புகைக்கண்ணர்களின் தேசம் – 2

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

அ.முத்துலிங்கம்


மூன்று வயதான ஹிமாலயாவில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் இல்லை, ஒரே வகுப்புத்தான். எங்களுடன் ஆயிரம் பேர் பயணித்தார்கள். எங்களுக்கு கிடைத்த அறையில் எப்பொழுது பார்த்தாலும் குளிர் குளிர் என்று அரற்றியபடியே இருந்தாள் மீனலோசனி. முழங்காலில் கைகளைக் கட்டி அப்படியே அதில் தலையை சாய்த்திருப்பது அவளுடைய இயல்பான நிலை. ‘இந்தக் குளிருக்கு இவ்வளவு கத்துகிறீர். இங்கிலாந்து குளிரை எப்படி சமாளிக்கப்போறீர்?’ என்று ஒருமுறை கேட்டேன். அவள் உடனே பதில் சொல்லவில்லை. யோசிக்கும்போது அடிச்சொண்டை கடிப்பாள். கனநேரம் கடித்த பிறகு ‘இங்கிலாந்தில் மரங்களில் எல்லாம் பழங்கள் போல பனிக்கட்டிகள் தொங்குமாமே?’ என்றாள். நான் ‘எனக்கு எப்படித் தெரியும். நானும் உம்முடன்தானே முதல் முறையாக பயணம் செய்கிறேன்’ என்றேன். எனக்கு எல்லாம் தெரியவேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். ஸ்வெட்டரை எடுத்து அவள் தலைவழியாக போட்டபோது அது பாதிவழியில் நின்றுவிட்டது. நான் உதவி செய்யாமல் தலை இல்லாமல்கூட அவள் அழகாக இருப்பதை பார்த்து ரசித்தேன்.

கப்பலில் நிறைய அரேபியர்கள் பயணம் செய்தார்கள். நாங்கள் இங்கிலாந்தைச் சென்றடைய எடுத்துக்கொண்ட நாட்களை மீனலோசனி தன் கைவிரல்களில் எண்ணி கணக்கிட்டாள். அந்த 14 நாட்களும் எங்களுக்கு பக்கத்து அறையில் வசித்த அரபுக் குடும்பம் ஒன்றுடன் மட்டுமே பழகக்கூடியதான வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பும் ஆறு நாட்களுக்கு பின் முறிந்துபோனது. தலையையும் முகத்தையும் கறுப்புத் துணி கொண்டு மூடியிருந்த அந்தப் பெண் என் மனைவியிடம் மட்டுமே பேசினாள். நகைகளைப் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டாள் என்று நினைக்கிறேன். என் மனைவி அவை எல்லாவற்றிற்கும் பதில் சொன்னாள். அவளுக்கு உண்டான இயல்பான ஆர்வத்தால் திருப்பி ஒரேயொரு கேள்வி கேட்டாள். அப்பாவித்தனமானது. ‘உங்களுக்கு மணமாகிவிட்டதா?’ அந்தப் பெண் கோபத்துடன் ‘நான் அப்படிப்பட்ட பெண்ணில்லை’ என்று பதிலிறுத்தாள். அதற்கு என்ன பொருள் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. அதன் பிறகு பயணம் முடியுமட்டும் அவர்கள் பேச்சு தடைபட்டு விட்டது.

தரையிலே பயணம் செய்யும்போது நிலக்காட்சிகள் மாறுவதுபோல தண்ணீரிலும் காட்சிகள் மாறிக்கொண்டு வந்தன. செங்கடலைக் கடந்தபோது ஆகாயம், தண்ணீர் எல்லாமே வித்தியாசமாகத் தோன்றி எங்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. காற்றுக்கூட நூதனமாக வீசியது. கடலின் மணம் மாறியது. மாலுமிகள் திடீரென்று உற்சாகமாகக் காணப்பட்டனர். அப்பொழுதும் அறையைவிட்டு மீனலோசனி வெளியே வரவில்லை. வழக்கம்போல முழங்கால்களை கட்டிப்பிடித்துகொண்டு அந்த நிலையிலேயே தூங்கினாள். நான் இதுதான் சமயமென்று அப்பாவின் கடிதத்தை படிப்பதற்காக எடுத்துக்கொண்டு மேல்தட்டுக்கு சென்றேன்.

கடவுள் கிருபையை முன்னிட்டு வாழும் சிரஞ்சீவியாகிய என் மகனுக்கு எழுதிக்கொள்வது. நான் சுகம், நீயும் மீனலோசனியும் அப்படியே என கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

இந்தக் கடிதத்தை திறந்து படிக்கும்போது நீ நடுக்கடலில் இருப்பாய். அநேகமாக அப்போது நான் மறியல் வீட்டில் இருப்பேன். பதறாதே, மிச்சக் கடிதத்தையும் படி. நான் சொல்லப்போகிற ரகஸ்யம் உனக்கு அதிர்ச்சியை கொடுக்கலாம். அது உன் அம்மாவைப் பற்றியது. அவரைப் போன்ற ஒரு அழகி இந்த உலகத்திலேயே கிடையாது. இதைப் பல தடவை நான் உனக்கு சொல்லியிருக்கிறேன். பிளந்துபோட்ட ஆயிரக்கணக்கான சிப்பிகளுக்கு நடுவே, துர்நாற்றமான காற்று வீசிய ஒரு மாலை, உன் அம்மாவை ரகஸ்யமாகச் சந்தித்தேன். கறுப்புத்திரை விழுந்ததுபோல கடற்கரையில் இலையான்கள் மொய்த்தன. அவர் முகம் பாதிதான் தெரிந்தது. ‘உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது, உனக்கு என்னை பிடிக்குமா?’ என்று நேரிலே கேட்டேன். அவருக்கு இலங்கையில் புழங்கிய அத்தனை பாசைகளும் தெரியும். அத்தோடு மூன்று அந்நிய பாசைகளும் பேசுவார். அவர் எந்த பாசையிலாவது ஒரு வார்த்தையை பதிலாக சொல்லியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் நிலத்தை பார்த்து மெள்ள தலையை ஆட்டினார். என் வாழ்க்கையின் ஆகச் சந்தோசமான தருணம் அது. இத்தனை பாசைகள் எப்படி பேச வந்தது என்று ஒருதடவை அவரிடம் கேட்டபோது எந்தப் பாசையையும் ஒரு முறை கேட்டாலே தனக்கு பழக்கமாகிவிடும் என்று சொன்னார்.

உன் அம்மாவை பார்த்த முதல் நாள் அவர் பூப்போட்ட பருத்திப் புடவை ஒன்றை தொங்கல் இல்லாமல் குறுக்காகக் கட்டியிருந்தார். எனக்கு மனது திக்கென்றது. அவர் தொங்கல் போடமுடியாத சாதியை சேர்ந்தவராக இருக்கவேண்டும். விசாரித்துப் பார்த்தபோது அவர் சாயவேர் கிண்டும் ஆகக் கீழான வேர்குத்திச் சாதி என்பது தெரிந்தது. சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கீழ்ச்சாதி பெண்ணொருத்தி தொங்கல் வைத்து சேலை உடுத்திப் போனபோது மேல் சாதி ஒருவன் கொக்கச் சத்தகத்தால் தொங்கலை இழுத்து வெட்டி பெரும் கலவரம் மூண்டது. அதை அப்ப கவுண்மேந்து ஏஜண்டாக இருந்த பிறீமன் துரை நேரில் வந்து அடக்கவேண்டியிருந்தது. என்னுடைய மனதிலே ஒரு வைராக்கியம் எப்படியோ புகுந்துவிட்டது. என்ன வந்தாலும் வரட்டும் என்ற துணிச்சலோடு நான் உன்ரை அம்மாவை மணமுடித்து ஊருக்கு கூட்டி வந்தது உனக்கு தெரியும்.

உன்னுடைய அம்மா எதையும் ஒருமுறைதான் செய்து பழக்கமானவர். எந்தப் பாசையையும் ஒருதடவைதான் கேட்டார். என்னைப் பார்த்து ஒருமுறைதான் புன்னகை செய்தார். சம்மதம் கேட்டபோது ஒருமுறைதான் தலையை ஆட்டினார். அதுதான் ஒரேயொரு முறை கர்ப்பம் தரித்தால் போதும் என்று அவர் நினைத்துவிட்டார். மருத்துவச்சி வெளியே நீட்டிக்கொண்டிருந்த உன்னுடைய இரண்டு கால்களையும் இழுத்துப்போட்டார். நீ முற்றிலும் நீல நிறமாக வந்து விழுந்தாய். சரியாக ஒரு நிமிடம் நீ மூச்சு விடவில்லை, சத்தமும் எழுப்பவில்லை. மருத்துவச்சி உன் நெற்றியில் சூடாக்கிய ஊசியால் இரண்டு கீறுக் கீறியவுடன் நீ முதல் மூச்செடுத்து கத்தினாய். அந்த அற்புதமான சத்தத்தை கேட்க உன் அம்மா இல்லை; நான் நடுக்கடலில் தோணியில் இருந்தேன். மருத்துவச்சியிடம் நூறுதடவை ‘என்ரை உயிர் போனாலும் பரவாயில்லை; பிள்ளை பத்திரம்’ என்று உன் அம்மா சொல்லிக்கொண்டே இருந்தாராம்.

நீ பிறந்து அம்மாவின் மடியில் வளர்ந்திருந்தால் உன் அம்மாவின் தோள்மூட்டில் பச்சை குத்தியிருப்பதை பார்த்திருப்பாய். அது அவவுடைய சாதியை குறிக்கும். நான் மணமுடித்து ஊருக்கு வந்தபோது அதை மறைத்துவிட்டேன். அம்மாவிடமும் அதைப் பற்றி மூச்சுவிடவேண்டாம் என்று சத்தியம் வாங்கியிருந்தேன். அவர் தொங்கல் போட்டு புடவை உடுத்தி வந்ததால் ஒருவரும் சந்தேகிக்கவில்லை. உன் அம்மாவின் அழகும் அவர்கள் கண்களை மறைத்திருக்கலாம்.

பல வருடங்களாக காப்பாற்றிய ரகஸ்யத்தை உன் கல்யாண நாள் அன்று முதலாளி கண்டுபிடித்துவிட்டான். நான் அவனுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன். அவனுக்காக மறியல் கூட போயிருக்கிறேன். நான் அவனை ஏமாற்றிவிட்டேனென்றும், எங்களை தள்ளிவைத்து அவமானப்படுத்தப் போவதாகவும் அவன் சத்தம் போட்டான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்தக் கடிதத்தை எழுதி முடித்த சில மணி நேரத்தில் நான் கப்பலில் வந்திறங்கிய கள்ளச் சரக்கு பற்றி பொலீசுக்கு தகவல் கொடுப்பேன். இம்முறை முதலாளி தப்பமுடியாது. இருவரும் சேர்ந்து மறியலுக்கு போவோம். தேவையான ஆதாரங்களும் சாட்சிகளும் என்னிடம் இருப்பதால் எந்தப் பெரிய அப்புக்காத்துமாரும் எங்களை வெளியே கொண்டுவர ஏலாது. இங்கிலாந்தில் உங்களுடைய நாலு வருடப் படிப்புக்கான பணம் உனக்கு அங்கே கிடைக்கும். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் நான் செய்துவிட்டேன்.

விக்டோரியா மகாராணி இறந்தபோது எனக்கு இரண்டு வயது நடந்தது. நான் என் வாழ்நாளில் நாலு மன்னர்களையும் இரண்டு ராணிகளையும் கண்டுவிட்டேன். இப்பொழுது நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது, ஆனால் எசமானர்கள் மாறிவிட்டார்கள். இனம் இன்னொரு இனத்தை ஒடுக்கும்; சாதி இன்னொரு சாதியை அடக்கும். பிறந்த நாட்டில் கிடைக்கும் நீதியைவிட வெள்ளைக்காரனிடமிருந்து உனக்கு நல்ல நீதி கிடைக்கும். நீ திரும்பி வரவேண்டாம், அங்கேயே சுகமாய் இரு. மீனலோசனி நல்லவள். நீ அவளுக்கு என்ன சமாதானம் சொல்லவேண்டும் என்பதை உன்னிடமே விட்டுவிடுகிறேன்.

உன்மீது எப்பவும் பட்சம் குறையாத
அப்பா.

கடிதத்தை படித்து முடித்த பிறகு நம்ப முடியாமல் சில இடங்களை திரும்பவும் படித்தேன். நெடுநேரம் நான் மேல்தட்டில் என்னசெய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றேன். சூரியன் அவனுடைய வெப்பத்தை அவனே தாங்க முடியாமல் தண்ணீருக்குள் இறங்க ஆயத்தம் செய்துகொண்டிருந்தான். மணமுடித்து சரியாக இன்னும் முப்பது நாள்கள் கழியவில்லை, மீனலோசனியிடம் இதை மறைக்கவேண்டுமா என்று நினைத்த சமயத்தில் அவளே என்னை தேடிக்கொண்டு மேலே வந்தாள். தண்ணீர் கொடிபோல அவள் அசைந்து வருகிறாளா அல்லது கப்பல் அசைகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் அவள் நடந்து வந்தது நல்ல காட்சியாகவே அமைந்தது.

எப்படித் தெரிந்ததோ என் முகத்தைப் பார்த்ததும் அவள் முகம் சட்டென்று மாறியது. எப்பவும் சிரித்த முகமாக இருக்கும் அவள் முகம் யாரோ கூடாரத்தின் நடுக்கம்பை உருவி விட்டதுபோல அப்படியே படிப்படியாக விழுந்து தட்டையானது. ‘என்ன, என்ன?’ என்று பதறியபடி என்னிடம் ஓடிவந்தாள். நான் ‘ஒன்றுமில்லையே’ என்று சொல்லி முகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயன்றபடி கடலைப் பார்த்தேன். மணமுடித்தபின் சொன்ன முதல் பொய் அது.

அவள் தயங்கி நின்று சுற்றுமுற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு ஏதோ பரிசுப் பொருள் தரப்போவதுபோல மெல்ல அணுகினாள். வாத்சாயனர் பெண்களின் ஆலிங்கனம் பற்றி சொல்லும்போது ‘மரத்திலே கொடி படர்வதுபோல’ என்று ஓர் இடத்தில் வர்ணித்திருப்பார். அதுபோல என் மீது படர்ந்தாள். ‘என்னை ஏன் தனிய விட்டுவிட்டு வந்தீர்கள்’ என்று சிணுங்கினாள்.

இவளை எனக்கு மணமுடித்து வைப்பதற்கு என் அப்பா என்ன பாடுபட்டிருப்பார். ஓர் உத்தமமான சாதிப் பெண்ணுக்காக ஊர் ஊராக அலைந்தார். யாழ்ப்பாணத்து கடைசி அரசன் சங்கிலியன் காலத்தில் பாண்டி நாட்டிலிருந்து குடிபெயர்ந்த 50 ராச குடும்பத்து வன்னியர்களின் வம்சாவளியில் வந்த இவளுடைய உடம்பில் ராச ரத்தம் ஓடுகிறது என்று அப்பா பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவள் நடப்பதும் நிற்பதும்கூட ஓர் அரசதோரணையிலே இருக்கும். ‘உமக்கு ஓர் அதிசயம் காட்டப்போகிறேன்’ என்று கதையை மாற்றினேன். என்ன என்பதுபோல என் வாயை பார்த்தாள்.

‘இப்ப சூரியன் மறையப் போகுது. கொஞ்சம் இருந்து பாரும், அதே இடத்தில் வெள்ளிக்கிரகம் தோன்றும்’ என்றேன்.
அவள் நம்பவில்லை. ‘உண்மையாகவா? எப்படி உங்களுக்கு தெரியும்?’ என்றாள்.
‘உலகத்தில் எல்லா நாடுகளும் பூமியின் சுழற்சியை வைத்துத்தான் நாட்களைக் கணக்கிடுகின்றன என்று நாங்கள் நினைக்கிறோம். அதாவது வருடத்தில் 365 நாட்கள். ஒரு காலத்தில் மெக்சிகோ நாட்டின் ஆதிகுடிகள் காலத்தை வெள்ளிக்கிரகத்தை வைத்து கணித்தார்கள். 263 நாட்கள் சூரியன் உதிக்க முன்னர் காலையில் வெள்ளிக்கிரகம் தோன்றும். 263 நாட்கள் வெள்ளிக்கிரகம் சூரியன் மறைந்த பின்னர் அதே இடத்தில் தோன்றும்’ என்றேன்.

இரண்டு கண்களையும் நீள்சதுரமாக்கி ‘உண்மையாகவா?’ என்றாள். எதற்கெடுத்தாலும் ‘உண்மையாகவா’ என்று கேட்பது அவள் வழக்கம். இவள் ராமநாதன் பாடசாலையில் படித்து பின்னர் லண்டன் சோதனை எழுதியவள். இப்பொழுது என்னுடன் படிப்பதற்கு லண்டனுக்கு பயணமாகிறாள். ஆனால் இவள் கேட்கும் கேள்விகள் எனக்கு பல சமயம் சிரிப்பை வரவழைக்கும். ‘உண்மையாகவா, வெள்ளைக்காரர்கள் மாட்டை துண்டு துண்டாக வெட்டி ஊறுகாய் போட்டு வருடம் முழுக்க வைத்து சாப்பிடுவார்களாமே?’ என்றாள் ஒருநாள். நேற்று அவள் கேட்டது இன்னும் வேடிக்கையானது. ‘கப்பலில் சூதகம் வந்தால் நான் என்ன செய்ய வேணும்?’

மேல் தட்டில் எல்லைக் கம்பியை பிடித்துக்கொண்டு அப்பாவிபோல நின்ற மீனலோசனி, கோயிலில் பூக்கட்டி வைத்துத்தான் என்னை மணமுடிப்பதா வேண்டாமா என்பதை முடிவுசெய்தாள். ‘உமக்கு வெள்ளைப்பூ கிடைத்திருந்தால் என்னை கல்யாணம் செய்திருக்கமாட்டீரா?’ என்று கேட்டேன்.
‘பின்ன?’ என்றவள் இன்னும் வேறு வழிகளும் உண்டா என்பதுபோல கண்களை விரித்து ஆச்சரியத்தோடு பார்த்தாள். ‘நீங்கள்தான் எனக்கு கணவர் என்று கடவுள் நினைத்தால் அதை நான் எப்படி மாற்ற முடியும்?’
‘அது மெத்தச் சரி. அப்ப ஏன் அப்பாவிடம் சம்மதம் தெரிவிக்காமல் நீங்கள் மூன்று மாதமாய் இழுத்தடித்தனீங்கள்?’
‘சொன்னால் சிரிப்பீங்கள்.’
‘சிரிக்கமாட்டன், சொல்லும்’
‘அம்மாவுக்கு சாதி முக்கியம். சங்கிலியன் காலத்திலிருந்து கலக்காமல் வந்த எங்கள் சாதியில் கலப்பு வந்திடுமோ என்ற பயம். அதுதான் பழைய தோம்புகள் வழியாக ஆராய்ந்து உங்கள் சாதியை சோதிச்சவ.’
‘என்ன கண்டுபிடிச்சா?’
‘நீங்கள் முத்து குத்தகை எடுக்கும் மதுரை நாயக்கர் பரம்பரை. அதிலே அவவுக்கு நல்ல சந்தோசம்.’
‘அப்படியா, எனக்கே இன்றைக்குத்தான் தெரியும்.’

பூசணிக்காய் நிறத்தில் ஒரு மாலுமி எங்களைத் தாண்டி விசையாகப் போனான். அவனுடைய புஜம் முழுக்க பச்சை குத்தியிருந்தது. அவனைத் தொடர்ந்து இன்னொருத்தன் தலை தெறிக்க ஓடினான். அவன் தலையை முன்னே நீட்டி ஓடியது பார்ப்பதற்கு தலையை உடம்பு துரத்துவதுபோல இருந்தது. செங்கடல் ஒரே சிவப்பாக மாறி தகதகத்தது. அதைப் பார்ப்பதற்காக நிறைய சனக்கூட்டம் சேர்ந்துவிட்டது. ஒரு பயணி மாலுமியிடம் ஏதோ கேட்க அதற்கு அவன் என்னவென்றே தெரியாத ஒரு மொழியில் பதிலளித்தான். அவன் என்ன சொன்னான் என்பது எனக்கோ மனைவிக்கோ விளங்கவில்லை.

கூட்டம் அதிகமில்லாத கப்பலின் விளிம்பு பக்கம் நாங்கள் நகர்ந்தோம். நான் ‘மீனலோசனி’ என்று அழைத்தேன். அவள் மெல்ல ‘ஓய்’ என்றாள். அவளைப் பார்த்தபோது எனக்கு அவள்மேல் பரிவு சுரந்தது. 400 வருடங்களாக காப்பாற்றி வந்த ராச ரத்தம் அவள் உடம்பில் ஓடியது. எந்த நேரமும் சிரித்தபடி இருக்கும் அவள் முகத்தை ஏமாற்றுகிறேனோ என்று மனம் துணுக்குற்றது. என் கண்கள் தாழ்ந்து பாதசரம் பூட்டியிருக்கும் அவள் கால்களில் போய் நின்றன.

‘உம்மைச் சுற்றி இருக்கிற பரந்த கடலை வடிவாய் பாரும். நாங்கள் இரண்டு துளியாய், இரண்டு கண்டத்துக்கு நடுவில் நிற்கிறோம். இரண்டு தனித்தனி துளி என்றாலும் நாங்கள் ஒன்றுதான். உம்முடைய இடப் பக்கம் ஆப்பிரிக்கா; வலப் பக்கம் ஆசியா. தொடலாம்போல கிட்டவாயிருக்கு’ என்றேன். அவள் ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் ஏதோ விலைக்கு வாங்கப்போவதுபோல திரும்பி திரும்பி உன்னிப்பாகப் பார்த்தாள்.

‘அது சரி, நீர் லண்டனில் என்ன படிக்கிறதாக முடிவு செய்திருக்கிறீர். அதற்கும் பூக்கட்டி வைக்கப்போறீரா?’ என்றேன். அவளுடைய நீர்க்குமிழி கண்களில் கோபம் வந்தாலும் அது உடனேயே கரைந்துவிட்டது. ‘எல்லா பிரச்சினைகளையும் பூக்கட்டி தீர்த்தால் எவ்வளவு நல்லாயிருக்கும். புகைக்கண்ணர்களின் மொழி படிக்கலாம் என்று யோசிக்கிறேன். அவர்கள் தேசத்தில் அவர்கள் மொழிதானே படிக்கவேணும்.’

‘எங்கள் அப்பா சொல்லுவார் ஆங்கில மொழி படித்தால் மட்டும் போதாது. டச்சு மொழி படிக்கவேணும். போர்துக்கீசரின் மொழியும் படிக்கவேணும். அவர்கள் எல்லாம் எங்கள் நாட்டை ஆண்டவர்கள். அவர்கள் நாட்டை நாங்கள் ஆளமுடியாவிட்டாலும் அவர்கள் மொழியையாவது ஆளவேணும்.’

நான் சொன்னது என்னவென்று புரியாமல் மீனலோசனி கைகளை செங்குத்தாகப் பிடித்துக்கொண்டு என்னை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அது ஒரு மகாராணியின் பார்வை.
அவளுக்கு பின்னே, சூரியன் மறைந்த அதே இடத்தில் வெள்ளிக்கிரகம் மேலே எழும்பிக்கொண்டிருந்தது.

END
amuttu@gmail.com

Series Navigation

author

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்

Similar Posts