விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

இரா.முருகன்


ஜனவரி 29 1908 – பிலவங்க வருஷம் தை 16 புதன்கிழமை,

துர்க்கா பட்டன் சாப்பாட்டுக் கடைத் தரை முழுக்க வாளி வாளியாகக் கிணற்றுத் தண்ணீரை அடித்து வீசி அலம்பி விட்டுக் கொண்டிருந்தான். கடையிலும் மனசிலும் கசடு எல்லாம் அந்த வெள்ளத்தில் அடித்துப் போகட்டும்.

ரெண்டு நாளாகச் சாப்பாட்டுக் கடையைப் பூட்டி வைத்திருந்தது. துர்க்கா பட்டனும் வேதையனோடு போலீஸ் கச்சேரி, கொட்டாரம் ஆஸ்பத்திரி என்று அலைய வேண்டிப் போனது. பாழாய்ப் போன பரசு தான் எல்லாத்துக்கும் காரணகர்த்தன்.

இன்னிக்கு என்ன ஆழ்ச்ச? புதன். இல்லே வ்யாழம். ஏதோ ஒண்ணு. ஏதோ ஒண்ணெல்லாம் இல்லை. புதனாழ்ச்ச தான்.

ரெண்டு நாள் முந்தி, ஞாயிறாழ்ச்ச அன்றைக்கு விடிந்ததும் பதிவு போலே குளியும் பட்சணமும் கழிந்து, வேதையன் அண்ணாவும் பரிபூரணம் மன்னியும் குரிசுப் பள்ளிக்கு தொழுது வர இறங்கினார்கள்.

குழந்தை தீபஜோதி வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிற்றாடையை மடக்கிச் செருகிக் கொண்டு மணலில் கோடு கிழித்து கையில் கோலோடு நின்றாள் அவள். கோட்டுக்கு அந்தப் பக்கம் நாலெட்டு தள்ளி கண்ணை இறுக்கமாக மூடி கறுப்புத் துணி கட்டி அவள் துர்க்கா பட்டனையும் நிறுத்தி வைத்திருந்தாள்.

அம்மாவா. சாடி வா.

தீபஜோதி உத்தரவிட்டாள். துர்க்கா பட்டன் ஓடி வரணும். வந்த வேகத்தில் அவள் மணலில் கிழித்திருந்த கோட்டைத் தாண்டிக் குதித்து ஓடி பலாமரச் சுவட்டில் போய் நிற்கணும்.

சரியாகச் செய்தால் அவனுக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மலையாள அட்சரமாலை உரக்கச் சொல்லி விட்டு மற்ற வேலை பார்க்கப் போக அனுமதி உண்டு. இல்லையோ, தீபஜோதி சொன்னபடிக்கு தோட்ட மண்ணில் மலையாள அட்சரம் ஒவ்வொன்றும் பத்து தடவை எழுதியாக வேண்டும்.

குஞ்ஞே அம்மாவனுக்கு மலையாளமும் மண்ணாங்கட்டையும் எல்லாம் எதுக்கு? சேட்டன் கடையிலே ஆயிரத்தெட்டு ஜோலி தலைக்கு மேலே தூங்கிக் கிடக்கு. கோட்டை சாடி அந்தாண்டை போகணுமல்லே. தோ, சாடறேன். சரியா வரல்லேன்னா நாளைக்கோ மற்றைநாளோ திரிச்சும் வந்து சாடறேன் சரியா? மரிச்சாலும் வார்த்தை மாறமாட்டான் உன் துர்க்கா அம்மாவன் குஞ்ஞே.

துர்க்கா பட்டன் கெஞ்சிப் பார்த்தாலும் தீபஜோதி மசியவில்லை.

அம்மாவா, நாலு அட்சரமாவது அறியாதே நீ தெய்வத்திண்டே நேர்க்கு போய் நின்னா, அதுவும் உன்னை பகடி பண்ணும். சொர்க்கத்திலேயும் தாண்டிக் குதிக்க வேண்டி வரும் பாத்துக்கோ. கால் பிழச்சால், தெய்வம் சிக்ஷிக்கும். மனசிலாயோ?

துர்க்கா பட்டன் கண்ணில் கருப்புத் துணியோடு ஓடி வந்தபோது கிருஷ்ண பகவான் கையில் இரும்பில் வார்த்த ஏதோ அஸ்திரத்தை வைத்து அவன் முதுகில் குத்தத் தயாராக அந்தப் பக்கம் நின்றிருந்தான்.

பரசுவோட சுகிக்கவா உனக்கு ஜன்மம் கொடுத்தேன் கழுவேறி.

கிருஷ்ணா அப்படி எல்லாம் இல்லே. பரிபூரணம் மன்னி பார்த்துச் சொன்ன பெண்குட்டியை கல்யாணம் கழிச்சு எந்தக் கழிசடை நினைப்பும் இல்லாம இனிமேல் கொண்டு இருக்கேன். இப்போ என்னை விட்டுடேன்.

சாடு அம்மாவா. கோடு வந்தாச்சு.

தீபஜோதி குரல் கொடுத்தாள். குதிடா மண்டச்சாறே. கிருஷ்ணன் தூண்டினான்.

எழும்பிக் குதித்தான்.

கோடு இன்னும் வரலே. உனக்கு பராஜயம். அட்சராப்யாசம் தான் சிக்ஷை.

தீபஜோதி அவன் முதுகில் குச்சியால் அடித்து தரையில் உட்கார்த்தினபோது பரிபூரணம் புழக்கடைக் கதவைத் திறந்து உரக்கக் கூப்பிட்டாள்.

அடீ தீபஜோதி. பள்ளிக்குப் போற நாள்னு போதமே இல்லியா. அப்பன் காத்திருக்கார். வேகம் வா.

தீபஜோதி மாட்டேன் என்றாள்.

சொன்னா கேளு குழந்தே. போய்ட்டு வா. அம்மாவன் நாளைக்கு அப்யசிக்கறேன்.

துர்க்கா பட்டன் நகரப் பார்த்தான். அவன் குடுமியை எம்பிப் பிடித்து இழுத்து திரும்ப அமர்த்தினாள் தீபம். ஏழு வயசே ஆனாலும் குழந்தைக்கு அசாத்திய வலு கையில். அம்மாவைக் கொண்டிருக்கிறாள் அவள் திடகாத்திரத்தில்.

துருக்கன் எங்கேயும் ஓடிட மாட்டான். வாடி கொழந்தே. கொடியிலே அலக்கின கருப்பு வஸ்திரம் கிடக்கு பாரு. அதை எடுத்து மேலே புதச்சுண்டு வா. மேல் துணி இல்லாமே வெளியிலே இறங்கக் கூடாதுன்னு சீலம் இனிமே வச்சுக்கணும். ஒழிஞ்சு மாறிடக் கூடாது. வல்ய ஸ்திரீயாச்சே நீ இப்போ. இல்லையோடி?

பரிபூரணம் பேசிக் கொண்டே அவரைப் பந்தலில் படபடவென்று காய் பறித்து மடியில் நிறைத்து பச்சை மணக்க உள்ளே எடுத்துப் போனாள். அவளிடம் அது ஒரு குணம். முழிப்புத் தட்டி எழுந்து உட்கார்ந்தது முதல் ராத்திரி கிடப்பு முறியில் உறங்கப் போகிறது வரை ஒரு நிமிஷம் கூட வீணாக்க மாட்டாள்.

தீபஜோதி துர்க்கா பட்டனைப் பார்த்து விளையாட்டாக கண்ணை உருட்டி விழித்துக் கொண்டு வீட்டுக்குள் போனபோது வாசலில் இருந்து வேதையன் ஒச்சை கேட்டது.

எடோ துர்க்கா. இங்கோட்டு வா.

வந்துட்டேன் அண்ணா.

பட்டன் வீட்டைப் பிரதட்சணமாகச் சுற்றி தோட்டத்தின் வழியே கீரைப் பாத்தியை ஒரே எட்டில் தாண்டிக் குதித்து முன்வசத்துக்கு ஓடினதை தீபஜோதி பார்த்திருந்தால் அவனுக்கு கடின சிட்சை விதிக்காமல் அதை லகுவாக்கியிருப்பாள் .

வீட்டு வாசலில் துணி சஞ்சியும் சீலைக் குடையுமாக ஒரு கருத்த செக்கன் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தான். அவன் தலைமேல் ஒரு பூவன் பழக்குலை.

அம்பலப் புழையில் இருந்து வந்திருக்கான் துர்க்கா. விசுவநாத அய்யர் அனுப்பி வச்சிருக்காராம்.

எந்த விசுவநாத அய்யர்? துர்க்கா பட்டனுக்கு உடனடியாக நினைவு வரவில்லை.

அட மண்டா. நாம் நாலஞ்சு கொல்லம் முந்தி கர்க்கடகத்து மழையோட பிரயாணம் போனோமே. ஓர்மை இருக்கா. அப்போ.

அதே. வீட்டுப் பத்திரத்தை அவசரமாகக் கைமாற்றி எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக வேதையன் சொன்னானே. அந்த ஊர்ச் சாப்பாட்டுக் கடை அய்யன் இல்லையோ அந்த மனுஷர்.

அதென்னமோ, வேதத்தில் ஏறினாலும் இருக்கப்பட்ட வேதத்தில் ஊறி அம்பலம் தொழுது இறங்கி ஜீவித்தாலும் தமிழ் பிராமணன்மார் சாப்பாட்டுக்கடை தான் லோகமெங்கும் நடத்தணும் என்று எங்கோ எழுதி வச்சிருக்கு. துர்க்கா பட்டனுக்கு அதுதான் மனசில் பட்டது.

ஊர் வர்த்தமானம் எல்லாம் பறஞ்சு ஏதேதோ எனக்கு தேவப் பிரசாதம் அது இதுன்னு அய்யர் அனுப்பியிருக்கார். நான் பள்ளிக்குப் போய் வந்து சாவகாசமா எல்லாம் நோக்கிக்கறேன். நீ செக்கனை அழைச்சுப் போ.

எங்கே அண்ணா அழைச்சுப் போக?

அடே, நம்ம சாப்பாட்டுக் கடைக்குத் தாண்டா. விசப்பு அடங்கட்டும். பாவம். கடையிலேயே இன்னிக்கு ராத்திரி தங்கிக்கட்டும்.

அதுதான் வினையாகி விட்டது.

வேதையன் மன்னி, குழந்தை சகிதம் வெள்ளை உடுப்பு தரித்து கழுத்தில் குரிசு மாலையோடு வேதக் கோவிலுக்கு நடந்த பிற்பாடு வீட்டைப் பூட்டித் தாக்கோலை மடியில் முடிந்து கொண்டு அம்பலப்புழை செக்கனோடு துர்க்கா பட்டன் கடைத் தெருவுக்கு நடந்தான். அது ஞாயிற்றுக்கிழமை பகலுக்கு கொஞ்சம் முந்திய நேரம்.

கடையில் ஆள் ஒழிந்த நேரமும் அதுதான். வழக்கம் போல் பரசு தான் இருந்தான். மோக வசப்பட்ட தோதில் அவன் துர்க்கா பட்டனை நோக்கி, கூட வந்த செக்கனையும் அப்படியே பார்த்த பார்வை பையனில் நிலைத்து விட்டது.

டேய் பரசு, இந்த அம்பி அம்பலப்புழையிலேருந்து அண்ணாவைப் பார்க்க வந்திருக்கான். விசப்பு தீர என்ன இருக்கு கழிக்க?

காலையில் வார்த்து வைத்து காய்ந்து போன இட்டலியும் வெண்பொங்கலுமாக பரசு இலை நிறையப் பரிமாறும்போது அவன் பார்வை பையனை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவில்லை என்பதை துர்க்கா கவனிக்கத் தவறவில்லை. என்னமோ ஒரு இனம் தெரியாத பொறாமை அவனுக்கு. அடங்கு சவமே என்று மனதில் சொல்லிக் கொண்டாலும் அது மனசில் ஓரமாக கண்ணை உருட்டி விழித்துக் கொண்டிருந்தது.

அம்பலப்புழையில் தற்காலம் என்ன விசேஷம் எண்டெ கொச்சு அனியா?

துர்க்கா கேட்க வந்த பையன் துணி சஞ்சியை தோளில் இருந்து இறக்கிப் பக்கத்தில் வைத்தபடி தீவிரமாக யோசித்தான்.

ஊர் முழுக்க வௌவால் வந்து நிறஞ்சுது தெரியுமோ.

பையன் கண்ணை அகல விரித்துக் கொண்டு சொன்னான்.

வரட்டுமே. மழைக்கு வந்ததா இருக்கும். அதுலே என்ன விசேஷம்?

மழைதான். கொட்டு கொட்டுன்னு கால வர்ஷம் நாளும் ராத்திரியும் விடாமப் பொழியறது. வைகிட்டு நாலு மணி போல. திடீர்னு ஊர் முழுக்க அப்பின இருட்டு.

பரசு கூடக் கரண்டியைக் கையில் பிடித்துக் கொண்டு சுவாரசியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

வெடிவழிபாட்டுக்கார முத்தச்சன் உண்டல்லே அவிடெத்து அம்பலத்துலே.

துர்க்காபட்டனுக்கு நினைவு வந்தது. அவனும் வேதையனும் நாலைந்து கொல்லம் முந்தி அம்பலப்புழை போன மழை காலத்தில் பார்த்த வயசன். நமுத்துப் போன வெடிமருந்துப் பொதியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு இவர்களோடு காளை வண்டியில் வந்தவன்.

காலில் ஒரு விரல் ரெண்டு விரல் அங்கஹீனப் பட்டுப் போன விருத்தன் இல்லியோ?

அதே மனுஷ்யன் தான். குறூப்பு முத்தச்சன். அவன் மரிச்சது வைகும்நேரம் நாலு மணிக்கு. ஏழெட்டு நாளா மழையில் திரிஞ்சும் மறிஞ்சும் புரண்டு வாதனையோட கிடந்தான் என் முத்தச்சன்.

சொந்த முத்தச்சனா உனக்கு?

இல்லாட்டாலும் என்ன? எங்க ஓட்டல்கார பட்டருக்கு வேண்டப்பட்ட நல்ல ஆத்மா. முத்தச்சனை சிஷ்ருஷை பண்ண என்னைத்தான் எல்பிச்சிருந்தார் எங்க ஏமான்.

அனியன் ஆர்ய வைத்யம், யுனானி இப்படி ஏதும் கிரமமாப் படிச்சதாலோ அது?

துர்க்கா கேட்க, பையன் இல்லையென்று தலையாட்டினான்.

மிஷினரி ஆஸ்பத்திரியிலே டிரஸ்ஸருக்குக் கூடமாட ஒத்தாசை செஞ்சு ஏதோ கொஞ்சம் வைத்யம் தெரியும். அத்ரயே உள்ளூ. ஆனாலும் குறூப்பு முத்தச்சன் பாவம் ஆத்மா.

போதம் கெட்டு பொலம்பியபடியே மரிச்சான். நக்னமா ஒரு வயசன் அவன் மேலே விழறதுக்கு வரான்னு அலறல் வேறெ அப்போ அப்போ.

மூத்ர வாடையோட வயசன் கொடிமரப் பக்கம் பறக்கறான் பாரு.

வெடிக்காரன் போல அபிநயித்துச் சிரித்து உடனே வாயை இறுக்க மூடிக் கொண்டான் அம்பலப்புழைப் பையன்.

ஊர் முழுக்க எங்கே இருந்தோ வந்த வௌவால் கூட்டம் நெறஞ்சு இடம் முழுக்க அழுக்குத் தோல் கந்தம். மூச்சு முட்ட எல்லோரும் அலைபாய்ந்து கிடந்த நேரத்திலே யார் கிட்டேயும் சொல்லாமல் முத்தச்சன் யாத்ர ஆயிட்டான்.

அவன் சாப்பிட்ட்டபடியே பேசிக் கொண்டிருக்கும்போதே குரிசுப் பள்ளியில் இருந்து இறங்கி நேரே கடைக்கு வந்திருந்தான் வேதையன்.

எடோ அம்பலப்புழை செக்கா, விருத்தி கெட்ட வர்த்தமானம் எல்லாம் எதுக்கு? விசுவநாத அய்யர் என்ன சொல்லி விட்டார்? அதைச் சொல்லு முதல்லே.

வௌவால் பற்றிய வர்த்தமானம் அவனுக்கு ரசிக்கவில்லை என்று துர்க்கா பட்டனுக்குப் புரிந்தது.

விசுவநாத அய்யர் கொடுத்தனுப்பிய லிகிதத்தை செக்கன் இடது கையால் எடுக்க, துர்க்கா பட்டன் அதை அவசரமாக வாங்கி வேதையனிடம் மரியாதையோடு கொடுத்தான். லிகிதத்தைப் பிரித்து துர்க்கா பட்டனும் கேட்க உரக்கப் படித்தான் வேதையன்.

நம், அதாவது உங்கள் பாட்டத்தில் வாழைச் சாகுபடி செய்து வந்த குலை நமக்கு வேண்டப்பட்ட செக்கன் வசம் அனுப்பியிருக்கிறேன். முதல் குலையை கிருஷ்ணன் அம்பலத்தில் சமர்ப்பித்து விட்டேன். நெல் சாகுபடி நல்ல விதம் நடத்தி முடித்து நாலு கொல்லமும் தவறாது ரெண்டில் ஒண்ணரைப் பாகம் விளையை கோவிலுக்குக் கொடுத்து விட்டு, மீதியை விற்று எனக்கு எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்லாவிட்டாலும், அதில் கால் பங்கு எடுத்து உங்களுக்காக மலியக்கல் செறியதோமையிடம் வட்டிக்கு விட்டுச் சேமித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தேவைப்படும் போது ஒரு வார்த்தை அனுப்பினால் அந்தப் பணத்தை அனுப்பித் தர ஏற்பாடு செய்கிறேன்.

விசுவநாத அய்யர் போல நல்ல மனுஷ்யர்கள் நிறஞ்சதினாலே தானே அம்பலப்புழையிலே மழை கொட்டு கொட்டுன்னு கொட்டறது துர்க்கா.

துர்க்கா பட்டன் ஆமோதித்தான். மங்கலாபுரத்திலும் மழை எப்போதும் பெய்கிறது உண்டுதான். அங்கே அப்படி ஒண்ணும் நல்லதைக் காணாமல்தான் அவன் கண்ணூர் வந்தது.

வேதையன் கடை மேசைப் பக்கம் உட்கார்ந்து உடனடியாகப் பதில் லிகிதம் எழுதிச் செக்கனிடம் கொடுத்தான்.

துர்க்கா, இவனுக்கு கண்ணூரில் காண வேண்டிய ஸ்தலம் எல்லாம் காணிச்சுக் கொடு. முடிஞ்சா பரசீனிக்கடவு க்ஷேத்ரத்துக்குப் ஒரு நடை போய்ட்டு வந்துக்கோ.

பட்டன் தலையாட்டினான்.

செக்கன் ராத்திரி கடையிலேயே தங்கி இருந்துட்டு உதயத்துலே அம்பலப்புழை திரிச்சுப் போகட்டும். சரியா?

வேதையன் சொன்னபடியே பதிலை எதிர்பாராமல் குடையை விரித்துப் பிடித்தபடி இறங்கிப் போனான். பரசு முகத்தில் அலாதியான ஆனந்தத்தைப் பார்க்க துர்க்கா பட்டன் தவறவில்லை.

(தொடரும்)

eramurukan@gmail.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts