந்த சிதம்பரம் செல்லும்
சாலையில் அப்போதைக்கு அப்போது ஒரு வண்டி சென்றுகொண்டிருந்தது. வரிசையாய்ப்புளிய மரங்கள் ஆகாயம் தொட்டுக்கொண்டு நின்றன. தூரத்தில் நெய்வேலி அனல் மின்சார உற்பத்தி ஆலையின் புகை கக்கும் குழாய்கள் ராட்சசர்கள் போலவே தெரிந்தன. நிலக்கரி எடுக்க த்தோண்டிய மண் பெரு மலை எனக்கொட்டிகிடந்தது.
‘ நெய்வேலிக்காரன் நவுந்துகிட்டே வர்ரான் ஆ வந்துப்ட்டானே’
‘ ஆமாம் ‘ என்றேன்.
‘ அவனுக்கும் சோலி இருக்குதுல்ல. நோண்டுனா தானே கரி அப்புறம் கரண்டு காசு எல்லாம்’
‘ இப்ப எங்க குடி இருக்குற நீ’ பேச்சை மடை மாற்றினேன்.
‘ ஏன் தெரியாதா’ என்றான்.
‘ தெரியாமத்தான் கேக்குறேன்’
‘ நொண்டிபுள்ள ஊட்டதான்’
‘ யாரு’
‘ என்னா யாரு எவருன்னுட்டு, அந்த கம்பத்தாரு கட்டிவுட்ட பத்து வூடு இருக்குதுல்ல அதுல மொத வூட்டுல குடியிருக்கறன்’
‘ பெரிய மனுஷனைப்போயி நொண்டி அது இதுன்றே’
‘ என்னா செத்த மருவாதை நாயி நாயி ஈன புத்தி எச்சி நாயி அது’
‘ கேட்டது தப்பா நீ பாட்டுக்கு நீட்டிக்கிட்டே போற’
‘ குடியிருக்கிர வூடு ஒழுவுது ஔடு மாத்துனும்றேன். அவனும் மாத்த மாட்டன்றான் என்னையும் மாத்த உட மாட்டன்றான். தானும் இதுங்கமாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான் அவன் சரியான வவ்வி’’

‘ என்னா போ’ என்றேன். வவ்வி என்பதற்கு என்ன பொருளோ எப்படிக்கேட்பது. வவ்வால்
என்பதைத்தான் வவ்வி என்கிறான் வலசக்காட்டான் முடிவு செய்தேன்.
மாடுகள் அசைந்து அசைந்து நடந்தன
தருமங்குடிக்கு .சரி பாதி தூரம் வந்தாயிற்று. கம்மாபுரம் கிராமம் நெருங்கிகொண்டிருந்தது. இன்னும் நான்கு ஊர் தாண்டினால் தருமங்குடி வந்துவிடும்.
‘ மானம் கருக்கிட்டு வருது என்னா துன்பம் சிமுட்டு மூட்டல்ல வச்சிருக்கம். கம்மாபுரம்
செயராம செட்டிக்கடயில ஊரியா சாக்குவ ரெண்டு வாங்கி மேல போட்டுக்கிட்டாதான் தேவலாம்’
சொல்லிக்கொண்டே வலசக்காட்டன் வண்டியை ஒட்டிக்கொண்டுபோய் செயராம செட்டியார் கடை முன்பாக நிறுத்தினான்.
‘ எதானா சாக்கு படுதா இருக்குதான்னு பாரு செட்டியாருள்ட என்னா ஜாமான் தான் இருக்காது மனுஷாள்ள செட்டிசனம் கெட்டி சனமாச்சே’
நான் செயராம செட்டியார் கடைக்குச்சென்று யூரியா சாக்கு நான்கு வாங்கி வந்தேன். அதில்
இரண்டை எடுத்து சிமென்ட் மூட்டைக்கு போர்த்திவிட்டான்,
‘ இப்ப எங்கனா அசைக்க முடியுமா மழையாவது ஒண்ணாவது’ சொல்லியபடியே
மாடுகளை விரட்ட ஆரம்பித்தான். அவை தலையை ஆட்டிக்கொண்டு நடந்தன.
‘ எங்க வுட்டன் கதயை’
‘ ஔடு மாத்த வுட மாட்டன்றாரு புள்ளன்னு சொன்னீரு’
‘ என்னா புள்ள செத்த நொள்ள கஞ்ச பிசுநாறி வீரநாரணப்பெருமா கோவிலு தோட்டத்து தேங்கா வித்து முடியுறான் நொண்டி நாம போய் கேட்டா ஒரு தேங்கா ரூபா நாலுன்றான் அஞ்சின்றான் நல்ல கதிக்குப்போறவனா நொண்டி’

வலசக்காட்டன் பேசிக்கொண்டே போனான். மேகங்கள் கலையத்தொடங்கின. யூரியா சாக்கு
வாங்கிய சமாச்சாரம் அவைகட்கும் தெரிந்து இருக்குமோ. என்னவோ. சிதம்பரம் செல்லும்
சாலை கன்னங்கறேல் என்று நாக ராசனாய் ப்படுத்துக்கிடந்தது.
‘ நம்ம ஊரு வந்து போச்சி வண்டி சுழலும் சாக்குறதை’
என்றான் வலசக்காட்டான்.
புளிய மரத்தடியில் இருந்த சுமை தாங்கி க்கல்லில் அமர்ந்திருந்த கருப்பு உருவம் நொண்டி
நொண்டி வண்டியருகே வந்தது.
‘ யாரு வலசக்காட்டானா குரலு வெங்கலமாட்டம் கணீர்னு இருக்கு’
‘ ஆரு பெரிய புள்ள யா என்னா சேதி இந்த கருக்கல்லபோயி எங்க இப்பிடி ’ சொல்லிக்கொண்டே வண்டியை விட்டு இறங்கினான். பிள்ளையக்கைத்தாங்கலாய்ப்பிடித்து அழைத்து வந்தான்.
‘ யாரு ‘ என்றேன்.
‘ யாரு கீரு ங்க்ற பெரிய புள்ள தருமங்குடியில கம்பமாச்சே நீ நவுந்துக அய்யா குந்துட்டும்’
‘ அது வுளுக்கு என்னா தெரியும்ற நம்ப பெரிய புராணங்கதை எல்லாம்,’
இடைமறித்து நியாயம் சொன்னார் பெரிய பிள்ளை.
மாடுகள் அமைதியா நின்று கொண்டிருந்தன. மாடுகளுக்குப்பேச வந்தால்தானே.
நான் ஒரு ஔரமாய் அமர்ந்துகொண்டேன். வண்டி ஆடி ஆடி ச்சென்று பெரிய பிள்ளயின் வீட்டு
வாயிலை அடைந்துநின்றது.
பெரிய பிள்ளையை அழகாய் இறங்கச்சொல்லி அவர் வீட்டு வாயில் வரை கொண்டுபோய் விட்டு.
‘ரா நேரம் பாத்து போங்க பெரிய புள்ள’ பவ்யமாய்ச்சொன்னான் வலசக்காட்டன்.
‘ நீ இருக்ககுள்ள ராவென்னா பகலென்னா’ என்றார் பெரிய பிள்ளை.
நான் ஆகாயத்தையே பார்த்துக்கொண்டு வண்டியில் அமர்ந்திருந்தேன். பிள்ளை வீட்டுக்கதவு
திறந்து பின் தாளிட்டுக்கொண்டது.
‘ வூட்டுக்கு வந்துப்டம்ல இப்புறம் என்னா மழக்கம்’ மாடுகளுக்குச்சொல்லி விரட்டினான் ..
அவை ஊர் வந்துவிட்டமை உணர்ந்து வேகம் கூட்டி நடந்தன.
சிமென்ட் மூட்டைகளை ஒவ்வொன்றாக இறக்கி என் வீட்டுக்குள்ளாக க்கொண்டு போய்வைத்தான் வலசக்காட்டான். என் வீட்டில் தாழ்வார வேலை இன்னும் பாக்கி இருக்கிறது.
———————————————————————————

Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts