விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஏழு

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

இரா.முருகன்


ஜனவரி 9 1903 – சுபகிருது வருஷம் , மார்கழி 25 வெள்ளிக்கிழமை

நீலகண்டய்யன் கையில் மடக்கிப் பிடித்த கருப்புக் குடையோடு ஹைகோர்ட்டு இருக்கப்பட்ட வீதியில் நுழைந்தபோது சாரட்டுகளில் ஜட்ஜ் மற்றும் வக்கீல் துரைமார்கள் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நாமம் போட்ட இரண்டு மயிலாப்பூர் அய்யங்கார்கள் அல்பாகா கோட்டும் தலைப்பாகையுமாக அவசரமாக ஜட்கா வண்டி ஏறிப் போனார்கள். என்னமோ விக்டோரியா மகாராணியே நேரில் வந்து சன்னத்து கொடுத்து சாம்ராஜ்ஜியத்திலேயே முக்கியமான தாவா தீர்த்து வைக்க அனுப்பியது போல ஸ்பஷ்டமான திருப்தி அவர்கள் முகத்தில் தெரிந்தது.

கோர்ட்டு கச்சேரி உள்ளே தூசியும் துப்பட்டையுமாக எதையோ இடித்துக் கட்டிக் கொண்டிருந்ததும் நீலகண்டய்யன் கண்ணில் படத் தவறவில்லை. புதுசாக எழுப்பின கட்டிடத்தில் இடிப்பானேன், திரும்பக் கட்டுவானேன் என்று அவனுக்குப் புரியவில்லை. நாலு பேர் நாலு காசு பார்க்க சர்க்கார் வகையில் செய்து கொடுத்த ஏற்பாடாக இருக்கும்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் மட்டும் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் ஒரு செங்கலைக் கூட நகர்த்தி புதுசாகச் சாந்து குழைத்துப் பூசுகிற வழக்கம் இல்லை. தெய்வங்கள் இருக்கப்பட்ட இடம் ஆச்சே. இடித்துக் கட்டினால் கும்பாபிஷேகம் தான் பண்ண வேணும் அந்த வெள்ளை மூஞ்சிகள் பரிபாலனம் செய்யும் புண்ணிய ஸ்தலத்தில்.

நீலகண்டய்யன் வலது கைப்பக்கம் திரும்பினான். நீள அப்படியே நடந்தால் மங்களூர் ஓடு வேய்ந்து ஒரு பெரிய காரைக் கட்டிடம் இருக்கும். அதுக்கு உள்ளே விதவிதமான உத்தியோகப் பெயர்களோடு அழுக்கு வேட்டியும், சுருங்கின குப்பாயமும், மூக்குப் பொடி மணமுமாக ஏகப்பட்ட பேர் காகிதக் கட்டுக்களை கக்கத்தில் இடுக்கிக் கொண்டும் கையில் அட்டை வைத்துக் கட்டிச் சுமந்து கொண்டும் சதா திரிந்தபடி இருப்பார்கள்.

இந்த பரிவார தேவதைகளை எல்லாம் கடந்து இன்னும் உள்ளே போனால் கொஞ்சம் பெரிய காவல் தேவதைகள். சிரஸ்தார் புருஷோத்தம நாயுடு போல. இதுகளுக்கு எல்லாம் புறாக் கூண்டு போல உத்தியோக இடம் சித்தம் செய்து வாசலுக்குக் கதவும் உள்ளே கம்பி அழி வைத்த ஜன்னலும் மர மேஜையும் நாற்காலியும் போட்டு பிரதிஷ்டை பண்ணுகிறது வாடிக்கை.

நாயுடு கொஞ்சம் கவுரதையான உத்தியோகம் பார்க்கிறபடியால் அவனைப் பார்க்க வருகிற முக்கியஸ்தர்கள் உட்கார்ந்து வார்த்தை சொல்ல அவன் மேஜைக்கு முன்னால் ரெண்டு குரிச்சி போட்டிருக்கும். வாசலில் டவாலி தரித்த ஒரு சேவகன் யார் என்ன என்று தீர விசாரித்து உள்ளே அனுப்பி வைக்கிறதும் வழக்கம்தான்.

நீலகண்டய்யன் போனபோது மேற்படி சேவகன் ஓரமாக நின்று பங்கா இழுத்துக் காற்றை உள்ளே அனுப்பிக் கொண்டிருக்க, நாயுடு மேஜை மேல் சாய்ந்த படிக்கே அரைத் தூக்கத்தில் இருந்தான்.

ஐயா கேசு விஷயமா ஏதோ ரோசனை பண்ணிட்டிருக்காரு. எந்திருக்க நேரம் பிடிக்குமே.

டவாலி மரியாதையாகச் சொன்னதைக் கேட்டது போல் காட்டிக் கொள்ளாமல் நீலகண்டய்யன் நாயுடு முன்னால் பிரத்யட்சமானான்.

டரடரவென்று நாற்காலியை இழுத்துப் போட்டு அவன் உட்காரப் போனபோது கோட்டு வாய் எச்சிலைத் துடைத்துக் கொண்டு நாயுடு முழித்துக் கொண்டான்.

ஏண்டா, இன்னிக்கு வேலை இல்லையா? ஆனந்த சயனத்திலே இருக்கே?

நாயுடு மேலே தேகம் படாமல் கையில் வைத்திருந்த குடையால் அவன் தோளில் விளையாட்டாக அடித்தான் நீலகண்டன்.

ஏண்டா அய்யரே, வந்ததும் வராதுமா ஆயுதத்தை ஏவறே?

நாயுடு சிரித்தபடி மேஜை மேல் வைத்திருந்த காகிதக் கட்டை ஓரமாக நகர்த்தி வைத்தான். நீலகண்டனை ரொம்ப நாள் கழித்துப் பார்த்த சந்தோஷம் அவன் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

ஆகாரம், பானம் ஏதாவது கொண்டு வரச் சொல்லட்டுமா அய்யரே?

நாயுடு விசாரித்தான்.

ஆத்துக்கு வெளியிலே அதெல்லாம் நான் சாப்பிட மாட்டேண்டா பழி. உனக்குத் தெரியாதா என்ன?

போடா புடலங்கா, இங்கே கச்சேரி உள்ளேயே கீத்துக் கொட்டகை போட்டிருக்கான் மதுரைக்கார அய்யன் ஒருத்தன். ஆளு அட்டைக் கறுப்பு. என்னைய விடக் கருப்பன்னா பாத்துக்கயேன். ஆனா, வக்காளி என்ன காரசாரமா சுடச்சுட வெங்காய வடை போடறான். வாங்கிட்டு வரச் சொல்றேன். தின்னு பாத்துட்டு சொல்லு. ஆத்துக்காரி கைமணம் கூட அப்புறம் சாதாரணமாப் போயிடும்.

வேணாம் வேணாம் என்று நீலகண்டய்யன் மறுத்தாலும் உள்ளூர அவனுக்கும் இப்படி வரவழைத்துச் சாப்பிடுவதில் ஆசைதான். வீட்டிலே வெங்காய வடை எல்லாம் பண்ண மாட்டாள் கற்பகம். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாளில் தொடக்கூடாத சமாச்சாரம் அந்த சனியன் பிடித்த ஆனால் வாய்க்கு வெகு ருஜியான வெங்காயம். அதுவும் ஞாயிற்றுக்கிழமையன்று அமாவாசை வந்து வாய்த்தால் கிடையாது.

நாயுடு மேஜை இழுப்பறையைத் திறந்து துட்டு எடுத்து டவாலி கையில் போட்டான். சுக்குக் காப்பித் தண்ணி வேணுமா ஐயா என்று விசாரித்தான் அந்த சேவகன்.

எலுமிச்சம்பழ ஷர்பத்து போட்டிருக்கானா மதுரைக்காரன்னு கேளு. இருந்தா.

சரி எசமான்.

இவன் ஒருத்தன். ராகுகாலத்திலே பொறந்த பய. எதுலேடா வாங்கிண்டு வருவே? நீ பாட்டுக்கு கருத்த பார்ப்பான் கடை லோட்டாவிலே வாங்கிட்டு வந்தா இந்த செவத்த பார்ப்பான் குடிக்க மாட்டேன்னு களுத்தறுப்பான். கொஞ்சம் இரு.

நீலகண்டய்யன் மறுக்க ஆரம்பிப்பதற்குள் கையைக் காட்டித் தடுத்தபடி மேஜைக்கு இடது பக்கம் நடந்தான் நாயுடு. மர பீரோ மேல் வைத்திருந்த ஒரு குவளையை எடுத்து சேவகனிடம் கொடுத்தான் அவன்.

கழுவி எடுத்துட்டுப் போ. உள்ளே விரல் படாமப் பிடிச்சு எடுத்து வரணும்.

சேவகனுக்கு அடுத்த உத்தரவையும் பிறப்பித்து விட்டு போதுமா என்று கேட்கிறது போல் பார்த்தான் நாயுடு.

இன்னிக்கு வீட்டுக்குப் போய் குளிச்சுட்டுத்தான் மத்ததெல்லாம்.

நீலகண்டன் தீர்மானித்துக் கொண்டான். சாயந்திரம் சந்தியாவந்தனம் பண்ண வெங்காய வடையும் எலுமிச்சங்காய் சாறும் ருசித்த நாக்கு புரளுமா என்ன? சந்தியையும் மாத்தியானத்தையும் நித்யப்படிக்கான நியம நிஷ்டையாகச் செய்து வைத்த ரிஷிகளும் மற்றவர்களும் மணக்க மணக்க வெங்காயம் சாப்பிட்டு வழக்கப்படுத்தியிருந்தால் எல்லாம் புரளும்.

வடை வர இன்னொரு யுகம் காத்திருக்க வேணும் போல் இருந்தது நீலகண்டனுக்கு. அதுக்குள் வந்த விஷயம் என்ன என்று நாயுடுவிடம் சாங்கோபாங்கமாகச் சொல்ல ஆரம்பிக்கலாம் என்று வாயெடுத்தபோது வாசலில் சத்தம்.

யாரோ ரெண்டு பேர் தடதடவென்று நாயுடு இருப்பிடத்துக்குள் நுழைந்தார்கள்.

துரை இங்கே வைக்கச் சொன்னார் எசமான்.

அவர்கள் பெரிய கள்ளியம்பெட்டி ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கி வந்திருந்தார்கள்.

எந்த துரை?

நாயுடு அசிரத்தையாகக் கேட்டபோது நீலகண்டனுக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. எல்லா துரைகளுக்கும் கேள்வி கேட்காமல் சலாம் போட்டுத்தான் அவனுடைய நாவிகேஷன் கிளார்க் உத்தியோகம் சமீபத்தில் ஹெட் கிளார்க்காக உயர்ந்திருக்கிறது. நாயுடுவுக்கு புரமோஷன் பற்றி எல்லாம் அக்கறை இல்லையா?

எந்த துரைன்னு கேட்டேன்.

பதில் வராமல் போகவே திரும்ப விசாரித்தான் நாயுடு.

ஜட்ஜி துரை எசமான். டவாலி குப்பையா செட்டி வந்து சொன்னாரு.

சரி சரி, இப்படி ஓரமா வச்சுட்டுப் போங்க.

அவசரமாகச் சொன்னான் நாயுடு. ஜட்ஜ் துரையை விட குப்பையா செட்டிக்கு அங்கே செல்வாக்கு என்று நீலகண்டனுக்குப் பட்டது. சிரஸ்தாருக்கு உத்தியோக உயர்வு என்னவாக இருக்கும்?

அங்கே இங்கே இழுத்து, நீலகண்டன் உட்கார்ந்திருந்த குரிச்சியில் மோதி, நாயுடு மேஜை மேல் வைத்த காகிதக் கட்டைக் கீழே தள்ளிவிட்டு எடுத்து வைத்து ஒரு வழியாக கள்ளியம்பெட்டியை நாயுடுவுக்குப் பின்னால் அமர்த்தினார்கள் வந்தவர்கள்.

அங்கேயிருந்து பின்னால் இருக்கப்பட்ட ஜன்னலைத் திறக்கவோ மூடவோ பெட்டி மேல் ஏறி நின்றால் தான் முடியும்.

ஜட்ஜ் துரைக்காக அது கூட செய்ய மாட்டானா என்ன நாயுடு?

பெட்டியை இறக்கி நகர்த்தி வைக்கிற களேபரத்துக்கு நடுவே நாயுடுவின் சேவகன் கையில் பூவரசு இலைத் தொன்னைகளும் ஜாக்கிரதையாக உயர்த்திப் பிடித்த குவளையுமாக வந்து சேர்ந்தான்.

இவன் கையால் ஆகாரம் கொடுத்து சாப்பிடுவதற்காக இன்னொரு வாளி இரைத்து ஊற்றி சாயந்திரம் குளிக்க வேணும் என்று நீலகண்டன் மனதில் முடிச்சு போட்டுக் கொண்டான்.

சாப்பிடு அய்யரே. ஆறினா சவசவன்னு போயிடும்.

நாயுடு ஒரு வடையை எச்சில் படுத்திக் கடித்தது அன்ன திரேஷமாக இருந்தது நீலகண்டனுக்கு. ஆனாலும் அந்த வாசனை ஆகர்ஷிக்கும் ஒண்ணு. அவனும் முன்னால் வைத்த தொன்னையில் இருந்து விண்டு வாயில் போட்டுக் கொண்டான்.

மதுரைக்கார கறுப்பன் கோர்ட்டு கச்சேரிக்குள் கீத்துக் கொட்டகை போட்டு பொறித்தெடுத்துக் கொடுத்த வெங்காய வடை அமிர்தம் தான். இதைச் சாப்பிட்டால் ரிஷிகள் சந்தியாவந்தனம் செய்யும் முன்னால் அவசியம் வெங்காயம் சேர்த்துக் கொள்ளச் சொல்லி நியமம் உண்டாக்கியிருப்பார்கள்.

வேதகாலத்தில் வெங்காயம் இருந்ததா? என்னத்துக்கு அதெல்லாம் இப்போ? சம்போக நேரத்தில் எலிப்பொறியைப் பற்றி நினைக்கிற மாதிரி,

இதைப் பொட்டலம் கட்டி வாங்கிப் போய் கற்பகத்துக்கு ஊட்டி விட்டால் என்ன என்று தோன்றியது நீலகண்டனுக்கு. வீட்டுக்குள்ளேயே இந்த மாதிரிப்பட்ட சமாசாரத்தை நுழைய விடமாட்டாள் அந்த காவேரிக்கரை பெண்பிள்ளை.

சொல்லு. என்ன சமாச்சாரம்?

நாயுடு சாப்பிட்டபடியே விசாரித்தான்.

ஒண்ணுமில்லேடா. என் தமையன் மகாலிங்கய்யன் இருக்கானே.

ஆமா. நீ உங்க ஆத்துக்கு வெளியே ஆசாரமா வெங்காய வடை தின்றே. அவரு கீரை வடை தின்னாரு.

நாயுடு தன் ஹாஸ்யத்தைத் தானே ரசித்தபடி வாயில் ஆகாரத்தை அடைத்துக் கொண்டு சிரித்தான்.

சே போடா, எப்பவும் எசகு பெசகாத்தான் பேசுவே நீ.

நீலகண்டனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

அண்ணாத்தை கூத்தியா வச்சிருந்தாரில்லே.

அதுக்கு என்ன இப்போ?

ஆடத் தெரிஞ்சவளான்னு தெரியுமா?

ஆமா, ரொம்ப அவசியம்டா அது.

நீலகண்டன் திரும்பச் சிரித்தான். பேச வந்த விஷயத்தை எடுக்கவே விடமாட்டேன் என்கிறான் கடங்காரன்.

பின்னே. ஆட்டமும் பாட்டும் அவசியம் இல்லியா? இன்னிக்கு ராத்திரி திருவாலூர் பெரிய பாப்பா சதுர்க்கச்சேரின்னு சவுகார்பேட்டையிலே தண்டோரா அடிச்சுட்டுப் போனான். போகலாம் வாயேன்.

நாயுடு கண் அடித்தான்.

அய்யோ, ஆத்துக்குப் போய்க் குளிச்சுட்டு கோவிலுக்குப் போகணும். சூனிய மாசம் ஆச்சே. பகவானை நினைக்கறதுக்காகவே இந்த மாசத்திலே சுப காரியம் எதுவும் வச்சுக்கக் கூடாதுன்னு பெரியவா சொல்லியிருக்கா.

நீலகண்டன் கடைசி விள்ளலை வாயில் போட்டு மென்றபடி சொன்னான்.

சதுர்க் கச்சேரி பார்த்துக்கிட்டே பகவானை நினைச்சுக்கோ. காளிதாசன் பண்ணின மாதிரி.

நாயுடு திரும்ப பூடகமாகச் சிரித்தான்.

காளிதாசன் என்ன பண்ணினான், கம்ப ராமாயணத்துலே என்ன சொல்லியிருக்குன்னு எல்லாம் எனக்குத் தெரியாதுடா. உன் கிட்டே இப்ப நான் பேச வந்தது.

அட வாயேன்’பா, நடந்துக் கிட்டே கிட்டே பேசலாம். வீட்டுக்குப் போறதும் கோவிலுக்குப் போறதும் பொண்டாட்டி முந்தானையிலே பத்திரமா முடிஞ்சிக்கறதும் எப்பவும் தான் இருக்கே. சதுர், சங்கீதம்னு எப்ப அனுபவிக்கறது?

போன வருஷம் மார்கழியில் நாயுடுவோடு கூட சதிர்க் கச்சேரி பார்க்க சிந்தாதிரிப்பேட்டை போனது ஞாபகம் வந்தது அவனுக்கு.

என்ன அய்யரே அநியாயம். கும்மோணம் தனலட்சுமி சதிர்னு கூப்பிட்டானுங்க. லட்சுமியைத்தான் முகரையிலே காணோம்னு பார்த்தா தனத்தையும் காணோம். இம்மாந் தூரம் கும்மோணத்துலே இருந்து வந்தவ அக்கம் பக்கத்துலே கடன் வாங்கியாவது மாட்டிக்கிட்டு வந்திருக்கலாமில்லே.

அன்றைக்கு கச்சேரி முடிந்து வெளியே வந்தபோது அவன் சொன்னது நடுராத்திரியில் நினைவு வரப் பலமாகச் சிரித்தபோது விஷயம் புரியாமல் கற்பகம் அவனை இறுக்கிக் கொண்டு நெஞ்சில் முத்தினாள்.

நாயுடு காலி தொன்னையை நகர்த்தினான்.

திருவாலூர் பெரிய பாப்பா ஆடிப் பார்த்திருக்கியா? கால் ஆடுதோ என்னமோ மேலே ரெண்டும் என்னமா குதிக்கும்.

அது பாட்டுக்குக் குதிக்கட்டுமடா. மகாலிங்கய்யர் பத்தி கொஞ்சம் பேசலாமா? என் தமையனார்.

நாயுடு பதில் சொல்லாமல் எச்சில் கையோடு எழுந்து, பின்னால் வைத்த கள்ளியம்பெட்டியைத் திறந்தான்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts