சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Socrates & His Friends at
Agathon’s Home
(Last Supper)

“எல்லோருடைய இழப்புகளையும் அவப்பேறுகளையும் (Misfortunes) ஒன்றாகக் குவித்து ஒவ்வொருவரும் சமப்பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினால் பெரும்பாலோர் தமது சொந்தப் பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வர்.”

“செம்மையான முறையில் தம்மை வேதாந்தச் சிந்தனைகளில் ஈடுபடுத்துவோர் நேரடியாக மரணத்திற்குத் தம்மைத் தயார் செய்து கொள்கிறார் என்பதைச் சாதாரண மக்கள் உணர மாட்டார்.”

“கவிஞர்கள் கடவுளைப் பற்றி ஆழ்ந்த விளக்கங்கள் கொடுப்பவர்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -10

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். வெளியே இருந்து வந்த அல்சிபியாடஸ் இராணுவப் படை சாக்ரடிஸைத் தேடி வருவதாகச் சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சி உண்டாக்குகிறான். இராணுவக் காவலர் கதவைத் தட்டுகிறார்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர். அல்சிபியாடஸ், இராணுவப் படையினர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். வெளியே இருந்த வந்த அல்சிபியாடஸ் ஓர் அதிர்ச்சிச் சேதியைக் கொண்டு வருகிறான். திடீரென இராணுவப் படையினர் வாசலில் வந்து நிற்கிறார் !

அல்சிபியாடஸ்: (ஆச்சரியமாக) இராணுவ விருந்தாளிகள் வந்திருக்கிறாரா ? சாக்ரடிஸைப் பிடித்துப் போக வந்திருக்கிறாரா ?

கிரிடோ: இப்போது பேச நேரமில்லை ! ஆகாத்தான் ! கதவைத் திறக்கச் சிறிது நேரம் தாமதம் செய் ! நாங்கள் போன பிறகு இராணுவக் காவலரை வரவேற்பாய் ! வாருங்கள் சாக்ரடிஸ் ! இந்த அங்கியால் மூடிக் கொள்வீர். துணியில் முகத்தை மறைத்துக் கொள்வீர்.

அல்சிபியாடஸ்: என்ன திட்டம் ? நாமெல்லாம் வெளியே போகிறோமா ?

·பாய்தோ: ஆமாம் தோழரே !

அரிஸ்டோதானிஸ்: (அதிர்ச்சியுடன்) இரும்பு இராணுவத் தொப்பிகள் தோட்டத்தின் நிலா வெளிச்சத்தில் உலாவி வருவதைப் பார்த்தேன்.

சாக்ரடிஸ்: (அமைதியாக) ‘ஓடிப் போகாதே’ என்று என் உள்ளிதயம் எச்சரிக்கை செய்கிறது.

அரிஸ்டோதானிஸ்: இராணுக் காவலர் உம்மைப் பிடித்துச் செல்வதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். எங்கள் உள்ளிதயம் அப்படி எச்சரிக்கை செய்கிறது சாக்ரடிஸ் !

ஆகாத்தான்: முதலில் உம்மைக் காப்பது எம் பொறுப்பு. இராணுவக் காவலர் தோட்டத்தின் வழியாக நுழைவார். நாம் பலகணி வழியே குதித்து அவர் கண்ணில் படாமல் ஓடிவிடலாம்.

சாக்ரடிஸ்: நான் பலகணி வழியாக ஏறிக் குதித்தால் என் காலை முறித்துக் கொள்வேன்.

ஆகாத்தான்: உம்மைப் பாதுகாப்பாய் நாங்கள் பலகணி வழியே இறக்கி விடுவோம். சாக்ரடிஸ் ! கவலைப் படாதீர். (ஆகாத்தானும், அரிஸ்டோ·பானிசும் சாக்ரடிஸை பலகணி வழியே இறக்கிச் செல்கிறார். மீண்டும் பலமாய்க் கதவு தட்டும் அரவம் கேட்கிறது).

கிரிடோ: யார் கதவைத் தட்டுவது ? அதுவும் நடுநிசியில் !

வெளியே இருந்து குரல்: நான் ஸார்ஜென்ட் ! இராணுவக் காவல்துறை அதிகாரி !

(கிரிடோ கதவைத் திறந்ததும் நான்கு காவல்துறை அதிகாரிகள் வாளேந்தி நிற்கிறார். உள்ளே நுழைந்து நாற்புறமும் நோக்குகிறார். இருவர் அறை அறையாய்ப் போய்த் தேடுகிறார்)

முதல் காவலன்: (மதுக் கிண்ணங்களைப் பார்த்து) பலர் இருந்தது தெரிகிறது ! சமீபத்தில்தான் நழுவிச் சென்றிருக்கிறார் ! பத்துப் பதினைந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும் ! மதுக் கிண்ணங்கள் நிரப்பப் பட்டுள்ளன ! ஒரு வாய் கூட அருந்தாமலே ஓடி இருக்கிறார் ! (ஒரு மதுக் கிண்ணத்தை எடுத்து மடமடவெனக் குடிக்கிறான்). மதுபானம் சுவையாக இருக்கிறது ! (அடுத்து ஒன்றை எடுத்துக் குடிக்கிறான்)

இரண்டாம் காவலன்: அந்த ஆரஞ்சுப் பழத்தை எடு ! வயிறு காலியாக உள்ளது ! எட்டு மணிநேரம் தேடி யிருக்கிறோம். அந்த சாக்ரடிஸைப் பிடிக்க முடிய வில்லை ! (முதல் காவலனைப் பார்த்து) சாக்ரடிஸ் எப்படி இருப்பார் ? அவர் வாலிபரா ? அல்லது வயோதிகரா ? தாடி வைத்திருப்பாரா ? தலை வழுக்கையா ? குட்டையா அல்லது அவர் நெட்டையா ?

(இவர்களைக் காணாது சாக்ரடிஸ் தோட்டத்தின் மறைவிலிருந்து வெளியே வருகிறார்)

முதல் காவலன்: (சாக்ரடிஸைப் பார்த்து) இதோ இந்தக் கிழவரைக் கேட்போம் ! ஐயா ! உமக்கு சாக்ரடிஸைத் தெரியுமா ? எங்கே ஒளிந்திருக்கார் ? நாங்கள் அவருடன் பேச வேண்டும் !

சாக்ரடிஸ்: யார் நீங்கள் ? எதற்காக இங்கே வந்தீர் ? ஏன் ஆயுதம் ஏந்தி நிற்கிறீர் ?

இரண்டாம் காவலன்: ஓர் பெரிய பயங்கரவாதியைப் பிடிக்க வந்திருக்கிறோம் ! பெயர் சாக்ரடிஸ் ! போர்த் தளபதியாக அவர் ஏதென்ஸில் போர் புரிந்தவர் என்று கேள்விப் பட்டோம் !

சாக்ரடிஸ்: ஏனப்பா சாக்ரடிஸை நீவீர் தேடுகிறீர் ?

முதல் காவலன்: அவர் ஒரு பெரிய பயங்கரவாதி ! அவர் மீது பல குற்றங்கள் சாட்டப் பட்டுள்ளன. அவரைக் கைது செய்ய வந்திருக்கிறோம் ! உமக்கு சாக்ரடிஸைத் தெரியுமா ? உடனே சொல் ! அடையாளம் சொல்வீரா எமக்கு ? தேடித் தேடி நாங்கள் கால் ஒடிந்து களைத்துப் போனோம் !

சாக்ரடிஸ்: ஏன் அவரைப் பயங்கரவாதியாகப் பழி சுமத்துகிறீர் ? அவரை யாரைப் பயமுறுத்துகிறார் ? உங்களை அனுப்பியது யார் ?

இரண்டாம் காவலன்: அதையெல்லாம் சொல்ல மாட்டோம் ! ஏதென்ஸ் நகரத்தில் வாழும் அப்பாவித் தகப்பனார்களை அவர் பயமுறுத்துகிறார் ! அவரது வாலிபப் புதல்வரை எல்லாம் வசீகரப் படுத்தித் தனது சீடராக இழுத்துக் கொண்டார் ! அவரது இளம் மனதைப் பாழ்படுத்திப் பெற்றோருக்குப் பகைவராய் ஆக்கி விட்டார் ! ஏதென்ஸ் தெய்வங்களை அவர் ஏற்று கொள்ளாமல் தனது இச்சைத் தெய்வத்தை மக்களிடம் புகுத்துகிறார் ! அவர் உலக ஞானியாம் ! எங்கள் ஏதென்ஸ் ஞானிக்கும் மேலான உலக ஞானி இங்கு வசிக்கக் கூடாது !

சாக்ரடிஸ்: அவரால் ஏதென்ஸ் அரசுக்கு என்ன தீங்கு நேர்ந்தது சொல் ! அந்த வயோதிகர் எந்த வாலிபரையும் இழுத்துக் கொண்டு போக வில்லை ! வாலிபரே வயோதிகரிடம் வருகிறார் தமது ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள ! தகப்பனார் தீர்க்காத வினாக்களுக்கு விடை தேட அவரை அண்டுகிறார்.

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 2, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts