விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

இரா.முருகன்


28 மே 1910 – சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை

ஓய் மகாலிங்கய்யரே, சித்தே இங்கே உட்கார்ந்து சிரம பரிகாரம் பண்ணிக்கும் ஐயா. இப்படியுமா ஒரு உழைப்பு. உடம்பு என்னத்துக்காகும்?

மலையாளத்து பிராமணன் என்னைப் பார்த்து சிரித்தானடி லலிதாம்பிகே. அப்படியே, அப்படியே, என்ன சொல்றதுன்னு தெரியலை பாரு. ரோமாஞ்சனம். மயிர்க்கூச்செறிந்து போச்சுது எனக்கு என்று சொல்லவும் வேணுமோ.

இவன் இங்கே எப்படின்னு பார்க்கறீரோ?

மலையாளத்தான் திரும்ப சிரித்தான். இவன் போடுகிற சத்தத்தில் உள்ளே தூங்கி கொண்டிருந்த காப்பிரிச்சி எழுந்து வந்துவிடலாம் என்று எனக்குப் பயம். உடம்பில் சக்தி இல்லை.

அவள் வந்தாலும் பாதகமில்லே ஓய். நான் உம்ம ரெண்டாம் பாரியாள் கண்ணில் எல்லாம் படமாட்டேன். கூடச் சேர்த்துக் கொண்ட பெண்பிள்ளை வீட்டுக்கு சகல அலங்கார பூஷிதனாக, உல்லாச புருஷனாக நீர் போகும்போது எத்தனையோ தடவை பின்னாடியே வந்திருக்கேன் தெரியுமா. வாசல்லே அந்த பிரம்மஹத்தி படுத்திண்டிருக்குமே. அதான் அந்தப் பெண்பிள்ளையைக் கெட்டின செக்கன். அவனை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு நானும் வெளியே கடல் காற்றை அனுபவித்துக் கொண்டு தூங்கியிருக்கேன். யார் கண்ணிலும் படாமல்தான்.

மலையாளத்தான் அவனுக்கே பிரத்யோகமான உச்சரிப்பில் சொல்லிக் கொண்டே போனான்.

ஏனய்யா, நீர் என்ன பிரேத ஆத்மாவா? கதி கிட்டாது அலைகிறீரா? கழுக்குன்றத்தில் என் கையில் எந்த நேரத்தில் ஒரு ஸ்தாலி செம்பைத் திணித்தீரோ அந்த நிமிஷத்தில் இருந்தே எனக்கு அஷ்டமத்தில் சனி பிடிச்சுதோ. இல்லை, நவகிரகமுமே வக்கரித்து வெவ்வெவ்வே என்று அழகு காட்டிக் கொண்டு திசைக்கு ஒன்றாகப் புட்டத்தைக் காட்டியபடிக்குத் திரும்பி நிற்க ஆரம்பித்ததோ தெரியலை. நரக ஜீவிதம் தான் எனக்கு இந்த நாள் வரை.

குற்றம் சாட்டுகிற உத்தேசத்தோடு அவனைச் சுட்டிக் கொண்டு இரைய ஆரம்பித்தேன். வரட்டும், காப்பிரிச்சி எழுந்து வந்து என்ன என்று விசாரிக்கட்டும். கண்ணில் படாவிட்டால் என்ன? சொன்னால் புரிந்து கொள்வாள். அவள் ஜாதி ஜனத்திலும் பிசாசு எத்தனையோ உண்டு. மனுஷர்களை விட அதுகளே அங்கேயும் அதிகம்.

மலையாளத்தான் கையைக் கட்டிக் கொண்டு எழுந்து நின்றான். வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்த மாதிரி, நரசிம்ம ரூபம் காட்டின மாதிரி இந்தக் குடுமியான் நிற்கிற கோலமும் சிரிக்கிற கோலமும் மனதைப் பதைபதைக்க வைத்தது. போதாக்குறைக்கு என் மனசும் உடம்பும் வேறே அசுத்தமாக இருக்கிறது. மொறிச்சென்று குளித்து பஞ்ச கச்சமாகக் கட்டிய வெள்ளை வேட்டியோடு கம்பீரமாக நிற்கிற இந்த பிராமணன் முன்னால் எனக்கு உரிமையில்லாத ஸ்திரியோடு கூடி வந்து அரையில் ஸ்கலிதம் உலர ஆரம்பித்து நான் இருக்க வேண்டி வந்த அவமானம் அது.

மகாலிங்க அய்யரே, உம்மை அப்படிக் கூப்பிட்டால் உமக்கு இஷ்டப்படாதே. வரதராஜ ரெட்டின்னே கூப்பிடலாமா? அதுக்கென்ன? பேரிலே என்ன இருக்கு? உமக்காவது ஒண்ணுக்கு ரெண்டாகப் பேர், ஒரு உடம்பு, அதுலே சுக்கம், துக்கம் எல்லாம் இருக்கு. எனக்கு? என் ஆத்துக்காரிக்கு? ஓமனக் குட்டி என் பெண்குஞ்ஞம்மைக்கு. என்ன இருக்கு? இனிமேலே என்ன இருக்கு எங்களுக்கு? தணியாத பசியும் தீராத தாகமும் இனியும் எத்தனை காலம்னு தெரியாத எங்கே எதுக்குன்னு புரியாத அலைச்சலும் தவிர வேறே என்ன உண்டு எங்களுக்கு?

அவன் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான்.

நான் அவனுக்கு ஆசுவாசமாக நாலு வார்த்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நாலு பருக்கை சாதமாவது எடுத்து கொஞ்சம் மோர் விட்டு ஒரு உப்புக்கல்லைக் கரைத்து கும்பாவில் நிறைத்து அவனுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். மனுஷன் பசித்து வந்திருக்கிறான். தாகமாக இருக்கிறான். என் மூலம் ஏதாவது உபகாரம் கிடைக்கலாம் என்று நான் போகும் இடம் எல்லாம் துரத்திக் கொண்டு ககன மார்க்கமோ வாயு மார்க்கமோ என்கிட்டே வந்து சேர்ந்து விடுகிறான். தாயாதி, பங்காளி என்று திருக்கழுக்குன்றத்தில் வைத்துப் பார்த்த போது ஏதோ உறவு கூடச் சொன்னான். என்ன என்று தான் நினைவில் இல்லை.

மங்கலாபுரத்துக்கும் அங்கேயிருந்து கொல்லூருக்கும் புறப்பட்ட நேரமே சரியில்லை வரதராஜ ரெட்டியாரே. ஒண்ணொண்ணா துரந்தம்.

துரந்தம்ன்னா? இவன் பேசுகிறது பாதிக்கு அர்த்தமாகிறதில்லை எனக்கு என்று சொல்லியிருக்கேனே லலிதாம்பிகே. நினைவு இருக்கோ இல்லியோ. என்னத்தை நினைவு இருக்க? எழுதுகிறதெல்லலம் உனக்கு எங்கே போய்ச் சேர்ந்தது? எனக்காக நானே எழுதி வைத்துக் கொள்கிற நடப்புக் கணக்கு தானே இதெல்லாம்?

துரந்தம்னா கஷ்டம். துக்ககரம். விபத்து.

அவன் விளக்கினான். இதுக்கு முன்பும் என்கிட்டே சொல்லி இருக்கானோ நினைவில்லை.. நிறுத்தி நிதானமாகச் சொல்லிக் கொண்டே போனான். இப்படி உயிர் மிச்சம் இருக்க, உடம்பின் பிரமையோ இல்லை ஸ்தூலமான அது அவ்வப்போது புலப்பட, கூடவே அவஸ்தைகளாக பசியும் தாகமும் பாதித்தபடி இருக்க, பூலோகப் பரப்பில் இருந்தும் இருக்கப்பட்ட காலத்தில் இருந்தும் பிய்த்து ஆகாச வெளியில் எறிந்தது போல ஒரு குடும்பமே அலைந்து கொண்டிருக்கிற சேதி இதுவரை நான் கேட்டிராத ஒன்று.

இவனை என்ன விதமாக ஆசுவாசப் படுத்துவது என்று புரியவில்லை. நாலு காசு கொடுத்தால் இவனுக்கு எந்த விதமாகவது பிரயோஜனமாக அமையுமா?

நான் குப்பாயத்தில் கைவிட்டுத் தேடினேன். கொண்டு போகிற பணத்தை எல்லாம் கல்யாணியின் முலைக்குவட்டில் செருகி விட்டு எழுந்து வருகிற பழக்கத்தால் குப்பாயம் மட்டும் துடைத்து விட்டமாதிரி சுத்தமாக இருந்தது.

காசு எல்லாம் எனக்கு வேணாமாய்யா. நீர் சவரன் வைர வைடூரியம் கொடுத்தாலும் அதுகளைக் கொண்டு எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை.

அவன் சொன்னான். பார்வை எனக்குப் பின்னால் தூரத்து இருட்டில் அலையடித்துக் கொண்டு சமுத்திரத்தில் நிலைத்திருந்தது. நேரம் தப்பிப் பறந்த நாரை ஒன்று பயந்து அலறிக் கொண்டு இருட்டில் பாய்ந்து போக, சுவர்க் கோழிகள் சரி கிடக்கட்டும் விடு, அதெல்லாம் நடக்கிறது போல் நடக்கும் என்று நீட்டி முழக்கி சம்பாஷணையை ஆரம்பித்திருந்த வேளை. யார் வீட்டிலோ மீன் வறுக்கிற வாடை காற்றில் வந்தது. எனக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.

ஸ்வாமின் மன்னிக்கணும். நான் தேக ஸ்திதி மகா அசுத்தமா இருக்கேன். கொஞ்சம் உள்ளே போக அனுமதிச்சா சுத்தியாக்கிண்டு ஒரு முழுக்குப் போட்டுட்டு வந்துடுவேன். அப்புறம் உம்மோடு உட்கார்ந்து ராத்திரி முழுக்க வேணும்னாலும் பேசத் தயார்.

லலிதாம்பிகே. அவனிடம் என்னமோ பிரியத்தோடு பேசணும் என்று எனக்குப் பட்டது. மனசு சதா காமத்திலும் காசு ஆசையிலும் குரூரத்திலும் அமிழ்ந்து கிடந்தாலும் அப்போதைக்கப்போது அதில் அந்தக் கசடை எல்லாம் சட்டை செய்யாமல் கடவுளோ அங்கி மாட்டின தேவதையோ பறந்து வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். உலகமே அழகானதாகத் தோன்றுகிற அந்த நிமிஷ நேரம் உனக்கு அனுபவப்பட்டிருக்கோ லலிதே? கல்யாணியையும் காப்பிரிச்சியையும் கூட இதைப் பற்றிக் கேட்க வேண்டும். அதுக்கு முன்னால் குளிக்க வேண்டும்.

பரவாயில்லை ஐயா. பித்ரு காரியமா பார்க்கப் போறீர்? என்னோட சித்தே காத்தாட உட்கார்ந்து வார்த்தை தானே சொல்லிண்டு இருக்கப் போறீர். சுத்தமும் பத்தமும் எல்லாம் பார்க்க வேண்டாம். ஆனாலும் இப்படி போற இடத்துலே எல்லாம் பீஜ தானம் பண்ணிண்டே போனா எழுந்து நடக்கக் கூட சக்தி இல்லாமே தவழ வேண்டிப் போயிடும். பிள்ளையில்லாத வீட்டுலே கிழவன் துள்ளி விளையாடறது இல்லே. நீர் கொடுத்த பிள்ளை நெறைஞ்சிருக்கிற வீடுகள்லே நீரே தவழ்ந்து அவஸ்தைப் படற நிலைமை. வேணுமா ஓய்?

மலையாளத்தான் முகத்தில் திரும்பச் சிரிப்பு குடி புகுந்தது. அதுவே எனக்குப் பெரிய ஆசுவாசமாகத் தோன்ற நான் வராந்தா ஓரமாக இருட்டில் உட்கார்ந்தேன்.

நாங்க எப்படியோ அலையறோம். என் அம்மா. அவளைக் கடைத்தேத்த நினைச்சேன். என்ன ஆச்சு? அதிலேயும் பலன் பூஜ்யம்.

அவன் திரும்ப ஆரம்பித்து விட்டான். இவன் காலமும் தேகமுமாக திரும்ப வந்தாலும் இன்னும் தீராமல் சொல்லி அழ ஏகப்பட்ட கவலை மிச்சம் இருக்கும்போல.

அடுத்தாற்போல் அவன் சொன்னது திருக்கழுக்குன்றத்தில் முடிந்தது.

உம்ம கையில் ஒப்படைத்தேனே ஸ்தாலிச் செம்பு.

அவன் சொல்ல ஆரம்பித்தபோது நான் திரும்ப அந்த நொடியில் திருக்கழுக்குன்றத்தில் இருந்தேன். பத்து வருஷத்துக்கு மேலாகியும் அந்த நேரம் ஒரு தசாம்சம் கூட பங்கம் வராமல் மனசில் வந்து போனது. லலிதாம்பிகே அன்றைக்கு நான் மகாலிங்கய்யன். உன்னை பாணிக்கிரஹணம் பண்ணி வீட்டில் பிரஷ்டையாக இருத்தி விட்டு புண்ணிய தரிசனம் போய் பாவத்தை வாங்கி மலையிறங்கி வந்தவன். கிட்டத்தட்ட நக்னமாக. எதிலிருந்து ஓடுகிறேன் என்று புரியாமல் ஓடி வந்தவனை இவன் அன்றைக்கு வழி மறித்தான்.

நான் அம்பலப்புழை மகாதேவய்யன். குப்புசாமி அய்யன் குமாரன். கொல்லூருக்கு என் ஒண்ணுவிட்ட சகோதரன் வேதையன் என்ற பெயருடைய வேதத்தில் ஏறிய பிராமணப் பிள்ளையை சந்திக்க வந்து எப்படியோ காலதேச வர்த்தமானம் தப்பி குடும்பத்தோடு அலைய சபிக்கப்பட்டவன். எத்தனை வருஷம் ஆச்சுதோ ஓர்மையில் இல்லை. வீட்டு ஸ்திரியும் பெண் குழந்தையும் கூட நஷ்டப்பட்டுப் போனேன் தற்போது. இந்த ஸ்தாலிச் செம்பில் என் அம்மா இருக்கா. பத்திரமாக அவளை வைக்க இடம் கிடைக்கலை. நீர் இதை தயை செய்து வாங்கி கோட்டயத்தில் வேதையன் வசம் சேர்க்க வேணும், விலாசம் தருகிறேன். நான் உமக்கு தூரத்து பந்து. அம்பலப்புழைக்கு நீர் சின்ன வயசில் வந்திருக்கறதாக அம்மா சொன்னாள். பகவதி சித்தி கல்யாணத்துக்கு சின்னப் பிள்ளையாக அரைஞாண் கொடியோடு.

அரைஞாண் இல்லாத இடுப்பில் காய்ந்த ஈரம் வரவரவென்று உலர்ந்து துர்வாடை வீச ஆரம்பித்தது எனக்கே தெரிந்தது. ஸ்தாலி செம்பு, அஸ்தி, மகாதேவய்யன். அம்பலப்புழை. பட்டுக் கோணகம். வெள்ளி அரைஞாண். பகவான் கிருஷ்ணன். கும்பாவில் பால் பாயசம். பரிசுத்தம். சுவர்க்கம். நான் மட்டும் பாஷாண்டியாக இப்படி.

ஒரு நிமிஷம் கொடுத்தா குளிச்சுட்டு.

நான் சொல்லியபடி உள்ளே போகப் பார்க்க அவன் திரும்ப இடைமறித்து என் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். என்னைத் தொட்டு இவன் அசுத்தப்படணும் என்று எழுதியிருந்தால் அதை யார் மாற்ற முடியும்?

ஒரு நிமிஷம் தான். நான் இறங்கிண்டே இருக்கேன்.

அந்த ஸ்தாலி செம்பை நான் தேடி எடுத்துத் தரேன்னு உம்ம கிட்டே சொன்னது நினனவு இருக்கு மகாதேவய்யரே. ஆனால் நான் இப்ப இருக்கப்பட்ட காலதேச வர்த்தமானத்துலே.

இதையும் நீர் பாண்டிச்சேரி போற நேரத்திலே சொன்னீர். மறந்துட்டீரா?

இவனோடு எங்கே எப்போது என்ன பேசினேன் என்று கோர்ட்டில் பெஞ்ச் கிளார்க் ரிக்கார்டு எடுத்து வைக்கிற மாதிரி துல்லியமாக நினைவு வைத்திருக்கிறான். எல்லாம் சரிதான். எதுக்கு என் பின்னால் வரணும் இப்போ?

அந்த ஸ்தாலி செம்பை உம்மை கைது செய்த போலீஸ் உத்யோகஸ்தர்கள் கோர்ட்டு கச்சேரியில் எக்சிபிட்டாக வச்சிருந்தா. உம்ம சகோதரன் நீலகண்டய்யன் இருக்கானே அவன் அதை கோர்ட்டிலே இருந்து எடுத்துண்டு வந்து வீட்டுலே வச்சுண்டான்.

யார் நீலகண்டனா? மானம் எல்லாம் கப்பலேற என் மேலே கேசு போட்டு கூண்டில் நிறுத்தி விசாரித்தபோது அவன் வரலை. தூக்கிலே போடற வரைக்கும் அடைஞ்சு கிடடா என்று ஜெயிலுக்கு அனுப்பின போதும் வரலை. அங்கே நான் உசிரைக் கையில் பிடித்துக்கொண்டு அது உடம்பை விட்டுப் போகாமல் இருக்க பிரம்மப் பிரயத்னம் செய்து துரைக்கு கடிதாசுக்கு மேல் கடிதாசாக அனுப்பி கருணை செய்ய பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது எல்லாம் என்னைப் பார்க்க வராதவன் என் சொந்தத் தம்பி. அவன் இந்த மலையாளத்து பிராமணன் என்னிடம் ஒப்படைத்த ஸ்தாலி செம்பை வாங்கிப் போக வந்தானா? அது அவன் கைக்குக் கிடைத்ததா? செம்போடு அவன் என்னைப் பற்றி, என் பிரியமான லலிதாம்பிகே உன் இருப்பிடம் பற்றி எல்லாம் விசாரித்திருப்பானா? நீ எங்கே இருக்கே என்று அவனுக்காவது தெரியுமா? நான் இருக்கப்பட்ட இந்த பிரதேசத்து விவரம் நீலகண்டனுக்குத் தெரிந்திருக்குமா?

அதெல்லாம் கேட்கச் சொல்லி உம்மைப் பெத்தவா அவனை அனுப்பினா. ஆனா அவன் வாயை அந்த நாயுடு வெங்காய வடை கொடுத்து அடைச்சுட்டான்.

புரியாமல் ஏதோ பேசிக் கொண்டு போனான் மலையாள பிராமணன்.

ஸ்தாலி செம்பை அவன் மூலமா காசியிலே சேர்த்து எங்கம்மாவைக் கரையேற்றணும்னு நினைச்சிருந்தேன். ஆனா அந்தக் கழுவேறி என்ன பண்றான் தெரியுமோ?

புரியாமல் பார்த்தேன் நான்.

ஏழு வருஷமா கங்கா ஜலம்னு வீட்டுலே வச்சு பூஜை பண்ணினான். அவன் யாத்திரை போறபோது காசிக்குப் போறபோது எடுத்துண்டு போற திட்டம்.

நீலகண்டன் காசிக்குப் போறானா? போகட்டும். போய்ட்டு வந்து எல்லாருக்குமா பிரார்த்தனை பண்ணி, எல்லோரும் க்ஷேமமா இருக்கட்டும்.

எங்கே போனான்? இன்னும் தான் அதுக்கு நாள் வரல்லே. துரை ரஜா கொடுத்தாலும் மத்த எல்லாம் சேர்ந்து வர மாட்டேங்கறாதாம்.

மலையாளத்து பிராமணன் அலுத்துக் கொண்டான்.

அது எப்படியோ போறது. உம்ம தாயாரோட. அந்த செம்பு.

அது கங்கா ஜலமில்லே. அந்த பாத்திரத்தை வீட்டுலே வச்சதாலே தான் அவனுக்கு சதா துர்சொப்பனம், வீட்டுக்காரிக்கும் குழந்தைகளுக்கும் நோக்காடு, வீட்டுக்கு பீடை பிடிச்ச மாதிரி கிடக்கு. இப்படி ஒரு ஜோசியன் சோழி உருட்டிப் பார்த்துச் சொன்னானாம். போன மாசம் வால் நட்சத்திரம் வேறே தட்டுப்பட்டு லோகம் முழுக்க பயந்து போயிருக்கே. ஜோசியன் அதையும் காட்டி பயமுறுத்தியிருக்கான்.

எந்த ஜோசியன்? லலிதாம்பிகை இருக்கும் இடம் தெரிந்தவனா அவன்?

எனக்கே தெரியலை அவனுக்கு எங்கே தெரியப் போறது?

வானத்தைப் பார்த்துக் கண்ணை உயர்த்தியபடிக்கு சிரித்தான் வந்தவன். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். வால் நட்சத்திரமோ வெற்று நட்சத்திரமோ இல்லாமல் ஒரேயடியாக கருப்புக் கம்பளி போர்த்தின சவம் மாதிரிக் கிடந்தது ஆகாசம்.

ஜோசியன் சொன்னதைக் கேட்டு ஸ்தாலி செம்பை திரும்ப கோர்ட்டுக் கச்சேரிக்கே கொண்டு வந்து நாயுடு கிட்டேயே விட்டுட்டுப் போகப்போறான் உம்ம சகோதரன்.

திரிலோக சஞ்சாரியாக இவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. ஆனாலும் நீ இருக்கப்பட்ட இடம், ஸ்திதி பற்றி மட்டும் தெரியாதாம்.

மகாலிங்கய்யரே, ஒரு காரியம் செய்யும். உம்ம சகோதரனுக்கு கடிதாசு எழுதும்.

என்ன எழுத? இவ்விடத்து வர்த்தமானம் எல்லாம் சொல்லும் தரத்திலா இருக்கு? எழுதி எங்கே அனுப்ப?

நேவிகேஷன் ஆப்பீசு மேற்பார்வைன்னு போடும் விலாசம். சொல்லித் தரணமா உமக்கு இதெல்லாம்.

அவன் ஏதோ நினைத்துக் கொண்டதுபோல் எழுந்தான். இடுப்பு வேட்டியில் இருந்து மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு வேகமாக இருட்டில் நடந்து மறைந்தான். அவன் கையில் வைத்திருந்த காகிதம். நினைவு வந்துவிட்டது லலிதே. நான் உனக்கு எழுத ஆரம்பித்த கடுதாசி தான்.

அந்த ஒற்றைக் காகிதமாவது உனக்குக் கிடைக்கிறதா பார்க்கிறேன்.

(தொடரும்)

eramurukan@gmail.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts