விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

இரா.முருகன்


ஜனவரி 9 1903 – சுபகிருது வருஷம், மார்கழி 25 வெள்ளிக்கிழமை

நீலகண்டய்யன் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே வந்தபோது சமுத்திரக் காற்று இதமாக வீச ஆரம்பித்திருந்தது. அதென்னமோ தெரியலை, இன்னிக்குக் காலையிலே கண் முழித்து பாயைச் சுருட்டி வைத்தது முதல் நாள் கிரமமாக முன்னால் போய்க் கொண்டிருக்கிறது.

அது முந்திய ராத்திரியே ஆரம்பமாகி விட்டது. அவன் பெற்ற ஏக சந்தானமான பிள்ளைக் குழந்தை ரொம்ப சுருக்காகவே ராத்திரி நித்திரை போய்ப் பிள்ளையார் சுழி போட்ட சுபவேளை அது.

அகத்துக்காரி கற்பகம் தூரம் குளித்து நாலு நாள் ஆன உடம்பு மினுமினுப்பும் தேக வாசனையும், வாயில் தாம்பூலமும் தலை கொள்ளாமல் மல்லிகைப்பூவுமாக நீலகண்டன் படுத்து உருண்டு கொண்டிருந்த மச்சு உள்ளுக்குள் எட்டிப் பார்த்தாள் அப்போது.

சுடச்சுடப் பசும்பால் குடித்து விட்டு தூங்கினால் என்னவாம்? சர்க்கார் உத்தியோகம் உடம்பை உருக்கி இப்படி நோஞ்சானாக்கிடுத்தே. பெலம் வேணாமா எல்லாத்துக்கும்?

கரிசனமாக அவள் விசாரித்து விட்டு பாலோடு சூடாக வந்தபோது சுபஹோரை கனிந்து வந்தது. மார்கழி மாசத்து ராத்திரி என்பதால் குளிரக் குளிர கற்பகத்தை ஆலிங்கனம் செய்து பக்கத்தில் கிடத்தி ராத்திரி கிட்டத்தட்ட முழு நேரமும் போகம் முந்தாமல் கிரீடை செய்ய முடிந்ததில் இன்னும் உடம்பும் மனசும் கெக்கலி கட்டிப் பறக்கிறது.

ஆனாலும் நீர் ராட்சசர்ங்காணும். இப்படியா நாலு தடவை ஒரே ராத்திரியிலே.

தஞ்சாவூர்க்காரியான கற்பகம் முகத்திலும் உடம்பு முழுக்கவும் திருப்தி எழுதியிருக்க அந்த இருட்டில் நீலகண்டய்யனோடு காலைப் பிணைத்து இறுக்கமாக ஒட்டிக் கொண்டு படுத்தபடி காதுமடலைக் கடித்தது இன்னும் சுகமாக வலிக்கிறது அவனுக்கு.

விடிய கொஞ்ச நேரம் முந்தி அவன் முதுகை இதமாக நீவி, குடுமியைப் பிரித்து இழை நீள உருவி ரெண்டு காது ஓரமும் மறைத்தாற்போல் பரத்தியவள், அவன் வாயில் முத்தம் ஈந்தபடி எழுப்பினாள்.

நீலகண்டய்யன் இன்னொரு தடவை ரமிக்கத் தயாரானவனாக அவள் பக்கம் திரும்பி கழுத்தில் பல் பதித்தபோது அவள் அவசரமாக விலக்கினாள்.

விடிகாலை அஞ்சு மணி. வேலைக்காரி வந்துடுவா. குழந்தைகள் பாடசாலை போயாகணும். நீங்க உத்யோக ஸ்தலம் போகணும். நினைப்பு இருக்கோ இல்லியோ.

எல்லாம் இருக்கு, வாடி என்றான் நீலகண்டன்.

இன்னிக்கு வெள்ளிக்கிழமையாக்கும். வாசல் தெளிச்சு செம்மண் கோலம் போடணும். சீக்கிரம் குளிச்சாகணும். மார்கழி. சூனிய மாசத்திலே நீங்க வேறே ராக்கூத்து அடிச்சு.

அவள் வெட்கத்தோடு நிறுத்தி எழுந்து நின்றாள்.

கூத்துக் கொட்டகையிலே படுதா எறக்க முந்தி மங்களம் பாட விட்டுப் போச்சு. வாடி என் செல்லமே.

நீலகண்டன் விடாமல் சீண்டினான்.

பார்த்துண்டே இருங்கோ. நேத்திக்கு அடங்காம ஆடினது சூல் வச்சு ஒண்ணுக்கு நாலா ஒரே பிரசவத்திலே உண்டாகப் போறது. ராஜதானியிலேயே முதல் தடவையா நாலு கர்ப்பம் ஒருசேரத் தாங்கின ஸ்திரின்னு என்னை பார்க்க ஊரோட திரண்டு வரப் போறா. போறும்’ன்னா. சொன்னாக் கேளுங்கோ.

அவள் சிரித்தபடி நீலகண்டய்யனின் இடுப்புக்குக் கீழ் அழுத்திப் பிடித்தாள்.

ராட்சசி, விடுடி, உசிரு போறது. நாலு என்ன கணக்கு? இன்னும் அஞ்சு நிமிஷம் சாஞ்சு படுத்துண்டா இன்னொண்ணு கழுக்கு முழுக்குன்னு உன்னை மாதிரிப் பெத்துக்கலாம். தயவு பண்ணி இப்படி வாடி என் ராஜாத்தியோன்னோ.

நீலகண்டன் யாசித்தான்.

அதுக்கு வேறே யாராவது இரும்புலே இடுப்பும் மத்ததுமா கிடைக்கறாளா பாருங்கோ. உள்ளே எல்லாம் அனல் மாதிரி காந்தறது. ஆனாலும் மகா முரடு.

அவள் நீலகண்டன் காதில் சொல்லி விட்டு தலையை முடிந்து கொண்டு நடந்தாள்.

இருடி, போகலாம். ஆபீஸ்லே போய் தஸ்தாவேஜ்லே கையெழுத்தா போடப்போறே?

நீங்க தான் உடம்பு முழுக்க ராத்திரி போட்டு வச்சிருக்கேளே. அதெல்லாம் தொடச்சு அலம்பி விட்டுக் குளிச்சாகணும் முதல்லே.

காப்பி சேர்த்துட்டுக் குளிக்கப் போயேண்டி கண்ணுக்குட்டி.

இன்னிக்கு என்ன கொஞ்சல் ஜாஸ்தியா இருக்கு? ஆபீஸ் எல்லாம் போறாப்பல உத்தேசமா இல்லே மத்தியானமும் இதே லஜ்ஜை கெட்ட கூத்துதானா?

கற்பகம் ஜாக்கிரதையாக ஒரு அடி தள்ளி நின்று அவன் குடுமியைப் பிடித்து இழுத்து கேட்டாள்.

எதுடி லஜ்ஜை கெட்ட கூத்து. நீயும் தானே சேர்ந்து ஆடினே?

மோகம் தலைக்கேறி அவளுக்காக கை நீட்டிய நீலகண்டய்யனை சுய ஸ்திதிக்குக் கொண்டு வந்தது வாசலோடு போன மார்கழி பஜனை கோஷ்டிதான். திருப்பாவை முப்பதையும் அனுசந்தானம் பண்ணிக் கொண்டு நாலு வீதி சுற்றி தெருக் கோடி கோவிலில் முடிக்கிற அந்தக் கோஷ்டியில் வேலைக்குப் போன புதுசில் நீலகண்டய்யனும் அவன் தமையன் மகாலிங்கய்யனும் தாளம் தட்டிக் கொண்டு போனது உண்டு. அந்த ரம்மியமான நேரத்தில் வீதி முழுக்க கோலம் போட வருகிற சின்ன வயசுப் பெண்டுகளைப் பார்க்கத் தோதான ஏற்பாடு அது. தஞ்சாவூரிலே கற்பகத்தைப் பார்க்க அப்படி ஒரு கோஷ்டி அலைஞ்சிருக்குமோ என்னமோ.

அதே நினைப்போடு கூட தந்த சுத்தி செய்து காலலம்பி வந்து அவள் சேர்த்துக் கொடுத்த கள்ளிச்சொட்டுப் பால், முதல் டீக்காக்ஷன் சர்க்கரை தூக்கலாகக் கலந்து கொடுத்த காப்பியை மச்சு அறையில் உட்கார்ந்தபடிக்கே சுடச்சுட ரசித்துக் குடித்தான்.

எச்சப் பண்ணாம அண்ணாந்து லோட்டாவை வைச்சுண்டு குடிங்கோ.

ரொம்பப் படுத்தினா திரும்ப எச்சல் பண்ண வேண்டி வரும்.

கற்பகம் அவசரமாகக் குளிக்கப் போனபோது பச்சைப் பெட்டியோடு நாவிதர் வந்து சேர்ந்தார். கை நடுங்கும் வயசில் கிழவர். அவரிடம் தலையையும் முகத்தையும் சர்வாங்கத்தையும் மழிக்கக் கொடுத்துத்தான் நீலகண்டய்யனின் தகப்பன் சுவர்க்கஸ்ரீ வைத்தியநாதய்யன் தன் பெண்டாட்டி கோமதியம்மாளை ஆகர்ஷித்துப் ரெண்டு குழந்தை பெற்று வளர்த்துவிட்டது. சர்வாங்கம் வேண்டாம் என்று வைத்ததாலோ என்னமோ நீலகண்டனுக்கு ஒரு சந்ததி ஏற்பட கல்யாணத்துக்கு அப்புறம் ஏழு வருஷம் காத்திருக்க வேண்டிப் போனது.

சாமி, அப்படியே திண்ணையிலே சாஞ்சு உட்காருங்கோ. நிமிஷத்துலே முடிச்சுடறேன்.

போன வருஷம் வரைக்கும் கந்தசாமி நாவிதனுக்குத் துணையாக அவன் பிள்ளை ஆண்டியப்பனும் வந்து கொண்டிருந்தான். அவன் மழித்து விட்டுப் போனால் கன்னம் ஒரு ரோமம் கூட உறுத்தாது மழுமழுவென்று ராத்திரி வரைக்கும் இருக்கும்.

எங்கே மூஞ்சியை வச்சுக்கறதுன்னு விவஸ்தையே இல்லையா? பிருஷ்டத்துலே போய்.

ரெண்டும் ஒரே மாதிரி தாண்டி.

கற்பகம் ஆரம்பத்தில் முகத்தைச் சுளித்தாலும் அவளுக்கும் ரசிக்க ஆரம்பித்தது. அப்புறம் சூல் பிடிக்க அதிக நாள் ஆகவில்லை.

ஆண்டியப்பன் வேதத்தில் ஏறி சோசப்பு ஆன பிற்பாடு கந்தசாமி தனித்துப் போய் இருக்கப்பட்ட வாடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். அங்கங்கே அறுத்து ரத்தம் வர வைத்தாலும் மொத்தத்தில் முகம் வெளியே காட்டுகிற தோதில் சிரைக்கிறது கந்தசாமிக்குக் கைவந்த வித்தை.

உள்ளே குளித்து தலைக்கு வேடு கட்டிக் கொண்டு சமையல் கட்டுக்குப் போன கற்பகத்தைப் பார்த்தபடிக்கு கத்தி புதுசா என்று கந்தசாமியை விசாரித்தான் நீலகண்டய்யன்.

மளுமளுன்னு சரைச்சு விட நானாச்சு சாமி. குந்துங்க.

கற்பகம் உள்ளே இருந்தபடிக்கே ஐந்து விரலையும் விரித்துக் காட்டிக் கொண்டு வாய்க்குள் சிரித்தபடி போனபோது, உள்ளபடிக்கே இந்த சம்சார வாழ்க்கை மாதிரி உவப்பான சங்கதி வேறே ஏதும் இருக்க முடியாது என்று தோன்றியது நீலகண்டனுக்கு.

அப்போது தான் சட்டென்று இன்றைக்கு கோர்ட்டு கச்சேரி போய் தன் ஆப்தன் புருஷோத்தம நாயுடுவைப் பார்த்து வர ரெண்டு நாள் முந்தியே ஏற்பாடு செய்து வைத்திருந்தது ஞாபகத்தில் பட்டது அவனுக்கு.

அது அவனுடைய மாதா பிதா ஆக்ஞைப்படியான ஒண்ணு. சமீபத்தில் ஒரு தினம் நீலகண்டனுடைய சொப்பனத்தில் வந்து அவர்கள் சொல்லிப் போனது.

அன்றைக்கு விடிந்தும் எழுந்திருக்க மனசே இல்லாமல், விடிகாலை கடந்து போன பின்பும் அரையும் காலுமாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒண்ணு.

பிதா வைத்தியநாதய்யனும் அம்மா கோமதியும் வீட்டு வாசல் படியேற மாட்டேன் என்று அடம் பிடிக்கிற கனவு அது.

ஆத்துக்காரி பிரஷ்டைங்கறதாலே நாங்க உள்ளே வரல்லேன்னு நினைச்சுக்காதே.

வைத்தியநாதய்யன் அமெரிக்கையாக வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடி வெற்றிலை மடித்து வாயில் குதப்பியபடி சொல்ல, படி ஏறாமல் ஓரமாகவே நின்றாள் கோமதியம்மாள்.

என்ன குத்தம் நான் பண்ணி இருந்தாலும் மனசுலே வச்சுக்காதீங்கோ. நீங்க இல்லேன்னா நான் யாரை அண்டிப் போய் அம்மா அப்பான்னு பூஜிச்சுண்டு நிப்பேன்? அடுத்த மாசம் அப்பா திவசம் வரும்போது வாத்தியார் சம்பாவனையா பட்டுக்கரை வேஷ்டி, கால் பவுன் மோதிரம், கோதானம் எல்லாம் கொடுக்கப் போறேன் தெரியுமா. உங்க புண்ணியாத்மாவை வைதாரணி தாண்டிப் போக வைக்கறேன் நம்புங்கோ. அடுத்த வருஷம் துரை கிட்டே சொல்லி ரஜா வாங்கிண்டு போய் வாரணாசியிலே பித்ருக் காரியம் பண்றேன். அம்மா, உள்ளே வாம்மா. என்னத்துக்கு வாசல்லேயே நிக்கறே. இது உன் வீடு. வா அம்மா.

நீலகண்டய்யன் அழ ஆரம்பித்தபோது வைத்தியநாதன் கண்டிப்பான குரலில் சொன்னான்.

ஏண்டா சின்னம்பி, நானும் இவளும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அடக்க முடியாம இப்போ கேட்க வந்திருக்கோம். அது என்னடா உனக்கு அப்படி ஒரு நெஞ்சழுத்தம்?

என்ன தப்பு செஞ்சேம்பா? எப்போ? எதா இருந்தாலும் மன்னிச்சு.

இத்தனை நாள் போயும், உன் உடன் பிறந்தவன் என்ன ஆனான்னு விஜாரிச்சியோ? அவனை காராகிருஹத்துலே அடைச்சதும் கோர்ட்டிலே கேஸ் நடந்ததும் எல்லாம் தெரியும்தானே? ஒரு விசையாவது போய்ப் பார்த்தியோ? அப்படி என்னடா மனசிலே வன்மம் பெரியம்பி மேலே உனக்கு?

வன்மம் எல்லாம் இல்லேப்பா. ராஜாங்க உத்தியோகமாச்சே. நாளைக்கு கோர்ட்டு கச்சேரி, ஜெயில்னு அலைஞ்சா என்ன விஷயம்னு துரை மூக்கை நுழைச்சு விசாரிக்கலாம். அப்புறம் என் நேவிகேஷன் ஹெட்கிளார்க் உத்தியோகத்துக்கு சீட்டு கிழிச்சுடுவானேன்னு பயம். அதான் போறதைத் தள்ளிப் போட்டுண்டே இருந்தேன்.

நிறுத்துடா. அது ஒரு நொண்டிச் சாக்கு. ஆத்துக்காரி அங்கேயெல்லாம் போகாதே, அண்ணா சகவாசம், மன்னி சகவாசம் எல்லாம் மறந்துடுன்னு கண்டிச்சு உன்னை அடக்கி வச்சுட்டது தெரியாதோ எங்களுக்கு?

வைத்தியநாதய்யன் கனவில் சொல்லிவிட்டு இன்னொரு பிடி வெற்றிலையும் சீவலும் கேட்க, நீலகண்டய்யன் வீட்டுக்குள் சமையல் கட்டில் போய் ரெண்டையும் எடுத்து வந்து அப்பனிடம் பயபக்தியோடு கொடுத்தான்.

நான் பாத்துப் பாத்துக் கட்டின கிரஹத்தை நீங்க அண்ணா தம்பி ரெண்டு பேரும் வித்ததிலே எனக்கும் உங்கம்மாவுக்கும் ரொம்பவே மனசு வருத்தம் தான். ஆனா, அதுக்கு அப்புறம் ஏழெட்டு வருஷம் கழிஞ்சு போச்சு.

வாஸ்தவம் தான் அப்பா.

நீ ஆமோதிக்கணும்னு சொல்லலே. பெரியம்பி உசிரே சர்க்கார் தூக்குக் கயிறு மாட்டி முடியற ஸ்திதி வந்தும் நீ பழைய வன்மத்தோடேயே இன்னும் இருக்கியே அதாண்டா எங்களுக்குத் தாங்கலே. அவன் ஆயுசு கெட்டி. பொழச்சுட்டான். அதாவது தெரியுமோ?

கோமதியம்மாள் சொல்லிக் கொண்டு போனபோதே முழிப்பு உண்டாகி, அதிகாலைக் கனவு என்பதால் பலிக்கும் என்ற பயம் ஏற்பட, அடுத்த தெருவுக்கு ஓடினான் நீலகண்டன் அப்போது.

கிருஷ்ணக் கோனாரின் தொழுவத்தில் சாதுப் பசுவாகப் பார்த்து அதன் காதில் சொப்பனத்தைச் சொல்லி முடித்தபோது இது என்ன கஷ்டம்டா நீலகண்டா என்று அந்த மிருகம் பல்லைக் காட்டி சிரித்த மாதிரி இருந்தது.

பெரியம்பி மகாலிங்க அண்ணா உசிரோடு இருக்கான் என்பது அவன் காதிலும் விழுந்த சங்கதி. அவன் இப்போது எங்கே இருக்கான் என்று முதலில் தேடணும். மன்னி லலிதாம்பாளையும் ஒரு விசை கற்பகத்தோடு கூடப் போய்ப் பார்த்து விட்டு அகத்துக்குக் கூட்டி வரணும்.

மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்தில் பெரியம்பி வீடு கட்டி கிரகப் பிரவேசம் என்று மூணாம் மனுஷ்யர் மூலம் சொல்லி அனுப்பினபோது வேணுமென்றே போகாமல் தவிர்த்து விட்டான் நீலகண்டன். வீட்டு விலாசம் கூடத் தெரியாது. ஆனால் இப்போ அதையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பித்ரு கட்டளை. தட்ட முடியாது.

மகாலிங்க அண்ணா தற்போது இருக்கப்பட்ட இடம் என்னவாக இருக்கும்? சூளைமேட்டில் பங்காருவோ, வெள்ளையம்மாளோ ஒரு தாசியோடு அடிக்கடி குலவிக் கொண்டிருந்தது, ரெட்டிய ஸ்திரியோ, செட்டிச்சியம்மாளோ ஒரு சின்ன வயசு பெண்ணை பலாத்சங்கம் செய்து கொன்றும் போட்டு விட்டதாக அவன் மேலே குற்றம் சாட்டி சிக்ஷை விதித்தது, அதை மேல் கோர்ட் தள்ளி வைத்தது என்று அரசல் புரசலாக ஏதேதோ விஷயம் யார் யார் மூலமாகவோ தெரிய வந்தபோது அவனுக்கு அண்ணா மேல் பொறாமை தான் முதலில் வந்தது.

அற்பமாக மூக்குத் தூள் மடித்துக் கொடுக்கிற உத்தியோகத்தில் இருக்கப்பட்ட அவனுக்கு எப்படி சகல ஜாதி ஸ்திரிகளும் வாய் எச்சில் வாடை தெரிகிற தூரத்தில் பரிச்சயமானார்கள் என்று புரியாத விஷயம் அது. நேவிகேஷன் ஹெட் கிளார்க் நீலகண்டய்யனுக்கு அகத்துக்காரி கிடைத்ததே பெரிய சங்கதி. ஆனாலும் அண்ணா ஆகிருதி கெம்பீரம் தான். அவனுக்கு வாய்க்காதது அது.

மகாலிங்க அண்ணா காராகிருஹத்திலிருந்து வெளியே வந்தது பற்றியும், அவனுடைய தற்போதைய இருப்பு பற்றியும் யாரை விசாரிக்கலாம்?

ராஜாங்க உத்தியோகஸ்தன்? கோர்ட்டு கச்சேரி குமஸ்தன்?

சட்டென்று புருஷோத்தம நாயுடு நினைவு வந்தது நீலகண்டனுக்கு. தன் கூடப் படித்து இப்போது ஹைகோர்ட் கச்சேரியில் சிரஸ்ததாராக இருக்கும் நாயுடுவைப் போய்ப் பார்த்துக் கேட்கலாம் என்று மனசில் பட்டபோது அப்பா வைத்தியநாதய்யனும் கோமதியும் ஆசிர்வதித்த மாதிரி இருந்தது.

நேவிகேஷன் ஆபீசில் உத்தியோகம் கம்மியான வெள்ளிக்கிழமை பின் மத்தியானம் புருஷோத்தம நாயுடுவைப் பார்க்க வருகிறதாக லிகிதம் அனுப்பினான். அவனும் வரும்படிக்கு பிரியத்தோடு அழைத்து உடனே பதில் கொடுத்தனுப்பினான்.

ஆக, இப்போது நீலகண்டய்யன் தான் உத்தியோகம் பார்க்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை விட்டுக் கிளம்பி கோர்ட் கச்சேரிக்குப் போகிற காரியம் விக்னமில்லாமல் நிறைவேறி கொண்டிருக்கிறது.

சாமி, எங்கே போகணும்? நம்ம வண்டியிலே ஏறுங்க. பூஞ்சிட்டா பறிஞ்சு கொண்டாந்து சேர்த்துட மாட்டேன்?

முன்னால் வந்து நின்ற ஜட்கா வண்டிக் காரன் வண்டித் தட்டில் இருந்து குதித்து நீலகண்டய்யனைக் கேட்டான். வண்டியில் பூட்டிய குதிரை மெல்லக் கனைத்தது.

மதர்த்து நின்ற அந்தக் கருப்புக் குதிரையைப் பார்த்ததும் கற்பகம் ஞாபகம் வந்தது.

நாளைக்கு புருஷோத்தம நாயுடுவைப் பார்க்கப் போனால் என்ன? இப்போ இப்படியே ஜட்கா ஏறி வீட்டுக்குப் போய்.

போடா. பொண்டாட்டி தொடைக்குள்ளேயே எத்தனை நாள் வாசம் பண்ற உத்தேசம்?

வைத்தியநாதய்யன் வெற்றிலை எச்சிலை திண்ணையில் இருந்து துப்பினான்.

பெரிய கோர்ட்டு கச்சேரி போப்பா.

நீலகண்டய்யன் அவசரமாக ஏறி உட்கார வண்டி நகர்ந்தது.

(தொடரும்)
**
eramurukan@gmail.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts