விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

இரா.முருகன்


28 நவம்பர் 1900 – சார்வரி வருஷம் கார்த்திகை 14, புதன்கிழமை

ஸ்கோட்லாண்டில் நடைபெற்று வரும் மாபெரும் பாலம் அமைப்பு பணிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் அவர்கள் நேற்று இரவு லண்டன் கிங்க்ஸ் கிராஸ் ரயில் நிலையத்திலிருந்து விசேஷ ரயிலில் பயணமானார். இளவரசரின் குழுவினரில் நம் ஸ்காட்லாந்து பயனியர் பத்திரிகை நிருபர் மகாகனம் பொருந்திய ஜான் க்ளீ அவர்களும் இடம் பெற்றிருப்பதை வாசகர்களுக்கு நாம் அறிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் தவமாய்த் தவமிருந்து எத்தனையோ பத்திரிகாசிரியர்கள் உத்வேகத்தோடு முயற்சி செய்தாலும் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை என்பதையும் மன்னர் பெருமானோடு பிரயாணம் செய்து அவருடைய நடவடிக்கைகளை பத்திரிகை அறிக்கையாக எழுதும் உரிமையைப் பெற்ற ஒரே ஸ்கோட்லாண்ட் தினப் பத்திரிகை நம்முடையது என்பதையும் வாசகர்கள் மற்றும் பொது ஜனங்களுக்கும் கனவான்களுக்கும் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீமான் ஜான் க்ளீ அவர்கள் சமர்ப்பித்த முதல் செய்தி அறிக்கை கீழே தரப்பட்டிருக்கிறது. இதன் அடுத்த பகுதிகள் அடுத்த சில தினங்களில் நித்தியப்படிக்கு நம் பத்திரிகையில் வெளியாகும்.

தற்போது குளிர்காலம் ஆனதால் சாயந்திரம் ஆறு மணிக்கே லண்டன் நகரில் இருட்டும் மூடுபனியும் படர்ந்திருந்ததை இப்பத்திரிகையின் தட்ப வெட்ப நிலவரம் பகுதியில் வாசகர்கள் படித்திருக்கலாம்.

நாம் எட்டு மணிக்கு கிங்க்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் நுழைந்தபோது ராத்திரியைப் பகல் ஆக்குகிறது போல் எல்லா வாயு விளக்குகளும் ஜகஜ்ஜோதியாக எரிந்தன. வழக்கத்துக்கு மேற்பட்ட அளவில் ரயில்வே மற்றும் போலீஸ் உத்தியோகஸ்தர்கள் ஸ்டேஷனுக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் எல்லோருக்கும், ரயில் ஏறி வெவ்வேறு ஸ்தலங்களுக்கு யாத்திரை போக ஸ்டேஷனுக்கு வரும் பொது ஜனங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் கொடுக்காத வகையில் ராஜ சேவை செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்ததாக அறிகிறோம்.

அது காரணமோ என்னமோ, முதல் ப்ளாட்பாரத்தில் இருந்து அரசரும் கோஷ்டியும் அடங்கிய இந்த விசேஷ ரயில் கிளம்புவதை பலரும் அறிந்திருக்கவில்லை. வந்தவர்களும் தொலைவில் இருந்தே நின்று பார்த்து விட்டு, அவரவர் வேலைகளில் ஈடுபட்டு மற்ற பிளாட்பாரங்களில் இருந்து புறப்படும் ரயில்களை நோக்கி பெட்டி படுக்கைகளோடு கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள்.

வேல்ஸ் இளவரசர் இரவு சரியாக ஒன்பதே முக்கால் மணிக்கு அவருடைய சொந்த மோட்டார் காரில் கிங்க்ஸ் கிராஸ் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே இளவரசரை வரவேற்கக் குழுமியிருந்த சீமாட்டிகளும் துரைமார்களும் அன்னாருக்குக் கைலாகு கொடுக்க வரிசையாக நின்ற பொழுது, ஸ்டேஷன் மாஸ்டர் திருவாளர் தாம்ஸன் ஹார்வி அவர்கள் காதில் இளவரசர் அவர்கள் ஏதோ ரகசியமாகக் கேட்டதை கூட்டத்தினர் கவனிக்கத் தவறவில்லை.

வேல்ஸ் இளவரசர் பிரயாணம் கிளம்புகிற அவசரத்தில் அரண்மனையில் அவருடைய பாதரட்சைகளையோ அரைக் கச்சையோ விட்டு விட்டு வந்திருப்பதால் ஆளனுப்பி அதுகளை கொண்டு வரும்படி ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஆக்ஞை பிறப்பித்திருக்கலாம் என்று ஒரு சாரார் பேசிக் கொண்டதை நாம் கேட்க நேர்ந்தது. இளவரசரின் முகம் கொஞ்சம் இறுகியிருந்ததும் கவனித்துப் பார்த்தவர்கள் கண்ணில் படாமல் போயிருக்காது.

ரயில் கிளம்பும் என்று அறிவித்து விடலாமா என்று ஸ்டேஷன் மாஸ்டர் ஹார்வி அவர்கள் பணிவோடு கேட்டபோது சரியென்று தலையசைத்து தன் தொப்பியை மறுபடி அணிந்து கொண்டார் நம் இளவரசர். அப்போது வேல்ஸ் இளவரசரோடு இந்தச் சுற்றுப் பயணத்தில் பங்கு பெறும் எடின்பரோ மகாபிரபு, ஜார்ஜ் இளவரசர், ஃபைஃப் நகரப் பிரபு, ராஜ குடும்ப மருத்துவர் கர்னல் எல்லீஸ் துரை ஆகியோர் அவசரமாக கிங்ஸ் கிராஸ் ரயில்வே ஸ்டேஷனில் இளவரசரின் விசேஷ ரயில் நிற்கும் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

இவர்களை கென்ஸிங்க்டனில் அவரவர் மாளிகைகளில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வர அமர்த்தி இருந்த மோட்டார் வாகனம் பிக்கடலி சர்க்கஸ் பகுதியைக் கடக்கும்போது யந்திரக் கோளாறு காரணமாக நின்று போனதால், சாரட் வண்டிகள் மூலம் இப்பிரமுகர்கள் வாகனம் மாறிப் பிரயாணம் செய்ய வேண்டி வந்ததாம். அதனால் ஏற்பட்டதே மேற்குறிப்பிட்ட தாமதம் என்பதை நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேல்ஸ் இளவரசரும் நாம் உள்பட அவருடைய பரிவாரமும் லண்டனிலிருந்து ஸ்கோட்லாண்ட் யாத்திரை மேற்கொள்ள அதிநவீன ரயில் ஒன்றை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.

இந்த யாத்திரைக்காகவே க்ரேட் நோர்த்தர்ன் கம்பேனியார் உருவாக்கிய விசேஷ ரயில் வண்டியாகும் அது. அந்த வண்டியின் மிகப் பெரிய ஒரு ரயில் பெட்டி வேல்ஸ் இளவரசர் மட்டும் தங்கி இருந்து, பட்சணம் கழித்து, மல மூத்ர விசர்ஜனம் செய்து, உடுப்பு மாற்றி, படுத்து நித்திரை போக, யாராவது முக்கியஸ்தர்கள் வந்தால் உட்கார வைத்துப் பேச இன்னோரன்ன சவுகரியங்களோடு அமைந்திருந்தது. அதற்குள் மற்றவர்கள் நுழைவது தடை செய்யப்பட்டு, அவசியமானவர்களை மட்டும் திரு மனசு உத்தரவு பிரகாரம் உள்ளே அழைக்க ஒரு சேவகர் வாசலிலேயே நிறுத்தப்பட்டிருந்தார்.

இளவரசரின் அறைக்குள் சாட்டின் இருக்கைகளும், சாட்டின் படுக்கையும் அதன் மேல் பழுப்பு நிற வெல்வெட் படுக்கை விரிப்பும் இருந்தன. இளவரசரின் கழிப்பறை வெள்ளைப் பளிங்கால் செய்யப்பட்டு கண்ணில் ஒற்றி முத்தமிடும் தோதில் சுத்தமும் நறுமணமும் அழகான வேலைப்பாடுமாக இருந்தது.

இந்த அரண்மனை போன்ற பிரதேசம் தவிர அந்த விசேஷ ரயில் பெட்டியில் ஒரு முப்பது நாற்பது பேர் கஷ்டமின்றி அமர, படுத்து யாத்திரை செய்யத் தோதான விசாலமான இருக்கைகளோடு ஒரு ரயில் பெட்டி, கூடுதலாக படுக்கை அறைப் பெட்டி, புகைச் சுருட்டு குடிப்பவர்களின் சவுகரியத்துக்காக ஒரு சிறிய ரயில் பெட்டி, கழிப்பறைகளும் குளியல் அறைகளுமாக ஆறு, வேல்ஸ் இளவரசரின் தனி சேவகர்களுக்கான ரயில் பெட்டி (சிறியது), பொதுவான வேலைக்காரர்களுக்கான ரயில் பெட்டி ஒன்று (சிறியது) ஆகியவையும் இடம் பெற்றிருந்தன,

சுத்தமும் சுகாதாரமும் காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்ட ஒரு சமையல் அறைப் பெட்டியும் விசேஷ ரயில் வண்டியில் உண்டு, அதில் சமையலுக்கான நிலக்கரி மற்றும் எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு எரியும் பெரிய அடுப்புகள் ஆகியவை இருந்தன.

ரயில் பெட்டியில் வேல்ஸ் இளவரசர் இருந்த பகுதி முழுக்க எலக்ட்ரிசிட்டி உபயோகித்து விளக்குகள் எரிய வைக்க வசதிகள் இருந்ததோடு சிறிய லஸ்தர் விளக்குகளும் அங்கங்கே பொருத்தப் பட்டிருந்தன. வேலைப்பாடமைந்த இந்த எலக்ட்ரிக் விளக்குகளும், லஸ்தர் விளக்குகளும் பக்கிங்ஹாம் அரண்மனையே தளத்தில் சக்கரம் மாட்டி கிங்க்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் ரயில் பெட்டியாக்கி நிறுத்தப்பட்டிருக்கிறதோ என்ற பிரமையை சகலருக்கும் ஏற்படுத்தியது.

பயணத்தின் போது கோஷ்டியினருக்கு பாகம் செய்து விளம்ப ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, சயாமிய அரிசி, ரொட்டி, ஜாம், மர்மலேட், வெண்ணெய், பாலாடைக் கட்டி, புதிதாகப் பறித்து பக்குவம் செய்து அனுப்பப்பட்ட டார்ஜிலிங் தேநீர் இலைகள் அடைத்த பொதிகள் ஆகியவை சமையல் அறையின் ஒரு பகுதியில் பனிக்கட்டிப் பாதுகாப்பு அமைந்த மரப் பெட்டிகளின் வைக்கப் பட்டிருந்ததை நாம் கவனிக்க நேர்ந்தது.

சமையல் அறையில் குடிப்பதற்கும் உடம்பு சுத்தப் படுத்திக் கொள்வதற்குமான வென்னீர் உண்டாக்க வசதி இருந்ததோடு, வேல்ஸ் இளவரசர் மற்றும் நாம் பிரயாணம் செய்யும் ரயில் பெட்டிகளைச் சுற்றி குழாய்கள் மூலம் வென்னீரைக் கொண்டு சூடு உண்டக்கிக் குளிரைத் தவிர்க்க வழி செய்யப் பட்டிருந்தது.

கூடவே ஷார்டனி, சிவப்பு ஒயின், வெள்ளை ஒயின், ஷாம்பேன், ஸ்காட் விஸ்கி, லாகர் பியர் ஆகிய பானங்களும் சமையல் அறையை ஒட்டி அமைக்கப்பட்ட மது அரங்கத்தில் நேர்த்தியாக கண்ணாடி பீரோக்களில் அடுக்கப்பட்டிருந்ததையும் கண்டபோது இந்தப் பிரயாணம் லண்டனில் இருந்து ஸ்கோட்லாண்ட் வரை தானா அல்லது சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் முழுக்க யாத்திரை போய் ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்துத் திரும்ப ஏதாவது அறிவிக்கப்படாத திட்டம் இருந்த்ததா என்று மலைப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதை பிரியமான வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்

இளவரசரும் அவருடைய கோஷ்டியினரும் அடங்கிய யாத்திரா கோஷ்டி செல்லும் இந்த ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் ப்ளையிங் ஸ்கோட்மேன் ரெண்டு என்று நாமகரணம் செய்திருந்தது. தினசரி லண்டன் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் இருந்து எடின்பரோ செல்லும் சாமானிய ஜனங்களையும் மகாபிரபுக்களையும் ஏற்றிச் செல்லும் அதே ப்ளையிங் ஸ்கோட்மேன் ரயிலின் பெயரை இந்த ராஜ ரயிலுக்கும் வைத்து கவுரவப் படுத்தியதற்காக ஒவ்வொரு ஸ்கோட்லாண்ட் பிரஜை சார்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் ஆர்வத்தோடு வாசிக்கும் இந்தப் பத்திரிகை வியாசம் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி அறிவித்துக் கொள்கிறோம்.

எட்டு பெட்டிகள் அடங்கிய இந்த ரயில் வண்டியில் வேல்ஸ் இளவரசரின் இருப்பிடமான ரயில் பெட்டி நான்காவதாக இருந்தது.. நாங்கள் உட்கார்ந்து வந்த மெத்தை விரிப்பு இருக்கைகள் கொண்ட பெட்டி அதை ஒட்டி அமைந்திருந்தது. இந்த புதிய ரயிலை இழுத்துப் போய் ஸ்கோட்லாண்ட் சேர்க்க புதியதாக நிர்மாணம் செய்யப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த நீராவி இஞ்சினையும் க்ரேட் நோர்த்தன் கம்பேனியார் விசேஷமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

எந்த துர்வாடையும் அடிக்காத, கண்ணில் விழுந்து கண்ணீரை வரவழைக்காத தோதில் உயர் தரத்தில் அமைந்த சன்னமான நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு ஓடும் இந்த ப்ளையிங் ஸ்கோட்மேன் ரெண்டு ரயிலில் ஒரு குலுக்கலோ, அளவுக்கு அதிகமான பக்கவாட்டு அசைவோ, தண்டவாளத்தில் சக்கரம் உராய்ந்து எழும்பும் உச்ச பட்ச சத்தமோ இல்லாமல் அன்னப் பறவை மீதமர்ந்து பறக்கும் சுகமாக யாத்திரா வசதி இருந்தது குறிப்பிடத் தகுந்தது.

ரயில் யாத்திரை கிளம்பும் முன்னரே தந்தி மூலம் அறிவிப்பு செய்து லண்டனில் இருந்து எடின்பரோ தாண்டி ஸ்கோட்லாண்ட் ஃபைஃப் நகரம் வரை ரயில் பாதையைப் பழுது பார்த்து சீராக்கி வைத்திருந்ததால் இந்த சவுகரியமான பிரயாணம் சாத்தியமாயிற்று என்று ஊர்ஜிதமாகாத வட்டாரச் செய்திகள் சொல்கின்றன.

இதே அக்கறையை நிர்வாகம் தினசரி ஓடும் ரயில்கள் விஷயத்திலும் காட்டியிருந்தால் தேசம் முழுக்க ரயில் யாத்திரை தினந்தினம் பொது ஜனங்களுக்கு மெச்சத் தகுந்த விதத்தில் அமைந்திருக்குமே என்று எங்கள் கோஷ்டியில் வந்த பிரிட்டீஷ் பாராளுமன்ற அங்கத்தினரான ஒரு ஆப்தர் நம்மிடம் சொன்னபோது அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

சாமான்ய ஜனங்களையும் வேல்ஸ் இளவரசராகக் கருதி உபசரிக்க ரயில்வே நிர்வாகத்தில் ஆள்பலம், பணபலம் இல்லாமல் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அக்கறையும், ரயில்கள் காலாகாலத்தில் கிளம்பும் உத்திரவாதமும், பிரயாணத்தின் போது ஆகாரம், பானம், இருக்கை, விசர்ஜன சவுகரியங்களை அதிகப்படுத்திக் கொடுக்க முனைப்பும் இருந்தாலே போதும். அப்போது, சாதாரண பிரிட்டீஷ் குடிமகனும் ஒருநாள் ராஜாவாக அல்லது ராணியம்மாளாக ரயில் யாத்திரையின் போது உன்னதமான அனுபவத்தை அடைய முடியும்.

வேல்ஸ் இளவரசரின் ஸ்கோட்லாண்ட் யாத்திரையைப் பற்றிய பத்திரிகைக் குறிப்பில் நடைமுறை ரயில் யாத்திரை சிரமங்கள் குறித்து பிரஸ்தாபித்து வியாசத்தின் நோக்கத்தைக் கொஞ்சம் போல் திசை திருப்பியதற்கு அன்பான வாசகர்களின் மன்னிப்பைக் கோரி இக்குறிப்பைத் தொடர்கிறோம்.

ராத்திரி பத்து மணி அடித்து மூன்று நிமிஷங்கள் கூட ஆனபோது இந்த விசேஷ ஃப்ளையிங் ஸ்கோட்மேன் ரெண்டு ரயில் கிளம்பியானது.

முன்னால் குறிப்பிட்டபடி, முகக் குறிப்பில் கொஞ்சம் இறுக்கம் தெரிந்தாலும் வேல்ஸ் இளவரசர் நல்ல ஆரோக்கியத்தோடு கூடியவராகக் காணப்பட்டார். அவர் குளிருக்கு இதமாக முழங்கால் வரை நீண்ட ஒரு யாத்திரா அங்கியை அணிந்திருந்திருந்தார். ஆட்டு ரோமம் உள்ளிட்ட நேர்த்தியான உடுப்பாகும் அது.

இளவரசர் கருப்பு நிறத்தில் ஸ்காட்டீஷ் தொப்பி ஒன்றையும், பச்சை நிற யார்க்ஷையர் தொப்பி ஒன்றையும் மாறி மாறித் தரித்து வந்தது ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றதில் சுண்ணாம்பு மனோபாவம் இன்றி இங்கிலாந்து, ஸ்கோட்லாண்ட் ஆகிய ரெண்டு பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரி மரியாதையும் அன்பும் அக்கறையும் செலுத்தி ராஜ்ய பரிபாலனம் செய்ய பக்கிங்ஹாம் அரண்மனையும், பிரிட்டீஷ் பாராளுமன்றமும் அக்கறை கொண்டிருப்பதை சொல்லாமல் சொல்லியதாகவே நாம் நினைக்கிறோம்.

வேல்ஸ் இளவரசரை உரிய மரியாதைகளோடு அன்பாக முகமன் கூறி கிங்க்ஸ் கிராஸ் ரயில்வே ஸ்டேஷன் சூப்ரண்டெண்ட் ஸ்ரீமான் காக் ஷாட் அவர்களும், லண்டன் – ஸ்கோட்லாண்ட் ரயில் பாதை சூப்ரண்டெண்ட் ஸ்ரீமான் வைஸர் ஆகியோரும் மற்ற உயர் உத்தியோகஸ்தர்களும் லண்டன் நகர போலீஸ் உதவி கமிஷனர் அவர்களும் வரவேற்றார்கள்.

ரயில் புறப்பட்டு கொஞ்ச நேரம் அதையும் இதையும் எல்லோரும் பேசிக் கொண்டிருந்ததோடு, இப்போது இளவரசர் என்ன செய்து கொண்டிருப்பார் என்று ஊகங்களையும் பரிமாறிக் கொண்டிருந்தோம்.

அரண்மனை வைத்தியர் கர்னல் எல்லீஸ் அவர்கள் ஒரு குடுவையில் மருந்து எதையோ கலந்து எடுத்துக் கொண்டு வேல்ஸ் இளவரசர் பிரயாணம் செய்த ரயில் பெட்டியை நோக்கி நடந்ததையும் கவனித்தோம்.

ரயிலின் எட்டு பெட்டிகளும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு வெளியே வராமலேயே கடந்து போக வசதி செய்யப் பட்டிருந்ததால், ஏதாவது ஸ்டேஷனில் ரயில் நின்றபிறகு இறங்கி ஏறத் தேவை இருக்கவில்லை. மேலும் இளவரசரின் ரயில் லண்டனில் இருந்து கிளம்பியானதும், அவசரமான அதிமுக்கியமான காரணம் ஏதாவது ஏற்பட்டால் ஒழிய வழியில் எங்கேயும் நிற்கப் பொவதில்லை என்பதையும் வாசகர்களுக்கு நினைவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம்.

நாங்கள் யாத்திரை செய்த ராத்திரி முழுக்க உறைபனி பெய்து கொண்டிருந்தது. இந்த வருஷம் கொஞ்சம் முன்கூட்டியே குளிர்காலம் வந்துவிட்டதைக் குறித்து நம் பத்திரிகையின் வாசகர்கள் கடிதங்கள் மற்றும் தட்ப வெட்ப நிலை பகுதிகளில் படித்திருக்கக் கூடும் என்பதால் இதை விசேஷமாகச் சொல்ல வேண்டியதில்லைதான்.

ஒவ்வொருத்தரும் இருக்கப்பட்ட ஆசனத்தை மடக்கி வைத்திருந்ததை படுத்துக் கொள்ள வசதியாக நீட்டி இழுத்து மெத்தையை சரியாக விரிக்க ரயிலில் கூடவே வந்த சேவகர்கள் உதவினார்கள். க்ரேட் நோர்த்தன் கம்பேனியைச் சேர்ந்த சிலர் இந்த நவீன வசதியைப் பற்றி யாத்ரீகர்களிடம் பணிவாக எடுத்துச் சொன்னதோடு, சேவகர்களுக்கு உபதேசம் நல்கி பிரயாணிகளின் சவுகரியத்தைக் கவனித்துக் கொள்ள ராத்திரி நேரம் என்றாலும் சுறுசுறுப்பாக ரயிலுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்கள்.

உன்னதமான போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனங்களில் இந்தக் கம்பேனிக்கு முதல் இடம் உள்ளது மறுக்க முடியாத உண்மையாகும்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts