விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

இரா.முருகன்



ஜனவரி 29 1908 – பிலவங்க வருஷம் தை 16 புதன்கிழமை,

அம்பலப்புழை செக்கனோடு ஞாயிற்றுக்கிழமை பகல் முழுக்க இருக்க வேண்டிப் போனது துர்க்கா பட்டனுக்கு. பரசு அந்தப் பையனுக்கு விழுந்து விழுந்து சகல விபவங்களும் விளம்பி ஊண் கழிக்க வைத்தான். விட்டால் எடுத்து வாயில் ஊட்டி விடுகிற வாத்சல்யம் அவன் செய்கையில் தெரிந்தது.

ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் செக்கனோடு கூட துர்க்கா பட்டன் சமுத்திரக் கரை காண்பித்துக் கொடுக்கப் புறப்பட்டான். பரசு தானும் வருவதாகச் சொன்னாலும், கடையில் வருகிறவர் போகிறவரை கவனிக்க ஆள் இல்லாமல் போய்விடும் என்பதால் அவனை வேணாம் என்று சொல்லி விட்டான் பட்டன்.

ராத்திரி சீக்கிரம் வந்துடுங்கோ. சமுத்திரக் கரையோரமா பய்யாம்பலம் மசானத்துலே யட்சி அலையறான்னு ஊர் முழுக்க பேச்சு. நீங்க ரெண்டு பேரும் பிரம்மசாரிகள். யட்சி தட்டுப்பட்டா, பார்த்த மாத்திரத்திலேயே ஸ்வாஹா தான்.

பரசு சொன்னபோது செக்கன் அடக்க முடியாமல் சிரித்தான்.

ஓய் யட்சியை நீர் பாத்ததுண்டா?

அவன் பரசுவைப் பார்த்துக் கேட்டான்.

பாக்காம என்ன? எங்க புலியூர்க்குறிச்சியிலே சகல சௌந்தர்யத்தோடும், உடம்புலே த்ரிபங்க வளைவோடும் ஒரு யட்சி வந்து சேர்ந்தா. தடி தடியா ரெண்டு முலையையும் சுமக்க முடியாம தோள்லே தூக்கிப் போட்டுண்டு நடுநிசிக்கு அவ தாட்தாட்டுனு நடந்ததைப் பார்த்துத் தொலைச்சேன்.

அப்புறம்?

பையன் சிரிப்பு மாறாமல் கேட்டான்.

பனி பிடிச்சு ஒரு மாசம் கிடக்கையிலே கிடந்தேனாக்கும்.

பரசு பார்த்த யட்சியை தான் பார்த்திருக்கக் கூடாதா என்று துர்க்கா பட்டனுக்கு ஏக்கமாக இருந்தது. அவளுக்கு தோள் வலிக்காமல் சேவை சாதித்திருக்க அவனுக்குக் கூடும் தான். யட்சிகளைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?

கூடக் கூட்டிக் கொண்டு நடந்தபோது செக்கனின் ஜாதகத்தையே அலசி விசாரித்துக் கூறு போட்டுவிட்டான் பட்டன். பையன் வெடிவழிபாட்டுக்கார வயசனின் அனியத்தி வழி பேரன். விசுவநாதய்யன் சாப்பாட்டுக் கடைக்கு காய்கறி வாங்கி வருவது, வாழைக்காயும் சேனையும் அரிந்து தருவது, தொட்டியில் வெள்ளம் நிறைத்து வைப்பது என்று உக்கிராணத்துக்குள் படி ஏற்றாமல் சின்னச் சின்னதாக அய்யன் இவனை வேலை ஏவுகிறது வழக்கம்.

நித்தியப்படிக்கு மூணு வேளை தரக்கேடில்லாத ஊண், தலை சாய்த்து உறங்க கடைத் திண்ணை, கிணற்றடியில் தந்த சுத்தியும் குளியும் நடத்திக் கொள்ள சௌகரியம். செக்கனுக்கு அய்யன் தெய்வம் மாதிரி தெரிந்து கொண்டிருக்கிறான். அவனுக்காக வண்டி ஏறி, நடந்து, வள்ளம் துழாவிப் புழை கடந்து தலையில் பூவன் பழக்குலையைச் சுமந்து கண்ணூருக்கு வந்திருக்கிறான் பையன்.

வழியில் வேதையன் வீட்டிலும் படியேறி பரிபூரணம் மன்னிக்கு செக்கனை பரிசயப்படுத்தி வைத்தான் பட்டன். அதுக்கு முன்னால் வாசலில் கோடு கிழித்துப் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக் கூட்டத்தில் தீபஜோதியையும்.

அம்மாவா, நீயும் வந்து சாடு.

அம்மாவன் புதுச் செக்கனை காரணம் காட்டி தீபஜோதியிடம் இருந்து தப்பித்து உள்ளே போனான்.

பய்யன் வரதுக்குள்ளே அவன் கொண்டு வந்த பூவன்பழம் பரிச்சயமாயிடுத்து.

பரிபூரணம் சிரித்துக் கொண்டே கை காட்டின திசையில் நோக்கினான் துர்க்கா பட்டன்.

வேதையன் பழக்குலையைப் பக்கத்தில் செல்லமாக அணைத்துப் பிடித்து வைத்தபடிக்கு ஏதோ புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். பழக்குலையில் இருந்து ஒவ்வொரு பழமாகப் பிய்த்துச் சாப்பிட்டுவிட்டு தொலியைக் கீழே போட்டபடி இருந்தான் அவன்.

தொழுத்தில் இருந்து நடந்து வந்திருந்த கன்றுக்குட்டி அதை ஒன்று விடாமல் சவைத்துத் தின்றபடி அவன் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தது.

அண்ணா.

பட்டன் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்து என்ன என்று பார்வையால் விசாரித்தான் வேதையன். மனசுக்குப் பிடித்த புத்தகப் படிப்பும் நாக்குக்கு இதமான பூவன் பழமுமாக நேரம் கடந்து போகிற ஆனந்தம் அவனுக்கு.

கன்னுக்குட்டி பாவம் அண்ணா. ரொம்ப தொலி சாப்பிட்டா அதுக்கு சுகக்கேடு ஆயிடும்.

பட்டன் சிரிக்காமல் சொல்ல, அடக்க முடியாமல் சிரித்து விட்டான் வேதையன். கையில் வைத்திருந்த புத்தகத்தை பட்டன் தோள் மேல் குறி பார்த்து எறிந்தபடி அவன் சிரிக்கும்போது பரிபூரணம் சிரித்ததும் அதோடு சேர்ந்து கொண்டது.

எடோ கள்ள பட்டா, நல்லா பேசப் பழகிட்டேடா. இல்லே பரிபூரணம் கத்துக் கொடுத்தாளா?

ஆமா, தொட்டதுக்கெல்லாம் பரிபூரணம். வேறே வேலை இல்லையா எனக்கு?

பரிபூரணம் பொய்க் கோபத்தோடு உள்ளே போனாள்.

நில்லுடீ என் சம்பூர்ண ராமாயணமே. ஒரு சேதி சொல்லணும்.

நான் வேணா இறங்கட்டுமா அண்ணா? பட்டன் அவசரமாகத் திரும்பினான்.

அண்ணாவும் மன்னியும் கொஞ்சிக் கொள்ளும் அத்யந்த வேளையில் அவன் எதுக்கு தேவையில்லாமல் இங்கே?

போகண்டா. உனக்கும் தான் சொல்லியாகணும்.

பரிபூரணம் பூவன்குலையை அந்தாண்டை நகர்த்தி வைத்தாள்.

அடுத்த வாரம் மத்தியிலே அரசூர்லே இருந்து எங்க பகவதி அத்தையும் சாமா, வீட்டுக்காரி, குழந்தைகளும் வரப் போறதா நேத்திக்கு கடிதாசு வந்துது. சொல்ல விட்டுப் போயிடுத்து.

வேதையன் எட்டி இன்னொரு பழத்தைப் பறிக்கக் கையை நீட்ட அதைத் தட்டி விட்டபடி பரிபூரணம் குலையை இன்னும் தூரத்தில் நகர்த்தி வைத்தாள்.

நல்லா வரட்டும் உங்க அத்தையும் மக்களும். ஆனா அவங்க பட்டர் வீட்டம்மா ஆச்சே. நம்ம வீட்டுலே தங்கினா ஆசாரம் போகும்னு சொல்ல மாட்டாங்களா?

பரிபூரணம் நியாயமான சந்தேகத்தைக் கிளப்பினாள்.

அவா எல்லாரும் அம்பலப்புழைக்கு பிரார்த்தனை நேர்ந்துண்டு வரா. முடிச்சுட்டு இங்கே ஒரு நடை எட்டிப் பார்த்துட்டுக் கிளம்பிடறதா உத்தேசம். இங்கே கோவில் மேல்சாந்தி வீட்டிலே தங்க, சாப்பிட சௌகரியம் செய்து கொடுத்தாப் போச்சு.

வேதையன் எளுப்பமாக பிரச்சனையைத் தீர்த்து வைத்தபடி பட்டனைப் பார்த்தான்.

பட்டா, நீ.

மேல்சாந்தி கிட்டே இப்பவே சொல்லிடறேன் அண்ணா. போற வழிதானே.

பட்டன் தோள் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அம்பலப்புழை செக்கனோடு இறங்கினது ஞாயிற்றிக்கிழமை அந்தியும் ராத்திரியும் சந்திக்கிற நேரம்.

ராத்திரி அவனோடு கடைக்குத் திரும்பும்போது மழை பிடித்துக் கொண்டது. மகர சங்கராந்தி கழிந்து எங்கேயிருந்து மழை வருகிறது என்று பட்டனுக்குப் புலப்படாவிட்டாலும், ராத்திரி மழை குளிரை அதிகப் படுத்திப் போயிருந்தது அனுபவிக்கப் பரம சுகமாக இருந்தது.

எடோ பரசு ஒரு லோட்டா சுக்கு வெள்ளம் கொடேன்.

அவன் கேட்டபோது பரசு அவசரமாக அம்பலப்புழை செக்கனை இழுத்து அவன் தலையைத் துவட்ட ஆரம்பித்தான். கோழி மாதிரி நனைந்திருந்த பையன் சாதுவாகத் தலையைக் காட்டிக் கொண்டு நிற்க, பட்டன் சுக்கு வெள்ளத்துக்காக ஒரு யுகம் காத்திருக்க வேண்டிப் போனது.

அண்ணா, சுடச்சுட இட்டலி இருக்கு. சாப்பிட்டுப் போயிடுங்கோ. இனிமே போய் அரி வைப்பும் சம்பாரம் உண்டாக்கறதும் என்னத்துக்கு?

பரசு கேட்டபடி பட்டனுக்கும் அம்பலப்புழை செக்கனுக்கும் கடை உக்கிராணத்திலேயே இலை போட்டு இட்டலி எடுத்து வைத்துப் பரிமாறினான்.

பட்டனுக்கு மறுக்க முடியவில்லை. அவனும் தான் குடும்பம் நடத்த என்ன பிரயத்தனப்பட்டான்? வயதான மாதாவையும் அவள் கூடப் பிறந்த வல்யம்மையையும் கூட்டி வந்து குடித்தனத்தை ஆரம்பித்த நேரம்தான் சரியாக இல்லை.

வல்யம்மைக் கிழவி மங்கலாபுரம் பாஷையும் ஆகாரமும் ஆயுசு முழுக்க பழகினதாலோ என்னமோ கண்ணூர் சூழ்நிலை கிஞ்சித்தும் சரிப்பட்டு வராமல் வந்து நாலே மாசத்தில் வைகுண்ட பதவி வகிக்கப் போய்ச் சேர்ந்தாள்.

ஏலிக்குட்டி, மரியம்மா, கொச்சு தெரிசா, காத்தி, பிலோமீனாள், ரெபக்காள் என்று பரிபூரணம் யார்யாரோ குமர்களை வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கும்போது அவனுக்குப் பரிச்சயப்படுத்தி அதில் ஒருத்தியைக் கட்டியோள் ஆக்கிக் கொள்ளச் சொன்னாள்.

எல்லாமே அதிரூப சௌந்தர்யவதிகள் இல்லையென்றாலும் தரக்கேடு இல்லாத பெண்கள். அவனைக் கல்யாணம் கழிக்க அதில் ஒருத்திக்கும் மடியில்லை.

ரெபக்கா மாத்திரம் கல்யாணத்துக்கு அப்புறமும் திவசேனம் மீன் கழிக்கிற ஏற்பாடு வேணும் என்று அவசியப்பட்டாள். அது செம்மீனாகத்தான் இருக்கணும் என்றில்லை. அயிலை, கேவலம் மத்தி ஆனால் கூடச் சேர்த்திதான்.

மீனுக்குக் கூட இத்தனை ஜாதி வித்தியாசம் இருக்கிறது தெரிந்து பட்டனுக்கு ஆச்சரியம். ஆனால் தினசரி மீன் சாப்பிட்டு வாய் வாடையில் அது மணக்க மணக்கப் படுக்க வருகிற பெண்ணோடு சுகிக்க முடியுமா என்று யோசித்தான் அப்போது.

பழகிப் போகலாம். அவனும் நாளாவட்டத்தில் மத்தியும் குத்தியும் ருஜித்துச் சாப்பிடக்கூடும். ரெபக்காவோ மற்ற யாரோ ஒருத்தியோ, கட்டியவளாக வாய்த்தவள் கேட்ட மாத்திரத்தில் பாகம் செய்து தருவாள்.

அந்தப் பெண்களின் அப்பன்மார் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் வைத்தார்கள். பட்டன் வேதத்தில் ஏறினால் போதும். பெண்ணும் கொடுத்து பொன்னும் கொடுக்க, பயிர் செய்ய பாட்டம் ஒதுக்கித் தரக்கூட அவர்கள் எல்லாம் தயாராக இருந்தார்கள்.

மங்களூர் சிவத்த பார்ப்பானுக்கு மவுசு அல்லே என்று சிரித்தாள் பரிபூரணம் அப்போது.

பட்டனின் அம்மாதான் பிராமணத்தி அல்லாத பெண்ணு மருமகளாக வீட்டுப்படி ஏறக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். அது வேதத்தில் ஏறினவளாக இருந்தாலும் பரவாயில்லை அவளுக்கு. அந்தப் பெண் பிராமணத்தி இல்லாவிட்டால் என்ன? அவள் அப்பனோ அவனுக்கும் அப்பனோ குளித்து அம்பலம் தொழுது விரதம் இருக்கிற பிராமணனாக இருந்திருப்பான். அந்தப் பெண் கையால் வைத்த சாதத்தில் சம்பாரம் விரகிச் சாப்பிட்டாலும் நேராக சொர்க்கம் போகலாம் என்று அவளுக்கு நம்பிக்கை. அந்த சுவர்க்கத்தில் வேறே ஜாதிக்காரர்கள் யாரும் இருக்க முடியாது.

இப்படி கல்யாண ஆலோசனைகள் அரைகுறையாக அலைபாய்ந்து கொண்டிருந்த போது பட்டனின் அம்மாவும் ஜன்னி கண்டு உயிரை விட்டாள். அது போன கொல்லத்துக்கு முந்திய திருச்சூர் பூரத்துக்கு அடுத்த தினத்தில் நடந்த ஒன்று.

குடித்தனம் வைத்த குச்சு சதா அடைத்துக் கிடக்க துர்க்கா பட்டன் வேதையன் வீடும் சாப்பாட்டுக் கடையுமே கதியாக ஆகிப்போனான் அப்புறம். பரிபூரணம் சொந்தத் தமக்கை மாதிரி கவனித்துக் கொண்டாலும், அவளை குரிசுப் பள்ளி காரியங்களுக்கும், தையல் பின்னல் வேலை கற்றுக் கொள்ளவும் சுற்றி வருகிற குமரிகள் பட்டனைத் தொடர்ந்து ஆகர்ஷித்தாலும் என்னமோ கழிசடை கால் தன்னிச்சையாக இங்கே சாப்பாட்டுக் கடைக்கு இழுத்து வந்து வாரத்துக்கு ஒரு தடவையாவது பரசு முன்னால் உட்கார்த்தி விடுகிறது.

ஆனால் பரசு இன்றைக்கு அவனைக் கவனிக்கவே இல்லை. அம்பலப்புழைப் பையன் இங்கே இவனோடு ராத்தங்க வேணுமா என்று பட்டனுக்கு யோசனையாக இருந்தது. பேசாமல் வீட்டுக்குப் போய் அங்கேயே அவனை தங்க வைத்து காலையில் வண்டி ஏற்றி அனுப்பினால் என்ன?

வேணாம். வீடு இருக்கப்பட்ட ஸ்திதியில் அதை விருத்தியாக்கவே ராத்திரி முழுக்க சரியாகப் போய்விடும்.

சாப்பாட்டுக்கடைத் திண்ணையில் இருந்து, ராத்திரி பத்து மணி வரைக்கும் ஊர்க்கதை, வேடிக்கை விநோதம், நம்பூதிரி பலிதம் என்று வாய் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள் மூவரும்.

படுத்துக்கலாமே. இனிமே யாரும் சாப்பிட வரப் போறதில்லே.

பரசு பட்டனிடம் சொன்னான். திரும்ப மழை சன்னமாகப் பெய்ய ஆரம்பித்திருந்தது.

இல்லே, நான் வேதண்ணா வீட்டுக்குப் போறேன். விடிகாலையிலே வாழைக்கு தண்ணீர் பாய்ச்சணும். ஒரு மரத்திலே வாழைப்பட்டை சாறு வடிச்சு மூஸ் வைத்தியருக்குக் கொடுக்கணும். யாருக்கோ மூத்ரகோச சிகிச்சைக்கு வேண்டியிருக்காம்.

பட்டன் கிளம்பின போது பரசு முகத்தில் அலாதி நிம்மதி தெரிந்தது.

எடோ செக்கா, நீ உள்ளே வந்து உக்கிராணத்துலே ஒரு கோரம்பாயை விரிச்சுக் கிடக்கலாமே. காலையிலே கோவில்லே செண்டை உயரும்போது கிளம்பிப் போய்க்கோ. பரசு எழுப்பி விட்டுடுவான்.

பட்டன் சொன்னபோது பையன் சுவரில் சாய்ந்து குந்தி உட்கார்ந்தான்.

பட்டரே, நான் ராத்திரி முழுக்க தூங்கறதே கிடையாது.

ஏன் அப்படி?

ஒரு கொல்லம் முந்தி ராத்திரியிலே தோட்டுப் பக்கம் நடந்து வந்தபோது கரிமூர்க்கன் கடிச்சு ஏற்பட்ட பெலன்.

கரிமூர்க்கன் கடிச்சா காலம் முடிஞ்சு போயிடுமே செக்கா.

துர்க்கா பட்டன் கேட்டான்.

கோவில் எம்பிராந்தரி அது நடக்காம சரி பண்ணிட்டார். ஆயிரத்தெட்டு தடவை மந்திரம் உருவேத்தி அம்பலக் குளத்திலே பதினோரு தடவை குளிக்க வச்சு, விஷம் போச்சு. ஆனாலும்.

ஆனாலும் என்ன? ஆகாட்டாலும் என்ன. நீ வந்து படு. துர்க்கா அண்ணாவுக்கு தலைக்கு மேலே வேலை இருக்கு. அவர் போய்க்கட்டும்.

பரசு சொன்னான். அவன் அவசரம் அவனுக்கு.

கரிமூர்க்கன் தீண்டியதில் இருந்து ராத்திரி ஒரு நிமிஷம் தூங்கினாலும் எங்கேயிருந்தோ எலிகள் எல்லாம் வாடை பிடிச்சு வந்து கால் விரல்லே கடிச்சுட்டுப் போயிடுது.

பையன் சோகமாகச் சொன்னபடி தன் காலை நீட்டிக் காட்டினான். பாதம் முழுக்க தளம் போடக் கொத்தி வைத்த மாதிரி அங்கங்கே அரித்திரிந்தது பார்க்க பட்டனுக்கே பாவமாக இருந்தது.

எம்பிராந்திரி இது ஸ்வஸ்தம் ஆக ஒண்ணும் செய்யலியா? அவன் கேட்டான்.

இது ஜபத்துக்கு இணங்கி வராதுன்னு சொல்லிட்டார். அப்புறம் எங்க பிஷாரடி வைத்தியர் மருந்து கலக்கிக் கொடுத்தார். வெடிவழிபாட்டு அப்பூப்பன் வயசு அவருக்கும். மருந்திலே ஏதோ சரியா அமையலை.

அப்புறம்?

காலைச் செருப்பில் நுழைத்துக் கொண்டு துர்க்கா பட்டன் கதை கேட்கிற சுவாரசியத்தோடு கேட்டான்.

மருந்தை சாப்பிட்டா உடம்பு லேசாகி கோழி மாதிரி தாழப் பறக்கணும் போல இருந்துது.

பரசு கடைக்குள் பாயில் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தான். அது பொய்த் தூக்கமாக இருக்கலாம் என்று தோன்றியது பட்டனுக்கு. அவன் போகிறதுக்காகக் காத்திருக்கிறானோ?

நீ பாட்டுக்குப் பறந்து கோயில் கொடிமரத்துப் பக்கம் போய் நனைச்சுடுவே. வெடிவழிபாட்டுக் காரப் பாட்டன் மேல் விழுந்து அவனையும் பரலோகம் போக வச்சுடுவே. ராத்திரி தூங்காட்டாலும் பாதகமில்லேன்னுட்டார் பிஷாரடி வைத்தியர்.

சரிதான். தூங்கினாலும் முழிச்சிண்டிருந்தாலும் ஜாக்கிரதையா இருடாப்பா.

பட்டன் பரசுவைப் பார்த்தபடியே சொல்லிவிட்டுப் படி இறங்கினது ஞாயிற்றுக்கிழமை ராத்திரி பத்து மணி கழிந்து.

முந்தாநாள் திங்கள் காலையில் வேதையன் வீட்டுத் திண்ணையில் அவன் தீர்க்கமான உறக்கத்தில் இருந்தபோது களேபரமான சத்தம்.

என்ன ஏது என்று புரியாமல் கண் விழித்தபோது ராஜ கொட்டார உத்தியோகஸ்தரா, திருவிதாங்கூர் போலீஸ் உத்தியோகத்தில் இருக்கப்பட்டவரா என்று தீர்மானிக்க முடியாதபடி உடுப்பு தரித்திருந்த ஒரு அதிகாரி வீட்டுப் படி ஏறி வந்து கொண்டிருந்தார். அந்த விடிகாலை நேரத்தில் இத்தனை மிடுக்காக ஒரு மனுஷர் இருக்க முடியுமா என்று பட்டனுக்கு வியப்பு அடங்காமல் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான்.

வேதையன் சொன்னபடி உள்ளே போய் குரிச்சி எடுத்து வந்து அந்த உத்தியோகஸ்தர் உட்கார வேண்டி வாசல் திண்ணையில் போட்டபோது வந்த மனுஷர் ஏகச் சத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

சார்வாள், உங்க கடை சிப்பந்தி அங்கே தங்க வந்திருந்த அம்பலப்புழைக்காரப் பையனை இடுப்புக்குக் கீழே கடிச்சு.

அட கஷ்டகாலமே. பரசுவா?

வேதையன் பதற்றத்தோடு விசாரித்தான்.

ஏன் கேட்கறீங்க சார்வாள். அனாசாரம். அவன் ரத்தம் சொட்ட கச்சேரிக்கு வந்து பிராது கொடுத்தது விடிகாலை நாலு மணிக்கு. செக்கனை வைத்தியசாலைக்கு அனுப்பி வச்சிருக்கு. தனியா வந்துட்டாலும் சேர்த்து வச்சுத் தச்சுடலாம்கறார் டிரஸ்ஸர். சார்வாள் தேஷ்யப்பட வேணாம். கடையிலே ஏன் இப்படியான ஆளுகளை.

உத்தியோகஸ்தர் பட்டனைப் பார்த்து நிறுத்தினார். சத்தம் கேட்டு பரிபூரணமும் வாசலுக்கு வந்துவிட்டாள்.

தலையில் அடித்துக் கொண்டு வேதையன் கண்ணடையைக் கண்ணில் மாட்டிக் கொண்டு கடைக்குப் புறப்பட்டான். கூடவே தந்த சுத்தி கூடச் செய்யாமல் பட்டனும் கிளம்பி விட்டான்.

பரசுவை சகல ராஜாங்க மரியாதைகளோடும் கோர்ட்டுக் கச்சேரிக்குக் கொண்டு போய், அப்புறம் கம்பி அழிகளிக்குப் பின்னால் அடைத்தும் வைத்தார்கள்.

பட்டன் கடையிலேயே நின்று வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும், வேணாம் என்று மறுத்து விட்டான் வேதையன்.

காப்பி குடிக்க வருகிறவனும், இட்டலி தின்ன நாலு சக்கரம் மடியில் முடிந்து கொண்டு படி ஏறுகிறவனும் வம்பு விசாரிப்பார்கள். ஒவ்வொருத்தனாகப் பதில் சொல்லி உனக்கு மாளாது. ஸ்திரியைக் கூட்டிண்டு வந்தான்னு பிராது வந்திருந்தால் கூட பரவாயில்லே. சு-வர்க்க ரதி. கர்த்தர் சொன்னபடி நரகம் போக வைக்கிற பாவம். நம்ம கடையிலே இப்படியும் நடக்கணுமா?

ரெண்டு நாள் கடையை அடைத்து வைத்து இண்டு இடுக்கு விடாமல் கழுவித் துடைத்து சுத்தம் செய்து நம்பூத்திரியையோ பாதிரியையோ அல்லது ரெண்டு பேரையும் வேறு வேறு நேரத்திலோ வரவழைத்துப் பரிகாரம் செய்த அப்புறம் சாவகாசமாகக் கடையை மறுபடியும் திறந்தால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான் அவன். அதுவரை காப்பியும் தோசையும் இல்லாமல் கண்ணூர்க்காரன் எவனும் பட்டினி கிடந்து உயிரை விடப் போவதில்லை.

பரசுவுக்கு எத்தனை வருஷம் சிக்ஷை கிடைக்கும்?

யோசித்தபடி கையில் வைத்திருந்த வாளித் தண்ணீரை பக்கத்தில் வைத்து விட்டு அடுப்படியைத் துடைக்க ஆரம்பித்தான் துர்க்கா பட்டன்.

அண்ணா, இப்படி இந்தக் கள்ளியம்பெட்டி மேலே உக்காருங்கோ.

பரசு குரல் மனசுக்குள் கிசுகிசுத்தது.

பட்டன் இடுப்பில் கை வைத்தபடி அமர்த்தி, முன்னால் குனிந்து தரையில் குந்தினான் பரசு.

ஜீவ பரியந்தம் எனக்கு. வெறும் பத்து நிமிஷம் உங்களுக்கு. ரெபக்காளைக் கல்யாணம் கழிச்சா, மத்தி மீன் வாங்கிட்டு வரணும். அதுக்கு ஆகிற நேரத்திலே ஆறிலே ஒரு பங்கு கூட கிடையாது.

பட்டன் நழுவிக் கொண்டிருந்த இடுப்பு வேஷ்டியை அவசரமாகச் சரி செய்தபடி அந்தக் கள்ளியம்பெட்டி மேல் ஒரு வாளி தண்ணீரை ஊற்றினான். இறங்கிப் போடா கழுவேறி.

பரசு கலைந்து போனான். மனசு மட்டும் இன்னும் கசடு தீராமல் தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது பட்டனை.

மத்தி மீன் எப்படி இருக்கும்? மதியம் பரிபூரணம் சேச்சியிடம் கேட்கலாமா? ரெபக்காளையே நேரடியாகக் கேட்டு விடலாமா?

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts