விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

இரா.முருகன்


26 அக்டோபர் 1900 – சார்வரி வருஷம் ஐப்பசி 20, வெள்ளிக்கிழமை

தெரிசா மேடம் தங்க விடுதி தயார். அறையை மெழுகி சுத்தப்படுத்திட்டு இருக்காங்க.

எங்கேயோ கேட்ட குரல் இல்லியா இது?

தெரிசாவுக்கு நினைவு வந்தது. தோப்புத்தெரு விடுதி வேலைக்காரப் பெண்.

நல்லா இருக்கியா குட்டிப் பெண்ணே? பொழைச்சுக் கெடந்து எழுந்து வந்தியா?

நாற்காலியில் உட்கார்ந்தபடிக்கு வாஞ்சையோடு அவள் முதுகைத் தடவினாள் தெரிசா. அந்தக் குட்டி சிநேகிதமாக தெரிசா தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

தெரிசாவுக்குப் பிறக்காத எத்தனையோ குழந்தைகளின் இன்னொன்று இங்கே.

முடிச்சாச்சான்னு பாத்துட்டு வந்துடறேன்.

சொல்லிவிட்டு திரும்ப வெளியே ஓடினாள் அந்தப் பெண். அவளால் ஓடி வந்து மூச்சு இரைக்கப் பேசினால் மட்டுமே நாலு வார்த்தை கோவையாகப் பேசமுடியும் போல தெரிசாவுக்குப் பட்டது.

எதுக்கு எடுத்தாலும் ஓட்டம். கும்மாளி கொட்டி வரும் ஆனந்தம். அம்மா முழங்காலில் அடித்து அடித்து அடக்கிப் போட்டது. தெரிசாவுக்கும் இந்த வயதில் இருந்த ஒண்ணு அது.

பொண்கொழந்தையா லட்சணமா இல்லாம சதா சுரைக் குடுக்கை மாதிரி குலுக்கிண்டு சாடினா அடுத்தாத்து தடியன் கையைப் பிடிச்சு இழுத்துண்டு ஓடிடுவான் பாத்துக்கோ. உனக்கு வாய்ச்ச ஆத்துக்காரனும் கோட்டுவாயையையும் அரக்கட்டையும் காத்தாடத் திறந்து போட்டுண்டு தூங்கிண்டு கிடப்பான் பிரம்மஹத்தி. வந்து வாய்ச்சது எல்லாம் வக்ரம். அறு வஷால் அத்ரயும்.

சிநேகாம்பாள் பீட்டர் மெக்கன்சியைப் பார்த்ததில்லை. அவளுக்கு அந்த வெளுப்பு உவ்வே என்று குமட்டிக் கொண்டு வந்தாலும் பெண்ணைக் கல்யாணம் கழித்ததால் மாப்பிள்ளை.

பீட்டர் வாய் எச்சில் தலகாணி எல்லாம் வடிய தூங்குகிறவன் தான். விசேஷமாக ராத்திரி முழுக்க தெரிசாவோடு ரமித்து விட்டு விடிகாலையில் அவள் தொடையை இறுக்கிக் காலால் சுற்றிக் கொண்டு மலைப்பாம்பு மாதிரி தூங்குவான்.

பாம்பு போகம் பண்ற மாதிரி பின்னிப் பிணைஞ்சு கிடக்கோம். தாமஸ் நினைச்சாலும் என்னை பீட்டர் கிட்டே இருந்து பிரிச்சு கையைப் பிடிச்சு இழுத்துண்டு ஓட முடியாதுடி அம்மா.

மேடம், மேடம்.

திரும்ப ஓடி வந்த பெண் அழைத்துவிட்டு ஒரு வினாடி நின்றாள். அப்புறம் வந்த வழிக்கே அதே வேகத்தில் திரும்பினாள்.

அவள் பின்னால் அவசரமாக ரெண்டு எட்டு எடுத்து வைத்தாள் தெரிசா. ஓடிப் பார்த்தால் என்ன? தெரு முழுக்க, கல் பாவிய அந்த நடைபாதையின் பனி ஈரம் காலோடு பச்சென்று ஒட்டிக் கொண்டு வர ஓடணும். பனி வெடிப்பு வரட்டும். சுவஸ்தமாகட்டும். எங்கே ஓட? அம்பலப்புழைக்கா?

ஏண்டி லண்டி முண்டே, கட்டினவன் சண்டைக்குப் போறேன்னு பரதேசம் போயிருக்கான், பாழாப் போனவன். இந்த சுருட்டுக்காரத் தடியனோட தானே அயலூருக்கு வந்திருக்கே. இப்ப ஓட வேண்டாம். அவன் கமனம் பண்ண ராத்திரி நுழைஞ்சா தப்பிச்சு ஓடறதுக்குக் கால்லே வலு வேணும். காப்பாத்திக்கோ.

அம்மா சிடுசிடுப்போடு சொல்லிவிட்டு காணாமல் போனாள். தெரிசா அப்பன் கிட்டாவய்யனைத் தேடினாள். அவன் ஏதோ இயேசு கீர்த்தனத்தை அடாணா ராகத்தில் சிட்டைப் படுத்திக்கொண்டு அம்பலக் குளக்கரையில் உட்கார்ந்திருந்தான். அந்தத் தண்ணீரின் பச்சை வாடை தெரிசா மூக்கில் குத்தியது. அப்பன் நிமிர்ந்து பார்த்து, ஜாக்கிரதைடா குஞ்சு என்று மட்டும் சொல்லிவிட்டு கீர்த்தனத்தில் முழுகி விட்டான்.

மேடம் மேடம்

வேலைக்காரப் பெண் திரும்ப வந்திருந்தாள். தெரிசாவை உலுக்கி எழுப்பினாள்.

நாற்காலியில் உட்கார்ந்தபடிக்கே தூங்கியிருக்கிறாள் அவள். வெறும் ஐந்து நிமிடம். ராத்திரியில் சரிக்கு உறங்காத க்ஷீணம்.

மனசு குறக்களி காட்டுகிறது நிஜத்தில் ஒரு கீற்றும் நினைவில் இன்னொன்னும் எடுத்துச் சேர்த்து.

மேடம், அறைக்குப் போகலாமா?

அந்தப் பெண் தெரிசாவின் பெட்டியைத் தூக்கிக் கொண்டு திரும்ப ஓடினாள்.

வேண்டாம், நில்லு.

ஓ சோசன்னா நாடக வேஷக்காரன் ஸ்டான்லி கார்டனின் சக நடிகை சிந்தியா சொன்னாள். கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று வைத்து அவன் கூடவே நடித்து சாப்பிட்டு படுத்து எழுந்து மூச்சு விடுகிற சிநேகிதி.

அவள் விருப்பம் அது என்றால் ஆட்சேபம் சொல்ல தெரிசா யார்? எல்லோரும் வேதாகமப்படி ஜோடி சேர்ந்து, ஆசிர்வதிக்கப்பட்டு குடித்தனம் நடத்தி அப்புறம் ஏகமனசோடு முடிவு செய்து, தேவ ஊழியம் பண்ண ஊர் விட்டு ஊர் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

தெரிசா உடுப்பை மாத்திட்டு வரட்டும். இப்படியே தெருவிலே உன்னோட ஓடிவரவா முடியும்? நீ ஓடினாலே நாலு பேர் நின்னு பாக்கறாங்க. கூட இந்த மகாராணியும் தடதடன்னு ஓடின்னா பாதி எடின்பரோ தூக்கத்தைத் தூக்கி எறிஞ்சிட்டு வந்து நின்னுடும் வேடிக்கை பார்க்க.

சிந்தியா முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் தெரிசா. கொஞ்சம் அம்மா சிநேகாம்பாள் சாயல் தட்டுப்பட்டது.

குளியல் அறை வலது கை ஓரமா இருக்கு தெரிசா. இப்பத்தான் உங்களுக்காக சுத்தப்படுத்தி வச்சேன். போறதுன்னா போயிட்டு வாங்க.

ராஜபார்ட்காரன் சிநேகிதி ஆதரவாகச் சொன்னாள். ராத்திரி முழுக்க அரைகுறையாக உறங்கி மூத்திரம் முட்ட நிற்கிற பெண்ணின் கஷ்டம் புரிந்த பெண். ஆசிர்வதிக்கப்பட வேண்டியவள்.

தெரிசா அறைக்குள் நுழைந்தபோது தான் மாதவிலக்கு வந்துவிட்டிருந்தது மனதில் போதமானது.

அட கஷ்டமே, இந்தத் தடவை என்ன சீக்கிரமே இந்த சனியன் வந்துடுத்தே. இப்பத்தானே தூரம் குளிச்ச மாதிரி இருக்கு.

நல்ல வேளை. சுத்தமான துணி எடுத்து வந்திருக்கிறாள். டவுச் என்று அவ்வப்போது சுத்தப்படுத்திக் கொள்ள பீட்டர் மருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறான்.

தெரிசாவுக்கு இந்த உதிரப் பெருக்கு வந்து உடம்பை வேதனைப்படுத்தும் போதும் தன் கூடப் படுத்துக்கொள்ளச் சொல்லி வேறே வற்புறுத்துவான் அவன். அவள் அதை மட்டும் வலுக்கட்டாயமாக விலக்கி வைத்திருந்தாள். சே, கர்மம். அசுத்தம்.

அரைக்கட்டில் சுத்தமாக இருந்தா பிரச்சனை இல்லே. அவன் சொல்வான். மழித்துக் கொள்ள மட்டும் வேண்டாம் என்று சொல்லி விட்டான் கடன்காரன். காட்டுப்பூ வாடையடிக்கிற புதர் தான் பிடிக்குமாம் நாசமாகப் போனவனுக்கு.

ஊரில் தூரம் குளித்தால் வீட்டுக்குள் வருவதற்கு முன் அம்மா சிநேகாம்பாள் ஒரு செம்பு தண்ணீரை தலையில் கவிழ்ப்பாள். வேதத்தில் ஏறின பிற்பாடும் இந்த சொம்பு ஸ்நானம் ரொம்ப நாள் தொடர்ந்த ஒண்ணு.

ஏண்டி லஜ்ஜை கெட்டவளே, ஜடை பின்னி பூச்சூட்டி விடலாம் போல இருக்கு. கத்தியோ பிச்சோத்தியோ வச்சு களைஞ்சு போடணும்னு தோணலியா? என்ன பொண்ணோடி நீ. நான் வேணும்னா நறுக்கி விடவா? ஜாக்ரதையா செஞ்சு விடறேண்டி குழந்தை. ஒரு தடவை பாத்துண்டா நீயே பண்ணிண்டுடுவே.

சிநேகாம்பா காதில் கிசுகிசுத்தபோது தெரிசா அவசரமாக அரைக்கட்டை மறைத்து துணி செருகிக் கொண்டாள்.

ரத்தம் படர ஆரம்பிக்கிறது. மதியம் இதைக் களைந்து வேறே துணி வேண்டியிருக்கும். மாற்றியதும் கண்காணாமல் போட கையில் துணிப்பை எடுத்துப் போகவேண்டும். கூடவே நிறைய உலர்ந்த துணியும் பஞ்சும் கூடத் தேவை. பெண்ணாகப் பிறந்தால் என்ன எல்லாம் சித்தரவதை.

குளியல் அறையில் எங்கேயும் ரத்தச் சுவடு தட்டுப்படுகிறதா என்று அங்கேயிருந்து வெளியே போகும்போது ஒருதடவைக்கு ரெண்டு தடவையாக இண்டு இடுக்கு விடாமல் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டாள் தெரிசா.

அவள் தெருவில் இறங்கி நடந்தபோது முன்னால் பெட்டியோடு நெட்டோட்டம் ஓடின வேலைக்காரப் பெண்ணைத் தவிர வேறே ஆள் நடமாட்டம் இல்லை.

என்ன தெரு இது? தோப்புத் தெரு இல்லையோ. அவள் கேட்டபோது ஓடிக்கொண்டே முன்னாலிருந்து பதில் வந்தது – கில்மோர் தெரு, மேடம்.

அடைத்துப் பூட்டின ஒரு கட்டிடக் கதவுக்குப் பின்னே மாடத்தில் அங்கி உடுத்திய நாலு பெண்கள் நிற்பதைக் கவனித்தாள் தெரிசா.

கத்தோலிக்க கன்னிமாடம்.

நானும் தேவ ஊழியம் செய்யத்தான் வந்திருக்கேன்.

அந்தக் கன்யாஸ்திரிகளைப் பார்த்து இரைந்து சொல்லி அறிவிக்க வேண்டும் போலிருந்தது தெரிசாவுக்கு.

மணவாளனுக்காகக் காத்திருக்கிற மணவாட்டிகள் நாங்க எல்லாம். ஆம்பளையோட படுத்து எழுந்து தேவ ஊழியத்துக்குக் கிளம்பற அசுத்த ஜன்மம் இல்லே. அந்தக் கன்யாஸ்திரிகள் சொல்லலாம். அவர்களிடம் யாரும் கஸ்தூரி மணக்கும் காட்டுப்புதர் பற்றி ரசனையோடு சொல்ல மாட்டார்கள்.

டைகர் ஹண்டர்ஸ்.

கன்னிமாடத்துக்கு இரண்டு கட்டிடம் தள்ளி, தெரு மேட்டுப் பிரதேசமாக உயரும் இடத்தில் பெயர்ப் பலகை தொங்கிய கட்டிடத்துக்குள் வேலைக்காரப் பெண் நுழைந்தாள்.

அவளைத் தொடர்ந்து உள்ளே போன தெரிசா முதலில் பார்த்தது ஸ்காட்டிஷ் பாவாடைக்காரனைத்தான். தோப்புத் தெரு விடுதிக்காரன். பெயர் என்ன? கானரியோ என்னமோ. அங்கே சட்டமாக உட்கார்ந்து சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தான் அந்த வயசன்.

மகராணி. பிரஜைகளை ரட்சிக்க வரணும். வரணும்.

பாவாடை விலகாமல் அவன் குனிந்து வணக்கம் சொன்னபோது பெரிதாக வாயு பிரிந்தான்.

அடக்க முடியாமல் சிரித்த வேலைக்காரிப் பெண் வெளியே ஓட தெரிசா கண்ணில் சிரித்தபடி அவனைப் பார்த்தாள். சங்கடமான சிரிப்பு அவனுக்கும்.

அந்தக் கல்லுளிமங்கனுக்கு ராத்திரி நடந்த பெரிய தீவிபத்து ஒரு பாதிப்பும் ஏற்படுத்தினதாக தெரிசாவுக்குத் தெரியவில்லை. சர்வசாதாரணமாக இன்னொரு நீலக்கட்டம் போட்ட அரைக்கால் பாவாடையை சுற்றிக் கொண்டு சுருட்டு பிடித்துக் கொண்டு சத்தமாக வாயு பிரிந்து கொண்டு. வாழ்க்கையை அனுபவிக்க தீவிபத்து, வயசு எல்லாம் குறுக்கே நிற்காது போலிருக்கிறது.

ஆனாலும் ஆறுதலாக ரெண்டு வார்த்தை சொன்னால் நன்றாக இருக்கும் என்று தெரிசாவுக்குத் தோன்றியது.

பலத்த நஷ்டமாகிப் போனதோ நேற்று ராத்திரி தீ பிடித்தத்தில்? போகட்டும். கர்த்தர் கிருபையில் உயிர்ச் சேதம் ஒண்ணும் இல்லியே? கட்டிலும் மெத்தையும் வீடும் வாசலும் எரிந்து போனால் திரும்ப உழைத்து ஏற்படுத்திக் கொள்ளலாம். உயிர் நிலைக்க, தெய்வத்தின் கருணை இருக்க, அப்புறம் வேறே என்ன வேணும்?

அவன் சுருட்டை காலில் மிதித்து அணைத்து இடுப்புப் பாவாடைக்கு முன்னால் என்னமோ மாதிரி தொங்கிய துணிப்பையில் திணித்துக் கொண்டபடி நன்றி சொன்னான். அது தெய்வத்துக்கா தெரிசாவுக்கா என்று அவளுக்குத் தெரியவில்லை.

தோப்புத்தெரு விடுதியும் என் பெண்டாட்டி கட்டிடம். இந்த கில்மோர் விடுதியும் தான். அவளை மாற்றாத வரைக்கும் எனக்கு இருக்க இடமும் செய்ய தொழிலும் இல்லாமல் போகாது. இப்படி விதித்ததுக்கும் சேர்த்து கர்த்தருக்கு நன்றி சொல்லணும்.

அவன் தெரிசாவை நாற்காலியில் உட்காரச் சொல்லிக் கைகாட்டியபடி சொன்னான்.

தோப்புத்தெரு விடுதியில் இருந்த மர்மலேடும் ரொட்டியும் பன்றி மாமிச சாசேஜும் அதே நரகல் பிராணியின் குடலை பாகம் செய்து உண்டாக்கிய ஹாகிஸும் எல்லாம் பத்திரமாக கில்மோர் தெருவுக்கு வந்து சேர்ந்திருந்தன. அதெல்லாம் அக்னி தேவனுக்கு ஆஹூதியாகத் தகுதி படைத்தவை இல்லையோ.

தெரிசா, காலை வணக்கம்.

தாமஸ் குரல். இங்கேயும் வந்துட்டானா குடிகாரன்?

தாமஸ் எதையோ நீட்டினான். துணிப்பையில் அது என்ன? அட எழவே, நாலு மார்க்கச்சையையும் இடுப்புத் துண்டுத் துணியையும் பொட்டலம் கட்டி வைத்ததை பெட்டியைத் திறந்து தூரத்துணி எடுத்தபோது ராஜபார்ட் காரன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறாள் மடச்சி. இவன் கண்ணுக்கு இதுதான் படணுமோ? எடுத்து முகர்ந்து பார்த்திருப்பானோ? சீ சும்மா கிட மனசே.

தெரிசா நீ இங்கே வந்தது தெரியாம அங்கே காத்துக்கிட்டிருந்தேன். வேலைக்காரக் குட்டி தான் சொன்னா. புத்திசாலிப் பொண்ணு. போறதுக்குள்ளே ஒரு முத்தம் கொடுக்கணும். அட, பரிசுத்தமான அன்போட கொடுக்கறதாக்கும்.

தாமஸ் சொன்னதை தெரிசா ரசிக்காவிட்டாலும் பாவாடைக்காரன் ரொம்பவே ரசித்து சிரித்தான். ராத்திரி வீட்டைக் கொளுத்திக் குளிர் காய்ந்து முகம் மிளகாய்ப்பழச் சிவப்பில் ஆரோக்கியமாக இருந்தான் அந்தத் தொப்பையன். அவனோடு கூட கேட்ட இன்னொரு சிரிப்பு சத்தம் ஓடிக் கொண்டே மறைந்தது.

வேலைக்காரப் பெண்ணை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லணும். தாமஸ் தேவ ஊழியத்துக்கு வந்த மாதிரி தெரியவில்லை. மற்ற ஊழியம் எல்லாம் கரிசனமாகச் செய்ய அவனுக்கு சாக்கு ஏற்படுத்திக் கொடுத்துட்டேனா? தெரிசாவுக்குத் தெரியவில்லை.

திருமதி தெரிசா மெக்கன்ஸி செயலுக்கு எல்லாம் அவளுடைய அன்பான மணவாளனும் ஜீவாந்தர சிநேகிதனுமான ஸ்ரீமான் பீட்டர் மெக்கன்ஸிதான் காரணம்.

தாமஸைக் கூட்டிப் போகச் சொன்னியே. ஏண்டா நாயே இவனோடு என்னை அனுப்ப ஏன் உனக்குத் தோணினது? நான் காலை இறுக்கிக் கொண்டு சதா இருக்கிறேனா என்று பரிசோதிக்கவா? பதில் சொல்லுடா பீட்டர் டார்லிங்.

அவள் ஒன்றின் மேல் ஒன்றாகக் கால் மடித்து அட்டணக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள். உடுப்பு முழுக்க மூடி தரையில் வழிந்ததில் அலாதி நிம்மதி. மேல் சட்டை கூட இறுக்கம் குறைச்சலாக இருந்ததால் மார் முன்னால் பிதுங்கிக் கொண்டு நிற்கவில்லை. தாமஸ் வேலைக்காரியையே துரத்தட்டும்.

தீ பிடிச்சு கட்டிடம் எரியறதும் திரும்ப கட்டறதும் இங்கே சர்வ சாதாரணம். இந்த தடியனே தூக்கத்திலே சுருட்டு பிடிச்சு பத்த வச்சிருப்பான் தோப்புத் தெரு விடுதியை. ஆனாலும் என்ன, இன்னும் ரெண்டு மாசத்துலே அங்கே திரும்ப வந்துடும். மரக் கட்டிடம் தானே முக்காலே மூணு வீசமும்? காட்டிலே மரம் இருக்கற வரைக்கும் கையிலே காசு இருக்கற வரைக்கும் கவலையே இல்லை.

தாமஸ் சொன்னபோது ஓட்ஸ் பாயசத்தோடு வந்த விடுதிக்காரன் ஆமேன் என்று ஸ்தோத்திரமாக ஆமோதித்தான்.

இந்தத் தடவை தீ விபத்தை காரணம் காட்டி சக்கரவர்த்திகளுக்கு மனுப்போட்டு பணமாக நன்கொடை வாங்க உத்தேசம். விக்டோரியா ராணியம்மா வராவிட்டாலும் ராஜாக்கள் எல்லோரும் இன்னிக்கு சாயந்திரம் எடின்பரோ வராங்களே. மனு எழுதத்தான் யாராவது உதவி செய்தாங்கன்னா.

அவன் சொல்லி முடிக்கும் முன்பே தாமஸ் இடைமறித்தான்.

தெரிசாவோட இங்கிலீஷும் கையெழுத்தும் தேவதை எழுதின மாதிரி நேர்த்தியா இருக்கும். அதைப் படிச்சா ஹோலிராட் அரண்மனையையே உனக்கு எழுதி வச்சுட்டுக் கிளம்பிடுவார் மகாராஜா. அங்கேயும் போய் ராத்திரி படுக்கையிலே சுருட்டு குடிச்சு பத்த வச்சுடாதே.

வேலைக்காரக் குட்டி செய்தித்தாளோடு படியேறியபடி இதுக்கும் சிரித்தாள்.

ரொம்ப சிரிக்காதேடி பெண்ணே. இந்த தடியன் தன் தோல்வாயால் உன் சிரிப்பை அடைச்சுடலாம்னு நேரம் பாத்துண்டிருக்கான். பொத்திண்டு இரு.

சிநேகாம்பாள் தெரிசாவுக்குள் பிரத்யட்சமானாள். ரெண்டு பேரும் வேறேயா என்ன?

சேச்சி. விசப்பு. பசிக்கறது.

வந்துட்டேன். வந்துட்டேன்.

ஓட்ஸ் பாயசக் கிண்ணத்தோடு தோட்டத்துக்கு நடந்தாள் தெரிசா. கடல்நாரைகள் இப்போது ஒன்றுக்கு ரெண்டாக மரக்கிளையில் அவளுக்காகக் காத்திருந்தன.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts